காதலர் வாரத்தின் ஏழு நாளும் 7 தினங்களாக கொண்டாட்டம் - எப்படி தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரக்ஷனா.ரா
- பதவி, பிபிசி தமிழுக்காக
காதல்....
உலகெங்கும் உள்ள புராண, இதிகாசங்கள் மற்றும் இலக்கியங்களில் வெவ்வேறு பெயர்களில் விரவிக் கிடக்கிறது. காதலின் தொடக்கம் என்னவென்பதை அறுதியிட்டு கூற முடியாது. சங்க கால 'தலைவன் தலைவிக்கு விடும் தூது' முதல் இந்த காதல் கதைகள் காலத்திற்கேற்ப புது வடிவம் பெற்றுள்ளன.
ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் இந்த அளப்பரிய அன்பை அங்கீகரிக்கும் வகையிலும் அதை போற்றும் வகையிலும் கொண்டாடப்படும் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
காதலர் தினம் கொண்டாடும் அனைவருக்கும் அது ஏன் வாலண்டைன் தினம் என்று அழைக்கப்படுகிறது என்றும் அது ஏன் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது என்றும் தெரியுமா?
- கே.எம்.செரியன்: இஸ்லாமிய பெண்ணுக்கு இந்துவின் இதயத்தை பொருத்திய கிறிஸ்தவர்
- உயிர்காக்கும் மருந்துகளை உருவாக்க விஷமுள்ள கம்பளிப் புழுக்கள் எப்படி உதவ முடியும்?
- ஏ.ஐ. உலகில் புதிய அலை: ஒரே செயலி மூலம் அமெரிக்க நிறுவனங்களை மிரளச் செய்த சீன நிறுவனம்
- நாகரிக வளர்ச்சியில் தமிழ்நாட்டிற்குள்ளேயே வேறுபாடுகள் இருந்தனவா?

காதலர் தினம் வரலாறு
வரலாற்றின் பக்கங்களை திரும்பி பார்த்தால், காதலர் தினம் கொண்டாடுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றது. இந்த தினத்தின் பெயர் காரணத்திற்கு சொந்தக்காரராக இருப்பவர் வாலண்டைன். ஆனால் இவர் யார் என்று தெளிவான தரவுகள் இல்லாத போதும் வாலண்டைன் மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த மத போதகர் என்று பரவலான நம்பிக்கை ஒன்று நிலவுகிறது.
காதல் மனைவியையும் குடும்பத்தையும் தனியே விட்டு, போருக்கு செல்ல வீரர்கள் தயக்கம் காட்டியதால் பேரரசர் இரண்டாம் கிளாடியஸ் திருமணத்திற்கு தடை விதித்தார்.
இதை எதிர்த்த வாலண்டைன், அங்கு இருந்தவர்களுக்கு ரகசியமாக திருமணங்களை செய்து வைத்தார். இதை அறிந்த மன்னர், வாலண்டைனுக்கு மரண தண்டனை விதித்தார். அப்பொழுது சிறையில் இருந்த வாலண்டைன், அந்த சிறை பாதுகாவலரின் மகளை விரும்பியதாகவும், மரண தண்டனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்ட போது, 'ஃப்ரம் யுவர் வாலண்டைன்' அதாவது உன்னுடைய வாலண்டைனிடமிருந்து என்ற வரியைக் கொண்ட காதல் கடிதத்தை கொடுத்ததாகவும் கதைகள் உள்ளன.
பிப்ரவரி 14ஆம் தினத்தன்று காதலுக்காக தன்னுடைய உயிரை நீத்த வாலன்டைனின் நினைவாகவே அந்த நாள் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது என்பது பரவலான நம்பிக்கை.

