'நீதிபதி நாத்திகனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை' - நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பிபிசி பேட்டியில் கூறியது என்ன?

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் தீர்ப்பு வழங்குவதற்கு சற்று முன்பாக, இந்த பிரச்னைக்குத் தீர்வு அளிக்குமாறு கடவுளிடம் பிரார்த்தனை செய்ததாகத் தான் ஒருபோதும் சொன்னதில்லை என்று முன்னாள் தலைமை நீதிபதி தனஞ்சய் யஷ்வந்த் சந்திரசூட் கூறியுள்ளார்.
பிபிசி செய்தியாளர் ஸ்டீபன் சாக்கருக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அயோத்தி தீர்ப்பு, 370வது சட்டப்பிரிவு மற்றும் நீதித்துறையின் வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார்.
"ராமர் கோவில் விவகாரம் தொடர்பான தீர்ப்பை வழங்குவதற்கு சற்று முன்பாக அதற்கு ஒரு தீர்வு கொடுக்குமாறு கடவுளிடம் பிரார்த்தனை செய்தீர்களா?," என்று ஸ்டீபன் சாக்கர் அவரிடம் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த நீதிபதி சந்திரசூட், "இது முற்றிலும் தவறானது. இது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட செய்தி. எனது கூற்று தவறான முறையில் முன்வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
- அயோத்தி ராமர் கோவில்: மத சார்பின்மை கொள்கையை மோதி அரசு மீறிவிட்டதா? அரசியல் சாசனம் கூறுவது என்ன?
- தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் எதிர்பார்த்தது என்ன, அவர் வழங்கியது என்ன?
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இல்லத்திற்குச் சென்ற பிரதமர் மோதி - சர்ச்சையாவது ஏன்?
- நீதிபதிகளின் வாய்மொழி கருத்துகள் சட்டத்திற்கு சமமானதா? - சந்திரசூட் முன்பு கூறியது விவாதமாவது ஏன்?

நீதிபதி டி.ஒய் சந்திரசூட் 2022 நவம்பர் முதல் 2024 நவம்பர் 10ஆம் தேதி வரை இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தார்.
சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்ட தலைமை நீதிபதிகளில் ஒருவராக இருந்த நீதிபதி சந்திரசூட்டின் பதவிக் காலத்தில் உச்சநீதிமன்றம் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளது.
இதில் சில தீர்ப்புகளுக்காக, குறிப்பாக அரசியல் அழுத்தம் தொடர்பாக அவர் விமர்சிக்கப்பட்டார்.
நீதித்துறை சுதந்திரம்
நரேந்திர மோதி இந்தியாவை 'ஒரு கட்சி அரசை' நோக்கித் தள்ளியுள்ளார் என்பதை ஆய்வாளர்கள், ராஜதந்திரிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொள்கின்றன என்றும், அவரது கட்சி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், எதிரிகளைக் குறிவைக்கவும் நீதிமன்றத்தை நாடுகிறது என்றும் 2023ஆம் ஆண்டில், தி நியூயார்க் டைம்ஸ் எழுதியது..

