சோவியத் ஒன்றியம் இந்த விலங்கு மூலம் செய்த பரிசோதனை ஒரு சுற்றுச்சூழல் பேரழிவாக மாறியது எப்படி?

கொய்பு, அஜர்பைஜான், சோவியத் ஒன்றியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெரேஷ்சாகின் 213 கொய்புக்களை அஜர்பைஜானுக்கு அறிமுகப்படுத்தினார்.
    • எழுதியவர், மேத்யூ போன்ஸ்ஃபோர்ட்
    • பதவி, பிபிசி ஃபியூச்சர்

20-ஆம் நூற்றாண்டில், அழிவை சந்தித்த பாலூட்டிகள் பற்றி ஆய்வு செய்த சோவியத் விலங்கியல் ஆராய்ச்சியாளர் காகசஸ் நிலப்பரப்பிற்கு புத்துயிரைக் கொடுத்தார். அவரின் அந்த ஆர்வத்தின் வடுக்களை அஜர்பைஜானில் இன்றும் காண முடிகிறது.

20-ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில், ரஷ்ய விலங்கியல் ஆராய்ச்சியாளர் நிகோலாய் வெரேஷ்சாகின் (Nikolai Vereshchagin) ஒரு மலைப்பயணத்தை மேற்கொண்டார். அஜர்பைஜான் மற்றும் அண்டை நாடுகளான ஆர்மீனியா மற்றும் ஜார்ஜியாவின் மலைப்பகுதியில் அவர் பயணம் செய்தார். அந்த பகுதியில் இருந்து அழிந்து போன விலங்குகள் குறித்து அவர் பதிவு செய்ய விரும்பினார்.

அஜர்பைஜானின் காஸ்பியன் கடலின் கரையோரத்தில் அமைந்திருக்கும், குகை ஓவியங்களில் மாயத்தோற்றம் அளிக்கும் புல்வெளியின் படம் இடம் பெற்றுள்ளது.

அதில் ஆரோச் வகை காளைகள், மான்கள் மற்றும் பெசோர் என்று அழைக்கப்படும் காட்டு ஆடுகளையும் மனிதர்கள் வேட்டையாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

வெரேஷ்சாகின் தன்னுடைய காகசஸ் பயணத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்ட காலநிலை மாற்றங்கள் மற்றும் அதன் இழப்புகளின் அறிகுறிகளை கவனித்து வந்தார். ஆயிரக்கணக்கான புதைபடிவங்கள் மற்றும் அழிந்து போன விலங்குகளின் எலும்புகளையும் அவர் அந்த பயணத்தில் சேகரித்தார்.

1954 ஆம் ஆண்டில், வெரேஷ்சாகின் தனது பயணத்தில் கண்டுபிடித்த புதைபடிவங்கள் மற்றும் இதர தகவல்களை பயன்படுத்தி, 11,000 ஆண்டுகால காகசஸின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி எழுதினார்.

கொய்பு, அஜர்பைஜான், சோவியத் ஒன்றியம்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தி மம்மல்ஸ் ஆஃப் தி காகசஸ் (The Mammals of the Caucasus) என்று அழைக்கப்பட்ட அந்த புத்தகத்தை சோவியத் தலைவர்கள் பாராட்டினார்கள். புத்திசாலித்தனமான அதே நேரத்தில் மிகவும் அசாதாரணமான படைப்பு என்று அவர்கள் புகழாரம் சூட்டினார்கள்.

அந்த புத்தகம் ஓர் அதிகாரப்பூர்வ பதிவு அல்ல. ஆங்காங்கே கிடைத்த துண்டுதுண்டான சான்றுகளின் தொகுப்பாகவும் இல்லை. இது பண்டைய பழங்கால தரவுகளை, அதிகாரம் இழந்த பிரபுகளின் சமீபத்திய வேட்டை கதைகளுடன் இணைக்கும் ஒரு படைப்பாக இருந்தது.

நவீன கால மக்களுக்கு இந்த புத்தகம் ஒரு தனிப்பட்ட காரணத்திற்காக சிறப்புடையதாக தோன்றும். புத்தகத்தின் ஆசிரியர் காகசஸின் சுற்றுச்சூழல் வரலாற்றை மட்டும் அந்த புத்தகத்தில் பதிவு செய்யவில்லை. மாறாக தன்னுடைய சோதனை முயற்சிகள் மூலமாக அந்த பிராந்தியத்தை மாற்றினார்.

