அஜ்மீர் தர்காவில் சிவன் கோவில் இருந்ததா? - ஒரு புத்தகத்தை ஆதாரமாக கொண்டு மனு; என்ன கூறப்பட்டுள்ளது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மோஹர் சிங் மீனா
- பதவி, பிபிசி ஹிந்தி
“இஸ்லாமியர்களின் புகழ்பெற்ற தலமான ‘குவாஜா மொய்னுதீன் சிஷ்தி தர்கா’ ஒரு பழமையான சிவன் கோவிலின் மேல் கட்டப்பட்டது" என்று இந்து சேனா என்ற அமைப்பு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை விசாரிக்க ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சிறுபான்மையினர் விவகார அமைச்சகம், தர்கா கமிட்டி மற்றும் இந்திய தொல்லியல் துறை (ASI) ஆகிய மூன்று முக்கிய தரப்பினருக்கு நீதிமன்றம் நவம்பர் 27-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்து சேனா அமைப்பின் தேசியத் தலைவரான விஷ்ணு குப்தா, "தற்போது தர்கா உள்ள இடத்தில் கோயில் இருந்தது" என்று கூறி, ஓய்வுபெற்ற நீதிபதி ஹர்பிலாஸ் சர்தா எழுதிய புத்தகத்தை தனது கூற்றுக்கு ஆதாரமாக முன்வைத்துள்ளார்.
இது இந்து கோவில் உள்ள இடம் என்றும் அங்கு மத வழிபாடு நடத்த வழங்க வேண்டும் என்றும் விஷ்ணு குப்தா கோரியுள்ளார்.
- ராஜஸ்தான்: சிவன் கோவில் மீது தர்கா கட்டப்பட்டதாக எழுந்த சர்ச்சை - பின்னணி என்ன?
- சம்பல்: மசூதியில் ஆய்வின் போது நிகழ்ந்த வன்முறை - உள்ளூர் மக்கள், போலீஸ் கூறுவது என்ன? கள நிலவரம்
- உத்தரபிரதேசம்: மசூதி ஆய்வின் போது வெடித்த வன்முறையில் கொல்லப்பட்டவர்கள் யார்? பிபிசி கள ஆய்வு
- கோவில் இருந்த இடத்தில் மசூதியா? உத்தரபிரதேசத்தில் ஆய்வின் போது வன்முறை - 3 பேர் பலி

"பிரபலமடைவதற்கான கீழ்த்தரமான செயல் இது" என்று அஜ்மீர் தர்காவின் தலைமை வாரிசும், குவாஜா மொய்னுதீன் சிஷ்தியின் வழித்தோன்றலுமான 'சையத் நசிருதீன் சிஷ்தி', இந்த மனுவை விமர்சித்துள்ளார்.
“இவர்கள் சமூகத்தையும் நாட்டையும் தவறான பாதைக்கு கொண்டு செல்கிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 20-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

