இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகளில் இந்து அல்லாதவர்கள் பணியாற்றக் கூடாதா? சட்டம் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
இந்து மத நிறுவனங்களின் நிர்வாக, கல்விப்புல வேலைவாய்ப்புகளில் பிறமதத்தவர் இடம்பெறுவது அவ்வப்போது சர்ச்சையாகிறது. ஆந்திராவில் திருப்பதி தேவஸ்தானம் இந்து அல்லாதோரை பணியில் சேர்ப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளது. தமிழ்நாட்டில், இந்து கோவிலுக்குச் சொந்தமான கல்லூரி நியமனத்தில் சர்ச்சை எழுந்து, இந்து அல்லாதோர் பணியில் சேர முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொதுவான நியமனங்களுக்கு மதம் அடிப்படையாக இருப்பது சரிதானா?

சென்னை உயர்நீதிமன்ற வழக்கு என்ன?
சென்னை கொளத்தூரில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணியாற்ற விண்ணப்பித்த அ சுஹைல் என்பவரின் விண்ணப்பம் நிராகரிப்பட்டது. அவர் இந்து மதத்தைச் சார்ந்தவர் அல்ல என்பதால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2021-ல் பொது நல வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அதில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 16(1) மற்றும் 16(2)-ன் படி, பாகுபாடு இல்லாமல் சமமான வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "இந்து சமய அறநிலையத்துறை நடத்தும் கல்வி நிலையங்களில் ஆசிரியர் மற்றும் பிற பணியிடங்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் பணியமர்த்தப்பட முடியாது என்று தீர்ப்பளித்தது. சமமான வாய்ப்புகளை வழங்க இது அரசு நிர்வாகம் அல்ல" என்று தெரிவித்துள்ளது.
“அரசின் நிதியுதவி எதுவும் பெறாத சுயநிதி கல்லூரிகள், சமமான வாய்ப்பை வழங்க வேண்டிய ‘அரசு’ என்ற வரையறைக்குள் வராது," என்று நீதிமன்றம் கூறியிருந்தது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பாகுபாடுகள் இல்லாமல் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 16 (1) மற்றும் 16(2) இந்த விவகாரத்துக்கு பொருந்தாது என்றும் தெரிவித்திருந்தார். மேலும், மத ரீதியான நியமனங்களை அனுமதிக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 16(5) பொருந்தும் என்றும் தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
"மேல்முறையீடு செய்வோம்"
மனுதாரர் சுஹைலின் வழக்கறிஞர்களில் ஒருவரான வி.இளங்கோவன், இந்த தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்கிறார்.
“கல்வி நிறுவனத்தில் சமமான வாய்ப்புகள் வழங்கப்படாதது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளோம். இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறையை சேர்த்திருந்தோம். ஆனால், வழக்கு விசாரணையில், அரசோ, இந்து சமய அறநிலையத்துறையோ பதில் அளிக்கவில்லை. கோவில் நிர்வாகத்தினர் கொடுத்த பதிலை வைத்து தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது சரியான நடைமுறையல்ல” என்றார்.
கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். இந்த கல்லூரிக்கான நியமனங்கள் குறித்து வெளியிடப்பட்ட விளம்பரத்தில் ‘இந்துக்கள் மட்டுமே’ விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது அச்சமயத்தில் சர்ச்சையானது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
தொடரும் சர்ச்சைகள்
1959-ஆம் ஆண்டில் இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டம் 22/1959 இயற்றப்பட்டது. 01.01.1960 முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வெங்கட்ரமண ராவ் நாயுடு அளித்த பரிந்துரைகளின் படி, இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959 இயற்றப்பட்டது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கோவில் நிர்வாகத்தில் இருப்பதை தவிர்ப்பது, கோவில் நிதியை பராமரிப்பது உள்ளிட்ட நோக்கங்களுக்காக இந்தச் சட்டம் இயற்றப்பட்டது.
கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, உள்ளிட்ட மாநிலங்களில் இந்து மத நிலையங்களை பராமரிக்க தனியாக துறை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு வகையில் மத நிறுவனங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்து சமய அறநிலையத் துறை நடத்தும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாராயணம் செய்தது சமீபத்தில் சர்ச்சையானது. இந்து சமய அறநிலையத்துறை கல்வி நிறுவனங்களை தொடங்கலாமா, முருகன் மாநாடு நடத்தலாமா, இந்துக்கள் அல்லாதவர்கள் அதன் கல்வி நிலையங்களில் அனுமதிக்கப்படலாமா என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அரசியல் சாசன சட்டத்துக்கு உட்பட்டு அதன் நடவடிக்கைகள் இருக்கின்றனவா என்று அவ்வபோது விவாதங்கள் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன.
அண்டை மாநிலங்களிலும் சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images
கர்நாடகா இந்து சமய அறநிலையத்துறை சட்டத்திருத்தம் 2024, கோவில்களுக்கான நிர்வாகக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும், ஒன்பது பேர் கொண்ட அந்த குழுவில் இரண்டு பெண்கள், ஒரு தலித், ஒரு பழங்குடியினர், சம்பந்தப்பட்ட பகுதியில் வசிப்பவர் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இதன் மூலம், இந்துக்கள் அல்லாதவர்கள் கோவில் நிர்வாகத்தில் ஈடுபடுவார்கள் என்று இந்த சட்டத்திருத்தை எதிர்த்தவர்கள் கூறினர்.
திருப்பதி தேவஸ்தானம் ஆந்திர அரசின் கீழ் இயங்கும் கோயில் நிர்வாகக் குழுவாகும். அந்தக் குழு சமீபத்தில், கோவில் நிர்வாகத்தில் இந்து அல்லாதோரை பணியில் சேர்ப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளது. ஏற்கெனவே பணி செய்து வரும் இந்துக்கள் அல்லாதவர்கள், கோயில் பணிகளிலிருந்து அகற்றும் பொருட்டு, அவர்களை வேறு துறைகளுக்கு மாற்றவோ அல்லது விருப்ப ஓய்வு வழங்கவோ அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இனிமேல், இந்துக்கள் அல்லாதவர்கள் நிர்வாகப் பணிகளில் இருக்க முடியாது என்ற முடிவையும் எடுத்திருந்தது.
தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திராவில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நிதி நிர்வாக முறை நிலவுகிறது. கோவில்களில் தங்கள் வருமானத்துக்கு ஏற்ப குறிப்பிட்ட தொகையை பொது நிதிக்கு வழங்க வேண்டும். இந்த நிதியைக் கொண்டு இந்து சமய அறநிலையத்துறை, கோவில்களை புனரமைப்பது, வருமானம் ஈட்டாத கோவில்களை பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்.
கேரளாவில் கோவில்களை நிர்வகிக்க ஐந்து முக்கிய தேவசம் வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் நிதி நிர்வாகம் தனித்தனியே கையாளப்படுகின்றன.
இந்துக்களை நியமிப்பதுதான் சட்டமா?
பெயர் குறிப்பிட விரும்பாத, இந்து சமய அறநிலையத்துறையின் முன்னாள் ஆணையர் பிபிசி தமிழிடம் பேசும் போது, “இந்து சமய அறநிலையத்துறையில் கீழ் மட்டத்திலிருந்து ஆணையர் வரை அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும் என்பதே விதி. இந்து அறநிலையத்துறை சட்டத்தின் பிரிவு 10 இதனை வலியுறுத்துகிறது" என்றார்.
மேலும், கோவில் நிர்வாகத்தில் இந்துக்கள் அல்லாதோர் யாரும் இருக்க முடியாது என அவர் தெரிவித்தார். ஆனாலும், கல்வி நிலையங்களுக்கு எல்லா நேரங்களிலும் இதே விதி பொருந்தும் என்று கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
"கன்னியாகுமரி, பழனி, குற்றாலம், பூம்புகார் உள்ளிட்ட இடங்களில் அரசு நிதியுதவி பெற்று இந்து சமய அறநிலையத்துறையால் கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. அந்தக் கல்லூரிகளில் இந்துக்கள் அல்லாதவர்களின் நியமனம் கூடாது என்று கூற முடியாது" எனவும் கூறுகிறார்.
