தோல் அரிப்பு: சொறிவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா? புதிய ஆய்வு கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
ஒரு கொசு கடித்தால், எறும்போ அல்லது ஒரு பூச்சியோ உடலில் ஊர்வது போன்ற உணர்வு ஏற்பட்டால், உடனே ஏற்படும் அரிப்பை விரல்களால் சொறிந்துகொள்வது நமக்கு ஒரு வித ஆறுதலைக் கொடுக்கும்.
நிச்சயம் சொறிந்தே தீர வேண்டும் எனும் உணர்வு, நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து நம்மை தன்னிச்சையாகச் சொறியத் தூண்டிவிடும்.
அந்த ஆறுதல் உணர்வுக்குப் பிறகுதான், நம்மை யாரும் பார்த்தார்களா என்பதைக் கவனிப்போம். சிலருக்கு பிறர் சொறிந்து கொள்வதைப் பார்த்தாலே, அவர்களுக்கும் அரிப்பு ஏற்படுவதைப் போன்ற உணர்வு ஏற்படும்.
எலிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வின் முடிவில், தோலில் ஏற்படும் அரிப்பு ஒரு நோய் எதிர்ப்பு சக்தியைச் செயல்படுத்துகிறது என்றும், இது தீங்கு விளைவிக்கும் தொற்றுநோய்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
- தோல் புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது? தடுப்பதற்கு என்ன வழி? மருத்துவர்கள் கூறுவது என்ன?
- மனித மூளையின் மோசமான நினைவுகளை அழிக்க முடியுமா? எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனை கூறுவது என்ன?
- உங்களால் இரவில் தூங்க முடியவில்லையா? - நீங்கள் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும் என்ன?
- உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? - அறிவியல் கூறும் 7 எளிய வழிகள்

ஆனாலும் பொதுவாக 'அதிகம் சொறியக் கூடாது, தோல் அழற்சியாக இருந்தால் அதைச் சொறிவது இன்னும் அந்நிலையைத் தீவிரப்படுத்தும்' என்றே மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
அப்படியிருக்க, உடலில் அரிப்பு ஏற்பட்டால் சொறிவது நல்லதா? தோலில் ஏற்படும் அரிப்பு ஒரு நோய் எதிர்ப்பு சக்தியைச் செயல்படுத்துகிறது என்றால், அரிப்பைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்படும் மருந்துகள் அந்த நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்குமா?
'அரிப்பு - ஒரு நோய் எதிர்ப்பு செயல்பாடு'
ஜனவரி 30ஆம் தேதியன்று நேச்சர் அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில், "சொறிவது என்பது ஒரு வகை ஆறுதலை மட்டும் அளிக்கவில்லை, பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற சாத்தியமான அச்சுறுத்தல்களில் இருந்து உடல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உதவும், ஒரு நோய் எதிர்ப்பு செயல்பாடாகவும் அரிப்பு இருக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலிகளை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏனென்றால், எலிகளுக்கும் மனிதர்களுக்கும் மரபணு ரீதியாகப் பல ஒற்றுமைகள் உள்ளன.
சொறிவது ஒருவிதத்தில் நன்மைகளை அளிக்கும் என இந்த ஆய்வு கூறினாலும், அளவுக்கு அதிகமாக சொறிவது சருமத்தைச் சேதப்படுத்தும் மற்றும் 'அழற்சியை' (Inflammation) தீவிரப்படுத்தும் என்பதையும் அது குறிப்பிடுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்த ஆய்வு இரண்டு பகுதிகளாக நடத்தப்பட்டது. அதன் முதல் பகுதி, அரிப்பு ஏற்பட்டு சொறியும்போது என்ன நடக்கிறது? இரண்டாவது பகுதி, ஒரு நாளுக்குப் பிறகு அரிப்பு ஏற்பட்ட இடத்தில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை எந்த அளவில் உள்ளது?
பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில், தோல் நோய் எதிர்ப்பு நிபுணர் டான் கப்லான் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், எலிகளின் காதுகளில் ஒரு செயற்கை ஒவ்வாமை மருந்து செலுத்தப்பட்டது.
இது அவற்றின் காதுகளில் ஒரு தோல் அழற்சியை ஏற்படுத்தியது. உடனே எலிகள் சொறியத் தொடங்கியபோது, அவற்றின் காதுகள் வீங்கி, அந்தப் பகுதி நியூட்ரோஃபில் (Neutrophils) செல்களால் நிரம்பின.
நியூட்ரோஃபில் செல்கள், உடலில் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் ஒரு வகை வெள்ளை ரத்த அணுக்கள். நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒரு முக்கியப் பகுதியாக இவை உள்ளன.
