விவாகரத்தான முஸ்லிம் பெண் எவ்வளவு நாள் ஜீவனாம்சம் பெற முடியும்? உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பட மூலாதாரம், GETTY IMAGES
- எழுதியவர், உமாங் போட்டார்
- பதவி, பிபிசி செய்தியாளர்
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125-ன் கீழ், விவாகரத்தான முஸ்லிம் பெண்களும் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறலாம் என, உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு கடந்த புதன் கிழமை தெரிவித்தது.
விவாகரத்தான முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் வழங்குவது நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய விவகாரமாக உள்ளது.
ஷா பானோ வழக்கில் 1985-ம் ஆண்டு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, மறுதிருமணம் செய்யும் வரை விவாகரத்தான முஸ்லிம் பெண் ஜீவனாம்சம் பெறலாம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சில முஸ்லிம் குழுக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, ஒரு வருடம் கழித்து, விவாகரத்துக்குப் பிறகு மூன்று மாதங்களுக்கு ஜீவனாம்சம் பெறலாம் எனும் வகையில் ராஜீவ் காந்தி அரசாங்கம் கட்டுப்பாடு கொண்டு வந்தது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் பெண்கள் ஜீவனாம்சம் பெறும் உரிமையை 1986 சட்டம் கட்டுப்படுத்த முடியாது என நீதிமன்றங்கள் கருதுகின்றன.
பல பத்தாண்டுகளாக இந்த விவகாரத்தில் தன்னுடைய மாறாத நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதை சமீபத்திய உத்தரவின் மூலம், உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக பிபிசியிடம் பேசிய சட்ட நிபுணர்களும் செயற்பாட்டாளர்களும் கூறுகின்றனர்.
கீழமை நீதிமன்றங்களில் இதுதொடர்பாக நிலவும் குழப்பங்களை இது தெளிவுபடுத்தும் என்றும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் என்றும் இந்த தீர்ப்பை அவர்கள் வரவேற்றுள்ளனர்.
மேலும், ஜீவனாம்சத்திற்கான உத்தரவை பெறுவதற்கு பல ஆண்டுகள் ஆவதாகவும் அதனை செயல்படுத்துவது சவாலாக இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பல முஸ்லிம் செயற்பாட்டாளர்கள் இந்த உத்தரவை வரவேற்றுள்ளனர்.
“இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது, முற்போக்கானது,” என்கிறார் ஸகியா சோமன்.
இதுதொடர்பாக எந்த சட்டத்தைப் பயன்படுத்துவது என்பதில் பல குடும்ப நீதிமன்றங்களுக்கு தெளிவில்லை என அவர் கூறுகிறார்.
“தனிநபர் சட்டத்தின் மூலம் மட்டுமே முஸ்லிம் பெண் ஜீவனாம்சம் பெற முடியும் என்பதே தற்போது பொது புத்தியில் இருக்கிறது,” என சோமன் தெரிவிக்கிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நீதிமன்றம் கூறியது என்ன?

பட மூலாதாரம், ANI
தெலங்கானாவில் 2017-ம் ஆண்டில் முஸ்லிம் தம்பதி, திருமணமான ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து செய்த வழக்குதான் சமீபத்திய உத்தரவுக்கான அடிப்படை.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட பெண் ஜீவனாம்சம் கோரி நீதிமன்றத்தை நாடினார்.
கடந்தாண்டு ஜூன் மாதம் இடைக்கால ஜீவனாம்சமாக ரூ. 20,000 வழங்குமாறு குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால், அந்த தொகையை ரூபாய் 10,000ஆக தெலங்கானா உயர் நீதிமன்றம் குறைத்தது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அப்பெண்ணின் கணவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். மத சார்பில்லாத சட்டமான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் விவாகரத்தான முஸ்லிம் பெண் பராமரிப்புத் தொகை கோர முடியாது என்றும் முஸ்லிம் பெண்கள் (விவாகரத்து தொடர்பான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 1986-ன் கீழ் தான் பெற முடியும் என அவர் வாதாடினார்.
அவரின் வாதத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இரு சட்டங்களும் இணையாக உள்ளன என்றும், அவற்றில் ஒரு சட்டத்தைத் தேர்ந்தெடுப்பது அல்லது விரும்பினால் இரு சட்டங்களையும் தேர்ந்தெடுப்பது அந்த பெண்ணை சார்ந்தது என தெரிவித்தது.
முத்தலாக் வழக்கிற்கும் இது பொருந்தும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
புதிய சட்டமா?

