விவாகரத்து செய்யாமலேயே தம்பதிகள் பிரிய முடியுமா? 'நீதிமன்ற மணப்பிரிவு' என்பது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
திருமணமான தம்பதிகள் அந்த உறவிலிருந்து வெளிவர நினைக்கும் போது, விவாகரத்து மட்டுமல்லாமல் வேறு சில தேர்வுகளும் இருக்கின்றன. அவ்வாறான தேர்வுதான் 'ஜூடீசியல் செப்பரேசன்' (judicial seperation). மணமுறிவு அல்லாத தனிவாழ்க்கைக்கு இது வாய்ப்பளிக்கிறது.
உறவுகள் எப்போதும் எளிதானவை அல்ல, எல்லா நேரங்களிலும் அவை வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு செய்வது சிக்கலானதாக இருக்கலாம். சில நேரம் சற்று தள்ளி இருந்தால் போதும் என்று தோன்றலாம். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியிருக்கும். இது போன்ற தருணங்களில், தம்பதிகள் விவாகரத்து பெறாமல் தனியாக வாழ்வதற்கு ஜூடிசியல் செபரேஷன் (நீதிமன்ற மணப்பிரிவு) உதவும்.
இவ்வாறு தனித்து வாழ்வோர் சட்டப்படி திருமணமானவர்களாக இருந்தாலும் அவர்கள் ஒன்றாக வாழ வேண்டிய அவசியம் இல்லை. அதே சமயம், இவர்கள் மற்றொரு திருமணம் செய்து கொள்ள முடியாது.
பிள்ளைகளை ஒன்றாக வளர்க்க வேண்டும், ஆனால் கணவன் மனைவியாக ஒரே வீட்டில் ஒன்றாக வாழ விருப்பமில்லாத பலர் இந்த முடிவை தேர்ந்தெடுக்கின்றனர்.

பொது வாழ்வில் இருப்பவர்கள் பலர் பிரிந்து வாழும் முடிவை எடுத்துள்ளனர். பிரபல இந்தி நடிகர் ஓம் பூரி, தனது மனைவி நந்திதா பூரியுடன் 26 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, நீதிமன்ற மணப்பிரிவுக்கு 2016ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார்.
இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானும் சாய்ரா பானுவும் நீதிமன்றத்தின் முன் விவாகரத்து பெறாத நிலையில், தங்கள் வழக்கறிஞர் மூலம் தாங்கள் பிரிவதாக அறிவித்திருந்தனர். அவர்கள் விவாகரத்து பெற போகிறார்களா, அல்லது நீதிமன்ற மணப்பிரிவுக்கு விண்ணப்பிக்கப் போகிறார்களா என்பது தெளிவாகவில்லை.
பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மற்றும் அவரது மனைவி ஜடா பின்கட் ஸ்மித் விவாகரத்து செய்து கொள்ளவில்லை, ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது மனைவியும் பிரிவதாக அறிவித்திருந்தனர். அவர்கள் ஒரே ஊரில் வெவ்வேறு வீடுகளில் வாழ்வார்கள் என்றும் அலுவல்ரீதியாக அவர் வெளியூர் செல்லும் போது, பிள்ளைகளை கவனித்துக் கொள்ள அவரது மனைவி வருவார் என்றும் விடுமுறைகளை ஒன்றாக கழிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சர்ச்சைகள், விவாதங்களை தவிர்க்க, பொது வாழ்வில் இருப்பவர்கள் விவாகரத்துக்கு பதிலாக பிரிந்து வாழும் முடிவை தேர்ந்தெடுப்பதாக தெரிகிறது.
எந்த சட்டம் இதற்கு வழிவகுக்கிறது?
திருமணமானவர்களாக இருந்தாலும், பிரிந்து வாழ அனுமதிக்கும் சட்ட நடைமுறையே நீதிமன்ற மணப்பிரிவு. விவாகரத்தின் அழுத்தங்கள் எதுவும் இல்லாமல், தங்கள் உறவை குறித்து தம்பதிகள் சிந்தித்துப் பார்ப்பதற்கான இடைக்கால வாய்ப்பாக இது கருதப்படுகிறது.
இந்து திருமணச் சட்டம் 1955, பிரிவு 10-ன் கீழ் இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி ஒரு திருமணத்தை முறிக்காமல், ஆனால், பாலியல் உள்ளிட்ட திருமணத்துக்கான உறவுகளை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றத்தின் மூலம் வழங்கப்படும் உத்தரவே இது.
தீர்க்க முடியாத பிரச்னைகளை எதிர்கொள்ளும் தம்பதிகள் தங்கள் திருமணத்தை தொடர வேண்டுமா, இல்லையா என்று யோசித்து முடிவு எடுக்கும் காலமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
“நீதிமன்ற மணப்பிரிவில் இருக்கும் தம்பதிகள் ஒருவரை ஒருவர் ஒன்றாக இருக்கக் கட்டாயப்படுத்த முடியாது. விவாகரத்துக்கும் மணப்பிரிவுக்கும் இது தான் முக்கியமான வித்தியாசம். திருமணமான தம்பதிகளும் வெவ்வேறு காரணங்களுக்காக தனித்தனியாக வாழ்கிறார்களே. வேலை, பொருளாதார சூழல், பிள்ளைகளின் படி, தனக்கான மருத்துவச் சிகிச்சை என சரியான காரணங்கள் இருந்தால், தனது இணை ஒன்றாக இல்லை என்று கூறி நீதிமன்றத்தில் விவாகரத்து அல்லது மணப்பிரிவை கோர முடியாது” என்கிறார் மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.

