புது டெல்லி: இந்திய தலைநகராக மாற்றப்பட்டது எப்படி? அதன் வரலாறு என்ன?

டெல்லி நாட்டின் தலைகராக இருக்க வேண்டுமா? என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஷாரதா மியாபுரம்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

“டெல்லியில் காற்று மாசுபாடு கடுமையாக உயர்ந்துள்ளது. இப்படிப்பட்ட நகரம் தொடர்ந்து நாட்டின் தலைநகராக இருக்க வேண்டுமா?” என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கூறியுள்ளார்.

“நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை, மக்கள் வாழ்வதற்கு டெல்லி முற்றிலும் தகுதியற்ற நகரமாக இருக்கும். ஆண்டின் மீதமுள்ள மாதங்களில் சற்று சமாளித்து வாழ முடியும். இதுபோன்ற நகரம் நாட்டின் தலைகராக இருக்க வேண்டுமா?” என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியல் குறித்த ஒரு புகைப்படத்தைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சசி தரூர், “டெல்லி உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் என்று அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. இங்கு காற்று மாசின் அளவு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது," எனக் குறிப்பிட்டார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

உலகின் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள டாக்காவைவிட டெல்லி ஐந்து மடங்கு ஆபத்தான மாசுபாடுகளைக் கொண்டிருக்கிறது.

பல ஆண்டுகளாக டெல்லி நகரம் இதுபோன்ற கடும் சூழ்நிலையைச் சந்தித்து வருகிறது, ஆனால் மத்திய அரசு, இது குறித்து எந்தக் கவனமும் செலுத்தவில்லை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகள்படி, கடந்த செவ்வாய்க் கிழமை காலை 8 மணியளவில் டெல்லியில் காற்று தரக் குறியீட்டு அளவு 488 ஆக, மிக மிகத் தீவிரமான நிலையில் இருந்தது.

புதன்கிழமையும், காற்று தரத்தின் அளவு 460 ஆக இருந்தது, இது கடுமையான மாசுபாடு என்று குறிப்பிடப்பட்டது.

அதே நேரத்தில், நாட்டின் பிற முக்கிய நகரங்களான மும்பை (123), சென்னை (126), ஹைதராபாத் (114), கொல்கத்தா (178) ஆகியவற்றின் காற்றுத் தரம் மிதமான அளவில் பதிவாகியுள்ளன.

காற்றின் தரம் ஆபத்தான அளவிற்கு சரிந்துள்ள சூழ்நிலையிலும் டெல்லி, தேசிய தலைநகராக இருக்க வேண்டுமா?

பட மூலாதாரம், Getty Images

இங்கு காற்றின் தரம் ஆபத்தான அளவிற்குச் சரிந்துள்ள சூழ்நிலையிலும் "டெல்லி தேசியத் தலைநகராக இருக்க வேண்டுமா?" என்று சசி தரூருக்கு முன்பே, சில தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்கள் நாட்டிலுள்ள மற்ற நகரங்களை இரண்டாவது தலைநகராக மாற்ற விரும்பினர்.

கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கர்நாடகாவின் அப்போதைய கனரக மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே, பெங்களூருவை நாட்டின் இரண்டாவது தலைநகராக மாற்றுமாறு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

ஹைதராபாத்தை நாட்டின் இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டும் என்று பாஜக தலைவரும் முன்னாள் மகாராஷ்டிரா ஆளுநருமான வித்யாசாகர் ராவும் கோரியுள்ளார்.

தமிழ்நாடு, கேரளா மற்றும் சில மாநிலங்களைச் சேர்ந்த சில தலைவர்களும் இந்தியாவின் தலைநகரை மாற்ற விரும்பினர். நாட்டிற்கு இரண்டாவது தலைநகரம் தேவை என்று கூறப்பட்ட சந்தர்ப்பங்கள் உள்ளன.

இந்நிலையில், டெல்லி எப்போதிருந்து நாட்டின் தலைநகராக உள்ளது என்ற கேள்வி எழுகிறது. அதோடு, என்ன காரணத்திற்காக இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது என்ற கேள்வியும் எழுகிறது.

எப்போதிருந்து, டெல்லி நாட்டின் தலைநகராக இருந்து வருகிறது?

டெல்லி எப்போதிலிருந்து நாட்டின் தலைநகராக உள்ளது?

