சாம்சங் இந்தியா: 3 தொழிலாளர்கள் இடைநீக்கம், நள்ளிரவிலும் தொடர்ந்த காத்திருப்புப் போராட்டம் - என்ன நடக்கிறது?

சாம்சங் இந்தியா: இடைநீக்கம் முதல் உள்ளிருப்பு போராட்டம் வரை

பட மூலாதாரம், Muthukumar/Facebook

படக்குறிப்பு, தொழிற்சங்கத்தை சேர்ந்த மூவரை பணியிடை நீக்கம் செய்ததாக, தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர் . - கோப்புப் படம்.
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

சாம்சங் இந்தியா நிறுவனத்தில் மூன்று ஊழியர்களை நிர்வாகம் இடைநீக்கம் செய்ததாகக் கூறி, புதன்கிழமையன்று (பிப்ரவரி 5) ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால், காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.

சிஐடியு தொழிற்சங்கத்துக்கு எதிராக ஊழியர்களை பல்வேறு வகைகளில் நிர்வாகம் அச்சுறுத்துவதாக கூறுகின்றனர், தொழிற்சங்க நிர்வாகிகள்.

ஆனால், பணியிட சூழல்களுக்கு எதிரான எந்தவொரு செயலையும் ஏற்க முடியாது எனக் கூறுகிறது சாம்சங் இந்தியா நிறுவனம்.

சாம்சங் இந்தியா நிறுவனத்தில் என்ன பிரச்னை? ஊழியர்களின் குற்றச்சாட்டுக்கு நிர்வாகம் கூறும் விளக்கம் என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஊதிய உயர்வு, தொழிற்சங்க பதிவு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சாம்சங் இந்தியா நிறுவன ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அத்துறையின் அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் முடிவு எட்டப்படாத நிலையில், இறுதியாக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சுவார்த்தை நடத்தினார்.

முடிவில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. சாம்சங் இந்தியாவில் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வதற்கு அரசின் அனுமதி கிடைக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் சிஐடியு வழக்குத் தொடர்ந்தது.

இதுதொடர்பாக, ஆறு வாரங்களில் முடிவு எடுக்குமாறு தொழிலாளர் நலத்துறைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையேற்று, கடந்த ஜனவரி 27 ஆம் தேதி, சிஐடியு தொழிற்சங்கத்தை தொழிலாளர் நலத்துறை பதிவு செய்தது.

இந்நிலையில், சிஐடியு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை சாம்சங் இந்தியா நிர்வாகம் பழிவாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாம்சங் இந்தியா: இடைநீக்கம் முதல் உள்ளிருப்பு போராட்டம் வரை
படக்குறிப்பு, சிஐடியு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை சாம்சங் இந்தியா நிர்வாகம் பழிவாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

மூன்று பேர் இடைநீக்கம்

செவ்வாய்க்கிழமை இரவு சிஐடியு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த குணசேகரன் என்ற ஊழியரை நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

"சாம்சங் இந்தியாவின் நிர்வாக இயக்குநரை பார்க்க விரும்புவதாக கூறியதால் குணசேகரனை இடைநீக்கம் செய்துள்ளனர்," என பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார் சாம்சங் இந்தியா தொழிற்சங்க (சிஐடியு) தலைவர் முத்துகுமார்.

மறுநாள் (பிப்ரவரி 5) அதிகாலையில் இரவுப் பணி முடித்துவிட்டுக் கிளம்பிய சிஐடியு துணைச் செயலாளர் மோகன்ராஜ், துணைத் தலைவர் தேவன் ஆகியோருக்கு இடைநீக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. "இடைநீக்கத்துக்கான காரணம் எதுவும் குறிப்பிடவில்லை" எனக் கூறுகிறார் முத்துகுமார்.

தொழிற்சாலையில் நிர்வாகத்தின் ஆதரவு பெற்ற தொழிலாளர் குழு ஒன்று இயங்குவதாகக் கூறும் முத்துகுமார், "தொழிலாளர்களிடம் சென்று வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கும் வேலையில் இந்தக் குழு ஈடுபட்டு வருகிறது. இதற்காக தனி அறை ஒன்றை ஒதுக்கியுள்ளனர்" என குற்றம்சாட்டுகிறார்.

