சென்னையில் தலித்துகள், முஸ்லிம்கள் வாடகை வீடு தேடுவதில் சந்திக்கும் சவால்கள் என்ன?

தலித்துகள், முஸ்லிம்கள், இந்தியா, பாகுபாடு, அரசியல்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

"நீங்கள் முஸ்லிம் அல்லது தலித் என்றால், ஒருநாள் சென்னையில் வீடு தேடி அலைந்து பாருங்கள். உங்களது படிப்பு, வேலை, பொருளாதார நிலை அனைத்தும் ஒரு பொருட்டே அல்ல என்பதும், இந்தச் சமூகம் உங்களை எந்த நிலையில் வைத்துப் பார்க்கிறது என்பதும் தெளிவாகப் புரியும்."

கடந்த 6 மாதங்களாக சென்னையில் வாடகை வீடு தேடிக் கொண்டிருப்பதாகக் கூறும் ஷாஜகானின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வேதனை நிறைந்த வார்த்தைகள் இவை.

இது யாரோ ஒரு சிலருக்கு, ஏதேனும் சில பகுதிகளில் மட்டும் கிடைக்கும் அனுபவங்கள் அல்ல. எக்கனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி (Economic and Political Weekly) எனும் ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு, இந்தச் சிக்கல் குறித்துப் பின்வருமாறு விவரிக்கிறது,

"சமூகத்தில் நிலவும் முன்முடிவுகளின் காரணமாக தலித்துகள், முஸ்லிம்கள் ஆகிய இருதரப்புக்கும் வாடகைக்கு வீடுகள் மறுக்கப்படுகின்றன. இதில் முஸ்லிம்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் வாடகைக்கு வீடுகளைப் பெற, நியாயமற்ற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்."

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

'அதிக வாடகை கொடுக்க வேண்டும், அசைவம் உண்ணக்கூடாது'

மும்பையில் இருந்து இயங்கி வரும் 'எக்கனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி' 1949 முதல் வெளியிடப்படும் ஓர் ஆய்விதழ். டெல்லி, ஃபரிதாபாத், காஸியாபாத், குர்கான், நொய்டா என இந்தியாவின் தலைநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 4 முக்கியமான பெருநகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

பிற சாதிகளைச் சேர்ந்த (தலித்துகள் அல்லாத) இந்துக்கள், தலித்துகள், முஸ்லிம்கள் என மூன்று தரப்புகளைச் சேர்ந்த 1,479 பேர் (வாடகைக்கு வீடு தேடுபவர்கள்) இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.

நாளிதழ்கள் மற்றும் ரியல் எஸ்டேட் இணையதளங்களில் 'வீடு வாடகைக்கு' என விளம்பரம் செய்திருந்த உரிமையாளர்களை, தொலைபேசி வாயிலாக மற்றும் நேரடியாகச் சந்தித்து, இந்த மூன்று தரப்பினரும் பேசியதை அடிப்படையாகக் கொண்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.

அதில், பிற சாதிகளைச் சேர்ந்த இந்துக்களுக்கு வீடு கொடுக்கப் பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால், தலித்துகள் மற்றும் முஸ்லிம்களுக்கு, வீடு மறுக்கப்பட்டது அல்லது பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

அதிக வாடகை கொடுக்க வேண்டும், குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டைக் காலி செய்ய வேண்டும், குறித்த நேரத்திற்குள் தினமும் வீட்டிற்கு வர வேண்டும், குறிப்பிட்ட உணவு வகைகளைச் சமைக்க அல்லது உண்ணத் தடை போன்றவையே அந்த நிபந்தனைகள்.

"இதன் நோக்கம், வீடு கிடையாது என்பதை நேரடியாகச் சொல்லாமல், இத்தகைய நிபந்தனைகள் விதித்தால், அவர்களே (முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள்) வீடு வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள் என்பதுதான்" என அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

பெயரை வைத்துதான் பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள், சாதி/மதம் குறித்து அறிந்துகொள்கிறார்கள் என்றும், சில நேரங்களில் தலித்துகள் அல்லது முஸ்லிம்கள் எனத் தெரியாமல் வீடு கொடுக்க ஒப்புக் கொண்டு, பிறகு அடையாள ஆவணங்கள் மூலம் சாதி/மதம் தெரிய வந்தால் உடனடியாகப் பின்வாங்குகிறார்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

தலித்துகள், முஸ்லிம்கள், இந்தியா, பாகுபாடு, அரசியல்

பட மூலாதாரம், Manushyaputhiran/Facebook

படக்குறிப்பு, இந்த பிரச்னை சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறுகிறார் மனுஷ்யபுத்திரன்

இந்த நிலை வட இந்தியாவில் மட்டுமல்ல, சென்னையிலும் இருப்பதாகக் கூறுகிறார் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்.