பட மூலாதாரம், X/VISHNU GUPTA
எந்த அடிப்படையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது?
தர்காவில் கோயில் இருப்பதாகக் கூறியதற்குப் பின்னால், விஷ்ணு குப்தா மூன்று காரணங்களைத் தெரிவித்துள்ளார்.
விஷ்ணு குப்தா கூறும் முதல் காரணம், “ ஹர்பிலாஸ் சர்தா” எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது.
‘ஹர்பிலாஸ் சர்தா’ ஆங்கிலேயர் ஆட்சியின் போது அஜ்மீர் நகராட்சியின் ஆணையராக இருந்தார். மேலும் 1911 இல் எழுதப்பட்ட அவரது புத்தகத்தில், தர்கா ஒரு கோவிலின் மேல் கட்டப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விஷ்ணு குப்தா, இந்த புத்தகத்தை தனது கூற்றுக்கு ஆதாரமாக பயன்படுத்துகிறார்.
மேலும், அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை அடிப்டையாகக் கொண்டு, தனது குழு சொந்தமாக ஆராய்ச்சி மேற்கொண்டு தர்காவைப் பார்வையிட்டதை இரண்டாவது காரணமாக விஷ்ணு குப்தா கூறுகிறார்.
''எங்களது கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ,ஒரு இந்து கோவிலை இடித்து தர்கா கட்டப்பட்டது. தர்காவின் சுவர்கள் மற்றும் கதவுகளில் உள்ள சிற்பங்கள் இந்துக் கோவில்களில் காணப்படுவதைப் போலவே உள்ளன.'' என்கிறார் அவர்
''எங்கள் முன்னோர்கள் உட்பட அஜ்மீரில் உள்ள பலர், தர்கா இருந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் இருந்ததாகவும், அங்கு ஒரு இந்து கோவில் இருந்ததாகவும் கூறுகின்றனர்'' என்கிறார் அவர். இதனை மூன்றாவது காரணமாக, அவர் தெரிவிக்கிறார்
''தர்கா முதலில் சங்கட் மோகன் மகாதேவ் கோவிலாக இருந்தது. தர்கா பதிவு செய்யப்பட்டிருந்தால், அதை ரத்து செய்து அந்த இடத்தை சங்கட் மோகன் மகாதேவ் கோவிலாக அங்கீகரிக்க வேண்டும் அங்கு மத வழிபாடு நடத்தும் உரிமையையும் பெறவேண்டும்'' என்கிறார் குப்தா.
“தர்காவின் அடித்தளம் மூடப்பட்டுள்ளது. அங்கு ஆய்வு நடத்தினால், அந்த இடத்தைப் பற்றிய உண்மை தெரியவரும்” என்றும் விஷ்ணு குப்தா கூறினார்.
விஷ்ணு குப்தா 2011 இல் ‘இந்து சேனாவை’ நிறுவினார். இந்துக்கள் தொடர்பான பிரச்னைகளுக்காக கருத்து தெரிவித்து செய்திகளில் வந்தவர் விஷ்ணு குப்தா.
சமீபத்தில், முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறுபான்மை அந்தஸ்தை திரும்பப் பெறக் கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதற்கு முன்னதாக, 2022 ஆம் ஆண்டில், ‘PFI’ அமைப்பைத் தடை செய்யக் கோரினார் விஷ்ணு குப்தா.

பட மூலாதாரம், FACEBOOK
தர்கா கமிட்டி என்ன சொன்னது?
தர்கா கமிட்டிக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் “தர்கா நாஜிம்” (தர்காவின் தலைவர்) பதவி பல ஆண்டுகளாக காலியாக உள்ளது.
இதனையடுத்து சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் துணைச் செயலாளர் முகமது நதீம் தற்போது கூடுதலாக தர்கா நாஜிம் பொறுப்புகளை கவனித்து வருகிறார்.
“நீதிமன்ற நோட்டீஸ் இன்னும் வரவில்லை. அறிவிப்புப் பெற்றவுடன், அதனை மறுபரிசீலனை செய்து, அடுத்ததாக சட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து நாங்கள் முடிவு செய்வோம்” என முகமது நதீம் பிபிசியிடம் கூறினார்.
“சட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்துத் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறோம். நீதிமன்றத்தில் தங்கள் தரப்பை முன்வைப்போம்” என்று அஜ்மீர் தர்காவின் தலைமை வாரிசான சையத் நசிருதின் சிஷ்தி பிபிசியிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
மேலும் “பிரபலம் அடைவதற்கான கீழ்த்தரமான செயல்” என விஷ்ணு குப்தாவின் செயலை நசிருதின் சிஷ்டி விமர்சித்தார்.
“தற்போது மசூதிகள் அல்லது தர்காக்களுக்குள் கோயில்கள் இருப்பதாகக் கூறி, தொடர்ந்து பலர் மனுத் தாக்கல் செய்து வருகின்றனர், இது தவறான பழக்கமாக உருவாகியுள்ளது” என்றும் அவர் கூறினார்
அது மட்டுமின்றி, 1911 வெளிவந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களில் நம்பகத்தன்மை இல்லை என்று கூறி நசிருதின் அதனை நிராகரித்தார்.
850 ஆண்டுகளுக்கும் மேலான தர்காவின் நீண்ட கால வரலாற்றை, சுமார் 100 ஆண்டுகள் பழமையான புத்தகத்தால் சிதைக்க முடியாது என்று அவர் வாதிட்டார்.

