நீதிபதிகளின் வாய்மொழி கருத்துகள் சட்டத்திற்கு சமமானதா? - சந்திரசூட் முன்பு கூறியது விவாதமாவது ஏன்?

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் பிபிசியிடம் கூறுகையில், "ஒரு வாய்மொழி கருத்து சட்டமாக மாற முடியாது" என்றார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் பிபிசியிடம் கூறுகையில், "ஒரு வாய்மொழி கருத்து சட்டமாக மாற முடியாது" என்றார்.
    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஞானவாபி மசூதி வழக்கு விசாரணையின் போது, அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் ஒரு வாய்மொழி கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து மசூதிகளுக்கு அடியில் கோவில்கள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைத் தூண்டியது.

உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஷாஹி ஜாமா மசூதியை ஆய்வு செய்ய விசாரணை நீதிமன்றம் ஒரு வழக்கறிஞர் ஆணையரை நியமித்தது. நவம்பர் 24 அன்று நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட ஆய்வின் போது சம்பலில் வன்முறை வெடித்தது.

வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்ததை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பின்னர், மற்றொரு நீதிமன்றம் அஜ்மீர் ஷெரீப் மசூதிக்கு அடியில் ஒரு கோவில் இருப்பதாக கூறி, ஆய்வு செய்யக் கோரிய மனுவை அனுமதித்தது.

அஜ்மீர் தர்கா இந்துகள் மற்றும் முஸ்லிம்கள் என இருதரப்பினரின் நம்பிக்கையின் மையமாக இருந்து வருகிறது.

மதுராவின் ஷாஹி ஈத்கா மற்றும் வாரணாசியின் ஞானவாபி மசூதிகளில் ஆய்வுக்காக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்புகளுக்குப் பிறகு, இப்போது உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் கீழமை நீதிமன்றங்களின் இந்த தீர்ப்புகள் சட்ட வல்லுநர்களை ஏமாற்றமடைய செய்துள்ளன.

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் பிபிசியிடம் கூறுகையில், "(அப்போதைய தலைமை நீதிபதியின்) ஒரு வாய்மொழி கருத்து சட்டமாக மாற முடியாது" என்றார்.

ஆனால், உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரண்டு வழக்குகளின் மனுதாரரும் இந்து ராஷ்டிரிய சேனா எனும் அமைப்பின் தலைவருமான விஷ்ணு குப்தா இதில் உறுதியாக உள்ளார்.

பிபிசி இந்தியிடம் பேசிய அவர், "மசூதி இருக்கும் எந்த இடத்தையும் நாங்கள் விட்டு வைக்க மாட்டோம். அடுத்தது, டெல்லி ஜாமா மசூதிதான். உத்தர பிரதேசத்தில் இதுபோன்ற பல இடங்கள் உள்ளன. மசூதிகளைக் கோவில்களாக அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் அரசாங்கத்திடம் கேட்போம்" என்றார்.

விஷ்ணு குப்தாவின் கருத்துகள் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத்தின் கருத்துகளுக்கு முரணானது.

மோகன் பகவத் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம், மக்களிடம், "ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை" என்றார்.

நீதிபதி சந்திரசூட் கூறியது என்ன?

டி.ஒய் சந்திரசூட்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, "வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991, 15ஆகஸ்ட் 1947அன்றைய தேதியின் நிலவரப்படி, எந்தவொரு கட்டமைப்பின் மதத் தன்மை குறித்த 'விசாரணையை' தடை செய்யவில்லை"

இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட், ஞானவாபி வழக்கின் விசாரணையின் போது,​​ மே 2022இல் வாய்மொழியாகக் கருத்து தெரிவித்தார்.

1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி வழிபாட்டுத் தலங்கள் இருந்ததின்படி, எந்தவொரு கட்டமைப்பின் மதத் தன்மை குறித்த "விசாரணையையும்" வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 தடை செய்யவில்லை என்று அவர் கூறியிருந்தார்.