வெரேஷ்சாகின் அவர் ஆவணப்படுத்திய சுற்றுச்சூழல் அமைப்புகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சி செய்தார். அந்த நிலப்பரப்பில் அழிந்துபோன உயிரினங்களுக்கு ஈடாக வெவ்வேறு நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட விலங்குகளை அறிமுகம் செய்தார்.

அவரின் அன்றைய முயற்சியின் தாக்கத்தை அஜர்பைஜான் மற்றும் அதன் அண்டை நாடுகள் இன்றும் உணர்ந்து கொண்டிருக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட உயிரினங்கள் தற்போது குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இந்த நாடுகளில் அதிகரித்துள்ளன.

கொய்பு, அஜர்பைஜான், சோவியத் ஒன்றியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொய்புகள் ஓராண்டுக்கு மூன்று முறை குட்டிகளை ஈனுகின்றன

அஜர்பைஜானில் இந்த விலங்கினம் அறிமுகம் செய்யப்பட்டது எப்படி?

1930-ஆம் ஆண்டுக்கு சோவியத் ஒன்றியத்தின் வனப்பகுதிகளில் பல சோதனைகள் நடைபெற்றன. அதன் நிலப்பரப்புகளை மறுவடிவமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்ட ஒரு குழுவின் தலைவராக பணியாற்றினார் வெரேஷ்சாகின்.

உரோமங்களுக்காகவும், வேட்டையாடுதலுக்காகவும் அந்த பகுதிகளில் விலங்குகளை அறிமுகப்படுத்திய வெரேஷ்சாகின் ஒரு சிறந்த வேட்டைக்காரர். ஒரு முறை ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் சொந்தமாக தயாரித்த கற்கால ஈட்டியை காட்டி மக்களை நடுங்க வைத்தார். வேட்டையாடுதல் மட்டுமின்றி அங்கே சுற்றுச்சூழலை 'செறிவூட்டும்' நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

வெவ்வேறு நாடுகளில் இருந்து விலங்குகளை அறிமுகப்படுத்தும் சோதனைகளும் அங்கே நடத்தப்பட்டன. ஆண்டிஸ் மலைப்பகுதியில் இருந்து குட்டைவால் சின்சில்லாக்கள் (short-tailed chinchillas), சீனாவில் இருந்து ரக்கூன் நாய்கள் உள்ளிட்ட 9 வகையான உயிரினங்கள் இந்த சோதனைகளுக்காக அஜர்பைஜானில் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த இனங்களில் பெரும்பாலானவை அஜர்பைஜானின் கரடுமுரடான நிலப்பரப்பில் உயிர் பிழைக்க போராடின. ஆனால் அவற்றில் ஒரே ஒரு உயிரினம் மட்டும் செழுமையாக வளரத் துவங்கியது. தென் அமெரிக்க ரோடண்ட்கள் எனப்படும் கொய்புகள் தான் அவை. பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் அந்த கொய்புகளின் தோல் நீண்ட நாள் உழைக்கக் கூடியது. தொப்பிகள் போன்றவற்றை உருவாக்க அது பயன்படுத்தப்பட்டு வந்தது.

வெரேஷ்சாகினும் அவரின் சகாக்களும் பெருமையாக காகசஸ் மலைப்பகுதியில் அறிமுகப்படுத்திய இந்த 213 கொய்புகள், 21ம் நூற்றாண்டில் மிகவும் மோசமான ஆக்கிரமிப்பு இனங்கள் என்று பட்டியலிடப்பட்ட 100 விலங்குகளில் ஒன்றாக உள்ளன.

வெரேஷ்சாகின் புத்தகம் வெளியாகி 70 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், அஜர்பைஜானில் உள்ள அனைத்து சதுப்பு நிலங்களிலும் கொய்புகளை நீங்கள் காண முடியும் என்கிறார் சூழலியல் ஆய்வாளர் சுல்பு ஃபராஜ்லி.

