சம்பல்: மசூதியில் ஆய்வின் போது நிகழ்ந்த வன்முறை - உள்ளூர் மக்கள், போலீஸ் கூறுவது என்ன? கள நிலவரம்

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், தில்நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி செய்தியாளர்
மேற்கு உத்தரபிரதேசத்தில் சம்பல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஷாஹி ஜாமா மசூதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு படிப்படியாக நிலைமை சகஜமாகி வருகிறது. வெள்ளிக்கிழமை அங்கு தொழுகை நடக்கும் என்பதால் இன்று முக்கியமான நாள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு ஏற்பட்ட வன்முறைக்குப் பிறகு நடக்கும் முதல் வெள்ளிக்கிழமை தொழுகை இது. அதே நாளில், சம்பல் நீதிமன்றத்தில் ஜாமா மசூதி வழக்கின் விசாரணை நடைபெற்றது. எனவே, காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ஜாமா மசூதியின் இரண்டாவது கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்றது. அப்போது அங்கு வெடித்த வன்முறையில் ஐந்து பேர் உயிரிழந்தனர். எனினும், நான்கு பேர் மட்டுமே இறந்ததாக காவல்துறை தரப்பு உறுதிப்படுத்தியது.
இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றது.
இந்த ஆய்வுப்பணிக்கு எதிராக மசூதி நிர்வாகம் தொடுத்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் பட்டியலிடப்படும் வரை விசாரணையை தொடர வேண்டாம் என, கீழமை நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக, 'லைவ் லா' இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
- உத்தரபிரதேசம்: மசூதி ஆய்வின் போது வெடித்த வன்முறையில் கொல்லப்பட்டவர்கள் யார்? பிபிசி கள ஆய்வு
- கோவில் இருந்த இடத்தில் மசூதியா? உத்தரபிரதேசத்தில் ஆய்வின் போது வன்முறை - 3 பேர் பலி
- புல்டோசர் நடவடிக்கைக்கு புதிய வழிகாட்டுதல்கள் - ஏற்கனவே இடிக்கப்பட்ட கட்டடங்கள் பற்றிய வழக்குகள் என்ன ஆகும்?
- உத்தரபிரதேசம்: இந்து - முஸ்லிம் கலவரத்தின் தொடர்ச்சியாக நடந்த என்கவுன்டரால் சர்ச்சை

`இயல்பு நிலை திரும்புகிறது’
ஜாமா மசூதி மட்டுமின்றி நீதிமன்ற வளாகத்திலும் காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளதாக, மொராதாபாத் ஆணையர் ஆஞ்சநேய குமார் கூறினார்.
வெளிமாவட்டங்களில் இருந்து வந்த போலீசார் நகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
“மக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு காவல்துறை முன்னுரிமை கொடுக்கிறது. நாங்கள் சம்பல் நகர மக்களுடன், குறிப்பாக முஸ்லிம் சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அமைதியையும் ஒழுங்கையும் பேணுவதாக மசூதி கமிட்டி உறுதி அளித்துள்ளது.” என்று பிபிசியிடம் பேசிய ஆஞ்சநேய குமார் கூறினார்.
"முஸ்லிம் சமூக மக்களும் அமைதியை மீட்டெடுக்க ஒத்துழைத்து வருகின்றனர்" என்றார்.
தற்போது சம்பல் நகரில் இயல்பு நிலை திரும்புவதாக கூறும் ஆஞ்சநேய குமார், வெள்ளிக்கிழமைக்குப் பிறகு நிலைமை மேலும் சீராகும் என்றார்.
ஜாமா மசூதியில் தொழுகை நடத்த வருபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும், மசூதிக்கு வருபவர்களின் பாதுகாப்புக்காக தான் இதை செய்கிறோம் என்றும் அவர் கூறுகிறார்.
மசூதி நிர்வாகம் கூறுவது என்ன?