பட மூலாதாரம், Getty Images
இந்த வழக்கின் அடிப்படை தத்துவம், 2001க்கு முன்பிருந்தே பல உச்ச நீதிமன்ற உத்தரவுகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது, எனவே இது புதிய சட்டம் அல்ல.
“ஜீவனாம்சம் பெறுவதற்கு முஸ்லிம் பெண்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125-ஐ பயன்படுத்துவது தொடர்பான வழக்குகளை நாங்கள் கையாண்டுள்ளோம். இந்த உத்தரவுக்கு முன்பே, பிரிவு 125 அல்லது 1986 சட்டத்தைப் பயன்படுத்தலாம்,” என, மும்பையை சேர்ந்த குடும்ப நீதிமன்ற வழக்கறிஞர் நீலோஃபர் அக்தர் தெரிவித்தார்.
2019 சட்டத்தின்படி, சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்ட முத்தலாக் மூலம் விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணும் பிரிவு 125-ன் கீழ் ஜீவனாம்சம் கோரலாம் என நீதிமன்றம் குறிப்பிட்டது.
குடும்ப தலைவிகளின் உரிமை

பட மூலாதாரம், Getty Images
நீதிபதி பி.வி. நாகரத்னா தன் உத்தரவில், தனிப்பட்ட ரீதியாக எந்த வருமானமும் இல்லாத மனைவியை கணவர் “பொருளாதார ரீதியாக வலுப்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.
“சமூகத்தின் பெரும்பான்மையான பிரிவுகளில் பெண்களின் உழைப்பு ஈடுசெய்யப்படுவதில்லை” என அவர் தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இதனால் பாதிப்புக்கு ஆளாகும் பெண்களுக்கு தங்கள் வாழ்விடத்தில் பாதுகாப்பின்மை ஏற்படுவதாகவும் விவாகரத்திற்கு பின்னர் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, இத்தகைய அம்சங்கள் (ஜீவனாம்சம்) பாதுகாக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
“என்னைப் பொருத்தவரை இந்த உத்தரவிலிருந்து முக்கியமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது இதுதான்,” என குடும்ப சட்டங்கள் தொடர்பான வழக்குகளை கையாளும் டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் அபெய் நருலா தெரிவிக்கிறார்.
“பெரும்பாலான பெண்கள் குடும்ப தலைவிகளாக உள்ளனர், அவர்களுக்கு தனிப்பட்ட வருமானம் இல்லை. இல்லத்தரசிகள் பணத்திற்காக மட்டுமல்லாமல், திருமண வாழ்க்கையில் வாழ்நாள் முழுவதும் உருவாக்கப்பட்ட சொத்துகளுக்காகவும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.” என்கிறார் அவர்.
செயற்பாட்டாளர்களின் கருத்துகள்

பட மூலாதாரம், Getty Images
பல உயர் நீதிமன்றங்களும் இதுதொடர்பாக முரண்பாடான உத்தரவுகளை வழங்கியுள்ளதாக, உச்ச நீதிமன்றமும் சுட்டிக்காட்டியுள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்றம், முஸ்லிம் பெண் பிரிவு 125-ன் கீழ் ஜீவனாம்சம் கோர முடியாது என, 2008-ல் உத்தரவு வழங்கியதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இந்த உத்தரவின் மூலம் பல தெளிவு கிடைக்கும் என, ஸகியா சோமன் நம்புகிறார்.
மற்றொரு செயற்பாட்டாளரும் பத்திரிகையாளருமான ஷீபா அஸ்லம் ஃபெமி கூறுகையில், பல முஸ்லிம் மதத் தலைவர்கள், மதச்சார்பின்மை சட்டத்தின் மூலம் ஜீவனாம்சம் கோருவது “இஸ்லாத்திற்கு எதிரானது” என்றும் “எனவே அதன்கீழ் பெண்கள் ஜீவனாம்சம் கோரக் கூடாது” என்றும் கூறுவதாக தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருப்பதன் மூலம் மக்களின் “பொது புத்தியில் விழிப்புணர்வு ஏற்படும்” என அவர் நம்புகிறார்.
“அதை மீண்டும் வலியுறுத்துவது விழிப்புணர்வை அதிகப்படுத்தும்,” என பெண்ணிய செயற்பாட்டாளரும் பெபாக் கலெக்டிவ் எனும் அமைப்பின் நிறுவனருமான ஹசினா கான் தெரிவித்தார்.
“விவாகரத்திற்கு பிறகு, சில பெண்கள் ஜீவனாம்சம் கோருகின்றனர். இந்த உத்தரவு குறித்து 20 பெண்களுடன் கூட்டம் நடத்தி விவரித்தோம். அவர்கள் இதனை நல்ல தீர்ப்பு என்றும், முன்பு இதுகுறித்து தெரியாது என்றும் கூறினர். இதுகுறித்து பெண்கள் அறியாமல் இருப்பது வழக்கமானதுதான்,” என தெரிவித்தார்.
எல்லோரும் இந்த உத்தரவு குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை.
“விவாகரத்தான முஸ்லிம் பெண்ணுக்கு வாழ்நாள் முழுவதும் ஜீவனாம்சம் வழங்கக் கூறும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ஷரியா சட்டங்களுக்கு எதிரானது,” என்கிறார், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (AIMPLB) செய்தித் தொடர்பாளர் டாக்டர் எஸ்.கியூ.ஆர். இல்யாஸ் தெரிவிக்கிறார்.
திருமணம் தொடர்பான வழக்குகளில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் தங்களின் தனிநபர் சட்டங்களையே கையாள்வதாகவும், “ஐபிசி அல்லது சி.ஆர்.பி.சி ஆகியவற்றை இதில் பயன்படுத்துவதை நீதிமன்றங்கள் தடுக்க வேண்டும்” எனவும் அவர் கூறினார்.
இந்த உத்தரவு குறித்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஆய்வு செய்துவருவதாகவும் தங்களுக்குள்ள சட்ட வாய்ப்புகள் குறித்து முடிவு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரிவு 125-ல் உள்ள சிரமங்கள்