தென் அமெரிக்காவின் சதுப்பு நிலங்களை பூர்வீகமாக கொண்ட இந்த விலங்குகள் குறித்து அறியவோ, இங்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த விலங்குகளின் திறனைப் பற்றி அறியவோ சிலரே ஆர்வம் காட்டுகின்றனர் என்கிறார் ஃபராஜ்லி.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த உயிரினம் இங்கே எவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டது என்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ஃபராஜ்லி. கொய்புவின் பரவலைக் கண்காணிப்பதையும் நோக்கமாக அது கொண்டுள்ளது.

முதலில் கோய்புவின் தாக்கம் குறித்த ஆராய்ச்சியை ஆரம்பிப்பதன் மூலம், சில அடிப்படைக் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்று நினைக்கிறார். அஜர்பைஜானில் எத்தனை கொய்புகள் உள்ளன? 90 வருடங்கள் அல்லது அதற்கு மேல் சுற்றுச்சூழலில் கொய்புகள் எத்தகைய சேதத்தை ஏற்படுத்தியுள்ளன? என்பவையே அந்த கேள்விகள்.

கொய்பு, அஜர்பைஜான், சோவியத் ஒன்றியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இணையத்தில் கேபிபாரா பிரபலமாக இருப்பது போல் கொய்பு அவ்வளவு ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட விலங்கினம் இல்லை.

கொய்பு - ஒரு பார்வை

இது இரண்டு அடி நீளம் வரை வளரக் கூடியது. இதன் வால் மட்டும் ஒரு அடி நீளம் இருக்கும். முழுமையாக வளர்ந்த கொய்புவின் எடை 7 முதல் 9 கிலோ வரை இருக்கலாம். உலகின் பெரிய ரோடண்ட் வகையான கேபிபாராவைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும். இணையத்தில் கேபிபாரா பிரபலமாக இருப்பது போல் கொய்புக்கு ரசிகர் பட்டாளம் இல்லை. நீண்டு வளரும் ஆரஞ்சு நிற இரட்டை முன்பற்கள் கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.

பூர்வீகமான தென் அமெரிக்காவின் தெற்கு பிராந்தியங்களில் சதுப்பு நிலங்கள், ஏரிகள், ஆற்றங்கரைகளில் குழுக்களாகவோ, இணைகளாகவோ வாழ்கின்றன.

மாலை நேரங்களில் உணவு தேடிச் செல்லும் இந்த விலங்குகளின் விருப்ப உணவு புற்களும், வேர்களும்தான். நீருக்குள் வேட்டை விலங்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்பதால் பெரும்பாலான நேரங்களில் நீருக்குள் இருக்கும் தாவரங்களையே உண்ண விரும்புகின்றன.

சிறப்பாக நீந்தும் தன்மையுடைய இவை, வேட்டையாட வரும் விலங்குகளிடம் இருந்து தப்பித்து நீருக்குள் 5 நிமிடம் வரை தாக்குப்பிடிக்கக் கூடியவை.

19-ஆம் நூற்றாண்டில் கொய்பு உலகின் பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்பானிஷ் காலனி ஆட்சியின் போது, அர்ஜென்டினாவையும் உருகுவேயையும் பிரிக்கும் ரியோ டி லா பிளாட்டா ஆற்றில் பயணித்துக் கொண்டிருந்த ஸ்பானியர்கள், கொய்புவை நீர்நாய் (ஓட்டர்) என்று நினைத்துக்கொண்டனர். அதற்கு நுட்ரியா என்று ஸ்பானீஷில் பெயரிட்டனர்.

கொய்பு என்ற பெயரை சிலி, அர்ஜெண்டினாவில் உள்ள பழங்குடி இனத்தவரான மபுச்சே பயன்படுத்தினர்.