“அந்த சம்பவத்திற்கும் பிறகும் மசூதியில் வழக்கம் போல் தொழுகை நடந்து வருகிறது. இந்த வெள்ளிக்கிழமையும் வழக்கம் போல் தொழுகை நடத்தப்படும், இன்ஷா அல்லாவிற்கான தொழுகை எப்போதுமே ஜாமா மசூதியில் நடைபெறும்” என்று மசூதி நிர்வாகக் குழுவின் தலைவரும் வழக்கறிருமான ஜாபர் அலி பிபிசியிடம் கூறினார்.
சம்பல் பகுதியை சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
“அம்ரோஹாவில் அமைதியான சூழல் நிலவுகிறது, இருப்பினும் போலீசார் விழிப்புடன் உள்ளனர். முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அமைதி காப்பதாக காவல்துறைக்கு உறுதியளித்துள்ளனர்” என அம்ரோஹா காவல்துறை கண்காணிப்பாளர் குன்வர் அனுபம் சிங் பிபிசியிடம் கூறினார்.
முஸ்லிம் பகுதிகளில் இயல்பு நிலை திரும்பிவிட்டதா?
செவ்வாயன்று, சம்பலின் சில பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டன. இருப்பினும், ஜாமா மசூதிக்கு மிக அருகில் உள்ள முஸ்லிம் பகுதிகளில், வீடுகள் இன்னும் பூட்டியே கிடக்கின்றன, மேலும் இங்கு ஆண்கள் யாரும் தென்படவில்லை.
அதே நேரத்தில், இந்துக்கள் வசிக்கும் பகுதிகளில் நிலைமை முற்றிலும் இயல்பாக இருந்தது. பெரும்பாலான கடைகள் வியாழக்கிழமை திறந்திருந்தன.
“ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறைக்குப் பிறகு, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதே நிர்வாகத்தின் முன்னுரிமை. சிறார்களும் கல் வீச்சில் ஈடுபட்டனர். அவர்களுக்கும் ஆலோசனை வழங்கப்படும்” என்று ஆஞ்சநேய குமார் கூறினார்.
சம்பல் வன்முறை வழக்கில், சமாஜ்வாதி எம்பி ஜியாவுர் ரஹ்மான் பர்க், அவரது தந்தை மம்லுகூர் ரஹ்மான் பார்க், சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ நவாப் இக்பால் மற்றும் அவரது மகன் உட்பட சுமார் 240 பேரின் பெயரை போலீசார் பதிவு செய்துள்ளனர். அடையாளம் தெரியாத 2,400 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் ஏராளமான அடையாளம் தெரியாத நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால், சம்பல் நகர முஸ்லிம் மக்களிடையே அச்சம் நிலவுகிறது. குறிப்பாக, இளைஞர்கள் கைது நடவடிக்கைக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.
சர்ச்சை எழுந்தது ஏன்?
சம்பலின் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜாமா மசூதி இந்திய தொல்லியல் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாகும்.
ஞாயிற்றுக்கிழமை காலை மசூதியில் நீதிமன்ற உத்தரவுப்படி நடந்த ஆய்வுப் பணிகளின் போது, உள்ளூர் மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த வன்முறையில் 5 பேர் உயிரிழந்தனர். இருப்பினும், 4 பேர் மட்டுமே இறந்ததாக காவல்துறை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பலில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவில் அமைந்துள்ள கைலாதேவி கோவிலின் தலைமை அர்ச்சகரான ரிஷிராஜ் கிரி மகராஜ், சம்பலில் இருக்கும் ஷாஹி மசூதியை ஹரிஹர் கோவில் எனக்கூறி, இது தொடர்பாக சிலருடன் சேர்ந்து சம்பல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அப்போது தான் பிரச்னை தொடங்கியது.
ஒரு சில மணி நேரங்களில், மசூதி வளாகத்தை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நாளில், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
நவம்பர் 19 அன்று நடந்த இந்த ஆய்வுப் பணியின் போது, அங்கு கூட்டம் கூடியது, ஆனால் பதற்றம் ஏதும் ஏற்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கட்ட ஆய்வுப் பணியின் போது அங்கு கூட்டம் கூடியது. சற்று நேரத்தில் கூட்டத்தில் இருந்த மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு நிலைமை மோசமடைந்தது. கல் வீச்சு பல மணி நேரம் தொடர்ந்தது.
