ஆதித்யா எல்1: பூமியை தாக்கும் சூரியப் புயல்களை துல்லியமாக கண்டறிய எப்படி உதவுகிறது?

ஆதித்யா எல்1: பூமியை தாக்கும் சூரியப் புயல்களை துல்லியமாக கண்டறிய எப்படி உதவுகிறது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நமது சூரிய மண்டலத்தில் இருக்கும் மிகப்பெரிய வான் பொருளான சூரியன், பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு இன்றியமையாதது
    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி நியூஸ், டெல்லி

இந்திய விஞ்ஞானிகள், நாட்டின் முதல் சூரிய கண்காணிப்பு செயற்கைக் கோளான ஆதித்யா-எல்1 நடத்திய ஆய்வில் கிடைத்த “முதல் குறிப்பிடத்தக்க முடிவுகளை” வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 16ஆம் தேதியன்று, ஆதித்யா எல்1 விண்வெளிக்குச் சுமந்து சென்ற ஏழு ஆய்வுக் கருவிகளில் மிக முக்கியமான ஒன்றான, விசிபிள் எமிஷன் லைன் கொரோனாகிராஃப் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. இதை வெல்க் (VELC) என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இந்தக் கருவி, கொரோனல் மாஸ் எஜெக்‌ஷன் (CME) தொடங்கிய நேரத்தைத் துல்லியமாக மதிப்பிட அவர்களுக்கு உதவியது.

கொரோனா என்பது சூரியனின் வெளிப்புற அடுக்கு. அதிலிருந்து வெளியேறும் மிகப் பிரமாண்டமான அளவில் இருக்கும் தீப்பந்தமே கொரோனல் மாஸ் எஜெக்‌ஷன் என்று அழைக்கப்படுகிறது. இவற்றைக் கண்காணிப்பது, இந்தியாவின் சூரிய ஆய்வுத் திட்டத்தின் முக்கியமான அறிவியல் நோக்கங்களில் ஒன்று.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

“ஆற்றல் துகள்களால் ஆன இந்தத் தீப்பிழம்புகள் அடங்கிய ஒரு சி.எம்.இ (CME) ஒரு டிரில்லியன் கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். அதோடு பயணிக்கும்போது இதனால் விநாடிக்கு 3,000 கி.மீ வேகத்தை அடைய முடியும். இது பூமி உள்பட எந்தத் திசையில் வேண்டுமானாலும் செல்லக்கூடும்,” என்று விளக்கினார் வெல்க் கருவியை வடிவமைத்த இந்திய வான் இயற்பியல் கழகத்தின் பேராசிரியர் ஆர்.ரமேஷ்.

“இப்போது இந்தப் பெரிய தீப்பந்தம் (CME), சூரியனில் இருந்து வெடித்து வெளியேறி பூமியை நோக்கி வருவதைக் கற்பனை செய்து பாருங்கள். அதன் உச்சக்கட்ட வேகத்தில் வந்தால், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இருக்கும் 150 மில்லியன் கி.மீ தொலைவைக் கடக்க, அதற்குச் சுமார் 15 மணிநேரம் மட்டுமே ஆகும்” என்றார் ரமேஷ்.

சூரியனில் இருந்து பூமியை நோக்கி வந்த பிரமாண்ட தீப்பந்து

கடந்த ஜூலை 16ஆம் தேதியன்று, வெல்க் கருவி அவதானித்த சி.எம்.இ வெளியேற்றம் சூரியனில் இருந்து இந்திய நேரப்படி மாலை 6:38 மணிக்குத் தொடங்கியது (GMT 13:08). மதிப்பு மிக்க வான் இயற்பியல் ஆய்விதழ்களில், இந்த சி.எம்.இ பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்ட வெல்க் கருவியின் முதன்மை ஆய்வாளர் பேராசிரியர் ரமேஷ், கடந்த ஜூலை 16 அன்று வெளிப்பட்ட சி.எம்.இ பூமிக்குப் பக்கத்தில் உருவானதாகக் கூறினார்.

“ஆனால், அதன் பயணம் தொடங்கிய அரை மணிநேரத்திற்கு உள்ளாகவே, திசைதிருப்பப்பட்டு, வேறு திசையில் பயணித்து சூரியனுக்குப் பின்னால் சென்றுவிட்டது. அது வெகு தொலைவில் இருந்ததால், பூமியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை,” என்றும் குறிப்பிட்டார் ரமேஷ்.

ஆதித்யா எல்1: பூமியை தாக்கும் சூரியப் புயல்களை துல்லியமாக கண்டறிய எப்படி உதவுகிறது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சூரியனின் கொரோனா அடுக்கு பூமியிலிருந்து பார்க்கையில், முழு சூரிய கிரகணத்தின்போது மட்டுமே தெரியும்

ஆனால், சூரியப் புயல்கள், சூரியச் சுடர்கள், சி.எம்.இ வெளியேற்றங்கள் ஆகியவை பூமியின் வானிலையை வழக்கமாகப் பாதிக்கின்றன. இந்தியாவில் இருந்து 50க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்கள் உள்பட கிட்டத்தட்ட 7,800 செயற்கைக் கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள விண்வெளிப் பகுதியின் வானிலையையும் அவை பாதிக்கின்றன.