"வாடகைக்கு வீடு தேடிச் செல்லும்போது, அன்பாக வரவேற்பார்கள், பேசுவார்கள். உங்களுக்கு நிச்சயமாக வீடு தருகிறோம், உங்களை தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறோம் என்பார்கள்."

"எல்லாம் பேசி முடித்து, அடுத்த நாள் வாடகை ஒப்பந்தத்திற்காக அடையாள ஆவணங்களை வாங்கிப் பார்த்துவிட்டு மறுத்துவிடுவார்கள் அல்லது அதன் பிறகு எத்தனை முறை ஃபோன் செய்தாலும் பதில் வராது. காரணம் எனது இயற்பெயர் அப்துல் ஹமீது, அதுவே ஆவணங்களிலும் இருக்கும்" என்கிறார் மனுஷ்யபுத்திரன்.

இந்தப் பிரச்னை சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறிய மனுஷ்யபுத்திரன், "முஸ்லிம் என்பதால் மட்டுமல்ல, செல்லப் பிராணி வளர்ப்பதால், அரசியல் மற்றும் ஊடகத்துறையில் இருப்பதால், அசைவம் சாப்பிடுபவன் என்பதால், இதுவரை 150க்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்களால் நிராகரிக்கப்பட்டு இருக்கிறேன்" என்றார்.

'கண்ணகி நகரைச் சேர்ந்தவன் என்பதால் வீடு தர மறுத்தார்கள்'

தலித்துகள், முஸ்லிம்கள், இந்தியா, பாகுபாடு, அரசியல்

பட மூலாதாரம், actorbeemji/Instagram

படக்குறிப்பு, தனது சாதியின் காரணமாக சென்னையில் பல இடங்களில் தனக்கு வாடகை வீடு மறுக்கப்பட்டதாகக் கூறுகிறார் நடிகர் கண்ணன்

சென்னை, கண்ணகி நகரைச் சேர்ந்தவர், கண்ணன் எனும் 'காலா' பீம்ஜி. நடிகர் ரஜினிகாந்தின் 'காலா' உள்பட சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள இவர், தனது சாதியின் காரணமாக சென்னையில் பல இடங்களில் தனக்கு வாடகை வீடு மறுக்கப்பட்டதாகக் கூறுகிறார்.

"நான் கண்ணகி நகரைச் சேர்ந்தவன் என்பதாலும் எனக்கு வீடு தர மறுத்தார்கள். எனது வேலைக்காகவும், குழந்தையின் படிப்புக்காகவும் ஒவ்வொரு நாளும் கண்ணகி நகரில் இருந்து, சென்னைக்குள் வந்து செல்வது மிகவும் கடினம் என்பதால் இரண்டு ஆண்டுகள் வாடகை வீடு தேடி அலைந்தேன்."

"சில இடங்களில், நேரில் சென்று வீடு பார்க்கும்போது எனது நிறம் மற்றும் பேச்சை வைத்து இன்ன சாதி என முடிவு செய்து, முடியாது என்று கூறிவிடுவார்கள்" என்கிறார் அவர்.

ஆனால், அதற்காகத் தான் எந்த வீட்டு உரிமையாளர் மீதும் கோபப்பட்டதில்லை என்று கூறும் கண்ணன், "அதைக் கடந்து செல்வதைத் தவிர வேறு வழி இல்லை. இப்போது ஒரு வாடகை வீட்டில்தான் இருக்கிறேன். சீக்கிரமாக ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும். அதுவரை வீடு குறித்த ஒருவித பயம் இருக்கும்" என்கிறார்.

பேரழிவுச் சூழலிலும் காட்டப்பட்ட சாதி/மத பாகுபாடுகள்

தலித்துகள், முஸ்லிம்கள், இந்தியா, பாகுபாடு, அரசியல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிலநடுக்கத்திற்குப் பிந்தைய மாதங்களில், குஜராத் மாநில மக்கள் ஒரு செயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பக ஆய்வு கூறுகிறது

இந்தியாவில், ஒரு பேரழிவுச் சூழலில்கூட இருப்பிடம் சார்ந்து தலித்துகள், முஸ்லிம்களுக்கு எதிராகப் பாகுபாடு பார்க்கப்படுகிறது என ஒரு ஆய்வு கூறுகிறது.

கடந்த 2001, ஜனவரி 26, குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட மோசமான பூகம்பத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர்.

