வக்ப் சட்டத்தில் பரிந்துரைக்கப்படும் திருத்தங்கள் - இஸ்லாமியர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மெரிஸ் செபாஸ்டின் & நியாஸ் ஃபாரூக்
- பதவி, பிபிசி செய்தியாளர்
பல நூற்றாண்டுகளாக இந்திய இஸ்லாமியர்கள் தானமாக அளித்துள்ள பல கோடிகள் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பான பல தசாப்தங்கள் பழமையான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற விவகாரம் நாட்டில் போராட்டங்களை தூண்டியது.
மசூதிகள், மதராஸாக்கள், தங்குமிடங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சொத்துக்கள் ‘வக்ப்’ என்றழைக்கப்படுகிறது. இதனை வக்ப் வாரியம் நிர்வகிக்கிறது.
ஏற்கெனவே இருக்கும் சட்டத்துக்கு 40க்கும் மேற்பட்ட திருத்தங்களை புதிய சட்ட வரைவு பரிந்துரைக்கிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக் குழு பரிந்துரைத்த மாற்றங்களையும் சேர்த்து நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த சட்ட வரைவு முன் வைக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு மேலும் அவகாசம் கேட்கவுள்ளது.

இந்த சொத்துக்களின் நிர்வாகத்தில் உள்ள லஞ்சத்தை ஒழிப்பதற்காகவும் சீர்திருத்தங்கள் வேண்டும் என்ற இஸ்லாமிய சமூகத்தினரின் கோரிக்கையை அமல்படுத்தவும் இந்த மாற்றங்களை மேற்கொள்ளவது அவசியம் என்று நரேந்திர மோதி அரசு கூறுகிறது.
ஆனால் இந்த மாற்றங்கள் அரசியல் நோக்கம் கொண்டவை என பல இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் கூறி வருகின்றன. சிறுபான்மையினரின் உரிமைகளை பலவீனப்படுத்தும் மோதியின் இந்து தேசியவாத கட்சியின் முயற்சி இது என்று அவர்கள் கூறுகின்றனர்.
இந்த சட்டத்திருத்தம் ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அதன் பின் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிந்துரைகளைப் பெறுவதற்காக அனுப்பப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
வக்ப் என்பது என்ன?
இஸ்லாமிய வழக்கப்படி, வக்ப் என்பது இஸ்லாமியர்கள் தங்கள் சமூகத்துக்கு தானமாக அல்லது மத ரீதியாக அளிக்கும் நன்கொடையாகும்.
இந்த சொத்துக்களை வேறு எந்த காரணத்துக்காகவும் விற்கவோ பயன்படுத்தவோ முடியாது. அதாவது வக்ப் சொத்துக்கள் கடவுளுக்கு சொந்தமானவை என்று அர்த்தம்.
இப்படி வழங்கப்பட்ட சொத்துக்கள் பல மசூதிகளாக, மதராஸாக்களாக, இடுகாடுகளாக, ஆதரவற்றோர் இல்லங்களாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பல சொத்துக்கள் காலியாகவோ, ஆக்கிரமிக்கப்பட்டோ இருக்கின்றன.
இந்தியாவில் வக்ப் பாரம்பரியம் 12-ஆம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான் காலத்தில் தொடங்கியது. அந்த காலக்கட்டத்தில் தான் மத்திய ஆசியாவிலிருந்து இஸ்லாமிய அரசர்கள் இந்தியா வந்திருந்தனர்.
தற்போது சொத்துக்கள், வக்ப் சட்டம் 1995-ன் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. அந்த சட்டத்தின் படி மாநில அளவிலான வாரியங்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த வாரியத்தில் மாநில அரசால் நியமிக்கப்படுபவர்கள், இஸ்லாமிய மக்கள் பிரதிநிதிகள், மாநில பார் கவுன்சில் உறுப்பினர்கள், இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் வக்ப் சொத்துக்களின் மேலாளர்கள் இருப்பார்கள்.
இந்தியாவின் அதிக நிலம் வைத்திருப்பவர்களில் வக்ப் வாரியமும் ஒன்று என்று அரசு கூறுகிறது. நாடு முழுவதும் 9,40,000 ஏக்கர் பரப்பளவில் சுமார் 1.2 ட்ரில்லியன் ரூபாய் மதிப்பிலான குறைந்தது 8,72,351 வக்ப் சொத்துக்கள் உள்ளன.
சீர்திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளதா?
வக்ப் வாரியங்களில் லஞ்சம் ஒரு முக்கிய பிரச்னை தான் என்று இஸ்லாமிய அமைப்புகள் ஒப்புக் கொள்கின்றன. வக்ப் நிலங்களை விற்பதற்காக நில ஆக்கிரமிப்பாளர்களுடன் வக்ப் வாரிய பொறுப்பாளர்கள் கூட்டாக செயல்பட்டதாக பல முறை குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
அதே நேரம், இந்த சொத்துக்களில் பல, தனி நபர்கள், தொழில் நிறுவனங்கள், அரசு அமைப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்றும் அதற்கும் உடனடி கவனம் தேவைப்படுகிறது என்றும் விமர்சனங்களை முன் வைப்பவர்கள் கூறுகின்றனர்.