இந்தக் காலக்கட்டத்தில் அவரும் அரசியல் அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிட்டதா என்று ஸ்டீபன் சாக்கர் கேட்டபோது நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "நியூயார்க் டைம்ஸ் முற்றிலும் தவறான கருத்தை வெளியிட்டுள்ளது. ஏனென்றால் 2024 தேர்தலில் என்ன நடக்கப் போகிறது என்பதைப் புரிந்துகொள்ள அது தவறிவிட்டது. 2024 தேர்தல் முடிவுகள் 'ஒரு கட்சி ஒரு நாடு' என்ற கட்டுக்கதையை உடைத்துள்ளது.
இந்தியாவின் மாநிலங்களில் பிராந்திய விருப்பங்கள் மற்றும் அடையாளங்கள் முதன்மையானவை. பல மாநிலங்களில் பல்வேறு பிராந்திய கட்சிகள் சிறப்பாகச் செயல்பட்டு ஆட்சி செய்து வருகின்றன," என்று குறிப்பிட்டார்.
கடந்த சில ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் என்று பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2023ஆம் ஆண்டில் ஒரு அவதூறு வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் தண்டனை வழங்கியது. இதன் காரணமாக அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோயிருக்கும். ஆனால் இந்தத் தண்டனை பின்னர் உச்சநீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டது.
ராகுல் காந்தியின் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தலையீடு, இந்தியாவில் நீதித்துறையின் மீது அரசியல் அழுத்தம் இருப்பதைக் காட்டவில்லையா என்று சாக்கர் கேட்டபோது அதற்கு பதிலளித்த டி.ஒய்.சந்திரசூட், "கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் 21,300 ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அனைத்தின் மீதும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சட்டம் தன் கடமையைச் செய்கிறது என்று இதற்கு அர்த்தம்."
"அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா என எல்லா நாட்டிலும் சட்ட நடைமுறை உள்ளது. ஆனால் உயர்நீதிமன்றங்கள் குறிப்பாக உச்சநீதிமன்றம், 'தனிமனித சுதந்திரம்' பாதுகாக்கப்படும் என்ற தெளிவான செய்தியை அளித்துள்ளது. பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்ட விதம் குறித்து கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இதற்கும் வழிகள் உள்ளன. ஆனால் தனிமனித சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் இந்திய உச்சநீதிமன்றம் முன்னிலையில் உள்ளது என்பதே உண்மை," என்றார்.
370வது சட்டப்பிரிவு

பட மூலாதாரம், Getty Images
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு, 2019 ஆகஸ்ட் 5ஆம் தேதி மோதி அரசால் நீக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2023இல் டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, அரசின் இந்த முடிவை உறுதி செய்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சித்ததுடன், 'நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அரசியல் சாசனத்தை பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும்' கூறினர்.
தனது இந்தத் தீர்ப்பை நியாயப்படுத்திய நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "இந்த வழக்கின் தீர்ப்புகளில் ஒன்றை நான் எழுதினேன். அரசியலமைப்பு உருவாக்கத்தில் 370வது பிரிவு சேர்க்கப்பட்டது மற்றும் 'மாற்றக்கூடிய விதிகள்' என்ற தலைப்பின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் அதன் பெயர் 'தற்காலிக இடைநிலை விதிகள்' என மாற்றப்பட்டது."
"எனவே இந்த விதிகள் படிப்படியாக அகற்றப்படும் என்று அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது நம்பப்பட்டது. இடைநிலை விதிகளைப் படிப்படியாக அகற்ற 75 ஆண்டுகள் குறைவான காலமா?" என்று கேள்வி எழுப்பினார்.
சட்டப்பிரிவு 370 மட்டுமல்ல ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தும் நீக்கப்பட்டு, அது யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. அதன் மாநில அந்தஸ்தை மீட்டு எடுப்பதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று ஸ்டீபன் சாக்கர் அவரிடம் கேட்டார்.
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த நீதிபதி சந்திரசூட், "ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக செயல்முறையைத் தொடங்க 2024 செப்டம்பர் 30 என்ற காலகெடுவை உச்சநீதிமன்றம் விதித்தது. 2024 அக்டோபரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது," என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
இருப்பினும் பிரபல உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களான பிரசாந்த் பூஷண், துஷ்யந்த் தவே ஆகியோர் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளனர்.
அவர்களது குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த டி.ஒய்.சந்திரசூட், "இப்போது அங்கே ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சி செய்து வருகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி அல்லாத ஒரு கட்சிக்கு அமைதியான முறையில் அதிகாரம் மாற்றப்பட்டுள்ளது. இது ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது" என்றார்.
மாநில அந்தஸ்து நீக்கம் குறித்துப் பேசிய அவர் "ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றும் விவகாரத்தில், 'ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து விரைவில் மீட்கப்படும் என்ற மத்திய அரசின் பிரமாணப் பத்திரத்தை ஏற்றுக்கொண்டோம்," என்று குறிப்பிட்டார்.
ஆனால் மாநில அந்தஸ்தை மீண்டும் அளிக்கும் விஷயத்தில் உச்சநீதிமன்றம் எந்த காலக்கெடுவையும் நிர்ணயிக்கவில்லை.
"அந்த வகையில் உச்சநீதிமன்றம், ஜனநாயகப் பொறுப்புடைமை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைவதை உறுதி செய்தது. நாங்கள் எங்கள் அரசியலமைப்பு உரிமைகளைப் பயன்படுத்தவில்லை என்ற விமர்சனம் சரியானது அல்ல" என்றார் அவர்.
சிறுபான்மையினர் விவகாரங்கள்

