காதலர் தினம்: 3 ஆண்டுகள் வெளியூரில் வீட்டுச்சிறை, உறவினர்களின் புறக்கணிப்புகள் - சாதி தடையை உடைத்து இணைந்த தம்பதி

- எழுதியவர், நித்யா பாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
காதலர் தினம். உலகம் முழுவதும், மதம், இனம், மொழி, நாடு கடந்து காதலில் வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கான நாளாக, கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருக்கும் நாள் இது.
ஆனால் தெற்காசிய நாடுகளில் குறிப்பாக இந்தியா போன்ற சாதிய அடிப்படையில் உருவான சமூகத்தில் வேறொரு சாதியையோ, மதத்தையோ சேர்ந்தவர் மீதான காதல் என்பது இன்றும் பலரால் ஏற்றுக் கொள்ளப்படாத, மன்னிக்கவே முடியாத குற்றமாகவே அமைந்துள்ளது.
உலகம் 2025ஆம் ஆண்டில் இருந்தாலும், இந்திய சமூகத்தில் இதுவே நிதர்சனம்.

கொள்கைகள், சமூக நீதி போன்ற விவகாரங்களில் பரந்துபட்ட எண்ணத்தைக் கொண்டிருக்கும் மாநிலமாக தமிழ்நாடு அறியப்பட்டாலும் இங்கு மாற்று சாதியினரை திருமணம் செய்து கொள்ளும் போக்கு குறைவாகவே உள்ளது.
அதே நேரத்தில் இப்படியான காதல் திருமணங்களுக்கு பெற்றவர்களும் அவர்கள் சார்ந்திருக்கும் சமூகமும் பெருமளவில் எதிர்ப்பு தெரிவிப்பதும் எப்போதும் போல் அதிகமாகவே உள்ளது.
ஆயிரம் எதிர்ப்புகள் இருந்தாலும்கூட அதையும் மீறி, சாதி, மத, குடும்ப மற்றும் சமூகக் கட்டமைப்புகளை உடைத்துவிட்டு திருமணம் செய்தவர்களும் வாழத்தான் செய்கின்றனர்.
காதலில் அவர்கள் வெற்றி பெற்றவர்களாக இருந்தாலும்கூட அந்த நிலையை அடைய அவர்கள் விட்டுக் கொடுத்ததும், இழந்ததும் ஏராளமானதாக உள்ளது.
இந்த காதலர் தினத்தன்று இப்படியான சமூக தடைகளை உடைத்து திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதியின் காதல் கதையையும், அவர்களின் வெற்றி வரலாற்றையும் பிபிசி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.
காதலும் மறுப்பும்

சென்னையை பூர்வீகமாக கொண்ட, இந்து பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் அகிலா. 2000ஆம் ஆண்டில் சென்னையில் தொழில்நுட்பத் துறை மெல்ல மெல்ல தன்னுடைய கிளைகளைப் பரப்பிய காலகட்டம் அது. கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் அகிலாவுக்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையும் கனவும் இருந்தது.
"நான் எனது விருப்பத்தை அப்பாவிடம் கூறினேன். அவரோ 'படித்தது போதும். வேலைக்குச் சென்றால் காதல் என்று விழுந்துவிடுவாய். என் வீட்டுப் பெண் வேலைக்குச் செல்வதில் எனக்கு விருப்பமில்லை' என்று கூறிவிட்டார்" என்று பிபிசியிடம் பகிர்ந்தார் அகிலா.
ஆனால் அப்பாவின் கட்டுப்பாட்டையும் மீறி பணியில் சேர்கிறார் அகிலா. அங்கு அவர் மதனை பார்க்கிறார். அவருடைய கணவர் மதன், சென்னையில் பிறந்து வளர்ந்து, தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். இடைநிலை சாதியைச் சேர்ந்த அவரின் பூர்வீகம் மதுரை.