பட மூலாதாரம், indianculture.gov.in

டெல்லி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம். இதற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு ராஜ்ஜியங்கள் மற்றும் பேரரசுகளின் தலைநகராகத் தொடர்ந்து இருந்து வந்தது.

நிலவியல் ரீதியாக முக்கிய நிலையில் இருப்பது, வளமான கலாசார பாரம்பரியம் ஆகியவை இந்த நகரத்தை அதிகார மையமாக மாற்றியுள்ளன.

இந்தியாவின் தலைநகராக டெல்லியின் வரலாற்றுப் பயணத்தை இங்கு பார்க்கலாம்.

மகாபாரதத்தில் டெல்லி?

டெல்லியின் தோற்றம் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டைய நகரமான இந்திரபிரஸ்தத்தில் (கிமு 1000) காணப்படுகிறது.

இந்திரப்பிரஸ்தா நகரம் யமுனை நதிக்கரையில் பாண்டவர்களால் கட்டப்பட்டது. இது பாண்டவர்களின் தலைநகரமாக இருந்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

அன்றைய இந்திரப்பிரஸ்தா இன்றைய டெல்லி என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

1911 ஆம் ஆண்டில், ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் டெல்லி தர்பாரில் இருந்து டெல்லியை புதிய தலைநகராக அரிவித்தார்

பட மூலாதாரம், indianculture.gov.in

படக்குறிப்பு, கடந்த 1911ஆம் ஆண்டில், ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் டெல்லி தர்பாரில் இருந்து டெல்லியை புதிய தலைநகராக அறிவித்தார்

வரலாற்றில் பல வம்சங்களும் பேரரசுகளும் உருவாக்கப்பட்டுள்ளன, வீழ்ந்துள்ளன. அவை ஒவ்வொன்றும் டெல்லியில் தனது முத்திரையைப் பதித்துள்ளன.

டெல்லியை ஆட்சி செய்த முதல் தலைமுறை வம்சாவளியினர் தோமர், சௌகான் மற்றும் டெல்லி சுல்தான்கள் ஆவர்.

இந்தியக் கலாசார அமைச்சக வலைதளத்தின்படி, தோமர் வம்சம் கிபி 736இல் டெல்லியை ஆட்சி செய்தது. இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின்படி, 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், அஜ்மீரின் சௌகான்கள் தோமர் வம்சத்தைத் தோற்கடித்து டெல்லியைக் கைப்பற்றினர்.

பின்னர், டெல்லியின் சுல்தான்கள் இப்பகுதியைத் தங்கள் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். டெல்லி சுல்தான்கள் மற்றும் முகலாயப் பேரரசின் காலத்தில் டெல்லி ஒரு வலுவான அதிகார மையமாக மாறியது.

குதுப்-உத்-தின் ஐபக், அலாவுதீன் கில்ஜி மற்றும் ஷாஜகான் போன்ற ஆட்சியாளர்கள் அற்புதமான கட்டமைப்புகளை உருவாக்கி டெல்லியை ஒரு சிறந்த நகரமாக மாற்றினர்.

முகலாயப் பேரரசு 1526இல் பாபரால் நிறுவப்பட்டது. முகலாயர்கள் டெல்லியின் புகழை மேலும் அதிகரித்தனர். குறிப்பாக ஷாஜகானின் ஆட்சிக் காலத்தில், டெல்லி அதிக வண்ணமயமாக இருந்தது.

ஷாஜகான் டெல்லியில் செங்கோட்டை மற்றும் ஜமா மசூதியையும், ஆக்ராவில் தாஜ்மஹாலையும் கட்டினார்.

பிரிட்டிஷ் அரசின் பிறப்பும் புதுடெல்லியும்

புது டெல்லி: இந்திய தலைநகராக மாற்றப்பட்டது எப்படி? அதன் வரலாறு என்ன?

பட மூலாதாரம், Reuters

கல்கத்தா (இப்போது கொல்கத்தா) பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக இருந்தது.

கடந்த 1909ஆம் ஆண்டின் இந்திய கவுன்சில் சட்டம் மற்றும் வங்கப் பிரிவினையின் நெருக்கடி ஆகிய இரண்டு முக்கியக் காரணங்களுக்காக பிரிட்டிஷ் அரசு தலைநகரை கல்கத்தாவிற்கு வெளியே மாற்ற விரும்பியது. தலைநகருக்காகப் பல பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டன.

