சென்னை: இரும்பு வாயிற்கதவு விழுந்து 7 வயது சிறுமி உயிரிழப்பு – இன்றைய முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
(தமிழகம், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் தொடர்பாக, 15/02/2025 அன்று வெளியான நாளிதழ் மற்றும் இணைய செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்)
சென்னை நங்கநல்லூர் பகுதியில் இரும்பு வாயிற்கதவு சரிந்து விழுந்து 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக 'தினமணி' செய்தி வெளியிட்டுள்ளது.
நங்கநல்லூரில் எம்எம்டிசி காலனியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் சம்பத் என்பவர் அப்பகுதியிலே சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது 7 வயது மகள் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் சம்பத், வியாழக்கிழமை அன்று மாலை பள்ளி முடிந்த பிறகு அவரது மகளை, தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது குடியிருப்பின் இரும்பு வாயிற்கதவை அந்த சிறுமி திறந்தபோது, கதவு திடீரென சரிந்து அச்சிறுமி மீது விழுந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரும்பு வாயிற்கதவின் கீழ் சிக்கி பலத்த காயமடைந்த சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
- மஞ்சள் கரு, வெள்ளைக்கரு சிதையாமல் முட்டையை சரியாக வேக வைப்பது எப்படி?
- ஆழ்துளை கிணறுகளிலிருந்து 40 ஆண்டுகளாக 24 மணி நேரமும் வரும் வெந்நீர் - எங்கே, எப்படி?
- விரல் நகத்தில் தோன்றும் வெள்ளை நிற கோடு எதை குறிக்கிறது? தீவிர உடல்நல பிரச்னைகளை நகம் காட்டுமா?
- பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? அப்போது பார்த்தால் பாம்பு கொத்துமா?

108 ஆம்புலன்ஸ் வருகையை அறிந்துகொள்ள புதிய செயலி
108 ஆம்புலன்ஸ் வருகையை துல்லியமாக அறிந்துகொள்வதற்காக தமிழக அரசு புதிய செயலியை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது என்று 'தினத்தந்தி' செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
விபத்தில் சிக்கியவர்கள், நோயாளிகள் போன்றவர்களை உயிர்காக்கும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தமிழ்நாட்டில் 108 அவசர ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்படுகின்றது. இந்த சேவை சென்னையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையம் மூலமாக நிர்வாகிக்கப்படுகின்றது.
ஆம்புலன்ஸுக்கு அழைப்பு கொடுத்த பின்னர், அது எங்கு வந்துகொண்டிருக்குறது? இன்னும் எத்தனை நிமிடத்துக்குள் வரும்? சரியான நேரத்துக்குள் மருத்துவமனைக்கு சென்றுவிடமுடியுமா? என்ற பதைபதைப்புகளுக்கு தீர்வு காண தமிழக அரசு 'அவரசம் 108 தமிழ்நாடு' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது என்கிறது அந்த செய்தி.
ஜி.பி.எஸ். உதவியோடு ஆம்புலன்ஸ் எங்கு வந்துகொண்டிருக்கிறது? இன்னும் எவ்வளவு நேரத்தில் சம்பவ இடத்துக்கு வந்து சேரும்? என்பதை அழைப்பு விடுத்தவர்கள் தெரிந்துகொள்ளலாம். ஆம்புலன்ஸ் தேவை என்று அழைப்பு விடுக்கும் நபரின் செல்போன் எண்ணுக்கு, கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து குறுஞ்செய்தி மூலம் ஒரு லிங்க் அனுப்பப்படும். அதில் அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் வந்துகொண்டிருக்கும் தகவல்களை அறிந்து கொள்ளலாம் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஜெயலலிதாவின் நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1,562 ஏக்கர் சொத்துக்கான ஆவணங்கள் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது.
1991-96 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் குவித்ததாக ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அவரது வீட்டில் சோதனை நடத்தி தங்கம், வைரம், வெள்ளி நகைகள், புடவைகள், காலணிகள், கைக்கடிகாரங்கள், வீட்டு உபயோக பொருட்கள், சொத்துக்களின் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.
