300 பில்லியன் டாலர் நிதி: ஐநா காலநிலை மாநாட்டு ஒப்பந்தம் குறித்து இந்தியா அதிருப்தி ஏன்?

 COP29 காலநிலை உச்சி மாநாடு 2024, அஜர்பைஜான்

பட மூலாதாரம், Eko Siswono Toyudho/Getty Images

    • எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட், எஸ்மே ஸ்டல்லர்ட்
    • பதவி, காலநிலை & அறிவியல் குழு, பிபிசி

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை தடுக்கவும், அதற்காக தங்களை தயார்படுத்திக் கொள்ளவும் வளரும் நாடுகளுக்கு ஆண்டுக்கு 300 பில்லியன் அமெரிக்க டாலர் பணம் வழங்க COP29 உச்சி மாநாட்டில் பணக்கார நாடுகள் உறுதியளித்துள்ளன.

அஜர்பைஜானில் ஐநா காலநிலை மாநாடு COP29 துவங்கி, அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

"இது மிகவும் சவாலான பயணம் ஆனால் எங்களால் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடிந்துள்ளது" என்று ஐநா காலநிலை அமைப்பின் தலைவர் சிமோன் ஸ்டியெல் கூறினார்.

ஆனால், உலக நாடுகள் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மாநாட்டில் என்ன நடந்தது?

சனிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில், வளரும் நாடுகள், குறிப்பாக காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடுகள் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறின.

சிறு தீவு நாடுகள் கூட்டணியின் தலைவர் செட்ரிக் ஷஸ்டர் இதுகுறித்து பேசும் போது, "எங்களின் தீவுகள் மூழ்கிக் கொண்டிருக்கின்றன என்பதை நான் மிகைப்படுத்திக் கூறவில்லை. ஒரு மோசமான ஒப்பந்தத்தை வைத்துக் கொண்டு எங்கள் மக்களை நாங்கள் எப்படி சந்திப்போம் என்று எதிர்பார்க்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை இந்திய உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு (சனிக்கிழமை 23:00 GMT), சில மாற்றங்களை செய்த பிறகு, ஒப்பந்தம் இறுதியாக நிறைவேற்றப்பட்டது.

கைத்தட்டல்கள் ஆரவாரத்துடன் இதனை பலரும் வரவேற்றனர். ஆனால் இந்த விவகாரம் குறித்து இந்தியா தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்ட ஆவேசமான கருத்துக்கள், அதன் விரக்தியை காட்டியது.

இந்தியா சார்பில் பங்கேற்ற லீலா நந்தன், இந்த ஒப்பந்தத்தில் வழங்கப்படுவதாக கூறப்பட்ட நிதி மிகவும் குறைவானது என்று வாதிட்டார். மேலும்,"எங்களால் இதை ஏற்க முடியாது ... முன்மொழியப்பட்ட இலக்கு எங்களின் பிரச்னைகள் எதையும் தீர்க்காது. எங்கள் நாடு தப்பிப்பதற்கு தேவையான காலநிலை நடவடிக்கைகளுக்கு இந்த இலக்கு உகந்தது இல்லை," என்று அவர் கூறினார்.

 COP29 காலநிலை உச்சி மாநாடு 2024, அஜர்பைஜான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மிகவும் வெப்பமான ஆண்டாக இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெப்ப அலைகளாலும், தீவிர புயல்களாலும் இந்த ஆண்டு பல பாதிப்புகளை சந்தித்துள்ளது

சுவிட்சர்லாந்து, மாலத்தீவு, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் புதைபடிவ எரிபொருட்களின் உலகளாவிய பயன்பாட்டைக் குறைக்கும் ஒப்பந்தம் மிகவும் பலவீனமாக இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்தன.

அதனால் அந்த முடிவு 2025-ஆம் ஆண்டு நடைபெறும் அடுத்த காலநிலை பேச்சுவார்த்தைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கால நிலை மாற்றத்தால், ஏழை நாடுகள் அதிக சவால்களை எதிர்கொள்கின்றன. ஆனால் வரலாற்று ரீதியாக, தற்போது ஏற்பட்டுள்ள கால நிலை நெருக்கடிகளுக்கு இந்த ஏழை நாடுகளின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நாடுகள் கால நிலை மாற்றத்திற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வழங்கப்படும் நிதியானது அவர்களின் குறைவான பங்களிப்பு, அதிக பாதிப்புகளை அங்கீகரிக்கும் அம்சமாக பார்க்கப்படுகிறது.

புதிதாக அறிவிக்கப்பட்ட நிதியை பணக்கார நாடுகளின் மானியங்கள் மற்றும் வங்கிகள், வணிகம் உள்ளிட்ட தனியார் துறைகளில் இருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடுகள் புதைபடிவ எரிசக்தியிலிருந்து விலகி புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்த உதவும் வகையில் இந்த நிதி இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 COP29 காலநிலை உச்சி மாநாடு 2024, அஜர்பைஜான்

பட மூலாதாரம், Sean Gallup/Getty Images

படக்குறிப்பு, பல நாடுகள் இந்த நிதியும் இலக்கும் போதுமானதாக இருக்காது என்று கூறியுள்ளன.

அமெரிக்காவின் பங்கு

நவம்பர் 11-ஆம் தேதியன்று பேச்சுவார்த்தையின் தொடக்கமானது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தேர்தல் தொடர்பான விவாதங்களால் ஆதிக்கம் செலுத்தியது. அவர் வரும் ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ளார்.

காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றுவதாகக் கூறிய டிரம்ப், காலநிலை மாற்றத்தை ஏற்க மறுக்கும் ஒரு நபராக அறியப்படுகிறார்.

"டிரம்ப் ஒரு பைசா கூட கொடுக்க மாட்டார் என்பதை மற்ற வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த நன்கொடையாளர்கள் நன்கு அறிந்திருக்கின்றனர். அவர்கள் இதனால் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட வேண்டும்,”என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச காலநிலை பேச்சுவார்த்தைகள் நிபுணர் பேராசிரியர் ஜோனா டெப்லெட்ஜ், பிபிசியிடம் கூறினார்.

காலநிலை விவகாரங்களில் இணைந்து செயல்படுவதற்கு உலக நாடுகள் உறுதியாக உள்ளன என்பதையே இந்த ஒப்பந்தம் குறிக்கிறது. ஆனால் இந்த பூமியில் இயங்கிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பொருளாதாரம் இதில் தன்னுடைய பங்களிப்பை செலுத்தாது என்று வரும் போது, பல பில்லியன் டாலர் நிதி திரட்டும் இலக்கை அடைவது கடினமாகக் கூடும்.

"COP29 மாநாட்டின் இறுதி கட்டத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் கடினமான புவிசார் அரசியலைக் கொண்டுள்ள நிலப்பரப்புகளை (நாடுகளை) பிரதிபலிப்பதாகவே இருந்தது. நன்கொடை வழங்கும் நாடுகளுக்கும், மிகவும் பாதிப்படையக் கூடும் நாடுகளுக்கும் இடையே உள்ள சமமற்ற சமரசம் தான் இந்த நிதி தொடர்பான இறுதி அறிவிப்பு," என்று ஆசியா சொசைட்டி பாலிசி நிறுவனம் என்ற சிந்தனைக் குழுவில் பணியாற்றும் லி ஷுவோ கூறினார்.

"இது காலநிலை விவகாரத்தில் முக்கியமான கட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவு ஆகும். நாமோ அல்லது பிறரோ விரும்பி எடுக்கப்பட்ட முடிவல்ல இது. ஆனால் நம் அனைவருக்காகவும் எடுத்து வைக்கப்படும் ஒரு முன்னெடுப்பாகும்," என்று பிரிட்டனின் எரிசக்தித் துறை செயலாளர் எட் மிலிபந்த் கூறினார்.

 COP29 காலநிலை உச்சி மாநாடு 2024, அஜர்பைஜான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வருவதால் காலநிலை நிதியில் பற்றாக்குறை ஏற்படும் என உலக நாடுகள் கவலை

பிரேசிலில் அடுத்த உச்சி மாநாடு

அதிக நிதி தருவதாக உறுதியளித்ததற்கு ஈடாக, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை, புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்கு, நாடுகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன.

கடந்த ஆண்டு துபாயில் நடந்த பேச்சுவார்த்தையில் "புதைபடிவ எரிசக்தியில் இருந்து (இதர எரிசக்திகளுக்கு) மாறுதல்" என்ற ஒப்பந்தம் வலுப்பெறும் என்று அவர்கள் நம்பினாலும், இறுதியாக முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் குறித்து மட்டுமே மீண்டும் மீண்டும் பேசப்பட்டது.

கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியை நம்பியிருக்கும் நாடுகள் மேலும் முன்னேற்றத்தைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

"புதைபடிவ எரிபொருள்கள் உட்பட குறிப்பிட்ட துறைகளை குறிவைக்கும் எந்த முடிவையும் அரபு நாடுகள் குழு ஏற்காது" என்று சௌதி அரேபியாவின் அல்பரா தவ்பிக் இந்த வார தொடக்கத்தில் ஒரு நிகழ்வில் தெரிவித்தார்.

தங்கள் நாடுகளில் ஏற்படும் பருவநிலை மாற்றத்திற்கு தீர்வு காண புதிய திட்டங்களுடன் பல நாடுகள் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளன.

 COP29 காலநிலை உச்சி மாநாடு 2024, அஜர்பைஜான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அடுத்த உச்சி மாநாடு பிரேசிலில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், 2035-ஆம் ஆண்டுக்குள் பிரிட்டன் கார்பன் உமிழ்வை 81% குறைக்கும் என்று உறுதி அளித்தார். இது பலராலும் வரவேற்கப்பட்டது.

காலநிலை மாற்ற மாநாடு நடக்கும் அஜர்பைஜான், இந்த முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுகளை நடத்துவதற்கான சர்ச்சைக்குரிய தேர்வாக இருந்தது. அடுத்த பத்தாண்டுகளில் எரிவாயு உற்பத்தியை மூன்று மடங்கு விரிவுபடுத்த இருப்பதாக அந்நாடு ஏற்கனவே அறிவித்திருந்தது.

அடுத்த ஆண்டு காலநிலை உச்சி மாநாட்டை நடத்துவதற்கு பிரேசில் சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. அந்நாட்டு அதிபர் லூலாவின் காலநிலை மாற்றம் மற்றும் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த அமேசான் மழைக்காடுகளின் அழிப்பைக் குறைப்பதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகள் காரணமாக பெலெம் நகரில் இந்த மாநாடு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)