பட மூலாதாரம், Getty Images
காதலர் வாரம்
காதலர் தினமாக தொடக்கத்தில் கொண்டாடப்பட்ட இந்த தினம் தற்போது பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை காதலர் வாரமாகவே கொண்டாடப்படுகிறது. காதலர் வாரத்தின் ஒவ்வொரு நாளும் எந்த தினமாக கொண்டாடப்படுகிறது? அதன் பின்னணி என்ன?
பிப்ரவரி 7: ரோஸ் தினம்

பட மூலாதாரம், Getty Images
காதலர் வாரம் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கியது. காதலர் வாரத்தின் முதல் நாளாக ரோஸ் தினம் உள்ளது. ரோம புராணக் கதைகளில் காதலின் கடவுளாக இருக்கும் வீனசுடன் தொடர்புடையதாக இந்த மலர் சொல்லப்படுகிறது.
இந்த தினத்தில் பரிமாறிக் கொள்ளப்படும் ஒவ்வொரு நிற ரோஜா மலருக்கும் ஒவ்வொரு தனித்துவமான அர்த்தங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
சிவப்பு ரோஜா, காதல் உறவையும், காதலர்களுக்கு இடையேயான உணர்வுப்பூர்வமான பரிமாற்றங்களையும் குறிக்கிறது.
மஞ்சள் ரோஜா, இரு நண்பர்களுக்கிடையே உள்ள நட்பையும் தூய நேயத்தையும் குறிக்கிறது என்றும் வெள்ளை ரோஜா மலர்கள் புதிய தொடக்கங்களையும், மாசற்ற அன்பையும் வெளிப்படுத்துகிறது என்றும் இன்றைய தலைமுறையினர் கூறுகின்றனர்.
பிப்ரவரி 8 - ப்ரபோஸ் தினம்

பட மூலாதாரம், Getty Images
காதலர்கள் தங்களுடைய காதல் உறவை வெளிப்படையாக தங்களுடைய துணைக்கும், இந்த உலகத்திற்கும் கூறும் ஒரு நாளாக இந்த ப்ரபோஸ் தினம் கொண்டாடப்படுகிறது. மறக்க முடியாத பரிசுகளுடனோ அல்லது எதிர்பாராத வியக்கத்தக்க ஏற்படுகளுடனோ காதலை வெளிப்படுத்துவது இந்த நாளின் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
மேற்கூறிய படி இந்த நாளுக்கான வரலாற்று தரவுகள் இல்லையென்றாலும், இந்த தினம் கொண்டாடப்பட்டதற்கான உறுதி செய்யப்படாத தகவல்கள் உள்ளன.
அதில் 1477ஆம் ஆண்டு முதலாம் மாக்சிமிலியன் என்பவர் வைர மோதிரத்துடன் தன்னுடைய காதலியான மேரி ஆஃப் பர்கன்டிக்கு காதலை ப்ரபோஸ் செய்துள்ளார் என்று நம்பப்படுகிறது.
பிப்ரவரி 9 - சாக்லேட் தினம்

பட மூலாதாரம், Getty Images
காதலர் வாரத்தின் மூன்றாவது நாளாக கொண்டாடப்படுவது சாக்லேட் தினம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இந்த சாக்லேட், அதை உண்பவரின் மனதை மகிழ்விக்கும். அதாவது சாக்லேட்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், தியோப்ரோமைன், ட்ரிப்டோஃபான் போன்ற கூறுகள் அதை உட்கொள்பவரின் மனதை அமைதியாக்கி மகிழ்விக்கின்றன. சாக்லேட் தருவது அன்பையும் காதலையும் எடுத்துரைப்பதாக கருதப்படுகிறது.
பிப்ரவரி 10 - டெடி தினம்

பட மூலாதாரம், Getty Images
இந்த நாளன்று தன்னுடைய காதலருக்கோ அல்லது நண்பருக்கோ அன்பின் அடையாளமாக வழங்கப்படுவது தான் இந்த டெடி பியர் பொம்மைகள். மிகவும் நெருக்கமான நபருக்கு இதை கொடுப்பது என்பது நாம் அவர்களுடன் என்றுமே இருப்போம் என்ற எண்ணத்தையும், அதை கொடுப்பவரின் ஞாபகத்தையும் அவர்களுக்கு கொடுக்கும்.
இந்த நாள் கொண்டாடப்பட்டதற்கான வரலாறு இல்லை என்றாலும் இந்த பொம்மைகள் தோன்றியதற்கான வரலாறு உள்ளது.
1902 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட், மிஸிஸிப்பி என்ற இடத்தில் வேட்டையாட சென்றிருந்த போது அங்கிருந்த கரடியை சுட்டுக்கொல்ல மறுத்துவிட்டார். இவரின் இந்த செயலையும் இரக்கத்தையும் பாராட்டி, முதல் முதலாக உருவாக்கப்பட்டதே இந்த டெடி பியர். ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள நேயத்தின் அடையாளமாக திகழ்கிறது இந்த பொம்மைகள். பல ஆண்டுகளாக வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் பிடித்தமான ஒரு பரிசாக இந்த பொம்மை இருந்துவருகிறது.
பிப்ரவரி 11 - பிராமிஸ் தினம்