Space.comஇன் கூற்றுப்படி, அவை மனித வாழ்வுக்கு நேரடி அச்சுறுத்தல் எதையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால், அவை பூமியின் காந்தப்புலத்தில் குறுக்கிடுவதன் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த முடியும்.

அவற்றின் மிகவும் தீங்கு இல்லாத தாக்கம் வட மற்றும் தென் துருவத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் அழகான சுடரொளிகளை (Aurora) ஏற்படுத்துகிறது. ஒரு வலுவான சி.எம்.இ வெளியேற்றமானது லண்டன் அல்லது பிரான்ஸ் போன்ற துருவத்தில் இருந்து தொலைவிலுள்ள பகுதிகளின் வானத்திலும்கூட, கடந்த மே மற்றும் அக்டோபர் மாதங்களில் நடந்ததைப் போல, சுடரொளிகள் தென்பட வழிவகுக்கும்.

ஆனால், இந்த சி.எம்.இ வெளியேற்றத்தின் விளைவுகள் விண்வெளியில் தீவிரமாக இருக்கலாம். அவற்றில் இருக்கும் ஆற்றல் துகள்களால் செயற்கைக்கோளில் இருக்கும் அனைத்து மின்னணுக் கருவிகளையும் செயலிழக்கச் செய்ய முடியும். அவற்றால் செயற்கைக்கோளின் மின் கட்டமைப்பைத் தகர்த்து வானிலை மற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களில் பாதிப்புகள் ஏற்படலாம்.

நமது வாழ்க்கை முழுவதுமாகத் தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களையே சார்ந்துள்ள நிலையில், “சூரியனில் இருந்து வெளிப்படும் சி.எம்.இ.க்களால் இணையம், தொலைபேசி இணைப்புகள், வானொலி என தகவல்தொடர்பு வசதிகள் அனைத்தையும் குலைக்க முடியும்” எனக் கூறும் பேராசிரியர் ரமேஷ், அது முழு வீச்சிலான குழப்பத்திற்கு வித்திடும் என்கிறார்.

ஆதித்யா எல்1: பூமியை தாக்கும் சூரியப் புயல்களை துல்லியமாக கண்டறிய எப்படி உதவுகிறது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சி.எம்.இ வெளியேற்றம் பூமியைவிடப் பல மடங்கு பெரிதாகவும் இருக்கக்கூடும்

இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள சூரியப் புயல்களில், வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த சூரியப் புயல் 1859இல் ஏற்பட்டது. கேரிங்டன் நிகழ்வு (Carrington Event) என்று அழைக்கப்பட்ட அந்த சூரியப் புயல், தீவிரமான சுடரொளிக் காட்சிகளை உருவாக்கியதோடு, உலகம் முழுவதும் இருந்த தந்தி இணைப்புகளைச் செயலிழக்க வைத்தது.

கடந்த 2012 ஜூலையில் பூமியை நோக்கி ஒரு வலுவான சூரியப் புயல் வீசியதாகவும், அந்தப் புயலுக்குக் காரணம் சூரியனில் இருந்து வெளிப்பட்ட சி.எம்.இ என்றும் நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதோடு, இந்த சூரியப் புயல் பூமியைத் தாக்கும் வகையில், மிக நெருக்கமாக வந்ததாகவும், அது மேலும் நெருங்கியிருந்தால் நிலைமை ஆபத்தாகியிருக்கும் என்றும் நூலிழையில் அந்த நிகழ்வு தவிர்க்கப்பட்டதாகவும் நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதோடு, அந்த சூரியப் புயல் பூமியைத் தாக்குவதற்குப் பதிலாக, விண்வெளியில் இருக்கும் நாசாவின் ஸ்டீரியோ-ஏ (STEREO-A) சூரிய கண்காணிப்பகத்தைத் தாக்கியது.

கடந்த 1989ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு சி.எம்.இ வெளியேற்றம், கூபெக்கின் மின் கட்டமைப்பின் ஒரு பகுதியை 9 மணிநேரத்திற்குச் செயலிழக்க வைத்தது. இதனால் 60 லட்சம் பேர் மின்சாரமின்றி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

நவம்பர் 4, 2015 அன்று சூரிய செயல்பாடு ஸ்வீடன் மற்றும் சில ஐரோப்பிய விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டைச் சீர்குலைத்தது. இதனால் பல மணிநேரங்களுக்குக் குழப்பம் நிலவியது.

சூரியப் புயல்களை கண்காணிப்பது எப்படி?