ஸ்பானியர்களின் வருகைக்கு பிறகு கொய்புவின் தோல் ஐரோப்பாவிற்கு தொப்பிகள் தயாரிக்கவும், இதர ஆடை பாகங்களை தயாரிக்கவும் ஏற்றுமதி செய்யப்பட்டது. 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் உயிருடன் வாழும் கொய்புகளை அதன் ரோமங்களுக்காக ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

புதிய இடங்களுக்கும் பண்ணை வளர்ப்புக்கும் ஏற்ற வகையில் கொய்புகள் தங்களை உடனே தகவமைத்துக் கொண்டன. இவை விரைவாக இனப்பெருக்கம் செய்யும் தன்மை கொண்டவை. ஒரு பெண் கொய்பு ஒரு பிரசவத்தின் போது நான்கு முதல் ஐந்து குட்டிகளை ஈனும். அடுத்த சில நாட்களிலேயே அவை மீண்டும் கர்ப்பம் தரிக்கின்றன. ஓராண்டில் மூன்று முறை அவை பிரசவிக்கின்றன.

தென் அமெரிக்காவைப் போன்று உலகின் பிற இடங்களில் கொய்புவை வேட்டையாட விலங்குகள் இருப்பது இல்லை என்பதால் அவை விரைவாக பல்கி பெருகுகின்றன. சில இடங்களில் உள்ளூர் உணவுச் சங்கிலியில் இந்த உயிரினம் இடம் பெற்றுவிட்டது. இத்தாலியில் சிவப்பு நரி, சாம்பல் ஓநாய்கள் இந்த கொய்புவை வேட்டையாடுகின்றன. குரேஷியாவில் வெள்ளை-வால் கழுகுகளால் இவை வேட்டையாடப்படுகின்றன.

மனிதர்களும் இதனை உணவாக உட்கொண்டனர். 1960களில் 'அர்ஜெண்டைன் முயல்' என்று கூறி பிரிட்டன் உணவகங்களில் இது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கொய்பு, அஜர்பைஜான், சோவியத் ஒன்றியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதிய இடங்களுக்கும் பண்ணை வளர்ப்புக்கும் ஏற்ற வகையில் கொய்புகள் தங்களை உடனே தகவமைத்துக் கொண்டன.

ஐரோப்பா மற்றும் வடக்கு அமெரிக்காவுக்கு வெளியே இதன் எண்ணிக்கை எவ்வளவு என்று ஆவணப்படுத்த இயலவில்லை. இதன் எண்ணிக்கை மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் பல நேரங்களில் இதனை இதர ரோடண்ட் வகை விலங்கினங்கள் என்று தவறாக நினைத்துக் கொள்ளும் போக்கும் உள்ளது.

கென்யா, இரான், லெபனான், மற்றும் கிழக்காசிய பகுதிகளில் கொய்பு வாழ்ந்து வருவதாக யூடியூப் வீடியோக்கள், ஃப்ளிக்கர் புகைப்படங்கள் வைத்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

வெரேஷ்சாகின் தன்னுடைய புத்தகத்தை எழுதி முடித்த நேரத்தில் தன்னுடைய பணியின் ஒரு பகுதி மட்டுமே நிறைவடைந்தது என்று நம்பினார். விரும்பத்தகாத ஓநாய்கள் மற்றும் குள்ளநரிகள் போன்ற விலங்கினங்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது.

கொய்புவை பரவலாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும், காஸ்பியன் கடலை ஒட்டியுள்ள உள்ள லென்கோரன் லோலேண்ட்ஸ், அண்டை பகுதியான கிஜிலாகாஜ் ஸ்டேட் ரிசர்வ் போன்ற புதிய பகுதிகளில் இதனை அறிமுகம் செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார். சோவியத் யூனியனில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் போது, மனிதர்களுக்கு ஆதரவான சுற்றுச்சூழலை உருவாக்கும் வழியாக இவர் அதை கண்டார்.

1966-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், ஓநாய் போன்ற விலங்குகளால் கொய்பு கொல்லப்பட்டதை கண்டறிந்தனர். 20-ஆம் நூற்றாண்டு முழுவதும் ஓநாய் போன்ற விலங்குகளை வேட்டையாட ஆதரவு அளித்தனர் சோவியத் அதிகாரிகள்.