"அகிலா பணியில் சேர்ந்தபோது அவருக்கு நான் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தேன். அப்படித்தான் எனக்கு அகிலாவை தெரியும்," என்று கூறுகிறார் மதன்.
ஆரம்பக் காலம் முதலே சண்டையும் சச்சரவுமாக ஆரம்பித்த அவர்களின் பயணம், சில மாதங்களில் நல்ல நட்பில் முடிவடைந்தது. மதன் அப்போது அந்தத் தனியார் நிறுவனத்தில் நான்கு வருடங்களுக்கும் மேல் பணியாற்றி வந்தவர்.
வேறொரு நிறுவனத்தில் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கவும், அகிலா உள்பட அலுவலக நண்பர்கள் பலருக்கும் பிரியாவிடை விருந்து ஒன்றை மதன் வழங்கியுள்ளார்.
"என்னிடம் வந்து, நீ நன்றாக இரு. இரவில் வேலைக்கு வரும்போது கவனமாக இரு. வேலையில் கவனம் செலுத்து என்று என்னென்னவோ ஆலோசனை கூறினார்," என்று அந்த நாள் நடந்த உரையாடலை நினைவு கூறுகிறார் அகிலா. அந்த நாள் நடந்த நிகழ்வுகள் அவர் மனதைவிட்டு நீங்கவில்லை.
"பல மாதங்களாக ஒன்றாகப் பயணித்தவரை இனி பார்க்க இயலாது என்ற வருத்தம் என்னிடம் இருந்தது. அதனால் நான் அழ ஆரம்பித்தேன். அவரும் அழத் துவங்கினார். அது என்ன உணர்வென்று எங்களால் கூற இயலவில்லை. ஆனாலும் அழுதோம்," என்றார் அகிலா.
இந்தச் சம்பவம் நடந்து இரண்டு மூன்று நாட்கள் கழித்து புது அலுவலகத்திற்குச் செல்லாமல் நேராக அகிலாவை பார்க்க வந்திருக்கிறார் மதன். முதல்முறையாக, மதன் அகிலாவை காதலிப்பதாக ஒப்புக் கொண்டார்.
"எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவரின் நட்பு எனக்கு முக்கியமானது. காதல், திருமணம் என்பதையெல்லாம் வீட்டில் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள் என்பதால் எனக்கு அவரிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. பிடித்திருந்தது, ஆனாலும் வேண்டாம் என்று கூறினேன்," என்றார் அகிலா.
"எனக்கு ஆரம்பத்தில் பயமாக இருந்தது. வீட்டில் இதற்கு சம்மதிப்பார்களா என்று கேட்டால் எனக்குத் தெரியவில்லை. அவர்களின் பதில் நிச்சயமாக எனது விருப்பதிற்கு மாறானதாக இருக்கும் என்று நினைத்தேன். ஒருவருக்கு வீண் ஆசைகளைக் காட்டிவிட்டு பிறகு ஏமாற்றினால் நன்றாக இருக்காது என்று நான் மதனின் காதலுக்கு மறுப்பு தெரிவித்தேன்," என்றார் அகிலா.
வீட்டுக்காவலில் இருந்த மூன்று ஆண்டுகள்

சில மாதங்கள் நண்பர்களாகத் தங்கள் பயணத்தை அகிலாவும், மதனும் தொடர்ந்தனர்.
ஒரு கட்டத்தில் அகிலா, மதனை காதலிப்பதை ஒப்புக் கொண்டார். ஏற்கெனவே சில ஆண்டுகளாக நன்கு அறிமுகமான, பரிச்சயமான நபர் என்பதால் அதிக காலம் எடுத்துக்கொள்ள விரும்பாத இந்த ஜோடி, 20 நாட்களுக்குள் தங்கள் காதல் குறித்து தங்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
"இருவரும் வெவ்வேறு சாதிய பின்னணியைக் கொண்டவர்கள் என்பதால் மறுப்பு இருக்கும் என்பதை நாங்கள் உறுதியாக எதிர்பார்த்தோம். ஆனால் அதன் பிறகு நடந்த எதுவும் நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று," என்று விவரிக்கிறார் அகிலா.