நீதிபதி சச்சார் கமிட்டி 2006-ஆம் ஆண்டு ஓர் அறிக்கை சமர்ப்பித்தது.
இந்தியாவில் இஸ்லாமிய சமூகத்தினரின் சமூக பொருளாதார நிலை குறித்து ஆராய்வதற்காக இந்த கமிட்டியை இதற்கு முன்பு மத்திய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு அமைத்திருந்தது.
வக்ப் வாரியங்கள் நிர்வகிக்கும் சொத்துக்களை ஒப்பிடும் போது, அவற்றிலிருந்து கிடைக்கும் வருமானம் குறைவாக இருப்பதை கண்டறிந்ததால், சச்சார் கமிட்டி அறிக்கையில் வக்ப் சீர்திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
நிலங்களை முறையாக பயன்படுத்தினால் ஆண்டுக்கு 120 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று கமிட்டி மதிப்பிட்டது. தற்போதைய ஆண்டு வருமானம் சுமார் இரண்டு பில்லியன் ரூபாய் என்று சில செய்திகள் கூறுகின்றன.
“வக்ப் சொத்துக்களின் பாதுகாவலரான அரசின் ஆக்கிரமிப்புகள் பரவலாக உள்ளது” என்று கமிட்டி குறிப்பிட்டிருந்தது. அந்த அறிக்கை, அரசு அமைப்புகள் வக்ப் நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் நூற்றுக்கணக்கான உதாரணங்களை பட்டியலிட்டது.
அரசு தரவுகளின்படி, 58,889 வக்ப் சொத்துக்கள் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன, 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்துக்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் 4,35,000 சொத்துக்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.
இந்த பிரச்னைகளை கையாளவும் சச்சார் கமிட்டி கொடுத்த பரிந்துரைகளை முன்னெடுக்கவும் தற்போது பரிந்துரைக்கப்படும் மாற்றங்கள் உதவும் என்று அரசு கூறுகிறது.
நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜுஜு தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், இந்த சொத்துக்களை இஸ்லாமியர்களின் மேல் தட்டு மக்கள் மட்டுமே நிர்வகித்து வருவதால், இந்த மாற்றங்கள் தேவை என்று குறிப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஏன் இந்த சர்ச்சை?
தற்போது பரிந்துரைக்கப்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்து பல இஸ்லாமியர்கள் சந்தேகங்களை எழுப்புகின்றனர்.
இந்த சட்ட வரைவின் மிகவும் சர்ச்சையான விவகாரம் உரிமையாளர் விதிகளில் பரிந்துரைக்கப்படும் மாற்றம். வக்ப் வாரியம் சொந்தமாக கொண்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க மசூதிகள், தர்காக்கள், இடுகாடுகள் ஆகியவற்றின் மீது இந்த மாற்றம் விளைவுகளை ஏற்படுத்தும்.
பல தலைமுறைகளாக இஸ்லாமியர்களால் பயன்படுத்தப்படும் இந்த சொத்துக்களில் பலவற்றுக்கு முறையான ஆவணங்கள் கிடையாது. ஏனென்றால் அவை வாய்வழியாகவோ, சட்ட ஆவணங்கள் இல்லாமலோ பல தசாப்தங்கள் அல்லது நூற்றாண்டுகளுக்கு முன் தானமாக வழங்கப்பட்டவை.
1954 வக்ப் சட்டம் இந்த சொத்துக்களை ‘பயனாளரால் வழங்கப்பட்ட வக்ப்” (waqf by user) என்று வகைப்படுத்தி அவற்றை அங்கீகரித்தது. ஆனால் தற்போது பரிந்துரைக்கப்பட்டிருக்கும் திருத்தங்கள் இதனை தவிர்த்து விடுகிறது. இதன் காராணமாக கணிசமான எண்ணிக்கையிலான சொத்துக்களின் நிலை என்னவாகும் என்று தெரியாது.

பட மூலாதாரம், Getty Images
‘ஷிக்வா-இ-இந்த் : இந்திய இஸ்லாமியர்களின் அரசியல் எதிர்காலம்’ என்ற நூலின் ஆசிரியர் முஜிபுர் ரஹ்மான் இது போன்ற சமூக சொத்துக்களின் உரிமையாளர்களை தேடி கண்டிப்பது சிக்கலானது என்கிறார்.
அவர்களின் நிர்வாகமும், பத்திர முறைகளும் முகலாய ஆட்சிக் காலம், பிரிட்டிஷ் காலனியாதிக்கம், தற்போது உள்ள நடைமுறை என பல நூற்றாண்டுகளாக மாறி வந்துள்ளன என்கிறார்.