"ஒரு ஓநாய் கொல்லப்பட்டால் நூறு ரூபிள் தரப்பட்டது," என்று அஸ்கெரோவ் கூறுகிறார். பயிர்களை அழிக்கும் விலங்குகளை கொல்வதற்கு வழங்கப்பட்ட வெகுமதியாகவே அது இருந்தது என்கிறார் அவர். "அந்த நேரத்தில் அவருடைய தந்தையின் மாத சம்பளம் 120-140 ரூபிள்" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

வெரேஷ்சாகின் 213 கொய்புக்களை அஜர்பைஜானுக்கு அறிமுகப்படுத்தினார். ஆனால் இப்போது ஆயிரக்கணக்கில் இவை இருக்கலாம் என்கிறார் ஃபராஜ்லி. இது ஆர்மீனியா மற்றும் ஜார்ஜியாவிலும் அதிகமாக பரவியுள்ளது. "இந்த விலங்குகளின் சுவடுகள் இல்லாத சதுப்பு நிலத்திற்கு நான் சென்றதாக எனக்கு நினைவே இல்லை," என்று கூறுகிறார் அவர்.

அஜர்பைஜானில் உள்ள கொய்புகள் பற்றிய கணக்கெடுப்பு, சுற்றுச்சூழலில் அதன் தாக்கம் மற்றும் அதற்கு எவ்வாறு தீர்வு அளிப்பது என்பது குறித்த முடிவுகளை எடுக்க சுற்றுச்சூழல் ஆய்வாளர்களுக்கு உதவும். ஆனால் தற்போது விரிவான மதிப்பீடுகள் ஏதும் இல்லை.

"ஐந்தாண்டுகளில் அவற்றின் எண்ணிக்கை 400-500 ஆக உயர்ந்ததாகவும், வெறும் 200 விலங்குகளை மட்டுமே வெளியில் அறிமுகம் செய்ததாகவும் வெரேஷ்சாகின் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாகிவிட்டன" என்கிறார் ஃபராஜ்லி. இதன் இனப்பெருக்க விகிதம் என்பது தலை சுற்ற வைக்கிறது என்கிறார் அவர்.

கொய்பு, அஜர்பைஜான், சோவியத் ஒன்றியம்

பட மூலாதாரம், Getty Images

காகசஸ் பிராந்தியத்தின் முக்கியத்துவம்

உலகின் பல்லுயிர் பெருக்கப் பகுதிகளில் முக்கியமாக கருதப்படும் காகசஸ் பிராந்தியத்தில் கொய்புவின் தாக்கம் உணரப்படுகிறது.

ஐரோப்பாவின் தாவரங்களும் விலங்குகளும் மத்திய ஆசியா மற்றும் அனடோலியன் தீபகற்பத்தை சந்திக்கும் புவி உயிர் வழிப்பாதையில் இந்த பிராந்தியம் அமைந்துள்ளது. உலகின் 25 உயிரியல் ரீதியாக வளமான மற்றும் மிகவும் ஆபத்தான நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்று இது என்று கன்சர்வேஷன் இன்டர்நேஷனலின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

காஸ்பியன் கடற்கரையில் உள்ள கிஜிலாகாஜ் ஸ்டேட் ரிசர்வ் பகுதியில் கொய்புவின் தாக்கத்தை ஃபராஜ்லி அறிந்திருக்கிறார்.

பறவைகளின் பாதுகாப்புக்காகவும், வலசைக்காகவும் முக்கியமான பகுதியாக, ராம்சர் சதுப்பு நிலப்பகுதியாக அறியப்பட்டுள்ளது இந்த ரிசர்வ். ஆர்டிக் மற்றும் இரான் பகுதிகளுக்கு இடையே வலசை போகும் சைபீரிய நாரைகள் வந்து செல்லும் பகுதியாக இது இருக்கிறது.

பறவை ஆர்வலாகவும் இருக்கும் ஃபராஜ்லி, கொய்புவுக்கும் அஜர்பைஜானின் பறவையினங்களுக்கும் இடையேயான உறவு எப்படி என்பதை அறிய ஆவலாக இருப்பதாக தெரிவித்தார்.

சதுப்பு நிலங்களில் பறவைகளை பார்க்க மேற்கொள்ளும் நடைபயணங்களின் போது எப்போதும் சதுப்புநிலப் பறவைகளைப் பார்க்கும் அதே வாழ்விடங்களில் கொய்புகளை பார்க்கிறோம் என்று அவர் கூறுகிறார்.

