மத்திய பட்ஜெட் 2025: 'ஏழை, எளிய மக்களுக்கானது இல்லை' - பொருளாதார நிபுணர்கள் கூறுவது என்ன?

பட்ஜெட் 2025: நிர்மலா சீதாராமனின் எட்டாவது பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிதிநிலை அறிக்கையில், வருமான வரி வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது வெகுவாக கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், நிதிநிலை அறிக்கையின் பிற அம்சங்கள் குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்தியாவின் 2025-26ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை சனிக்கிழமையன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையில், வருமான வரி செலுத்துவோருக்கான வரம்பு, 12 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சலுகை நாடு முழுவதும் பரபரப்புடன் விவாதிக்கப்படுகிறது. அதேநேரம், இந்த நிதிநிலை அறிக்கையில் கவனிக்க வேண்டிய வேறு விஷயங்களும் இருக்கின்றன என்கிறார்கள் நிபுணர்கள்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

2025 நிதி நிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

பிப்ரவரி 1-ம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்ட நிதி அறிக்கையின்படி, 2025-26ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் மொத்த வருவாய் (வரி மற்றும் வரி அல்லாத வருவாய் சேர்த்து), 34,20,409 கோடி ரூபாயாக இருக்கும்.

மொத்த செலவினங்கள் 50,65,345 கோடி ரூபாயாக இருக்கும். மொத்த செலவில் வட்டிக்காக மட்டும் 12,76,338 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் நிதிப் பற்றாக்குறை 15,68,936 கோடி ரூபாயாகவும் வருவாய் பற்றாக்குறை 5,23,846 கோடி ரூபாயாகவும் இருக்கும்.

இந்த நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதமாக இருந்தது. வரும் நிதியாண்டில் இது 4.4 சதவீதமாகக் குறையும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசின் செலவுகளில் மிகப்பெரிய செலவாக இருப்பது வாங்கிய கடனுக்கு செலுத்தும் வட்டிதான். இந்த ஆண்டு, வட்டியாக மட்டும் 12,76,338 கோடி ரூபாய் செலுத்தப்படும். இதற்கு அடுத்ததாக, போக்குவரத்துத் துறைக்கு 5,48,649 கோடி ரூபாயும் பாதுகாப்புத் துறைக்கு 4,91,732 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. ஓய்வூதியத்திற்காக மட்டும் 2,76,618 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

வருமான வரி விலக்கு வரம்பு ஏழு லட்சம் ரூபாயில் இருந்து 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதன்படி, ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருவாய் பெறுவோர் வருமான வரி ஏதும் செலுத்தத் தேவையில்லை.

பிகார் சட்டமன்ற தேர்தல் கணக்கு

பட்ஜெட் 2025: நிர்மலா சீதாராமனின் எட்டாவது பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மொத்த செலவினங்கள் 50,65,345 கோடி ரூபாயாக இருக்கும் என்று நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது!

இந்த நிதிநிலை அறிக்கையில் பிகார் மாநிலத்திற்கு எனக் குறிப்பாக சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிகாரில் மக்கானா எனப்படும் அல்லி விதைகள் அதிகம் உற்பத்தியாகின்றன. இந்த விதை உற்பத்தியை ஊக்குவிக்க, மதிப்புக்கூட்டுதல் செய்ய, சந்தைப்படுத்த உதவியாக மக்கானா வாரியம் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பிகாரின் எதிர்கால வளர்ச்சியை மனதில் கொண்டு தற்போது பாட்னாவில் உள்ள விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுவதோடு, புதிய விமான நிலையங்களும் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல பிகாரின் மிதிலாஞ்சல் பகுதிக்கு பலனளிக்கக்கூடிய மேற்கு கோஷி கால்வாய் திட்டத்திற்கும் நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் பிகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இந்த அறிவிப்புகள் கவனிக்கத்தக்கதாக இருக்கின்றன.

பட்ஜெட் மூலம் பயனடையப் போவது யார்?

இந்திய நிதிநிலை அறிக்கை: நிபுணர்கள் சொல்வது என்ன?
படக்குறிப்பு, "சமூகத்தின் கீழ் தட்டில் இருப்பவர்கள் மிகக் குறைவாக செலவழிப்பவர்கள், பெட்ரோல் வரி குறைந்து அதனால், கையில் பணம் வந்தால், அதை கூடுதலாக செலவழிப்பார்கள்" என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

எல்லோரது கவனமும் வருமான வரி வரம்பு உயர்வு மீதே திருப்பப்பட்டிருக்கிறது. உண்மையில், நாட்டின் நிதி நிலைமை மிக மோசமாக இருப்பதையே நிதி நிலை அறிக்கைச் சுட்டிக்காட்டுவதாகக் கூறுகிறார் சென்னை பல்கலைக்கழக பொருளியல் துறையின் முன்னாள் பேராசிரியரான ஜோதி சிவஞானம்.

"எல்லோருமே இந்த வருமான வரி வரம்பு உயர்வைப் பற்றியே திரும்பத் திரும்பப் பேசுகிறார்கள். ஆனால், இந்த வரம்பு உயர்வால் வெறும் 2 கோடி பேருக்கு மட்டுமே பலன் கிடைக்கும்.