சாம்சங் இந்தியா: இடைநீக்கம் முதல் உள்ளிருப்பு போராட்டம் வரை

கையெழுத்து போடாத தொழிலாளர்களை அவர்களுக்குத் தொடர்பில்லாத இதர துறைகளுக்கு இடமாற்றம் செய்வதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

சாம்சங் இந்தியா நிறுவனத்தில் தொலைக்காட்சி உற்பத்தி, கம்ப்ரஸர் பிரிவு, குளிச்சாதனப் பெட்டி தயாரிப்பு உள்பட பல்வேறு பிரிவுகள் செயல்படுகின்றன.

"தொலைக்காட்சி தயாரிப்புப் பணியில் உள்ளவர்களை அவர்களுக்குப் பழக்கம் இல்லாத போர்க்லிப்ட் (forklift) பணிக்கு அனுப்புகின்றனர். இவ்வாறு பலரையும் இடமாற்றம் செய்துள்ளனர்" எனக் கூறுகிறார் முத்துக்குமார்.

தொழிலாளர் நலத்துறையில் புகார்

போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு பணிக்குத் திரும்பிய தொழிலாளர்களுக்கு நிர்வாகம் தரப்பில் இடையூறுகள் தொடர்வதாக, தொழிலாளர் நலத்துறையிடம் சிஐடியு நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

"கடந்த மாதம் இரண்டு முறை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, 'போராட்டத்துக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் எனக் கூறியும் நிர்வாகம் கேட்கவில்லை' என்றோம். நிர்வாகத்திடம் அதிகாரிகள் பேசியும் பதில் வரவில்லை.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் இதுகுறித்துக் கூறியும் சாம்சங் இந்தியா நிர்வாகிகள் கேட்கவில்லை. இதேநிலை தொடர்ந்ததால், 'நிர்வாக இயக்குநரை பார்க்க வேண்டும்' என ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர்" எனக் கூறுகிறார் முத்துகுமார்.

இதற்கு நிர்வாகம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. "வேலையை செய்யவிடாமல் தடுத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊழியர்கள், 'கையெழுத்து போடுமாறு நிர்வாக இயக்குநர் கூறட்டும். அதன்பிறகு முடிவு எடுக்கிறோம்' எனக் கூறியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக இடைநீக்க நடவடிக்கையை எடுத்துள்ளனர்" என்கிறார் முத்துகுமார்.

சாம்சங் இந்தியா: இடைநீக்கம் முதல் உள்ளிருப்பு போராட்டம் வரை

பட மூலாதாரம், Muthukumar / Facebook

படக்குறிப்பு, சாம்சங் இந்தியா நிர்வாகம் மீது பல்வேறு புகார்களை கூறினார் முத்துகுமார்

"சங்கமே உள்ளே வரக் கூடாது என நிர்வாகம் கூறுகிறது. ஆனால், 'தொழிலாளர் குழு என்ற பெயரில் இன்னொரு அமைப்பு செயல்படும்' என்கின்றனர்.

'இப்படி இருந்தால் எப்படி அமைதி வரும்?' என தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் கேள்வி கேட்டனர். இதற்கு நிர்வாகத்திடம் பதில் இல்லை" எனக் கூறுகிறார் முத்துகுமார்.

இந்தநிலையில், சாம்சங் இந்தியா நிர்வாகத்தைக் கண்டித்து சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் புதன்கிழமை (பிப். 05) உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.

"சிஐடியு சங்கத்தை ஏற்றுக்கொள்ளுமாறு நிர்வாகத்திடம் நாங்கள் கெஞ்சவில்லை. சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்பட்டுக் கொள்கிறோம். ஊழியர்களை ஏன் இடையூறு செய்ய வேண்டும் என்று தான் கேட்கிறோம்" என்கிறார் முத்துகுமார்.