கபாலீஸ்வரர் கல்லூரி உட்பட புதிதாக தொடங்கப்பட்ட நான்கு கல்லூரிகள் முழுமையாக கோவில் நிதிகளிலிருந்து தொடங்கப்பட்டவை. எனினும், அது கல்வி நிலையம் என்பதால் இந்துக்கள் அல்லாதவர்கள் பணியமர்த்தப்படலாமா என்ற வாதத்தை சட்ட ரீதியாக இன்னும் ஆராய வேண்டியுள்ளது என்று முன்னாள் ஆணையர் வலியுறுத்துகிறார்.
எனினும், இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க இத்துறைக்கு அனுமதி கிடையாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
"இந்து மதத்தைப் பரப்பும் நோக்கில், ஓதுவார் பயிற்சி, நாதஸ்வர பயிற்சி ஆகியவை கொண்ட பண்பாட்டுக் கல்லூரிகளே தொடங்க முடியும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டதை கேள்வி எழுப்பும் வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன.” என்று அவர் விவரித்தார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 16(1) மற்றும் 16(2), இந்தியாவில் மதம், பாலினம், மொழி, சாதி, பிறந்த இடம் உள்ளிட்ட காரணங்களால் வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டக்கூடாது என்று கூறுகிறது. இதை மட்டுமே காரணமாக கூறி, ஒருவரை நிராகரிப்பதை இந்த பிரிவு தடுக்கிறது.
அதே நேரம், சட்டப்பிரிவு 16(5) ஒரு மத அல்லது மதப்பிரிவு நிறுவனத்தின் விவகாரங்களுடன், அதன் நிர்வாகத்துடன் தொடர்புடைய ஒரு பொறுப்பாளர், சம்பந்தப்பட்ட மதத்தைப் பின்பற்றுபவராக அல்லது அந்த மதப்பிரிவை சேர்ந்தவராக இருப்பதை தடுக்க முடியாது என்று கூறுகிறது.
இதன் படி, மதம் சார்ந்த நிறுவனங்களில், மத விவகாரங்களை நிர்வகிக்கும் பொறுப்புகளில் இருப்பவர்கள் வேறு மதத்தவராக இருக்கக் கூடாது என்ற விதி செல்லுபடியாகும்.
பாகுபாடு தவறானது: முன்னாள் நீதிபதி சந்துரு

பட மூலாதாரம், K Chandru
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தவறான முடிவு என்கிறார், ஓய்வுபெற்ற நீதிபதி கே சந்துரு. இது போன்றதொரு வழக்கில், தான் வழங்கிய தீர்ப்பு ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறார் அவர்.
கடந்த 2009-ம் ஆண்டு தமிழ் வளர்ச்சி மற்றும் கலாசாரத்துறையின் கீழ் உள்ள கல்வெட்டு ஆய்வாளர், தொல்பொருள் ஆய்வாளர், தொல்பொருள் பொறுப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்சேர்ப்பு விளம்பரம் வெளியிடப்பட்டது.
அதில், விண்ணப்பிப்பவர் இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பித்த நல்லாமுகம்மது என்பவரின் விண்ணப்பத்தை தமிழ்நாடு தேர்வாணையம் தள்ளுபடி செய்து விட்டது.
“இப்பதவிக்கு முற்றிலும் தகுதி பெற்றவராக இருந்தார் நல்லாமுகம்மது. அரசியலமைப்பு சட்டம் 16(2) பிரிவின்படி பொதுப்பணிகளுக்கு வாய்ப்பளிப்பதற்கு மதத்தின் அடிப்படையில் வேறுபாடுகள் காட்டமுடியாது என்று கூறினேன்.
சமயம் சார்ந்த நிறுவனங்களை மேற்பாற்வையிடும் பதவிகளுக்கு குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே பதவி வகிக்கலாம் என்ற நிபந்தனை உருவாக்குவதற்கு அரசியலமைப்பு சட்டப்பிரிவு 16(5) வழி வகுக்கிறது என்றும், நல்லாமுகம்மது மனு செய்த பதவிகள் இந்துக்களுக்கு மட்டுமே என்று பாகுபாடு செய்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமென்றும் தீர்ப்பளித்தேன்” என்கிறார்.
