பிகார்: ரயிலில் ஏ.சி. பெட்டியின் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைய முயற்சி - இன்றைய முக்கிய செய்திகள்

டாப்5 செய்திகள்

பட மூலாதாரம், SOCIAL MEDIA

இன்றைய (12/02/2025) நாளிதழ்கள், இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

பிகார் மாநிலம், மதுபானி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளா நிகழ்வுக்கு செல்வதற்கு ரயிலில் ஏற முடியாத விரக்தியில் ஏசி பெட்டியின் கண்ணாடியை அடித்து உடைத்ததாக இருவா் கைது செய்யப்பட்டனர் என, 'தினமணி' நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று (பிப். 12) மாகி பௌா்ணமி சிறப்பு புனித நீராடல் நடைபெறுகிறது. இந்நிலையில், பிரயாக்ராஜ் வழியாக டெல்லி நோக்கி செல்லும் சுதந்திரதா சேனானி விரைவு ரயில் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு மதுபானி ரயில் நிலையத்தை அடைந்தது.

"ரயிலின் பொது மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் பயணிகளால் ஏற்கெனவே நிரம்பியிருந்தன. ரயில் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்தும் ரயிலில் ஏற முடியாததால் விரக்தியடைந்த பயணிகள், ஏசி பெட்டிக்குள் நுழைய முயன்றனர். அப்பெட்டிகளின் கதவுகள் திறக்கப்படாததால், கண்ணாடிகளை உடைத்து அவா்கள் சேதப்படுத்தினர்." என அச்செய்தி தெரிவிக்கிறது.

இத்தாக்குதலில் ஈடுபட்டதாக 2 பேரை ரயில்வே காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்ததையடுத்து, ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்டுச் சென்றது என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாப்5 செய்திகள்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

பாலியல் குற்றம் நிரூபணமானால் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் பாலியல் புகார்களில் சிக்கிய ஆசிரியர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், குற்றம் நிரூபணமானவர்களை பணிநீக்கம் செய்வதற்கும் பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என, 'இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அடுத்தடுத்து வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது பணி நீக்கம் போன்ற கடும் நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன.

இதற்கிடையே, பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பான புகாரில் உண்மைத்தன்மை நிரூபணம் செய்யப்பட்டால், சார்ந்த ஆசிரியர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மாநிலம் முழுவதும் பாலியல் புகார்களில் சிக்கிய ஆசிரியர்கள் பட்டியலையும், அவர்கள் மீதான நடவடிக்கை விவரங்களையும் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டுமென துறை இயக்குநர்களுக்கு அரசுத் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாப் 5 செய்திகள்

பட மூலாதாரம், Anbil Mahesh Poyyamozhi

படக்குறிப்பு, பாலியல் புகார் நிரூபணமானால், ஆசிரியரின் கல்வித் தகுதி ரத்து செய்யப்படும் என, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்பே தெரிவித்திருந்தார்

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், "பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், துறைரீதியான நடவடிக்கைகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டது.

அந்தவகையில், மாநிலம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்களிடம் தவறான செயல்களில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளன. அதாவது, ஆசிரியர்கள் மீதான புகார், அதன் உண்மைத்தன்மை, துறைரீதியான நடவடிக்கை, காவல் துறை நடவடிக்கை, விசாரணைக்குழு அறிக்கை, வழங்கப்பட்ட தண்டனை, நிலுவையில் உள்ளவை, பணியில் இருப்பவர்கள், ஒய்வு பெற்றவர்கள், தவறு நிரூபணமானவர்கள், பொய் புகார்கள் உட்பட அனைத்து விவரங்களும் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி தொடக்கக் கல்வித் துறையில் 80, பள்ளிக்கல்வித் துறையில் 175 என மொத்தம் 255 ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் தவறிழைத்த ஆசிரியர்கள் மீது அரசாணை 121-ன் படி துறைரீதியாக பணிநீக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், கல்விச் சான்றிதழ்களும் ரத்து செய்யப்படும். விரைவில் அமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ள ஆய்வுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு மார்ச் மாதமே இது அமலுக்குக் கொண்டுவரப்படும்" என தெரிவித்ததாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