ராம ஜென்ம பூமி இயக்கம் உச்சத்தில் இருந்த நேரத்தில்தான், வழிபாட்டுத் தலங்கள் சட்டம் நடைமுறைக்கு வந்தது. உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டத்திற்கு அரசியலமைப்பு அங்கீகாரம் அளித்து, அதை உறுதி செய்தது.

"வரலாறும் அதன் தவறுகளும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் ஒடுக்க ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட கூடாது," என்பதை இந்தச் சட்டம் காட்டுகிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

ஆனால், அப்போதைய தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, விசாரணை நீதிமன்றத்தில் ஆட்சேபனைகளை தெரிவிக்குமாறு ஞானவாபியின் மசூதி குழுவைக் கேட்டுக் கொண்டது.

அப்போதைய தலைமை நீதிபதியின் இந்த வாய்மொழி கருத்து விசாரணை நீதிமன்றத்தாலும், அலகாபாத் நீதிமன்றத்தாலும் சட்ட உரிமையாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் கீழ் இதுபோன்ற வழக்குகள் தடை செய்யப்படவில்லை என்று இந்த நீதிமன்றங்கள் தெரிவித்தன. இதற்குப் பிறகு, மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமி - ஷாஹி ஈத்கா வழக்கின் விசாரணையும் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது.

வாய்மொழி கருத்துகளின் விளைவுகள்

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே பிபிசியிடம் கூறுகையில், "வழிபாட்டு தலங்கள் 1947 ஆகஸ்ட் 15இல் இருந்த நிலையில் இருந்து மாற்றப்படுவதை வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தடை செய்கிறது. இந்த சட்டத்தின் கீழ் சம்பல் மற்றும் அஜ்மீர் வழக்குகளின் விசாரணையை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்திருக்க வேண்டும்." என்றார்.

"ஞானவாபி வழக்கில் முன்னாள் நீதிபதி சந்திரசூட் வாய்மொழி கருத்து கூறியதன் காரணமாக,1947 ஆகஸ்ட் 15இன் படி வழிபாட்டு தலங்களின் தன்மையை மாற்ற முடியாது என்றாலும், அவற்றின் தன்மையை ஆராய முடியும்" என்று அவர் கூறினார்.

பிரசாந்த் பூஷன் இதை வேறுவிதமாக கூறுகிறார், "மக்களுடன் பேசுவதற்கு நீதிமன்றம் ஒரு உள்ளூர் ஆணையரை நியமிக்கலாம். ஆனால் வழிபாட்டு தலங்களில் எந்தவொரு ஆய்வையோ அல்லது அங்கு தோண்டுவதையோ அனுமதிக்க முடியாது. குறிப்பாக, 1947க்கு முன்பு வழிபாட்டு தலங்களில் வேறொரு தலம் இருந்ததாக கூறப்படும்போது அதைச் செய்ய முடியாது." என்றார்.

இது குறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் காளீஸ்வரம் ராஜ் பிபிசியிடம் கூறும்போது, ​​"நமது நிறுவனங்களும் நீதிமன்றங்களும் வரலாற்றில் இருந்து பாடம் கற்க வேண்டும். நமது நாடாளுமன்றம் இதுபோன்ற பாடங்களைக் கற்றுக் கொண்டது, 1991 ஆம் ஆண்டு சட்டம் தான் அதற்கு சான்று. ஞானவாபி மசூதியின் ஆய்வில் காட்டப்பட்ட தாராள மனப்பான்மை, நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களுக்குத் தவறான செய்தியை அனுப்பியுள்ளது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது மற்றும் அதிர்ச்சியானது" என்றார்.

"நாடாளுமன்றச் சட்டம் என்பது மக்களின் தீர்ப்பின் வெளிப்பாடு மட்டுமல்ல, மத வெறியின் அச்சுறுத்தலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அரசு உருவாக்கியுள்ள ஒரு கருவியும் கூட. கடந்த காலத்தில் நாம் கற்றுக்கொண்ட அனைத்து விஷயங்களிலும் இது பாடம் கற்பிக்கிறது. நமது நீதிமன்றங்களும் நிறுவனங்களும் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் "என்று கூறினார்.

முன்னோக்கிச் செல்லும் வழி என்ன?