அவரது தீர்ப்பை மற்றொரு நீதிபதி மாற்றியமைத்து உத்தரவிட்டிருந்தாலும், 2019ம் ஆண்டு, நீதிபதி சந்துருவின் உத்தரவின் அடிப்படையில் அரசு தனது விதிகளை மாற்றியமைத்தது. சமய வேறுபாடுகள் கொண்ட நிபந்தனைகளை ரத்து செய்து அத்துறையின் கீழ் உள்ள பதவிகளில் எச்சமயத்தினரும் விண்ணப்பிக்கலாம் என்ற விதி வெளியிடப்பட்டது.
பனாரஸ் வழக்கும் தீர்ப்பும்
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் பேசிய போது, “இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் பிரிவு 10, இச்சட்டத்தை மேற்கொள்வதற்காக நியமிக்கப்படும் இத்துறையின் ஆணையர், அதிகாரிகள், பணியாளர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இதை குறிப்பிட்டு தான் சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.
மேலும், இத்துறையினால் நியமிக்கப்படுபவர்கள், தாங்கள் பிறப்பால் இந்துக்கள் என்றும், இந்து மதத்தைப் பின்பற்றுகிறோம் என்றும் உறுதியளிக்க வேண்டும். அவர்கள் இந்து மதத்தைக் கைவிட்டால், அப்போது முதல் இந்தப் பதவிகளிலும் இருக்க முடியாது” என்கிறார்.
ஆனால், நீதிபதி சந்துரு, “அறநிலையத்துறையின் ஆணையர் இந்துவாக இருப்பதை யாரும் கேள்விக்குள்ளாக்கவில்லை. சட்டத்தின் படி, மத சம்பந்தப்பட்ட விவகாரங்களை நிர்வகிக்கும் இடத்தில் இருப்பவர் இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஆனால், கல்வி நிறுவனம் என்பது மத நிறுவனம் அல்ல, அங்கு பல்வேறு தரப்பினரும் வருவார்கள், எனவே, பிரிவு 16(5) பொருந்தாது “என்று விளக்குகிறார்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியர் ஒருவர் சமஸ்கிருத துறையில் நியமிக்கப்பட்டதற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. அவரது நியமனம் சட்டப்படி செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்ததை நீதிபதி சந்துரு சுட்டிக்காட்டுகிறார்.
கல்லூரி என்ற கல்வி நிறுவனம் மதம் சார்ந்த நடவடிக்கைகள் நடைபெறும் இடம் இல்லையே, இங்கு இந்து அல்லாதவர் ஏன் அனுமதிக்கப்படக் கூடாது என்று கேட்டதற்கு, இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரி, “கோவிலால் நடத்தப்படும் கல்லூரியில் மதம் சாராத கல்வியை வழங்குவதில் தடை ஏதும் இல்லை, ஆனால், அங்கு பணியாற்றுபவர்களின் நியமனங்கள் குறித்து சட்டம் இந்துக்களுக்கு சாதகமாகவே இருக்கிறது” என்றார்.
ஆனால், இந்த கல்லூரிகள் தனியார் கல்லூரிகள் நிறுவன சட்டத்தின் கீழ் வரும் என்று குறிப்பிடுகிறார் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு. “எந்தவொரு கல்லூரியாக இருந்தாலும், அதை நிர்வகிப்பது அங்குள்ள கல்லூரி கமிட்டி. ஒரு ஆசிரியர், ஒரு ஆசிரியர் அல்லாத பணியாளர், பல்கலைக்கழக பிரநிதி, பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிதி உள்ளிட்டோரை கொண்ட அந்த கமிட்டியில் இந்துக்கள் அல்லாதவர்களும் இருப்பார்கள். கல்லூரியை நிர்வகிப்பது இந்து சமய அறநிலையத்துறை அல்ல. இந்த கல்லூரிகள் தனியார் கல்லூரிகள் சட்டத்தின் கீழ் வரும்” என்கிறார்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