மனு தாக்கல் செய்த மஹந்த் தரப்பின் நிலைப்பாடு

மஹந்த் ரிஷிராஜ் மகாராஜின் ஆசிரமம் கைலா தேவி கோவிலின் பெரிய வளாகத்தில் அமைந்துள்ளது. மஹந்த் ரிஷிராஜ் சிறுவயதிலிருந்தே இங்கு வசித்து வருகிறார். தற்போது அவர் இந்த மத தலத்தை நிர்வகித்து வருகிறார்.
அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், அவரது தனிப்படையினரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
பிபிசியிடம் பேசிய மஹந்த் ரிஷிராஜ் கிரி, ஜாமா மசூதி ஒரு பழமையான கோயில் என்று கூறினார்.
“அது ஹரிஹர் கோவில் தான். அதற்கான அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் அளித்துள்ளோம். நீதிமன்றம் எங்களுக்கு நல்ல தீர்ப்பை வழங்கும்.” என்றார்.
இந்த மசூதி பல நூற்றாண்டுகளாக அங்கு உள்ளது. அப்படி இருந்தும், இப்போது ஏன் இந்தக் கோரிக்கை வைக்கப்படுகிறது என்று அவரிடம் கேட்டபோது, “அயோத்தி கோவில் மீதான உரிமையும் பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் கோரப்பட்டது. எங்கள் கோவிலைத் திரும்பப் பெறுவதற்கான சரியான நேரம் வந்துவிட்டது என்று உணர்ந்தோம், எனவே, நாங்கள் நீதிமன்றத்தை அணுகினோம்,” என்றார் அவர்.
சர்ச்சையை ஏற்படுத்தும் நோக்கமா?
மசூதியில் பூஜை செய்ய வேண்டுமா என்று அவரிடம் கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர் பிபிசியிடம், "இனி என்ன நடக்க வேண்டுமோ அது மரியாதைக்குரிய நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் நடக்கும்" என்று கூறினார்.
மேலும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், எதிர்காலத்தில் கல்கி அவதாரம் எடுப்பது சம்பலில் நடக்கும் என்றும், மசூதிதான் அவர் அவதாரம் எடுக்கும் இடம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், சம்பலில் கல்கிக்கு குறைந்தபட்சம் இரண்டு கோவில்கள் உள்ளன. பாஜகவுடன் தொடர்புடைய ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம், சம்பலில் இருந்து சிறிது தொலைவில் ஒரு பெரிய கல்கி ஸ்தலத்தைக் கட்டி வருகிறார். கடந்தாண்டு பிரதமர் நரேந்திர மோதியும் அங்கு சென்றிருந்தார்.
ரிஷிராஜ் மகாராஜ் கூறுகையில், “கல்கி கோவில் கட்டப்பட்டு வந்தாலும், ஹரிஹர் கோவிலில்தான் கல்கி அவதாரம் நடக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.
சம்பலில் புதிய கலவரம் அல்லது சர்ச்சையை உருவாக்கவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தக் கேள்விக்கு ரிஷிராஜ், “மக்கள் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும். ஆனால், பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்ட ஒரு பொய் அம்பலமாகி, உண்மையைக் கொண்டு வந்திருக்கிறது என்பதே உண்மை” என்கிறார்.
இந்து தரப்புக்கு என தனிப்பட்ட கூற்றுகள் உள்ளன. ஆனால், உள்ளூர் முஸ்லிம்கள் இந்த வழக்கை மசூதியை அபகரிக்கும் முயற்சியாக பார்க்கின்றனர்.