அகிலாவை வேலைக்கு அனுப்ப மறுத்துவிட்டார் அவருடைய அப்பா. அவர் கையில் இருந்த செல்போன் பறிக்கப்பட்டு, உடைத்து எறியப்பட்டது.
சென்னையில் இருந்து வேலைக்குச் சென்றால் மதனை பார்க்கும் வாய்ப்புகளும், சந்தர்ப்ப சூழலும் ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு அகிலா சேலத்தில் உள்ள அவருடைய பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள், வெளி உலகோடு எந்தத் தொடர்பும் அகிலாவுக்கு இல்லை.
"முதல் இரண்டு ஆண்டுகளில் வீட்டை விட்டு வெளியேறவே எனக்கு அனுமதி இல்லை. மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தேன். இரண்டு ஆண்டுகள் கழித்து, தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை அருகில் இருக்கும் கோவிலுக்கு மட்டும் சென்று வர எனக்கு அனுமதி வழங்கப்பட்டது. மதன் எனக்காகக் காத்திருப்பார் என்று மனதில் ஏதோ ஒரு நம்பிக்கை. அது தவிர என்னிடம் வேறேதும் எஞ்சியிருக்கவில்லை," என்கிறார் அகிலா.
மூன்று ஆண்டுகளில் அகிலாவுக்கு பல்வேறு இடங்களில் வரன்கள் பார்க்கப்பட்டன. அனைத்திற்கும் அவர் மறுப்பு கூறி வந்தார்.
அதே சமயத்தில்தான் மதனும் அவரின் காதல் குறித்து வீட்டில் தெரிவித்தார். "நானும் என்னுடைய வீட்டில் அதே நேரத்தில்தான் எங்களின் காதல் குறித்து தெரிவித்தேன். சில காலம் ஆகட்டும் என்று தட்டிக் கழித்தனர். ஆனால் வேறெந்த பேச்சும் அதைச் சுற்றி எழவில்லை," என்று விவரிக்கிறார் மதன்.
மதன், அகிலாவின் உறவினர்கள், உடன் பிறந்தவர்கள், அக்கம் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் என ஒவ்வொருவரிடமும் அகிலா எங்கே இருக்கிறார் என்று விசாரித்து வந்தார். ஆனால் உறுதியான தகவலை யாரும் வழங்கவில்லை.
"ஓர் ஆணாக சில வசதிகள் எனக்கு இருந்தன. நான் வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன். எனக்கு யாரும் அவ்வளவு அழுத்தம் தரவில்லை. ஆனால் அகிலாவுக்கு வரன் தேடிக் கொண்டிருந்தனர். அவர் மறுப்பு தெரிவிக்கும் போதேல்லாம், அவரின் செயல் பலருக்கு அங்கே கோபத்தை ஏற்படுத்தியது. அந்தக் கோபத்தை அகிலா அனுதினமும் எதிர்கொண்டு வந்தார். இந்தக் காதலுக்காக நான் தியாகம் செய்ததைக் காட்டிலும், அவர் செய்த தியாகங்கள் மிகவும் அதிகம்," என்கிறார் மதன்.
இரண்டு ஆண்டுகள் கழித்து மதன், அகிலா இருக்கும் இடத்தை ஒரு வழியாகக் கண்டறிந்தார். "அகிலா செல்லும் அதே கோவிலில் நான் காத்துக் கொண்டிருந்தேன். அவர் வருவாரா என்று நிச்சயமாக எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் ஒரு சனிக்கிழமை காலை சென்னையில் இருந்து கிளம்பி சேலம் வந்து, அந்த கோவிலில் காத்துக் கொண்டிருந்தேன்," என்று கூறுகிறார் மதன்.