பட மூலாதாரம், Getty Images
காதலர் வாரத்தில் மிக முக்கியமான நாளாக பார்க்கப்படுவது இந்த வாக்குறுதி தினம். இந்த நாளன்று மக்கள் தங்கள் உறவை மேம்படுத்தும் வகையிலான வாக்குறுதிகளை எடுத்துக்கொள்வர்.
ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள நம்பிக்கையை வளர்க்கும் இந்த நாள் அவர்களின் வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமான நாளாக பார்க்கப்படுகிறது. வாழ்க்கையில் எந்த துன்பம் வந்தாலும் ஒருவரை ஒருவரை விட்டு விலகாமல் உடன் நிற்போம் என்ற சத்தியத்தை காதலர்கள், நண்பர்கள் என அனைத்து உறவுமுறைகளும் ஏற்றுக்கொள்வர் .
பிப்ரவரி 12 - ஹக் தினம்

பட மூலாதாரம், Getty Images
தொடுதல் என்பது ஒரு மொழி. அன்புக்குரியவர்களுக்கு காதலை வெளிப்படுத்தும் ஒரு செயலாக கட்டிப்பிடிப்பது இந்த தினத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
பிப்ரவரி 13 - கிஸ் தினம்

பட மூலாதாரம், Getty Images
அன்பின் வெளிப்பாடான முத்தத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நாள் தான் இந்த கிஸ் தினம். இந்த தினத்தன்று ஒருவருக்கொருவர் முத்தத்தை பகிர்ந்து கொள்வது அவர்களிடையே உள்ள நெருக்கத்தை அதிகரிக்கிறது. காதலர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் முத்தத்துடன் தங்களது நேசத்தையும் பகிர்கின்றனர்.
இதற்கு பின்னர் பிப்ரவரி 14 ஆம் தேதி வரும் காதலர் தினம் உலக நாடுகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதற்கு குறிப்பிடப்பட்ட எந்த டிரஸ் கோடும் இல்லையென்றாலும், இந்த நாளன்று காதலிப்பவர், காதலை எதிர்பார்த்து காத்திருப்பவர், காதலித்துப் பிரிந்தவர் என ஒவ்வொருவரும் தங்களின் விருப்பத்திற்கேற்ப வெவ்வேறு நிறத்தில் ஆடைகளை அணிந்துகொள்வர்.
காலத்திற்கேற்ப பல்வேறு மாற்றங்களை இந்த உலகம் சந்தித்துக்கொண்டு வருவது போல, இந்த காதலர் தினம் கொண்டாடப்படும் விதமும் மாறிக் கொண்டே வருகிறது. அதன் ஒரு பகுதியாக இப்பொழுது சிங்கிளாக இருக்கும் இளைஞர்களும் காதலித்து பிரிந்தவர்களும் ஆன்டி வாலன்டைன் என்ற ஒரு புதிய வாரத்தை கொண்டாடுகின்றனர்.
வாலன்டைன் தினத்திற்கு அடுத்த நாளிலிருந்து கொண்டாடப்படும் இந்த வாரம், ஸ்லாப் தினம் (Slap day), கிக் தினம் (Kick Day), பெர்ஃப்யூம் தினம் (Perfume day), ஃப்ளர்ட் தினம் (Flirt Day), கன்ஃபெஷன் தினம் (Confession Day), மிஸ்ஸிங் தினம் (Missing Day) மற்றும் பிரேக் அப் தினம் (Breakup Day) என்று காதலுக்கு மாறான செயல்களை உள்ளடக்கியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