பட மூலாதாரம், Getty Images
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) அண்டை நாடுகளில் உள்ள இந்துக்களுக்கு மட்டுமே இந்திய குடியுரிமை வழங்குவது பற்றிப் பேசுகிறது. அதேநேரம் இந்திய அரசியலமைப்புச் சட்டம், மதம் மற்றும் இனம் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாக நடத்துவது பற்றிப் பேசுகிறது.
இந்தியாவில் சிறுபான்மையினர் இரண்டாம் தர குடிமக்களாகக் கருதப்படுகிறார்கள் என்பது இந்தத் திருத்தத்தின் மூலம் நிரூபணமாகவில்லையா?
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "பிரிட்டனில் இதுபோன்ற சட்டத்தைச் செல்லாததாக்கும் அதிகாரம்கூட நீதிமன்றத்திற்கு இல்லை. இந்தியாவில் அது உள்ளது. குடியுரிமை விவகாரம் தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது," என்றார்.
"எனது பதவிக்காலத்தில் அரசியல் சாசன அமர்வுகளில் 62 தீர்ப்புகளை எழுதியுள்ளேன். 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கூட்டாட்சி அமைப்பு தொடர்பான அரசியல் சாசன வழக்குகள் இருந்தன.
அவற்றைத் தீர்த்து வைத்து மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளித்தோம். அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு எடுத்தோம்.1968இன் உச்சநீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் மாற்றினோம்," என்று அவர் தெரிவித்தார்.
"இது சமநிலை பற்றிய கேள்வி. பழைய வழக்குகளுக்குப் பதிலாக புதிய வழக்குகளை விசாரித்தால், 'தலைமை நீதிபதி புதிய வழக்குகளை மட்டுமே விசாரிக்கிறார்' என்று விமர்சனம் எழும். அதனால்தான் நான் பல பழைய வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்டேன்," என்று குறிப்பிட்டார்.
ராமர் கோவில் சர்ச்சை மற்றும் தீர்ப்பு