திருமணமும், தொடர்ந்து எழுந்த எதிர்ப்புகளும்

"அகிலா சென்னைக்குத் திரும்பி வரும் காலம் வரை நானும் அவரும் அந்த கோவிலில் ஒவ்வொரு வார இறுதியிலும் சந்திக்கத் தொடங்கினோம். இதற்கிடையில் அகிலாவின் சித்தி என்னைப் பார்க்க வேண்டும் என்று அழைத்திருந்தார். நான் அங்கே சென்றபோது, அவர்களின் குடும்பப் பழக்க, வழக்கம் வேறு எங்களுடையது வேறு. இந்த உறவு திருமணத்தில் முடியாது. மனதை மாற்றிக் கொள்ளுங்கள், என்று ஆலோசனை வழங்கினார்," என்று தெரிவிக்கிறார் மதன்.
சேலத்தில் இருந்து அகிலாவை மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர் அவரின் குடும்பத்தினர். மதன் நீண்ட காலமாகத் தன்னுடைய வீட்டில் தனது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிப்பார்கள் என்று காத்திருந்து ஏமாற்றமடைந்தார்.
"என்னுடைய வாழ்க்கையை நானே தீர்மானிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். பிறகு அகிலாவுக்கு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி நாளும் கிழமையும் குறித்து வைத்து, செய்தி ஒன்று அனுப்பினேன். என்னுடைய நண்பர்கள் எனக்கு உதவியாக இருந்தார்கள்," என்கிறார் மதன்.
"செருப்புகூட இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினேன்," என்றார் அகிலா. 2009ஆம் ஆண்டு திருவொற்றியூர் கோவிலில் அகிலாவும் மதனும் திருமணம் செய்து கொண்டனர்.
"எங்கள் வீட்டில் பெயரளவில் ஒப்புக் கொண்டனர். முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளவில்லை," என்கிறார் மதன். ஆனால் அகிலாவின் வீட்டிலோ திருமணத்திற்கு முழுமையாக எதிர்ப்பு எழுந்ததோடு, அகிலாவிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டனர்.
"எனது பெற்றோர்களுடன் சேர்ந்து வாழ்வது சரியாக இருக்காது என்று நாங்கள் முடிவெடுத்து கொட்டிவாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கினோம். மிகவும் சவாலான காலகட்டம் அது. இரவு நேரத்தில், அதிக நேரம் பணியாற்றினால் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்பதால் இரவு முழுவதும் நான் பணியாற்றிவிட்டு வீடு திரும்புவேன," என்று கூறுகிறார் மதன்.
"அவர் எனக்காகவும், கருவில் வளரும் எங்களின் குழந்தைக்காகவும் அதிக நேரம் பணியாற்றினார். கருவுற்றிருந்த நேரத்தில் பெற்றோர் ஆதரவை நான் அதிகம் நாடினேன். என்ன செய்வதென்றே தெரியாத காலம் அது. ஸ்கேன், மருத்துவ சிகிச்சை, உணவு முறை என்று எனக்கு வழிகாட்ட யாரும் இல்லை. 5ஆம் மாதம், 7ஆம் மாதங்களில் வளைகாப்பு நடத்துவார்கள் அதுவும் நடத்தவில்லை. என்னுடைய பெரியம்மாவுக்கு போன் செய்து இதுகுறித்து நான் மிகவும் வருத்தப்பட்டது உண்டு," என்று கூறுகிறார் அகிலா.