பட மூலாதாரம், HARBILAS SARDA
அதிகரித்த காவல்துறை கண்காணிப்பு
கோவிலில் தர்கா கட்டப்பட்டதாக கூறப்பட்டதில் இருந்து இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சமீபத்தில், நாட்டின் பல மாநிலங்களில் கோவில்-மசூதி தகராறுக்குப் பிறகு, பல வன்முறைச் சம்பவங்கள் மற்றும் போராட்டங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
அதனையடுத்து, தற்போது இந்த மனு தொடர்பாக ராஜஸ்தானில் பரபரப்பு நிலவுகிறது. இந்த விவகாரத்தின் காரணமாக அமைதியும், ஒழுங்கும் சீர்குலையாதவாறு அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர்.
''இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால், நீதிமன்றமே சட்ட நடவடிக்கை மூலம் முடிவெடுக்கும். இருப்பினும், அமைதி, ஒழுங்குக்கு இடையூறு ஏற்படாத வகையில், காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது” என அஜ்மீர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா ராணா பிபிசியிடம் கூறினார்.
“அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது” என பெயர் குறிப்பிட விரும்பாத மாநிலத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
''நாட்டை தவறான திசையில் வழி நடத்துகிறார்கள் என்பதை உணராமல், இவர்கள் கவனத்தை மட்டுமே தேடுகிறார்கள்.மக்கள் ஒற்றுமையாக வாழ்வதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக கோவில்களுக்கும் மசூதிகளுக்கும் இடையிலான பிரச்னைகளில் எவ்வளவு காலம் தகராறு செய்வார்கள்?” என்று சையத் நசிருதீன் சிஷ்தி கேள்வி எழுப்பினார்.
“குவாஜா சாஹேப் தர்காவின் வரலாறு 850 ஆண்டுகளுக்கு முந்தையது. இந்த நீண்ட கால வரலாற்றில் , ஜெய்ப்பூர், ஜோத்பூர், கோட்டா மற்றும் குவாலியர் உட்பட பல மன்னர்கள் தர்காவுடன் வலுவான தொடர்பைக் கொண்டிருந்தனர். தர்காவிற்கு அடியில் கோவில் இருந்திருந்தால், இந்த அரசர்களே முதலில் அதைப்பற்றி ஆட்சேபனை தெரிவித்திருப்பார்கள்” என்று நசிருதீன் சிஷ்டி கூறுகிறார்.
வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ஐ வலுப்படுத்துமாறு மத்திய அரசுக்கு சையத் நசிருதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுபோன்ற விஷயங்களில் நீதிமன்ற தீர்ப்புகள் மதிக்கப்பட வேண்டும், ஆனால் மதத் தலங்கள் தொடர்பாக புதிய சர்ச்சைகளை, மக்கள் உருவாக்கக்கூடாது என்று நசிருதீன் கூறினார்

பட மூலாதாரம், HARBILAS SARDA
மனுவுக்கு அடிப்படையான புத்தகம்
விஷ்ணு குப்தா தனது கூற்றுக்கு ஹர்பிலாஸ் சர்தாவின் புத்தகத்தை முக்கிய ஆதாரமாகப் பயன்படுத்துகிறார்.
1911-ஆம் ஆண்டில், ஹர்பிலாஸ் சர்தா, Ajmer: Historical and Descriptive என்ற புத்தகத்தை எழுதினார். 206 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகம் பல தலைப்புகளை உள்ளடக்கியது.
இந்நூலில் குவாஜா மொய்னுதீன் தர்காவைப் பற்றி ஒரு அத்தியாயம் உள்ளது. பக்கம் 97ல், முதல் பத்தியில், தர்கா இருந்த இடத்தில் ஒரு மகாதேவ் கோவில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"அடித்தளத்தில் உள்ள ஒரு சன்னதியில் மகாதேவரின் உருவம் இருப்பதாக பாரம்பரியம் கூறுகிறது. அதில் ஒரு பிராமண குடும்பம் ஒவ்வொரு நாளும் சந்தனம் பூசிவந்தது. அது இன்னும் முதலை வடிவத்தில் தர்காவில் வைக்கப்பட்டுள்ளது." என்று தனது புத்தகத்தில் ஹர்பிலாஸ் சர்தா குறிப்பிட்டுள்ளார்.
இம்மனுவின் அடிப்படை ஆதாரமாக இக்கருத்து கூறப்படுகின்றது.
இந்த புத்தகத்தின் நம்பகத்தன்மையப் பற்றி நசிருதீன் கேள்வி எழுப்புகின்றார்.
"இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் எழுதிய அனைத்து வரலாற்று புத்தகங்களும் அஜ்மீர் தர்காவைப் பற்றி அவ்வாறு குறிப்பிடவில்லை. உலகில் உள்ள அனைத்து இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் நம்பிக்கைக்குரியத் தலமாக அஜ்மீர் தர்கா உள்ளது." என்றும் நசிருதீன் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