நிர்வாகம் அமைத்துள்ள குழுவில் மட்டுமே தொழிலாளர்கள் இணைய வேண்டும் என நிர்பந்தம் செய்வது தான் பிரச்னைக்குக் காரணமாக உள்ளதாகவும் முத்துக்குமார் குறிப்பிட்டார்.

சாம்சங் இந்தியா: இடைநீக்கம் முதல் உள்ளிருப்பு போராட்டம் வரை
படக்குறிப்பு, தொழிற்சங்கம் அமைக்க கோரி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபோது (கோப்புப்படம்)

சாம்சங் இந்தியா நிறுவனத்தின் விளக்கம்

ஊழியர்களின் போராட்டம் தொடர்பாக, சாம்சங் இந்தியா நிறுவனத்திடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது. இதுதொடர்பாக, சாம்சங் இந்தியா நிறுவன செய்தித் தொடர்பாளர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், "சாம்சங் இந்தியா நிறுவனத்தின் உலகளாவிய நடத்தை விதிமுறைப்படி, தொழில்முறை மற்றும் மரியாதைக்குரிய பணியிட சூழலை பராமரிப்பதற்கு எதிரான எந்தவொரு செயலையும் சகித்துக்கொள்ள முடியாது என்பதை கொள்கையாக வைத்துள்ளது.

நிறுவனத்தின் கொள்கையை மீறியுள்ள தொழிலாளர்கள் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது முறையான விசாரணை நடத்தப்பட்டு தகுந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்" எனக் கூறியுள்ளார்.

நிறுவனத்தின் தொழிலாளர் நலக்குழுவில் சேருவதற்கு கட்டாயப்படுத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்துள்ள சாம்சங் இந்தியா செய்தித் தொடர்பாளர், "எந்தவொரு ஊழியரையும் தொழிலாளர் குழுவில் சேரவோ அல்லது தொழிற்சங்கத்தை விட்டு வெளியேறவோ கட்டாயப்படுத்தவில்லை" எனக் கூறியுள்ளார்.

தொழிலாளர்களுடன் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அதேநேரம், சிஐடியு தெரிவித்துள்ள இதர குற்றச்சாட்டுகளை கேள்விகளாக பிபிசி தமிழ் முன்வைத்தும் சாம்சங் இந்தியா நிறுவனம் பதில் அளிக்கவில்லை. அக்கேள்விகளுக்கு சாம்சங் இந்தியா நிறுவனம் பதிலளிக்கும் பட்சத்தில், அவை இக்கட்டுரையில் சேர்க்கப்படும்.

பேச்சுவார்த்தை தோல்வியால் தொடரும் போராட்டம்

இந்த விவகாரம் குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தை இரவு 11 மணி வரை மாநில தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், காஞ்சிபுரம் மாவட்ட தொழிலாளர் நலத்துறை துணை ஆனையர் வெற்றிச்செல்வி, இணை ஆணையர் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர். சாம்சங் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள், தொழிலாளர் பிரநிதிகளும் பங்கேற்றனர். இதில் சமூகமான முடிவு எட்டப்படாததால் உள்ளிருப்புப் போராட்டம் தொடர்கிறது.

இது குறித்து, சாம்சங் இந்தியா சி ஐ டியு சங்கத்தின் கௌரவத் தலைவர் அ சவுந்தரராஜன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "மூன்று பேரின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் கோரிக்கை வைத்தோம். ஊழியர் தவறு செய்திருந்தால் நோட்டீஸ் அனுப்பி, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கட்டும். வேலை நிறுத்தத்தை நாங்கள் ஊக்குவிக்கவில்லை.

ஆனால், விசாரணை இல்லாமல், உடனே கடுமையான நடவடிக்கை எடுத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தோம். தொழிலாளர் நலத்துறையும் சாம்சங் நிர்வாகம் ஊழியருக்கு முறையாக நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால், நிர்வாகம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, இன்னும் உள்ளிருப்புப் போராட்டம் தொடர்கிறது" என்று தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)