இந்த வழக்கு தமிழகத்தில் இருந்து பெங்களூரு சிறப்பு நீதுமன்றத்துக்கு மாற்றப்பட்டதால், இந்த பொருட்களும் கர்நாடக அரசின் கருவூலத்தில் பத்திரமாக வைக்கப்பட்டன என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா கடந்த 2014 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அரசு ஏலம் விட்டு, வழக்கை நடத்திய கர்நாடகா அரசுக்கு உரிய தொகையை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
ஆனால் இந்த வழக்கு நிறைவடைந்து 10 ஆண்டுகள் மேலாகியும் கர்நாடகாவுக்கு இந்த தொகை எதுவும் வழங்கப்படவில்லை. எனவே சமூக ஆர்வலரான நரசிம்மமூர்த்தி ஜெயலலிதாவின் நகைகளை ஏலம்விட வேண்டும் என்று 2023 ஆம் ஆண்டு பெங்களூரு குடிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, அவரது சொத்துக்களை தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புதுறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வழக்கை நடத்திய கர்நாடகா அரசுக்கு 5 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனது அத்தையின் சொத்துக்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையடுத்து நேற்று ஜெயலலிதாவின் சொத்துகள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கும் பணிகள் தொடங்கின. முதற்கட்டமாக 1,562 ஏக்கர் நிலத்தின் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் 11 ஆயிரத்து 344 புடவைகள், 750 காலணிகள், 27 கிலோ மதிப்பிலான நகைகள் போன்றவை ஒப்படைக்கப்பட்டன என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தெருநாய் தொல்லையை சமாளிக்க மூன்று புதிய கருத்தடை மையங்கள்
வருடத்துக்கு 50,000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் என்ற இலக்கை அடைவதற்காக முயற்சிகளை பெருநகர சென்னை மாநகராட்சி எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக மணலி, தேனாம்பேட்டை மற்றும் வளசரவாக்கத்தில் விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மையங்களை அமைப்பதற்கான டெண்டர்களை மாநகராட்சி நேற்று (பிப்ரவரி 14) விடுத்துள்ளது என்று 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்காக நாய்கள் தற்போது திருவொற்றியூர், தண்டையார்பேட்டை மற்றும் மணலி போன்ற வட சென்னைப் பகுதிகளிலிருந்து புளியந்தோப்பு அல்லது தி. நகர் போன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் தெரிவித்தார். "இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததும், புதிய அறுவைசிகிச்சை மையங்கள் ஏற்கனவே உள்ள மையங்களின் பணிச் சுமையைக் குறைக்கும், மேலும் அறுவைசிகிச்சை செய்ய காத்திருக்க வேண்டியுள்ள நேரத்தையும் குறைக்கும்", என்று அவர் கூறினார்.
தற்போதுள்ள மையங்கள் வருடத்திற்கு 10,000 அறுவை சிகிச்சைகளை மட்டுமே செய்யும் திறன் கொண்டவை. நாய்களை வைத்து பார்த்துக்கொள்வதற்கான போதிய இடங்களும் இல்லை. புதிய மையங்களில் செல்லப்பிராணி உரிமையாளர்கள் காத்திருக்க தனி அறைகள் இருக்கும், குடிநீர் வசதிகள், துர்நாற்றத்தை அகற்ற அதற்கான வெளியேற்றங்கள் மற்றும் கழிப்பறைகள் ஆகியவை இருக்கும் என்கிறது அச்செய்தி.
15 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தில் 16 அறுவை சிகிச்சை நிபுணர்கள், 12 நாய் பிடிக்கும் வாகனங்கள் மற்றும் 100 கூடுதல் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள். "சென்னை நகரத்தின் கவுன்சிலர்கள் தெருநாய் தொல்லை குறித்து அதிக புகார்களை எழுப்பியுள்ளனர். நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும், மேலும் நாய் கடிப்பதையும் தடுக்க முடியும்," என்று அவர் கூறினார்.
தெருநாய் தொல்லை குறித்து ஒவ்வொரு நாளும் சுமார் 1,200 புகார்கள் சென்னை மாநகராட்சிக்கு வருகின்றன, இதில் 100 நாய் கடி அல்லது கீறல்கள் அடங்கும். "மூன்று ஆண்டுகளில் தெருநாய்களை 100% கருத்தடை செய்வதே இந்த திட்டத்தின் இலக்கு. அடுத்த ஆண்டில், ஒவ்வொரு மண்டலத்திற்கும் கருத்தடை அறுவை சிகிச்சை மையங்களை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம், "என்று துணை மேயர் கூறினார் என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இளைஞர்களிடம் வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை பணம் மோசடி
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி இளையோரை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் இலங்கையின் வடக்கு பகுதியில் அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் என்று 'வீரகேசரி' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறைகளில் ஆட்கடத்தல்களில் ஈடுபடும் முகவர்கள் இளையோரை இலக்கு வைத்து , அவர்களை சமூக ஊடகங்கள் ஊடாக அணுகி, ஆசை வார்த்தைகளை கூறி பெருந்தொகையான பணத்தினை பெற்று மோசடி செய்து வருகின்றனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் , மானிப்பாய் , கிளிநொச்சி உள்ளிட்ட காவல் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்கிறது அந்த செய்தி.
வெளிநாடு செல்வதற்கு வங்கி கணக்கில் பெருந்தொகை பணம் வங்கி கணக்கில் இருப்பில் இருக்க வேண்டும் என கூறி , வங்கி கணக்கு விவரங்கள், அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்று வங்கியில் உள்ள பணத்தினை மோசடியாக கும்பல் பெற்றுக்கொண்டு தலைமறைவாகி வருகிறது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கபெற்றள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெளிநாடு செல்ல காத்திருக்கும் இளையோர் , வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு முகவர்கள் ஊடாக பயண ஏற்பாடுகளை செய்து சட்ட ரீதியான முறையில் செல்ல வேண்டும். இது தொடர்பில் இளையோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டாலே இவ்வாறான மோசடி சம்பவங்களில் இருந்து அவர்கள் தப்பிக்கொள்ள முடியும். இல்லையெனில் பெருந்தொகை பணத்தினை இழக்க நேரிடும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