சுமார் 140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில், 2 கோடி என்பது மிகக் குறைவான சதவீதம். மேலும், மாதம் ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு சம்பளம் வாங்குபவர்களுக்கு கூடுதலாக சில ஆயிரம் ரூபாய் கிடைத்தால், அவர்கள் அதை உடனே செலவழிக்க மாட்டார்கள்.

மாறாக, பெட்ரோல் - டீசலுக்கான வரிகள் போன்ற மறைமுக வரிகள் குறைக்கப்பட்டிருந்தால் எல்லோருக்கும் பலன் கிடைத்திருக்கும்," என்கிறார் ஜோதி சிவஞானம்.

இந்தியாவின் 2024-25ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டதைவிட முக்கியமான துறைகளில் பல மடங்கு குறைவான தொகையே செலவிடப்பட்டு இருப்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

"வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவது, மேல் மத்தியதர வர்க்கத்தினருக்கு பலனளிக்கக்கூடிய ஒரு நடவடிக்கை. இதுபோல நேரடி வரி வருவாயைக் குறைப்பதற்குப் பதிலாக, ஏழைகளும் செலுத்தக்கூடிய மறைமுக வரியைக் குறைத்திருக்க வேண்டும்" என்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

எளிய மக்களுக்கு பயன் தராதா?

பட்ஜெட் 2025: நிர்மலா சீதாராமனின் எட்டாவது பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெட்ரோல் - டீசலுக்கான வரிகள் போன்ற மறைமுக வரிகள் குறைக்கப்பட்டிருந்தால் எல்லோருக்கும் பலன் கிடைத்திருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

"வருமான வரி வரம்பை 12 லட்சம் வரை அதிகரித்திருப்பதால் ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்குவோர்தான் பயனடைவார்கள். இதற்குப் பதிலாக பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்திருந்தால் ஆட்டோ, கார் ஓட்டுனர்கள் முதல் அனைவருக்கும் பலன் கிடைத்திருக்கும்," என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

மேலும், "அவர்கள் சமூகத்தின் கீழ் தட்டில் இருப்பவர்கள். கையில் பணமில்லாததால் மிகக் குறைவாக செலவழிப்பவர்கள். பெட்ரோல் வரி குறைந்து அதனால், கையில் பணம் வந்தால், அதைக் கூடுதலாகச் செலவழிப்பார்கள். அந்தப் பணம் சந்தைக்கு வரும். மாறாக உயர் வர்க்கத்தினருக்கு மிச்சமாகும் பணம், பங்குச் சந்தை, வங்கி போன்ற இடங்களில்தான் முதலீடு செய்யப்படும்" என்கிறார் அவர்.

மேலும் பல திட்டங்களை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சேர்த்து அறிவிக்கும் போக்கு இந்த பட்ஜெட்டிலும் தொடர்வதாகக் கூறுகிறார் அவர்.

"அடுத்த ஐந்து ஆண்டுகளில் பள்ளிகளில் 50,000 அடல் டிங்கரிங் லேப் வைக்கப்படும் என்கிறார்கள். பட்ஜெட் என்பது இந்த ஆண்டுக்கானது. எப்போது பார்த்தாலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு என்று சொன்னால் என்ன அர்த்தம்? இந்த ஆண்டில் இந்தத் திட்டத்திற்காக எவ்வளவு செலவழிக்கப் போகிறார்கள் என்பதையல்லவா சொல்ல வேண்டும்?" எனக் கேள்வியெழுப்புகிறார் அவர்.

'பல எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை'

பட்ஜெட் 2025: நிர்மலா சீதாராமனின் எட்டாவது பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

நிதிநிலை அறிக்கை தொடர்பாக இருந்த பல எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை என்கிறார் ஜோதி சிவஞானம். "ஜிஎஸ்டி எளிமைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. பெட்ரோல் - டீசல் வரி குறையுமென எதிர்பார்க்கப்பட்டது. வளர்ச்சியை ஊக்குவிக்க பொதுச் செலவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இவை எதுவும் நடக்கவில்லை. மாறாக கடந்த நிதியாண்டில் உணவு மானியம், விவசாயம், எரிசக்தி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி, சமூக நலன், நகர்ப்புற வளர்ச்சி போன்ற பல முக்கியத் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து பல மடங்கு குறைவாகச் செலவழித்திருக்கிறார்கள். இது எப்படி வளர்ச்சிக்கு வழிவகுக்கும்?" எனக் கேள்வியெழுப்புகிறார் ஜோதி சிவஞானம்.

எல்சிடி, எல்இடி திரைகளுக்கான 2.5 சதவீத வரி நீக்கப்பட்டுள்ளதால், மொபைல் போன்கள், லேப்டாப், டேப்லெட், டிவி ஆகியவற்றின் விலை குறையக்கூடும். அதேபோல லித்தியம் மின்கலங்களைப் பயன்படுத்தும் பொருட்களின் விலைகளும் குறையக்கூடும்.

கிஸான் கிரெடிட் கார்ட் எனப்படும் விவசாயிகளுக்கான கடன் அட்டையில் கடன் வரம்பு 3 லட்சத்தில் இருந்து ஐந்து லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதுமுள்ள 23 ஐஐடிகளில் இடங்கள் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8வது நிதி நிலை அறிக்கை இது. இதற்கு முன்பாக, முன்னாள் பிரதமரும் நிதியமைச்சருமான மொரார்ஜி தேசாய் 10 முறை நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)