பட மூலாதாரம், Sudha Ramalingam
நீதிமன்ற மணப்பிரிவுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்?
விவாகரத்துக்கு என்னென்ன காரணங்கள் தேவையோ அவையே தான் இதற்கும் தேவை. உடல் ரீதியான, மன ரீதியான பாதிப்பை ஒருவர் உண்டாக்குவது, திருமணத்தை மீறிய உறவுகளில் ஒருவர் ஈடுபட்டிருப்பது, உளரீதியாக நிலையாக இல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காக நீதிமன்ற மணப்பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம். இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13, விவாகரத்துக்கான காரணங்களாக குறிப்பிட்டுள்ள அனைத்தும் நீதிமன்ற மணப்பிரிவுக்கு பொருந்தும்.
நீதிமன்ற மணப்பிரிவு கோரும் நபர் குடும்ப நீதிமன்றத்தில் உரிய காரணங்கள், சாட்சிகளுடன் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதை பரிசீலிக்கும் நீதிமன்றம், தம்பதிகள் பிரிந்து வாழ அனுமதிக்கலாம். இதன் பிறகு அவர்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டிய கட்டாயமில்லை.

பட மூலாதாரம், Getty Images
மறுமணம் செய்ய முடியுமா?
எனினும் கணவர், தன் மனைவிக்கான பராமரிப்பு செலவுகளை கவனித்துக் கொள்ள வேண்டும்.
சட்டத்தின் முன் அவர்கள் திருமணமானவர்களாகவே கருதப்படுவர், எனவே, விவாகரத்து பெறாமல் அவர்கள் வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொள்ள முடியாது. அப்படி செய்தால் அது, திருமண பந்தத்தில் ஒன்றாக இணைந்து வாழும் தம்பதி, அந்த திருமணம் பந்தத்தை முறிக்காமல் மற்றொரு திருமணம் செய்துகொள்வது போலவே கருதப்படும். இரண்டாவதாக செய்யும் திருமணம் செல்லுபடியாகாது.
நீதிமன்ற மணப்பிரிவுக்கு காலவரையறை கிடையாது. தம்பதிகள் மீண்டும் நீதிமன்றத்தை நாடும் வரை அவர்கள் இதே நிலையில் இருக்கலாம். இந்த பிரிவை ரத்து செய்து அவர்கள் ஒன்றாக வாழ வேண்டும் என்று முடிவு செய்தால், அதற்கு தடை ஏதும் இல்லை. இவை இந்து திருமணச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற திருமணங்களுக்கு பொருந்தும்.
பிற மதங்களுக்கு என்ன வழிமுறைகள் உள்ளன?
இந்திய விவாகரத்து சட்டம் 1869-ன் கீழ் கிறித்தவர்கள் நீதிமன்ற மணப்பிரிவு பெற முடியும். இந்தச் சட்டத்தின் பிரிவு 22-ன் கீழ் திருமணத்தை மீறிய பந்தத்தில் இருப்பது, உடல் ரீதியாக, மன ரீதியாக பாதிப்பு ஏற்படுத்துவது, சரியான காரணம் இல்லாமல் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் துணையை விட்டுச் செல்வது ஆகியவை நீதிமன்ற மணப்பிரிவுக்கான காரணங்களாக நீதிமன்றத்தின் முன் எடுத்துக் கூற முடியும்.
அதே சமயம், இந்தச் சட்டத்தின் கீழ் விவாகரத்து கோர, உளரீதியாக நிலையாக இல்லாதது, வேறு ஒரு மத்துக்கு மாறுவது, ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஒருவரைப் பற்றி எந்த தகவலும் இல்லாமல் இருப்பது ஆகியவற்றை காரணங்களாக சொல்ல முடியும். ஆனால், நீதிமன்ற மணப்பிரிவு கோர இவற்றை காரணங்களாக நீதிமன்றத்தில் சொல்ல முடியாது.
இந்தச் சட்டத்தின் படி, நீதிமன்ற மணப்பிரிவு காலத்தில், பிரிந்திருக்கும் மனைவி, சொத்துக்கள் வாங்கும் போது அவர் திருமணமாகாதவராகவே கருதப்படுவார். அதேபோன்று, ஒப்பந்தங்கள் போடும் போதோ அல்லது அவர் மீது சட்டப்படியான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படும் போதோ அவர் திருமணமாகாதவராக கருதப்படுவார். ஒருவர் குறித்த தகவல் இல்லாத காரணத்தினால், அவரது துணை, நீதிமன்ற மணப்பிரிவு பெறலாம்.
அந்த நபர் பிரிந்து இருந்ததற்கான நியாயமான காரணங்களுடன் மீண்டும் வந்தால் நீதிமன்ற மணப்பிரிவை ரத்து செய்துகொள்ளலாம்.