கொய்பு, அஜர்பைஜான், சோவியத் ஒன்றியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐரோப்பாவின் தாவரங்களும் விலங்குகளும் மத்திய ஆசியா மற்றும் அனடோலியன் தீபகற்பத்தை சந்திக்கும் புவி உயிர் வழிப்பாதையில் இந்த பிராந்தியம் அமைந்துள்ளது

சவால்கள்

சில நாடுகளில் மட்டுமே இந்த உயிரினங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து அதற்கு ஒரு சிறப்பான உதாரணம் என்று தெரிவிக்கிறார் பெர்டோலினோ.

1920-ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட கொய்புக்களின் எண்ணிக்கை 1960களில் 2 லட்சமாக அதிகரித்தது. வேட்டையாடுதல் மற்றும் விலங்குகளை பிடிக்கும் முயற்சிகளுக்கு பிறகு வேளாண்துறையின் கொய்பு ஆராய்ச்சி ஆய்வக அதிகாரிகள் பிரிட்டனின் கடைசி கொய்புவை 1989-ஆம் ஆண்டில் பிடித்தனர்.

ஆனால் போதுமான வசதிகள் இல்லாத, கொய்புவின் அதிக வளர்ச்சி விதத்தைக் கொண்ட நாடுகளில் இதுபோன்ற முழுமையான அழிக்கும் முடிவு சாத்தியமாகவில்லை.

முழுமையாக இந்த உயிரினத்தை அழிப்பதற்கு பதிலாக அதன் எண்ணிக்கையை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கைகளில் சில நாடுகளும், அமெரிக்க மாகாணங்களும் ஈடுபட்டுள்ளன. லட்சக்கணக்கில் கொய்புகள் சுதந்திரமாக செயல்படும் லூசியானாவில் ஒவ்வொரு கொய்புவுக்கும் ஆறு டாலர்கள் வரை சன்மானத்தை வழங்குகிறது அரசு.

ஆனால் பிரிட்டனைப் பொருத்தவரை எண்ணிக்கை குறைந்த பிறகும் முழுமையாக அதனை அழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. "இந்த ஆண்டு இதனை நீங்கள் அழிக்கலாம். ஆனால் அடுத்த ஆண்டு நடைபெறும் இனப்பெருக்கம் அதனை ஈடுகட்டும்," என்கிறார் பெர்டோலினோ.

கொய்பு, அஜர்பைஜான், சோவியத் ஒன்றியம்
படக்குறிப்பு, பிரிட்டனைப் பொறுத்தவரை அதன் எண்ணிக்கை குறைந்த பிறகும் முழுமையாக அதனை அழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன

மக்கள் கொய்புவின் வரலாற்றை தெரிந்து கொள்வது தான் முதல்படி என்கிறார் அவர். முதன்முறையாக 90 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட பின் தற்போது கிஜிலாகாஜ் ஸ்டேட் ரிசர்வ் பகுதியில் இந்த விலங்கினம் வாழ்ந்து வருகிறது. உள்ளூர் மக்கள், மீனவர்கள் இந்த உயிரினங்களை தினம் தினம் பார்த்து வருகின்றனர். ஆனால் குறைவான ஆர்வமே காட்டுகின்றனர். "இது ஆபத்தானது அல்ல. எனவே அவர்களின் வாழ்க்கையை பாதிக்காது. அதனால் தான் இந்த விலங்கினம் பற்றி எதையும் அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை," என்கிறார் ஃபராஜ்லி.

மாற்றங்களை அவர் விரும்புகிறார். 90 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட விலங்குகளால் சைபீரிய நாரைகளும் ஆபத்தில் இருக்கின்றன. கடந்த ஆண்டு ஓமிட் என்று அழைக்கப்பட்ட பறவையும் அஜர்பைஜானுக்கு வரவில்லை.

வெரேஷ்சாகின் மற்றும் அவரது சகாக்கள் காகசஸின் சுற்றுச்சூழலுக்கு நன்மை அளிக்கிறோம் என்ற வகையில் இந்த விலங்குகளை அறிமுகம் செய்தாலும், கொய்பு போன்ற விலங்கினங்கள் சுற்றுச்சூழலுக்கு எதிராக இருக்கின்றன என்பது இப்போது தான் புரிகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)