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே

சஞ்சய் ஹெக்டே கூறுகையில், "எந்த நிவாரணமும் வழங்க முடியாத இடத்தில் வழக்கு விசாரிக்கப்படுவது மிகவும் அற்பமானது மற்றும் வருந்தத்தக்கது. இத்தகைய ஆய்வு போன்ற இடைக்கால நடவடிக்கைகள் வன்முறை உணர்வைத் தூண்டுகின்றன".

"நீதித்துறையின் கரசேவைக்கு இந்தியா தனது பழங்கால பகையைத் திரும்பக் கொடுக்கப்பதை தாங்க முடியாது. இதுபோன்ற பல வழக்குகள் நம்மிடம் உள்ளன உடனடியாக அவற்றைத் தீர்த்து வைக்க வேண்டும். இதுபோன்ற மதச் சட்ட தந்திரங்களால் நாங்கள் எதையும் பெறவில்லை," என்றார் சஞ்சய் ஹெக்டே.

"சம்பல் வழக்கு முன்னாள் தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவின் துரதிருஷ்டவசமான மற்றும் விரும்பத்தகாத விளைவு" என்று ராஜ் கூறினார்.

பிரசாந்த் பூஷனின் கருத்தை ஏற்றுக்கொண்ட சஞ்சய் ஹெக்டே, "வாய்மொழி கருத்துகளுக்கு நீதித்துறை மதிப்பு இல்லை. சட்டத்திற்குப் புறம்பான வழக்குகளை முடிக்க நீதிமன்றங்களுக்கு கடமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு அல்லது தீர்ப்பை வழங்கலாம்" என்றார்.

"வழிபாட்டுத் தலங்கள் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு வழிபாட்டுத் தலங்களின் தன்மையை மாற்ற முடியாது என்று குறிப்பிடப்பட்ட மற்றொரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்க வேண்டும்," என்று பிரசாந்த் பூஷன் கூறுகிறார்.

மேலும் அவர் , "அதில் வழிபாட்டுத் தலச் சட்டத்தைக் கருத்தில் கொண்டு யாரும் ஆய்வு அல்லது அகழ்வாராய்ச்சியை நடத்த முடியாது என, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்யலாம். இந்த மனு, பல முறைகேடுகளை தடுக்கும்" என்றார்.

உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமா?

இதைத் தடுக்க, 1991 சட்டத்தில் உள்ள தடை விதிகளை உச்ச நீதிமன்றம் கண்டிப்பாகப் பின்பற்றுவதே ஒரே வழி என்றார் சஞ்சய் ஹெக்டே.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இதைத் தடுக்க, 1991 சட்டத்தில் உள்ள தடை விதிகளை உச்ச நீதிமன்றம் கண்டிப்பாகப் பின்பற்றுவதே ஒரே வழி என்றார் சஞ்சய் ஹெக்டே.

இதைப்பற்றி சஞ்சய் ஹெக்டே கூறுகையில், "உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து மிகக் குறைந்த வழக்குகளில் மட்டுமே நடவடிக்கை எடுக்கிறது. இருப்பினும், இந்த சர்ச்சைகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் வழக்கு வடிவில் வருகின்றன. மேலும், நீதிமன்றம் தேவையான உத்தரவு அல்லது முடிவை வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளது," என்றார்.

"1991 சட்டத்தில் உள்ள தடை விதிகளை உச்ச நீதிமன்றம் கண்டிப்பாகப் பின்பற்றுவதே ஒரே வழி. இதற்கு, உச்ச நீதிமன்றமும் தனது தவறுகளைத் திருத்த வேண்டியிருக்கும்" என்றார்.

"அத்தகைய அறிவிப்பு செல்லுபடியாகும் மற்றும் நியாயமானதாக இருக்கும். ஏனெனில் இது இந்த பிரச்னைக்காக உருவாக்கப்பட்ட சட்டத்தை மட்டுமே மீண்டும் வலியுறுத்தும். ஆனால் அரசியலமைப்பின் 141வது பிரிவின்படி, நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் இதைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அத்தகைய அறிவிப்பு, எதிர்காலத்தில், விசாரணை நீதிமன்றத்தை நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தை மீறுவதிலிருந்து தடுக்கும்." என்று அவர் கூறுகிறார்.