பட மூலாதாரம், Getty Images
பாபர் மசூதி-ராமர் கோவில் தகராறு தொடர்பான நீண்டகால வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 1992ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியது.
அப்போது "தீர்ப்பு அளிப்பதற்கு முன்பாக, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு சொல்லும்படி கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்" என்று டி.ஒய்.சந்திரசூட் கூறியதாகப் பல செய்திகள் வெளிவந்தன.
"நான் கடவுளின் முன் அமர்ந்து இதற்குத் தீர்வு அளிக்குமாறு அவரிடம் பிரார்த்தனை செய்தேன்," என்று நீதிபதி சந்திரசூட் கூறியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் பிபிசிக்கு அளித்த பேட்டியில் நீதிபதி சந்திரசூட், "இது சமூக ஊடகங்களில் பரவிய வதந்தி, இது முற்றிலும் தவறானது" என்று கூறினார்.
"இது முற்றிலும் தவறு என்பதை முன்பே தெளிவுபடுத்தியுள்ளேன். சமூக ஊடகங்கள் மூலம் ஒரு நீதிபதி பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் தவறான பதில்களே வரும்," என்றும் அவர் கூறினார்.
"நான் சமய நம்பிக்கையுள்ளவன் என்பதை நான் மறுக்கவில்லை. சுதந்திரமான நீதிபதியாக இருக்க வேண்டுமானால் அவர் நாத்திகனாக இருக்க வேண்டும் என்று நமது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்படவில்லை. என் மதத்திற்கு நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். ஆனால் எனது மதம் அனைத்து மதங்களையும் மதிக்கிறது. எந்த மதத்தைச் சேர்ந்தவர் வந்தாலும் அவருக்கு சமமான நீதி வழங்க வேண்டும். இதுதான் என் மதம்," என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், "நீதித்துறை படைப்பாற்றல் என்பது அறிவுத்திறன் மற்றும் செயல்திறனுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. அது புலனுணர்வுடன் தொடர்புடையது. பல ஆண்டுகளாக நடந்து வரும் இதுபோன்ற வழக்குகள் நம்மிடம் வரும்போது எப்படி அமைதி கிடைக்கும்?
அமைதி மற்றும் பொறுமையைக் கண்டறிய நீதிபதிகள் வெவ்வேறு வழிகளைக் கடைப்பிடிக்கின்றனர். பிரார்த்தனை மற்றும் தியானம் எனக்கு முக்கியம். நாட்டில் உள்ள ஒவ்வொரு சமூகத்தையும் குழுவையும் சமமாக நடத்த இது எனக்கு கற்றுக்கொடுக்கிறது" என்றார்.
தலைமை நீதிபதி வீட்டிற்கு பிரதமர் மோதி வருகை

பட மூலாதாரம், X/BJP4INDIA
சில மாதங்களுக்கு முன்பு நீதிபதி சந்திரசூட் வீட்டில் விநாயகர் பூஜையில் பிரதமர் கலந்துகொண்டது பற்றிப் பரவலாக விவாதிக்கப்பட்டது.
நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இது தொடர்பாக நிறைய விமர்சிக்கப்பட்டார். மேலும் நீதிபதி சந்திரசூட் பிரதமர் மோதிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதற்கான தெளிவான செய்தி இது என்றும், ஒரு தலைமை நீதிபதி பிரதமருடன் மிகவும் நெருக்கமாக இருப்பது அவரது தீர்ப்புகளைப் பாதிக்கும் என்றும் கூறப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "அரசியலமைப்பு பொறுப்புகள் என்று வரும்போது அடிப்படை மரியாதை அளித்தலுடன் அதை இணைத்துப் பார்க்கக்கூடாது. அரசியல் சாசன உயர் பதவியில் இருப்பவர்களிடம் காட்டப்படும் மரியாதைக்கும், வழக்குகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு நமது அமைப்பு முதிர்ச்சியடைந்துள்ளது என்று நான் நினைக்கிறேன்.
இந்தச் சந்திப்பிற்கு முன்பாக தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்தோம். தேர்தல் நிதிக்காக தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்திய சட்டம் இதன் மூலம் ரத்து செய்யப்பட்டது. அரசுக்கு எதிரான பல தீர்ப்புகளை இதற்குப் பிறகும் நாங்கள் அளித்துள்ளோம்," என்றார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் அரசு நிர்வாகத்திற்கு அடிபணிந்தது இல்லையா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், 'என் பதவிக் காலத்தில் அரசியல் அழுத்தங்களால் என் தீர்ப்புகள் ஒருபோதும் பாதிக்கப்பட்டது இல்லை' என்று தெரிவித்தார்.
இருப்பினும், நீதித்துறையின் பணி ஒரு கூட்டுப்பணி என்றும் பல நேரங்களில் மற்ற நீதிபதிகளிடம் இருந்து ஆலோசனை பெறப்படுவதாகவும் அவர் கூறினார்.
இறுதியாக, "ஜனநாயகத்தில் நீதித்துறையின் பங்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைப் போன்றது அல்ல என்பதை மீண்டும் கூற விரும்புகிறேன். நாங்கள் சட்டத்தின்படி செயல்படவும் அரசியலமைப்பைப் பாதுகாக்கவும் பணியாற்றுகிறோம்," என்று சந்திரசூட் குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