ஆதித்யா எல்1: பூமியை தாக்கும் சூரியப் புயல்களை துல்லியமாக கண்டறிய எப்படி உதவுகிறது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த அக்டோபர் மாதம், பிரிட்டன் வானில் வண்ணமயமான சூரியப் புயலால் ஏற்பட்ட காந்தப்புலச் சுடரொளி இரவு வானத்தை ஒளிரச் செய்தது

சூரியனில் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணித்து, சூரியப் புயல் மற்றும் சி.எம்.இ வெளியேற்றத்தை நிகழ்நேரத்தில் கண்டறிந்து, அவற்றின் பாதையைக் கணிக்க முடிந்தால், மின் கட்டமைப்புகள் மற்றும் செயற்கைக்கோள்களைத் தற்காலிகமாக அணைத்து வைக்கலாம். இதன்மூலம், அவற்றை இந்த நிகழ்வுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பதற்கான ஒரு முன்னறிவிப்பாக அந்தத் தகவல்களைப் பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ஜப்பான் மற்றும் சீனா ஆகியவை பல்லாண்டுக் காலமாகத் தங்கள் விண்வெளி சார்ந்த சூரிய ஆய்வுத் திட்டங்கள் வாயிலாக சூரியனைக் கண்காணித்து வருகின்றன. இந்து மதத்தைச் சேர்ந்த சூரியக் கடவுளின் பெயரைத் தொடர்ந்து பெயரிடப்பட்ட ஆதித்யா எல்1 என்ற சூரியனை ஆய்வு செய்யும் செயற்கைக்கோளை இஸ்ரோ இந்த ஆண்டின் தொடக்கத்தில் விண்வெளிக்கு அனுப்பியது.

கிரகணங்களின்போது கூட சூரியனை தொடர்ந்து அவதானிக்கவும், அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளவும் ஆதித்யா எல்1-ஆல் முடியும்.

“நாம் பூமியிலிருந்து சூரியனை பார்க்கும்போது, ஒளிக்கோளம் அல்லது அதன் பிரகாசமான ஆரஞ்சு நிற நெருப்புப் பந்து போன்ற வெளிப்புறப் பகுதியையே பார்க்கிறோம்,” என்கிறார் பேராசிரியர் ரமேஷ்.

முழு கிரகணத்தின்போது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வரும் சந்திரன் ஒளிக்கோளத்தை மறைக்கும்போது மட்டுமே, சூரியனின் வெளிப்புற அடுக்கான கொரோனாவை நம்மால் காண முடியும்.

ஆதித்யா எல்1: பூமியை தாக்கும் சூரியப் புயல்களை துல்லியமாக கண்டறிய எப்படி உதவுகிறது?

பட மூலாதாரம், ISRO

படக்குறிப்பு, 'ஆதித்யா எல்1-இல் இருக்கும் கொரோனாகிராஃப் கருவியால் சி.எம்.இ வெளியேற்றம் தொடங்கும் நேரத்தையும் அது செல்லும் திசையையும் துல்லியமாக மதிப்பிட முடியும்.'

இந்தியாவின் கொரோனாகிராஃப் கருவி, அதாவது வெல்க்-இல், நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் கூட்டுத் திட்டமான சூரிய மற்றும் சூரியவளி மண்டலத்தில் இருக்கும் ஆய்வகத்தில் உள்ள கொரோனாகிராஃப் கருவியைவிடச் சற்றுக் கூடுதல் நன்மை இருப்பதாகக் கூறுகிறார் பேராசிரியர் ரமேஷ்.

“நம்முடைய கொரோனாகிராஃப் கருவி, கிரகணத்தின்போது சந்திரன் செய்வதைப் போலவே சூரியனின் ஒளிக்கோளத்தைச் செயற்கையாக மறைக்கிறது. இதனால், சூரியனின் பிரகாசமான, ஆரஞ்சு நிற ஒளிக்கோளம் இல்லாமல், ஆதித்யா எல்1-க்கு ஆண்டின் 365 நாட்களும் 24 மணிநேரமும் கொரோனா அடுக்கு தடையின்றிக் காட்சியளிக்கும்,” என்று விளக்கினார் ரமேஷ்.

நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் கொரோனாகிராஃப் கருவி மிகப்பெரியது. அதாவது, அது ஒளிக்கோளத்தை மட்டுமின்றி, கொரோனா அடுக்கின் சில பகுதிகளையும் மறைக்கிறது. ஆகவே, அந்தக் கருவியால் மறைக்கப்பட்ட பகுதியில் சி.எம்.இ வெளிப்பட்டால், அதன் தோற்றத்தை அந்தப் பெரிய கொரோனாகிராஃப் கருவியால் காண முடியாது.

ஆனால், வெல்க் மூலம் ஒரு சி.எம்.இ வெளியேற்றம் தொடங்கும் நேரத்தையும் அது எந்தத் திசையில் செல்கிறது என்பதும் துல்லியமாக மதிப்பிட முடியும் என்கிறார் பேராசிரியர் ரமேஷ்.

இந்தியாவில் சூரியனை கண்காணிக்க, தெற்கில் கொடைக்கானல், கௌரிபிதனூர், வடமேற்கில் உதய்பூர் என மூன்று கண்காணிப்பு மையங்கள் உள்ளன. ஆகவே, இந்த மையங்களின் அவதானிப்புகளை ஆதித்யா எல்1 உடன் சேர்த்தால், சூரியனைப் பற்றிய நமது புரிதலைப் பெரியளவில் மேம்படுத்த முடியும் என்றும் பேராசிரியர் ரமேஷ் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)