ஈ.கோலை: அமெரிக்காவில் ஆர்கானிக் கேரட்டுகள் மொத்தமாக திரும்ப பெறப்பட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அலெக்ஸ் பாய்ட்
- பதவி, பிபிசி செய்தி
அமெரிக்காவில், ஈ.கோலை (E. Coli.) தொற்று ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, நாடு முழுவதும் உள்ள உணவுப் பொருள் விற்பனையகங்களில் விற்கப்படும் ஆர்கானிக் மற்றும் பேபி கேரட்டுகளை மொத்தமாக திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஈ.கோலை தொற்று பாதிப்பால் இதுவரை, 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 18 மாகாணங்களில் 39 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) தெரிவித்துள்ளது.
டிரேடர் ஜோஸ், ஹோல் ஃபுட்ஸ் 365, டார்கெட்ஸ் குட் & கேதர், வால்மார்ட், வெக்மேன்ஸ் உள்ளிட்ட பிரதான சூப்பர்மார்க்கெட்டுகள் மற்றும் பிற பெரிய பல்பொருள் அங்காடிகளுக்கு கிரிம்வே ஃபார்ம்ஸ் விநியோகம் செய்த கேரட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

''ஈ.கோலை தொற்றுக்குள்ளான காய்கறிகள் இனி விற்பனையகங்களில் இருக்காது. ஆனால் தடை செய்யப்படுவதற்கு முன்பே வாங்கியவர்களின் வீடுகளில் இருக்கக் கூடும். அப்படி இருப்பின் மக்கள் அந்த காய்களை தூக்கி எறிய வேண்டும் அல்லது பணத்தைத் திரும்பப் பெற விரும்பினால் கடைகளுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும்” என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஏபி செய்தி முகமையின் செய்திப்படி, ''தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் நியூயார்க், மினசோட்டா மற்றும் வாஷிங்டனில் வசிக்கின்றனர். அதைத் தொடர்ந்து கலிபோர்னியா மற்றும் ஓரிகானிலும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
''திரும்பப் பெறப்பட்ட ஆர்கானிக் பெரிய ரக கேரட்டுகளின் பேக்கேஜில் 'best-if-used-by date’(இந்த நாளுக்குள் பயன்படுத்தலாம்) குறியீடு இல்லை. ஆனால், ஆகஸ்ட் 14 முதல் அக்டோபர் 23-ம் தேதி வரை அவை விற்பனைக்கு இருந்துள்ளது.” என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியுள்ளது.
அதே போல் செப்டெம்பர் 11 முதல் நவம்பர் 12 வரையில் பயன்படுத்தலாம் என அச்சடிக்கப்பட்டிருந்த 'பேபி கேரட்’ என அழைக்கப்படும் கேரட் ரகங்களும் திரும்ப பெறப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், திரும்பப் பெறப்பட்டிருக்கும் கேரட்டுகள் வீட்டில் இருப்பின் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அவை வைக்கப்பட்டிருந்த இடத்தையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
'O121 ஈ.கோலை (E. coli)' தொற்றின் முக்கிய அறிகுறிகளில் கடுமையான வயிற்றுப் பிடிப்புகள், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவை அடங்கும். பொதுவாக பாக்டீரியா தொற்று இருந்த உணவுகளை உட்கொண்டு மூன்று முதல் நான்கு நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் தொடங்கும்.
பெரும்பாலான மக்கள் சிகிச்சை இல்லாமல் குணமடைகிறார்கள், ஆனால் சிலர் தீவிர சிறுநீரக பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும், அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும், என்றும் சிடிசி கூறியது.
முன்னதாக மெக் டொனால்டின் குவார்ட்டர் பவுண்டர் பர்கர்களில் சேர்க்கப்பட்ட வெங்காயத்தினால், ஈ.கோலை (E. coli) தொற்று ஏற்பட்டு 104 பேர் நோய்வாய்ப்பட்டனர். அதன் பிறகு இப்படி நடப்பது இதுவே முதல்முறை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