இந்த விவரம் அகிலாவின் தந்தைக்குத் தெரிய, அவர் முதன்முறையாக மதனுக்கு அழைப்பு விடுத்து வளைகாப்பு தொடர்பாகப் பேசியுள்ளார். பிறகு இரு வீட்டாரும் கூடி வளைகாப்பு நடைபெற்றது. ஒருவரை மற்றொருவர் நன்கு அறிந்து கொள்ள அமைந்த முதல் வாய்ப்பு அது என்று நினைவு கூறுகின்றனர் அந்தத் தம்பதியினர். 2010இல் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
விட்டுக் கொடுத்து வாழத் துவங்கினோம்

"பெற்றவர்களின் துணை எங்களுக்கு என்றும் தேவை என்று நாங்கள் நினைத்தோம். ஆரம்பத்தில் எனது வீட்டில் கடுமையான மறுப்பு இருந்த போதும், என் கணவர் என்னை கவனித்தக் கொண்ட விதம் என் பெற்றோர்களுக்கு மன நிறைவை அளித்தது. ஒரு சமயத்தில் அவர்கள், மதனை தங்கள் மகனைப் போலவே நடத்த ஆரம்பித்தனர்," என்கிறார் அகிலா.
"உறவினர்களின் திருமணங்கள் மற்றும் சடங்குகளுக்கு எப்போதும் எங்கள் வீட்டுத் தரப்பில் இருந்து அழைப்பு எங்களுக்கு வந்ததில்லை. ஆரம்பத்தில் அது அதிக கவலை அளித்தது. ஆனால் பழகிக் கொண்டோம்," என்கிறார் மதன்.
அகிலாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சின்னச் சின்ன விஷயங்களைக்கூட மதன் அகிலாவுக்காக மாற்றிக் கொண்டார். அசைவ உணவுகள் சாப்பிடுவதை நிறுத்தினார். அகிலாவுக்கு அழைப்பு விடுக்கப்படாத உறவினர்களின் வீட்டு விசேஷங்களுக்கு செல்வதை முற்றிலுமாக நிறுத்தினார். அந்த உறவினர்களுடனான பேச்சுவார்த்தையையும் துண்டித்தார்.
"திருமணமாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அவர்களின் வீட்டுப் பழக்கத்திற்கு ஏற்றவாறு என்னை மாறச் சொல்லி ஒரு போதும் அவர் வற்புறுத்தியதே இல்லை," என்று கூறுகிறார் அகிலா.
ஆனால் இன்று சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகள் சந்திக்கும் பிரச்னைகள் கலக்கத்தை ஏற்படுத்துவதாகவும் மனிதாபிமானமற்ற செயல் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

"சாதிச் சங்கங்களோ, சாதி அமைப்புகளோ, உறவினர்களோ நீங்கள் பெற்ற குழந்தைகள் பிரச்னைகளைச் சந்திக்கும்போது உடன் வந்து நிற்கப் போவதில்லை. உங்களின் பிள்ளைகள் எடுக்கும் முடிவுக்கு மதிப்பளியுங்கள்.
அவர்கள் தேர்வு செய்யும் நபர் உங்கள் சாதியைச் சாராதவராக இருந்தாலும்கூட அவரின் பண்பு நலன்களைப் பரிசீலித்து, உங்கள் பிள்ளைகள் எடுத்த முடிவு சரிதான் என்று தோன்றினால் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் திருமணம் செய்து வையுங்கள்," என்று தெரிவிக்கின்றனர் இந்தக் காதல் தம்பதி.
கடந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து 2024ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதி வரை சுமார் 30 ஆணவக் கொலை/தாக்குதல் சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்திருக்கின்றன. சில அசம்பாவிதங்கள் முறையாக புகார்களாகவோ வழக்காகவோ மாறுவதில்லை.
அகிலா, எந்தவொரு சூழலிலும் யாரையும் எதிர்பார்த்தோ அல்லது சார்ந்தோ வாழக்கூடாது என்பதில் மதன் உறுதியாக இருந்தார். ஒரு தொழில்முனைவோராக, அகிலா, நிதிசார் விவகாரங்களை சுதந்திரமாகக் கையாள வேண்டும் என்று மதன் விரும்பினார்.
அகிலா பெரிய பெரிய தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உணவு விநியோகம் செய்தார். பிறகு சூப்பர் மார்க்கெட் ஒன்றை கோவிட் காலத்திற்கு முன்பு வரை நிர்வகித்தார். தற்போது அவர் மீண்டும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