“இந்த ஜாமா மசூதி பல நூறு ஆண்டுகளாக உள்ளது, ஆய்வு நடத்தியும், இங்கு கோவில் இருந்ததற்கான தடயமே இல்லை. ஆனாலும், மீண்டும் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதனால் எங்கள் மசூதிக்கு என்ன நடக்கிறது என்பது குறித்து பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாபர் மசூதிக்கு நடந்தது காசி-மதுராவிலும் நடக்கிறது. சம்பல் மசூதியையும் அப்படியே செய்ய விரும்புகிறார்கள்,” என்று சம்பல் எம்.பி., ஜியாவுர் ரஹ்மான் பர்க்கின் தந்தை மம்லுகுர் ரஹ்மான் பார்க் கூறினார்.
அவர்களை கொன்றது யாருடைய தோட்டாக்கள்?

பட மூலாதாரம், Zaki Rehman/BBC
சம்பலில் உள்ள மக்கள் அன்று என்ன நடந்தது என்பதை கேமரா முன் பேச பயப்படுகிறார்கள். ஆனால், பலர் இரண்டாவது நாள் ஆய்வின் போது, மசூதியில் தோண்டுகிறார்கள் என்ற ஒரு வதந்தி பரவியது, அதன் பிறகு அங்கிருந்த கூட்டம் கிளர்ந்தெழுந்தது.
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிலர், காவல்துறை தான் முதலில் அடிதடி நடத்தியதாக கூறுகின்றனர். இந்த வன்முறையில் குறைந்தது ஐந்து பேர் இறந்தது தவிர, பலர் காயமடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே வெவ்வேறான கருத்துகள் நிலவுகின்றன. போலீஸ் தரப்பில் இருந்து துப்பாக்கிச்சூடு நடக்கவில்லை என்று கூறுகின்றனர். ஆனால், வன்முறை சம்பவத்தின் வீடியோவை பார்த்த போது ஒருவரை காயங்களுடன் அழைத்துச் சென்றதை பார்க்க முடிந்தது என்றும் காவல்துறை கூறுகிறது.
"`துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இறந்தார்’ என்று மக்கள் கூறிய அந்த நபரின் இறுதிச் சடங்குகளையும் பார்த்தோம். ஆனால், அந்த நபருக்கு பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை, எனவே அவர் பலி எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை" என காவல்துறை கூறுகிறது.
இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட அப்பகுதியைச் சேர்ந்த தௌகீர் அகமது கூறுகையில், "அவரது இறுதிச் சடங்கிலிருந்து தான் நாங்கள் வருகிறோம், அவர் எப்படி இறந்தார் என்பதை குடும்பத்தினர் கூற விரும்பவில்லை. இந்த மரணம் எப்படி நடந்தது என்று சொல்லக்கூட மக்கள் தயாராக இல்லை. உ.பி காவல்துறையின் மீதான அச்சத்தை இது காட்டுகிறது." என்றார்.
சம்பல் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினரா, இல்லையா என்று இங்குள்ள மூத்த அதிகாரிகளிடமும் கேள்வியை முன்வைத்தோம்.
துப்பாக்கி தோட்டாக்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை சம்பல் போலீசார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். சம்பல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் கூறுகையில், “போலீசார் எந்த தோட்டாக்களையும் சுடவில்லை. அங்கு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் உயிரிழப்பை ஏற்படுத்தாத (non-lethal) ஆயுத ரகத்தைச் சேர்ந்தது” என்றார்.
"அவற்றைப் பயன்படுத்த மாவட்ட மாஜிஸ்ட்ரேட் உத்தரவு பிறப்பித்திருந்தார், ஆபத்து விளைவிக்காத ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதுதான் உத்தரவு.." என்றார் கிருஷ்ணகுமார்.
இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்தின் சில வீடியோக்களில், போலீசார் துப்பாக்கியால் சுடுவதைக் காண முடிகிறது.