ஆனால் பிரத்யேக கருவி அணிவிக்கப்பட்ட, மற்றொரு பிரிவு எலிகளால் அவ்வாறு சொறிய முடியவில்லை. இதனால் ஒவ்வாமை ஏற்பட்ட பகுதியில், குறைவான வீக்கமே தோன்றியது. நியூட்ரோஃபில் செல்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.
அரிப்பு-உணர்திறனுக்கான நியூரான் இல்லாத, மரபணு மாற்றம் செய்யப்பட்ட எலிகளில் பரிசோதனை மேற்கொண்டபோதும், இதேபோன்ற ஒரு எதிர்வினை வெளிப்பட்டது. அதோடு, சொறிந்து கொள்ளும் செயல்பாடு, அழற்சியை அதிகப்படுத்துகிறது என்பதையும் இந்தச் சோதனை காட்டியது.
சொறிந்தவுடன் கிடைக்கும் ஆறுதல் உணர்வுக்கு காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
அரிப்புக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அறிவதற்காக, காதுகளைச் சொறிந்துகொள்ள அனுமதிக்கப்பட்ட எலிகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
அரிப்பு ஏற்பட்ட பகுதியில், வலி-உணர்திறன் நியூரான்கள் சப்ஸ்டன்ஸ் பி (Substance B) எனப்படும் சக்திவாய்ந்த நியூரோட்ரான்ஸ்மிட்டர்களை (Neurotransmitter) வெளியிட்டன.
இந்த 'சப்ஸ்டன்ஸ் பி' ஒருவகை முக்கிய வெள்ளை ரத்த அணுக்களைச் செயல்படுத்துகிறது. இவை ஒவ்வாமை அறிகுறிகளைத் தூண்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இது, சொறியப்பட்ட பகுதியில் நியூட்ரோஃபில்கள் எழ வழிவகுத்தது, அதைத் தொடர்ந்து அழற்சி ஏற்பட்டது.
ஆய்வின் இரண்டாம் பகுதியில், விஞ்ஞானிகள் எலிகளின் தோலில் உள்ள நுண்ணுயிரிகளை ஆய்வு செய்தனர். இது அவற்றின் தோலில் வாழும் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் உள்பட பல நுண்ணுயிரிகளின் தொகுப்பு. இதேபோன்ற அமைப்பு மனித தோலிலும் உள்ளது.
சொறிந்துகொள்ள அனுமதிக்கப்பட்ட எலிகளிடம், சொறிந்துகொள்ளத் தூண்டக்கூடிய செயற்கை ஒவ்வாமை மருந்து செலுத்தப்பட்டு, ஒரு நாளுக்குப் பிறகு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அவற்றின் காதுகளில் ஆபத்தான ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் (Staphylococcus aureus) எனும் பாக்டீரியா குறைவாக இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
அதுவே சொறிய அனுமதிக்கப்படாத எலிகளில், இந்த பாக்டீரியாவின் அளவு அதிகமாக இருந்தது. ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் என்பது கிராம்-பாசிட்டிவ் பாக்டீரியா, இது பலவிதமான நோய்களை ஏற்படுத்துகிறது.
இந்த பாக்டீரியா, மனித உடலின் தோல் மற்றும் சீதமென் சவ்வுகளில் (Mucous membrane, பெரும்பாலும் நாசிப் பகுதியில்) காணப்படுகிறது. பொதுவாக ஆரோக்கியமான சருமத்தில் இந்த பாக்டீரியா தொற்றுநோயை ஏற்படுத்தாது. ஆனால், ரத்த ஓட்டத்தில் அல்லது உள் திசுக்களில் இந்த பாக்டீரியா நுழைய வாய்ப்பு கிடைத்தால், அவை பலவிதமான, கடுமையான தொற்றுநோய்களை ஏற்படுத்தக்கூடும்.
எனவே சொறிவதன் மூலம், தோலில் இந்த ஆபத்தான பாக்டீரியாக்களின் பரவல் குறைவதை இந்த ஆய்வு காட்டுகிறது. இதுவே, சொறிந்தவுடன் நமக்குக் கிடைக்கும் ஆறுதலான உணர்வுக்கும் காரணம் என்று அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
உடலில் அரிப்பு ஏற்பட்டால், அது குறித்த சமிக்ஞைகளை மூளைக்கு அனுப்பும் நரம்புகளின் ஒரு தொகுப்பும், அழற்சியை அதிகரிப்பதன் மூலம் அரிப்புக்கு எதிர்வினையாற்றும் மற்றொரு தனி தொகுப்பும் இருப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
விஞ்ஞானிகளால் இந்த இரு தொகுப்புகளைப் பிரிக்க முடிந்தால், அவர்களால் ஒரு சமயத்தில் ஒரு தொகுப்பைத் தடுக்க முடியும். இதன் மூலம், ஓர் அரிப்பு வலி மிகுந்ததாக இருந்தாலும்கூட, அதனால் ஏற்படும் அழற்சி உடலின் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு எப்படி உதவுகிறது என்பதை அறிந்துகொள்ள முடியும்.