பட மூலாதாரம், Getty Images
பிரிவு 125-ன் கீழ் சட்ட உதவியை நாடுவது சவாலானது என, வழக்கறிஞர்களும் வழக்கு தொடுப்பவர்களும் கூறுகின்றனர்.
ஹைதராபாத்தில் மக்கள் தொடர்பு பணியாளராக பணியாற்றிவரும் ஹியூமாவுக்கு 2023-ம் ஆண்டில் விவாகரத்து கிடைக்க எட்டு ஆண்டுகளானது. மேலும், இந்த சட்ட நடைமுறைகளின்போது இடைக்கால ஜீவனாம்சம் பெறுவதற்கே கடும் சோதனைகளை எதிர்கொண்டதாக அவர் கூறுகிறார்.
இச்சட்டத்தின்படி, இடைக்கால ஜீவனாம்சம் 60 நாட்களில் வழங்கப்பட வேண்டும்.
“இந்த முழு நடைமுறையும் உணர்வு ரீதியாகவும் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியது,” என்கிறார் அவர்.
செப்டம்பர் 2015-ல் அவர் ஜீவனாம்சம் கோரி நீதிமன்றத்தை நாடினார். ஆனால், அதற்கான குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவு வருவதற்கு மூன்று ஆண்டுகளானது. அந்த உத்தரவுக்கு எதிராக அவருடைய கணவர் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இறுதியில் ஜீவனாம்சம் தொடர்பாக தன் கணவருடன் அவர் சமரசம் செய்துகொண்டார்.
“ஜீவனாம்சம் பெறுவது எளிதல்ல. உங்கள் கணவரின் அனைத்து தகவல்களும் உங்களிடம் இருக்க வேண்டும். என்னுடைய கணவரின் நிதி சார்ந்த தகவல்கள் எனக்குத் தெரியும். ஆனாலும் எனக்கு சிரமங்கள் இருந்தன. இதில் பெரிய அனுபவமில்லாத நபர்களுக்கு இந்த நடைமுறை மிக கடினமானதாக இருக்கும்,” என்கிறார் அவர்.
இது வழக்கமாக நடைபெறும் பிரச்னை என சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
“நீதிமன்றங்கள் நேரம் எடுக்கும். உங்களுக்கு வருமானத்திற்கான ஆதாரம் இல்லை என நீங்கள் முதலில் நிரூபிக்க வேண்டும். பின்னர், கணவர் வருமானத்திற்கான சிறந்த ஆதாரங்களை கொண்டிருப்பதாக நிரூபிக்க வேண்டும். இதற்கு நேரம் எடுக்கும்,” என, குடும்ப நீதிமன்ற வழக்கறிஞர் நீலோஃபர் அக்தர் கூறுகிறார்.
“இடைக்கால ஜீவனாம்சம் பெறுவதற்கே 1-2 ஆண்டுகளாகும். இறுதியாக ஜீவனாம்சம் பெறுவதற்கு சராசரியாக 3-4 ஆண்டுகளாகும்.”
உத்தரவு பெற்றாலும் அதனை செயல்படுத்துவது சவால் நிறைந்ததாக உள்ளது.
“பணத்தை மீட்பதுதான் மிகப்பெரிய சவால். தங்களுக்கு ஆதரவாக உத்தரவு பெற்ற நபர்களை நாங்கள் பார்த்துள்ளோம், ஆனால், அவர்களின் கணவர்கள் அப்பெண்களுக்கு பணம் வழங்க மாட்டார்கள் அல்லது தாமதமாக வழங்குவார்கள். பின்னர், உத்தரவை சரியாக செயல்படுத்த கோரி அப்பெண்கள் நீதிமன்றம் செல்வார்கள், அதுவும் கடினமான நடைமுறையாக இருக்கும்,” என டெல்லியை சேர்ந்த, குடும்ப சட்டங்களை கையாளும் வழக்கறிஞர் அபெய் நருலா கூறுகிறார்.
தற்போது தங்களை நாடி வரும் விவாகரத்தான முஸ்லிம் பெண்களை குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் உதவி கோர தாங்கள் அறிவுறுத்துவதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
குடியிருப்பு, பாதுகாப்பு மற்றும் கவனிப்புக்கான உத்தரவு போன்ற சிறந்த மாற்றுகளை இது வழங்குகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். ளின் தேவைகளுக்கு சிறப்பாக உதவும் என அவர்கள் கருதுகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