கைத்துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவதை நிராகரித்த காவல்துறை கண்காணிப்பாளர், “அவை கைத்துப்பாக்கிகள் அல்ல, அவை ரப்பர் பெல்லட் துப்பாக்கிகள் என்பதை குறைந்தது ஐந்தாறு முறை தெளிவுபடுத்தியுள்ளோம், அவை உயிரிழப்பை ஏற்படுத்தும் துப்பாக்கி இல்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறோம்." என்றார்.
போலீஸ் அதிகாரி அனுஜ் செளத்ரி மீது எழும் குற்றச்சாட்டு

சம்பலின் போலீஸ் அதிகாரி அனுஜ் சௌத்ரி இந்த வன்முறை சம்பவத்தில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். பிபிசியிடம் பேசுகையில், மூத்த அதிகாரிகளை ஆலோசிக்காமல், அனுஜ் செளத்ரி மோதலின் போது மக்களின் மீது அதிகாரத்தைப் பயன்படுத்தியதாக சம்பலில் பலர் குற்றம் சாட்டினர். அனுஜ் அவ்வாறு செய்ததால் தான் நிலைமை மோசமடைந்தது என்கின்றனர்.
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அனுஜ் செளத்ரி பிபிசிக்கு பதிலளிக்கவில்லை.
பிபிசியிடம் பேசிய அனுஜ் செளத்ரி, “போலீசார் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் அங்கு செல்லவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அங்கு சென்றார்கள். நீதிமன்ற உத்தரவை பின்பற்றவே நாங்கள் அங்கு சென்றோம். அங்கு வந்தவர்கள், நீதிமன்ற உத்தரவு என்று தெரிந்தும், ஏன் வர வேண்டும்? நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதுதான் முக்கியம்.” என்றார்.
எப்பொழுது கூட்டம் கூடியது, எப்போது நிலைமை மோசமடைந்தது என்று அவரிடம் கேட்டபோது, “காலையிலிருந்தே கூட்டம் இருந்தது, ஆய்வுப் பணி தொடங்குவதற்கு முன்பே கூட்டம் இருந்தது. இதற்கு மேல் நான் உங்களுக்கு எதுவும் சொல்ல விரும்பவில்லை, நான் இப்போது பேசும் மனநிலையில் இல்லை." என்றார்.
இதற்கிடையில், செய்தியாளர்களிடம் பேசிய அனுஜ் செளத்ரி, "படிப்பறிவில்லாத மக்கள் எங்களைக் கொல்ல வேண்டும் என்பதற்காக, நாங்கள் படித்துவிட்டு காவல்துறையில் சேரவில்லை" என்று கூறினார்.
ஜாமா மசூதி நிர்வாகக் குழுவின் தலைவரான வழக்கறிஞர் ஜாபர் அலி, பொது மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறியிருந்தார்.
இந்த கோரிக்கையை அடுத்து, போலீசார் திங்கள்கிழமை அவரை விசாரணைக்கு அழைத்தனர். ஜாபர் அலி உறுதியாக மீண்டும் இதனைக் கூறினார்.
பிபிசியிடம் பேசிய ஜாபர் அலி, "போலீசார் சுடவில்லை என்று கூறுவது முற்றிலும் தவறானது. போலீஸ் தோட்டாக்களால்தான் மரணம் ஏற்பட்டது என்று நான் ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளேன். தங்களுடன் வந்தவர்கள் மீது மக்களே துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் என்றால் அதை நம்ப முடிகிறதா?” என்றார்.
ஐந்து பேர் இறந்த விஷயத்தில் வழக்குப்பதிவு செய்யவுள்ளதாகவும் ஜாபர் அலி கூறுகிறார்.
"உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும், மேலும் நீதிக்காக போராட வழக்கறிஞர்களும் நியமிக்கப்படுவர்" என்றார்.
காயமடைந்தவர்களின் கூற்று - `போலீசார் சுட்டனர்’

காயமடைந்த இரண்டு இளைஞர்கள் சம்பல் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களும் போலீஸ் காவலில் உள்ளனர்.
வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹசனின் சகோதரி பிபிசியிடம் பேசினார்.