முயல் ரத்தத்தில் தலைமுடி எண்ணெய் - 3 கடைகளுக்கு சீல்

டாப்5 செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

முயல் ரத்தத்தில் தயாரிக்கப்பட்ட முடி எண்ணெயை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக, மூன்று அழகு சாதன பொருள் கடைகளுக்கு சீல் வைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் நடவடிக்கை எடுத்ததாக, தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

அச்செய்தியில், "ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் அமைந்துள்ள அந்த கடைகளின் உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் மருந்து கட்டுப்பாட்டு இயக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்தகைய பொருள்களை விற்பனை செய்வதற்கு அரசு அனுமதி வழங்குவதில்லை." என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "இந்திய தர நிர்ணய அமைப்பு விதிகளின்படி விலங்குகளின் ரத்தம், திசுக்களை கொண்டு தலைமுடி எண்ணெய் தயாரிப்பது சட்டவிரோதம். அந்த வகையில், ஈரோடு, கோபி செட்டிபாளையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1.20 லட்சம் மதிப்பிலான முயல் ரத்த முடி எண்ணெய் ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது" என தெரிவித்ததாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லை? - நடிகர் கஞ்சா கருப்பு வாக்குவாதம்

டாப்5 செய்திகள்

பட மூலாதாரம், Ganja Karuppu/X

சென்னையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லை என, நடிகர் 'கஞ்சா' கருப்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக, தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

நடிகர் கஞ்சா கருப்பு சென்னை போரூர் அரசு மருத்துவமனைக்குக் கால் வலி காரணமாக சிகிச்சை பெற சென்றுள்ளார்.

"அங்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் யாரும் இல்லாததால் அவரை நீண்ட நேரமாக காக்க வைத்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மூதாட்டி ஒருவர் அங்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். மேலும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவரும் சிகிச்சை பெற வந்துள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க யாரும் இல்லாததால் கஞ்சா கருப்பு மருத்துவமனையில் உள்ள ஊழியர்களுடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருடன் சேர்ந்து அங்கிருந்த நோயாளிகளும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்." என அச்செய்தி கூறுகிறது.

இதுகுறித்து நடிகர் கஞ்சா கருப்பு கூறுகையில், "லட்சக்கணக்கில் சம்பளம் பெற்றுக்கொண்டு மருத்துவர்கள் அரசு மருத்துவமனையை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். காலை 8 மணிக்கு வர வேண்டியவர்கள் மதியம் 3 மணிக்குத்தான் வருகிறார்கள். உயிருக்குப் போராடும் நிலையில் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க இங்கு யாருமே இல்லை. இது வேதனையை அளிக்கிறது" என்று கூறியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ அரசு இல்லத்தை காலி செய்வாரா? நாமல் ராஜபக்ஷ பதில்

டாப்5 செய்திகள்

பட மூலாதாரம், NAMAL RAJAPAKSHA/FACEBOOK

படக்குறிப்பு, நாமல் ராஜபக்‌ஷ

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ அரச இல்லத்தில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் சட்டத்தின் பிரகாரம் உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பினால் மஹிந்த ராஜபக்ஷ வீட்டை விட்டு வெளியேறுவார் என, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, "முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ அரச இல்லத்தில் இருந்து வெளியேறுமாறு சிவில் அமைப்பினர் குறிப்பிட வேண்டியதில்லை.

வீட்டுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட வேண்டிய தேவையுமில்லை. வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் சட்டத்தின் பிரகாரம் உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பினால் மஹிந்த ராஜபக்ஷ வீட்டை விட்டு வெளியேறுவார்" என தெரிவித்ததாக அச்செய்தி கூறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)