'உடலின் பிரச்னைகளை முன்பே காட்டிக் கொடுக்கும் தோல்'

பட மூலாதாரம், Getty Images
அரிப்பு தொடர்பான இத்தகைய ஆய்வுகள், அரிப்பு ஏற்பட்டவுடன் உடலில் என்ன நடக்கிறது என்பது பற்றிய ஆழமான புரிதலை வழங்கக் கூடும் என்றும், அது எக்ஸிமா (Eczema), நீரிழிவு போன்ற நிலைகளின் காரணமாக நாள்பட்ட அரிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக் கூடும் என்றும் தோல் மருத்துவர் புவனாஸ்ரீ கூறுகிறார்.
"இந்த ஆய்வில், தற்காலிகமாக ஏற்படும் அரிப்பு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நாள்பட்ட அரிப்பு என்றால் அதிகமாகச் சொறிவது அந்த நிலையை இன்னும் தீவிரமாக்கும். அதற்காகத்தான் அரிப்பைத் தடுக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆகவே, அவை நோய் எதிர்ப்பு சக்தியை எந்தவிதத்திலும் பாதிக்காது" என்று அவர் கூறுகிறார்.
அதிகமாகச் சொறிவது நல்லதல்ல என்று கூறும் மருத்துவர் புவனாஸ்ரீ, அரிப்பு அதிகமானால் நிச்சயமாக ஒரு தோல் மருத்துவரை அணுக வேண்டும் என்றும் கூறுகிறார்.
அதோடு, "உடலில் எந்தப் பிரச்னை என்றாலும், அதை முதலில் வெளிப்படுத்துவது நமது தோல் மற்றும் முடிகள்தான். ஒரு 10-15 வருடங்களில் உடலில் நடக்கவிருக்கும் மாற்றங்களை, சருமமும் முடியும் முன்பே காட்டிக் கொடுத்துவிடும். எனவே தோல் தொடர்பான பிரச்னைகளில் அலட்சியம் கூடாது," என்றும் அவர் எச்சரித்தார்.
மன அழுத்தத்திற்கும் அரிப்புக்குமான தொடர்பு

பட மூலாதாரம், Dr.Bhuvansree
மன அழுத்தத்திற்கும் அரிப்புக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகக் கூறுகிறார் தோல் மருத்துவர் புவனாஸ்ரீ.
"மன அழுத்தம் அதிகமாக இருந்தால் நிச்சயமாக அரிப்பு இருக்கும். மன அழுத்தம் சொறிவதற்கான தூண்டுதலை அதிகரிக்கிறது. சொறியும்போது என்டார்ஃபின் (Endorphin) எனும் ஹார்மோன் சுரந்து, ஒரு இன்ப உணர்வை அளிக்கும், அதுவே தற்காலிக நிவாரணத்தையும் அளிக்கிறது. ஆனால், மீண்டும் மீண்டும் சொறிவது தோல் பாதிப்பு, அழற்சி மற்றும் அதீத அரிப்புக்கு வழிவகுக்கிறது" என்கிறார் அவர்.
அவ்வாறு மீண்டும் மீண்டும் சொறிவதால், ஒரு கட்டத்திற்கு மேல் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் அரிப்பு ஏற்படாவிட்டாலும்கூட தன்னிச்சையாகச் சொறிவது ஒரு பழக்கமாகிவிடும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
உலகம் முழுவதும், சுமார் 180 கோடி பேர் தோல் நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. குறிப்பாக 84.5 மில்லியன் அமெரிக்கர்கள் (நான்கில் ஒருவர்) தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜி எனும் அமைப்பு தெரிவிக்கிறது.
"அரிப்பு என்பது உடலின் முக்கியமான, அத்தியாவசியமான ஒரு செயல்பாடு. ஆனால், அது அதீத அரிப்பாகவோ அல்லது நாள்பட்ட அரிப்பாகவோ, குறிப்பாக அந்தரங்க உறுப்புகளில் மாறும்போதுதான் பிரச்னை. அத்தகைய பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுக தயக்கம் காட்டக்கூடாது" என்கிறார் தோல் மருத்துவர் புவனாஸ்ரீ.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