"நிலநடுக்கத்திற்குப் பிந்தைய மாதங்களில், குஜராத் மாநில மக்கள் ஒரு செயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்டனர். அது நிவாரண உதவிகள் வழங்குவதில் காட்டப்பட்ட சாதி மற்றும் வகுப்புவாத பாகுபாடுகள்" என்று 2001இல் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட ஓர் ஆய்வு கூறுகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்டு ஆறு வாரங்களுக்குப் பின்னர், மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு, குஜராத்தில் மோசமான சேதங்களைச் சந்தித்த பகுதிகளை ஆய்வு செய்தது. அக்குழு பார்வையிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள், பிற சாதி இந்துக்களிடம் இருந்து தனித்து, தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது பேசிய பாதிக்கப்பட்ட மக்கள், "பூகம்பத்திற்கு முன் நாங்கள் எப்படி வாழ்ந்தோமோ, அப்படியேதான் இப்போதும் முகாம்களில் வசிக்கிறோம்" என்று கூறியதாக ஆய்வு தெரிவிக்கிறது.

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் சமமான முறையில் இழப்பீடு மற்றும் உதவிகளை வழங்க அரசாங்கம் நிதி ஒதுக்கியும்கூட, தலித் மற்றும் முஸ்லிம் மக்களுக்கும் போதுமான தங்குமிடம், மின்சாரம், குடிநீர் மற்றும் பிற வசதிகள் வழங்கப்படவில்லை என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

தலித்துகள், முஸ்லிம்கள் குறித்த முன்முடிவுகள்

தலித்துகள், முஸ்லிம்கள், இந்தியா, பாகுபாடு, அரசியல்

பட மூலாதாரம், மாஞ்சோலை செல்வகுமார்

படக்குறிப்பு, கல்வியின் மூலம் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திலிருந்து விடுபட்டு வர முடிந்தாலும், சாதி அடையாளம் தங்களை வெகு காலத்திற்கு துரத்தியதாகக் கூறுகிறார் ராபர்ட்

"இந்தச் சமூகம் தலித்துகள், முஸ்லிம்கள் குறித்து வைத்துள்ள முன்முடிவுகள் மிகவும் மோசமானவை. அவை பல வருடங்களாக விதைக்கப்பட்டவை. சாதி அல்லது மதத்தைக் காரணம் காட்டி, வாடகைக்கு வீடு கொடுக்க ஒருவர் மறுத்தால், அவர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க முடியாது. இதுதான் எதார்த்தம்" என்கிறார் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார்.

"எங்கள் குடும்பத்தால் இரண்டு வருடங்களுக்கு மேல் எந்த வாடகை வீட்டிலும் இருக்க முடிந்ததில்லை. காரணம், சாதி. ஏதாவது ஒரு காரணம் சொல்லி வீட்டைக் காலி செய்தே ஆக வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவார்கள். சொந்த வீட்டிற்கு வந்த பிறகுதான் அந்தப் பிரச்னையில் இருந்து தப்பிக்க முடிந்தது" என்று கூறும் ராபர்ட் சந்திரகுமாரின் பூர்வீகம், மாஞ்சோலை எஸ்டேட் பகுதி.

கல்வியின் மூலம் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திலிருந்து விடுபட்டு வர முடிந்தாலும், சாதி அடையாளம் தங்களை வெகு காலத்திற்கு துரத்தியதாகக் கூறுகிறார் ராபர்ட்.

வாடகை வீடுகள் குறித்த விஷயத்தில் மட்டுமல்லாது, சொத்துகளை விற்பதில்கூட சாதி/மத பாகுபாடுகள் காட்டப்படுகிறது என்கிறார் அவர்.

"கல்வியறிவும், பொருளாதார வளர்ச்சியும் இதற்கு ஓரளவு தீர்வாக இருக்கலாம். ஆனால், இதெல்லாம் பரவலாக இருக்கும் நகரங்களில்கூட இந்தச் சிக்கல் நிலவுகிறது என்பதுதான் கவலைக்குரிய விஷயம்" என்கிறார் ராபர்ட் சந்திரகுமார்.

தலித்துகள், முஸ்லிம்கள், இந்தியா, பாகுபாடு, அரசியல்

பட மூலாதாரம், Getty Images

சாதி/மத பாகுபாடுகளுக்கும் கல்வியறிவுக்கும் தொடர்பு உள்ளது என்று பியூ ஆராய்ச்சி மையத்தின் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

நவம்பர் 17, 2019 முதல் மார்ச் 23, 2020 வரை, வெவ்வேறு சாதிகள், மதங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 30,000 இந்தியர்களிடம் இருந்து நேரடியாகப் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

"ஒப்பீட்டளவில், குறைந்த கல்வியறிவு பெற்ற இந்தியர்களுடன் ஒப்பிடும்போது, கல்லூரிப் பட்டப்படிப்பு முடித்த இந்தியர்கள் மாற்று சாதிகள்/மதங்களைச் சேர்ந்தவர்களை அண்டை வீட்டாராக ஏற்றுக் கொள்ள ஆட்சேபம் தெரிவிப்பதில்லை" என அந்த ஆய்வு கூறுகிறது.