“தனிப்பட்ட சொத்துக்களின் உரிமையாளர்களை கடந்த சில தலைமுறைகள் வரை தெரிந்து கொள்ளலாம். ஆனால் சமூக சொத்துக்களுக்கு அப்படி கண்டறிவது மிகவும் கடினம். அவர்களின் நிர்வாகம் காலப்போக்கில் மாறிக்கொண்டே இருந்திருக்கும்” என்கிறார் அவர்.
இஸ்லாமிய சமூகத்தினரின் கவலைகளை தீர்ப்பதற்கு பதிலாக , வக்ப் சொத்துகள் மீதான இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டை இந்த புதிய சட்டம் நீக்கிவிடும் என்று சிலர் கருதுகின்றனர்.
இதற்கு காரணம், வக்ப் வாரியங்களில் இஸ்லாமியர் அல்லாதவர்களை சேர்க்க வேண்டும் என்ற மாற்றத்தை புதிய சட்டம் பரிந்துரைக்கிறது.
மத நிறுவனங்களை நடத்தும் வாரியங்களின் அங்கமாக எல்லா மதத்தினரும் இருக்க வேண்டும் என்ற பொதுவான சட்டம் கொண்டு வர சிலர் சம்மதிக்கின்றனர். அப்படியான ஒரு மாற்றம், நடைமுறைகளை மேலும் மதசார்பற்றதாக மாற்றக்கூடும் என்கின்றனர்.
ஆனால் இப்போது பரிந்துரைக்கப்பட்டிருக்கும் மாற்றம் பெரும்பான்மைவாத அரசியலுக்கே சாதகமாக உள்ளது என்று பேராசிரியர் ரஹ்மான் கூறுகிறார்.
“இஸ்லாமிய சொத்துக்கள் மீது அரசுக்கான கட்டுப்பாடு மட்டுமல்லாமல், இஸ்லாமிய சமூகத்தின் வாழ்க்கை மீது இந்து சமூகத்துக்கான கட்டுப்பாடு பெறவும் ஒரு முயற்சி நடப்பதாக தெரிகிறது” என்கிறார்.
பிற மாற்றங்கள் என்ன?
வக்ப் வாரியங்கள் கட்டாயமாக தங்கள் சொத்துக்களை மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படும் மாற்றங்கள் கூறுகின்றன.
மேலும் அந்த சொத்துக்கள் வக்புக்கு உரியதா என மாவட்ட ஆட்சியர் அரசுக்கு பரிந்துரைப்பார் என்றும் கூறுகிறது. தற்போது பரிந்துரைக்கப்படும் மாற்றங்களில் மிகவும் சர்ச்சையான ஒன்றாக இதுவும் உள்ளது.
இந்த மாற்றம் வக்ப் வாரியங்களின் அதிகாரங்களை குறைத்து மதிப்பிடும் என்று சிலர் விமர்சிக்கின்றனர்.
இஸ்லாமியர்களிடமிருந்து அவர்களின் நிலங்களை பிடுங்கவே இந்த மாற்றங்கள் முன்வைக்கப்படுகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினரான அசாதுதீன் ஒவைசி கூறுகிறார்.
தற்போதுள்ள சட்டத்தின்படி, நில அளவை ஆணையர் ஒருவரை அரசு நியமிக்க வேண்டும். அவர் வக்ப் சொத்துக்களை கண்டறிந்து அதன் பட்டியலை மாநில அரசுக்கு அனுப்பி வைப்பார். அதன் அடிப்படையில் அரசு சட்ட ரீதியான அறிவிப்பை வெளியிடும். ஒரு வருட காலத்துக்கு அந்த அறிவிப்பை யாரும் எதிர்க்கவில்லை என்றால், அது வக்ப் சொத்து என்று வகைப்படுத்தப்படும்.
ஆனால் இப்போது பரிந்துரைக்கப்படும் மாற்றங்கள் அமலுக்கு வந்தால், பல வக்ப் சொத்துக்களின் நிலையை மீண்டும் கண்டறிந்து நிறுவ வேண்டியிருக்கும்.
“பலர் வக்ப் சொத்துக்களில் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளனர். அதாவது அவர்களுக்கு இது எங்கள் நிலம் என்று வாதாட ஒரு வாய்ப்பு கிடைக்கும்” என்று ஒவைசி சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்திருந்தார்.
வரலாற்று சிறப்பு மிக்க தர்க்காக்கள் மற்றும் மஸ்ஜித்துகளுக்கு இந்த புதிய மாற்றத்தால் ஆபத்து ஏற்படும் என்று இஸ்லாமிய அமைப்புகள் கூறுகின்றன. சீர்திருத்தங்கள் தேவை, ஆனால் இஸ்லாமிய சமூகத்தின் நலன்களை கருத்தில் வைத்துக் கொண்டு அவை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றனர்.
“பிரச்னை இருக்கிறது என்று கண்டறிந்தது சரியாக இருக்கலாம். ஆனால் அதற்கு வழங்கப்படும் தீர்வு சரியானதல்ல” என்கிறார் பேராசிரியர் ரஹ்மான்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