தனது சகோதரனை காவல்துறை துப்பாக்கியால் சுட்டதாக எங்களிடம் கூறினார்.
"என் தம்பி எங்கள் கடைசி தம்பியைத் தேடி, வீட்டை விட்டு வெளியேறினான். அவன் மக்கள் மத்தியில் சிக்கி, நெரிசலில் கீழே விழுந்தான். போலீசார் அவனைப் பிடித்து தடியடி நடத்தினர். அவனை நோக்கி சுட்டனர்” என்றார்.
பிபிசியிடம் பேசிய ஹசன், தனது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அவருக்கு சிறந்த சிகிச்சை தேவை என்றும் கூறினார்.
"தோட்டாவை பொதுமக்கள் தான் சுட்டதாக வாக்குமூலம் அளிக்குமாறு எனது சகோதரரை போலீசார் வற்புறுத்துகின்றனர். அப்படி எழுத்துப்பூர்வ வாக்குமூலம் கொடுத்தால், நல்ல மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாக கூறியுள்ளனர். ” என்கிறார் ஹசனின் சகோதரி.
ஹசனுக்குப் பக்கத்தில் அஸீம் என்ற இளைஞர் படுத்திருக்கிறார். அவர் மீதும் சுடப்பட்டதாக அவரது தாய் கூறுகிறார்.
அஸீமின் தாய், தன் மகன் கூலி வேலைக்குச் சென்றதாகவும், இந்த நேரத்தில் அவர் காவல்துறையிடம் சிக்கிக் கொண்டதாகவும் கூறுகிறார்.
சம்பல் மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ராஜேந்திர சிங் பிபிசியிடம், இரண்டு இளைஞர்களில் ஒருவரின் உடலில் தோட்டா கண்டெடுக்கப்பட்டுள்ளது, இன்னொரு இளைஞருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு, முழு விசாரணைக்குப் பின்னரே தோட்டா காயம் உறுதி செய்ய முடியும் என்றார்.
தடியால் அடித்ததால் இரு இளைஞர்களின் உடல்களிலும் காயங்கள் இருப்பதாக ராஜேந்திர சிங் கூறுகிறார்.
ராஜேந்திராவின் கூற்றுப்படி, 20 காவலர்களும் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருந்ததால் தீவிர சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார், மீதமுள்ளவர்கள் அதே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
உயிரிழந்தவர்களின் உடல் அமைதியான முறையில் நல்லடக்கம்

சம்பல் வன்முறையில் உயிரிழந்தவர்கள் அமைதியான முறையில் அடக்கம் செய்யப்பட்டனர்.
அயனுக்கு 17 வயதுதான், ஜாமா மசூதியிலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள மிகச் சிறிய வீட்டில் தன் தாயுடன் வசித்து வந்தார்.
திங்கள்கிழமை இரவு வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட அயனின் உடல் சிறிது நேரத்தில் போலீஸ் படை முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.
இப்போது அவருடைய ஆதரவற்ற, கணவரை இழந்த தாய் தனியாக இருக்கிறார்.
வன்முறையில் கொல்லப்பட்ட எஞ்சிய மக்களும் அதே வழியில் அமைதியான முறையில் அடக்கம் செய்யப்பட்டனர்.
அயனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட ஒருவர் பிபிசியிடம் பேசினார்.
“வன்முறையில் கொல்லப்பட்ட மக்கள் அமைதியாக அடக்கம் செய்யப்பட்டனர். சம்பல் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள் என்பதற்கு இதுவே சான்று. சதியின் ஒரு பகுதியாக இந்த வன்முறை நடந்ததாக காவல்துறை கூறுகிறது. இந்த சதியை அம்பலப்படுத்த, இதற்கு பின்னால் உள்ளவர்கள் முன்வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” என்றார்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த பிறகு, அந்த நபர் மீண்டும் கூறுகிறார், "ஆனால் இதை யார் விசாரிப்பார்கள். முழு உண்மையும் வெளியில் வருமா?''
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