தென்னிந்தியாவில் வாழும் இந்துக்களுடன் ஒப்பிடுகையில், மத்திய இந்தியாவில் வாழும் இந்துக்கள், முஸ்லிம்களை தங்கள் அண்டை வீட்டாராக ஏற்றுக்கொள்ள அதிகம் விரும்புவதில்லை என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

வீடு கொடுக்கத் தயங்குவது ஏன்?

தலித்துகள், முஸ்லிம்கள், இந்தியா, பாகுபாடு, அரசியல்

பட மூலாதாரம், Getty Images

தலித்துகள், முஸ்லிம்களுக்கு வீடு வழங்க மறுத்த சில வீட்டு உரிமையாளர்களைத் தொடர்புகொண்டு பேசப் பலமுறை முயன்றோம். ஆனால், இதுகுறித்துப் பேச அவர்கள் மறுத்துவிட்டனர்.

ஆனால், "முஸ்லிம்களுக்கு வீடு கொடுத்தால், வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்று பலர் வலியுறுத்துவதாக" கூறுகிறார் சென்னையில் சொந்தமாக வீடு வைத்திருக்கும் ரவீந்திரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

கோயம்புத்தூரைச் சேர்ந்த ரவீந்தரன், சென்னையில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவருக்கு வடபழனி பகுதியில் சொந்தமாக இரண்டு வீடுகள் உள்ளன.

"அந்த இரண்டு வீடுகளையும் முஸ்லிம் குடும்பங்களுக்குத்தான் வாடகைக்கு கொடுத்துள்ளேன். சிலர் என்னிடம், முஸ்லிம்களுக்கு வீடு கொடுக்காதே, அவர்கள் வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ள மாட்டார்கள் என இப்போதும் கூறுகிறார்கள்.

ஆனால், இதுவரை வாடகைக்கு இருப்பவர்களால் சுத்தம் சார்ந்தோ அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகளோ ஏற்படவில்லை" என்கிறார் ரவீந்தரன்.

"முஸ்லிம்கள், தலித்துகள் வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்ற தவறான பொதுப் புத்தியால், நடுநிலையாகச் சிந்திப்பவர்கள்கூட வீடு கொடுக்கத் தயங்குகிறார்கள். அண்டை வீட்டுக்காரர் என்ன நினைப்பாரோ என்ற பயமே இதற்குக் காரணம்," என்கிறார் வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார்.

தீர்வு என்ன?

தலித்துகள், முஸ்லிம்கள், இந்தியா, பாகுபாடு, அரசியல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் சமூக மாற்றம் ஏற்படாவிட்டால் எதுவும் சாத்தியமில்லை என்கிறார் வழக்கறிஞர் ராபர்ட்

"உண்மை நிலை என்னவென்றால், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் சாதி/மதம் சார்ந்து வாடகைக்கு வீடு கொடுக்க மறுப்பது அதிகரித்து வருகிறது" என்று கூறும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், ஒரு தீர்வை முன்வைக்கிறார்.

"லண்டன் போன்ற சர்வதேச நகரங்களில், அரசே (பிரிட்டன்) வாடகைக்கு வீடுகள் கொடுப்பதை மற்றும் விற்பனை செய்வதை ஒருங்கிணைக்கிறது. அதன் மூலம் ஒருவரின் நிதி நிலை, அவர் மீது குற்ற வழக்குகள் இருக்கிறதா போன்றவை ஆராயப்பட்டு, முன்னுரிமை அளிக்கப்படுகின்றது."

"எவ்வளவு முன்பணம் (Advance) மற்றும் வாடகை வசூலிக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் விதிமுறைகள் உள்ளன. அதே முறையை இங்கும் பின்பற்றலாம்" என்கிறார்.

ஆனால், சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் சமூக மாற்றம் ஏற்படாவிட்டால் எதுவும் சாத்தியமில்லை என்கிறார் வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார்.

"சாதி அல்லது மத அடிப்படையில் ஒருவரை ஒதுக்குவது மிகப்பெரிய அசிங்கம் என்பதை சமூகம் உணராதவரை, முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் குறித்த சமூகத்தின் பொதுப் புத்தி மாறாத வரை, இந்தப் பிரச்னைகளுக்கான தீர்வு கிடைக்காது."

"அந்த மாற்றம் சுலபமாக வந்துவிடாது, அதைப் பற்றிய விவாதங்களும், கலந்துரையாடல்களும் சமூகத்தில் நடந்துகொண்டே இருக்க வேண்டும். நகரங்களில் இருந்து அந்த மாற்றம் தொடங்கும்" என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)