சில பெயர் குறிப்பிட விரும்பாத வழக்கறிஞர்கள் பிபிசி இந்தியிடம், அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துவது குறித்துப் பரிசீலிக்கலாம், எனத் தெரிவித்தனர்.

இதன் கீழ், ஒரு இடத்தின் மதத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கக்கூடிய வகையில் எந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியின்றி தாக்கல் செய்ய முடியாது என்று முடிவு செய்யலாம்.

ஆர்எஸ்எஸ் நிலைப்பாடு மாறியுள்ளதா?

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

ஜூன் 2022இல் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்த பிறகு வந்த அனைத்து அறிகுறிகளும் அந்த அமைப்பின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என தெரிகிறது.

அயோத்தி விவகாரம் "சில முக்கிய காரணங்களால்" எழுப்பப்பட்டது என பகவத் தெரிவித்தார்.

"படையெடுப்பாளர்கள் இந்து மக்களின் மன உறுதியைக் குலைக்கவும், புதிதாக மதம் மாறியவர்களிடையே தங்களின் பிம்பத்தைக் கட்டமைக்கவும் கோவில்களை அழித்தனர்" என்று பகவத் கருதுகிறார்.

சுவாரஸ்யமாக, அயோத்தி-பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 2020 தீர்ப்பை குறிப்பிடும் வகையில் அவரது அறிக்கை இருந்தது.

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், "மனித வரலாறு ஆட்சிகளின் எழுச்சி மற்றும் வீழ்ச்சிக்கு சான்றாகும். காலப்போக்கில் நடந்தவை மற்றும் வரலாற்றில் என்ன நடந்தது என்பதில் உடன்படாத அனைவருக்கும் சட்டப்பூர்வ நிவாரணம் வழங்குவதற்கான வழிமுறையாக சட்டத்தைப் பயன்படுத்த முடியாது. இன்று, அவற்றின் சட்ட விளைவுகள் நிகழ்காலத்தில் பயன்படுத்தப்படலாம் என்று நிரூபிக்கப்படும் வரை, வரலாற்றின் சரியான மற்றும் தவறான முடிவுகளை நீதிமன்றங்கள் அறிந்து கொள்ள முடியாது, ."

மோகன் பகவத் ஞானவாபி பிரச்னையை "இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே இணக்கமான முறையில் தீர்க்க முடியும்" என்று கூறியிருந்தார்.

இருப்பினும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்வேறு வக்ஃப் வாரிய சொத்துக்கள் மீது கூறப்படும் உரிமைகோரல்களின் கண்ணோட்டத்தின் மூலம் இந்த விஷயத்தைப் பார்க்க வேண்டும் என்ற உணர்வு ஆர்எஸ்எஸ் தொண்டர்களிடையே உள்ளது.

பெயர் கூற விரும்பாத ஆர்எஸ்எஸ் உறுப்பினர் ஒருவர் பிபிசி இந்தியிடம் கூறுகையில், "ஆர்எஸ்எஸ் தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை. ஆர்எஸ்எஸ் அமைதியை விரும்புகிறது. ஆனால், வக்ஃப் வழக்கின் கூற்றுக்களைப் பொறுத்தவரை, ஆர்எஸ்எஸ் அது குறித்த தனது கருத்துக்களைச் சமநிலைப்படுத்த வேண்டும்," என்றார்.

இதற்கிடையில், சம்பலின் ஷாஹி ஜாமா மசூதியில் ஆய்வு நடத்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, மசூதி குழு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கின் தகுதியைக் கருத்தில் கொள்ளவில்லை.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு, ஆய்வு உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட மனு உயர்நீதிமன்றத்தில் பட்டியலிடப்படும் வரை இந்த வழக்கில் மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று விசாரணை நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தற்செயலாக, சம்பல் மசூதியும், நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டத்தின் பிரிவு 10இன் படி பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் ஒன்றாக உள்ளது. மேலும், 'தேசிய பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகவும்' அந்த மசூதி உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)