பட மூலாதாரம், Getty Images
பார்சி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் 1936-ன் கீழ் பார்சி மக்கள் திருமணப் பிரிவுக்கு விண்ணபிக்கலாம். பாதிப்பை உண்டாக்குதல், வேறொரு உறவில் இருத்தல், ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஒருவரைப் பற்றி எந்த தகவலும் இல்லாமல் இருப்பது உள்ளிட்ட பிற சட்டங்களில் இருக்கும் காரணங்கள் தவிர்த்து தொழுநோய் இருந்தாலும் இந்தச் சட்டத்தின் கீழ் கணவன் அல்லது மனைவி பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம்.
இஸ்லாமியர்களின் திருமணம் மற்றும் விவாகரத்து அவர்களுக்கான தனிச் சட்டத்தின் படி மேற்கொள்ளப்படும். பிற சட்டங்களில் இருப்பது போன்று திருமணப் பிரிவு என்று தனியாக இஸ்லாமிய சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.
எனினும், திருமணத்தை முறிக்க கணவன் மற்றும் மனைவிக்கு வெவ்வேறு வழிகள் உள்ளன. தலாக் வழங்குவது ஆண்களின் விவாகரத்து கோரும் முறையாக இருக்கும் நிலையில், திருமணத்தை முறித்துக் கொள்ள பெண்களும் கோர முடியும்.
இஸ்லாமிய திருமண கலைத்தல் சட்டம் 1939-ன் (DMMA) கீழ் நான்கு ஆண்டுகளாக கணவரை காணவில்லை, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பராமரிப்பு செலவுகளை வழங்கவில்லை உள்ளிட்ட சில காரணங்களுக்காக, திருமணத்தை முறித்துக் கொள்ள பெண்கள் கோர முடியும். எனினும், இவை விவாகரத்துக்கு இணையானதாகவே இருக்கும்.
குறிப்பிட்ட மதச் சட்டத்துக்கு உட்படாதவர்கள், சிறப்பு திருமணச் சட்டம் 1954, பிரிவு 23-ன் கீழ் உள்ள காரணங்களை கூறி மணப்பிரிவை கோரலாம்.

பட மூலாதாரம், Getty Images
குழந்தைகளுக்கு பாதிப்பு இருக்குமா?
நீதிமன்ற மணப்பிரிவின் காரணமாக குழந்தைகளுக்கு சட்டரீதியாக எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை என்று கூறுகிறார், வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.
"திருமணத்திலும் சரி, நீதிமன்ற மணப்பிரிவிலும் சரி, குழந்தைகளுக்கு பாதிப்பில்லை. நீதிமன்ற மணப்பிரிவில், ஒன்றாக வாழ வேண்டிய கட்டாயம் இல்லையே தவிர பிற எல்லா விவகாரங்களிலும் அவர்கள் திருமணமானவர்களாக கருதப்படுவர். இந்து திருமணச் சட்டத்தின் கீழ் இந்துக்கள், பௌத்தர்கள், ஜைன மதத்தவர், சீக்கியர்கள் உள்ளிட்டோரும், இந்திய விவாகரத்துச் சட்டத்தின் கீழ் கிறித்தவர்களும் மணப்பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம். நீதிமன்ற மணப்பிரிவு பெற்று ஓராண்டு காலம் ஆகியிருந்தால், அதுவே விவாகரத்து பெறுவதற்கு காரணமாக நீதிமன்றத்தின் முன் சுட்டிக்காட்ட முடியும்.”
மேலும் அவர், “பிரிந்து இருப்பவர்கள் மீண்டும் ஒன்றாக வாழ வேண்டும் என்று முடிவு செய்தால், எப்போது வேண்டுமானாலும் சேர்ந்துக் கொள்ளலாம். அதற்கு நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியமில்லை. விவாகரத்திலும் அப்படி தான். ஒன்றாக சேர யாரும் தடை சொல்ல போவதில்லை” என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