இருப்பினும், டெல்லியின் வரலாற்று முக்கியத்துவம், அதன் மூலோபாய இருப்பிடம், போக்குவரத்துக் காரணிகள் மற்றும் அரசியல், கலாசார ரீதியாக டெல்லியின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை உணர்ந்து, பிரிட்டிஷ் அரசாங்கம் தலைநகரைக் கல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்ற முடிவு செய்தது.

அப்போதைய கோடைக்கால தலைநகரான சிம்லாவுக்கு அருகில் டெல்லி இருந்ததால் அவர்களின் முடிவு மேலும் வலுப்பெற்றது. 1911ஆம் ஆண்டில், டெல்லி தர்பாரில், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரும் ராணி மேரியும் தலைநகரை மாற்றுவதற்கான முடிவை அறிவித்தனர். இது புதுடெல்லி நகரத்தின் கட்டுமானத்திற்கு அடித்தளம் அமைத்தது.

பிரிட்டனின் முன்னணி கட்டடக் கலைஞர்களான எட்வின் லுடியன்ஸ், ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோர் புதிய தலைநகரத்தை வடிவமைத்தனர்.

நகர அமைப்பு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அரசு கட்டடங்கள், செயலகங்கள், தலைமைத் தளபதி வசிப்பிடம், சபை உறுப்பினர்களின் இல்லம், எழுத்தர் வீடு, விசாலமான வழிகள், சாலைகள், நீர் வழங்கல், வடிகால், பூங்காக்கள் மற்றும் முதல் பகுதியில் கட்டப்பட்ட பொதுத் தோட்டங்கள் (புதிய ஏகாதிபத்திய தலைநகரம்) ஆகியவை இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடையாளங்களாக இருந்தன.

இந்த முதல் வகை நகரக் கட்டடத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த காலகட்டத்தில் அரசாங்கத்தால் கட்டப்படவுள்ள கட்டடங்கள் இரண்டாவது பிரிவில் சேர்க்கப்பட்டன, அதே நேரத்தில் தனியார் நிறுவனங்களால் கட்டப்பட்டவை மூன்றாவது பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.

டெல்லி நகரத் திட்டமிடல் குழு 1912இல் உருவாக்கப்பட்டது. அப்போது தொடங்கிய நகரின் கட்டுமானப் பணிகள் டிசம்பர் 31,1929க்குள் கிட்டத்தட்ட நிறைவடைந்தன.

புதிய மூலதனத் திட்டப் பணிக்கான மதிப்பீடு இந்தியக் கலாசார அமைச்சகத்தின் கூற்றுப்படி, ரூபாய் 10,01,66,500-ஆகத் திட்டம் முடிக்கப்பட்ட நேரத்தில் இது கணிசமாக அதிகரித்துள்ளது.

சுமார் 6,000 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்தப் புதிய தலைநகரம் 1931ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. அந்த நேரத்தில் இது லுடியன்ஸ் டெல்லி என்று அழைக்கப்பட்டது. இப்போது ராஷ்டிரபதி பவன் என்று அழைக்கப்படும் வைஸ்ராய் இல்லத்தில் முதலில் வசித்தவர் இர்வின் பிரபு.

கோடைக்கால தலைநகராக சிம்லா

சிம்லாவில் உள்ள ஜனாதிபதியின் இல்லம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிம்லாவில் உள்ள ஜனாதிபதியின் இல்லம்

கடந்த 1864ஆம் ஆண்டில், சர் ஜான் லாரன்ஸ் பிரிட்டிஷ் பேரரசின் கோடைக்கால தலைநகராக சிம்லாவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

சிம்லா சந்தையில் உள்ள புகழ்பெற்ற கிறிஸ்ட் தேவாலயத்தில் இருந்து மூன்று மைல் தொலைவுக்கு தலைநகர் நீண்டுள்ளது. இது தலைநகராக அறிவிக்கப்பட்ட உடன், அங்கு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அது ஒரு பிரிட்டிஷ் நகராக மாற்றப்பட்டது.

தபால் அலுவலகம், தந்தி அலுவலகம், ஆயுதப்படை தலைமையகம், இந்திய அரசு செயலகம், பத்திரிகை, எழுத்தர்களுக்கான குடிசைகள் மற்றும் அரசின் பிற கிளைக் கட்டடங்கள் கட்டப்பட்டன.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கோடையில் தலைநகர் கல்கத்தாவில் இருந்து சிம்லாவுக்கு சென்று ஆட்சி செய்து வந்தனர். ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை, பிரிட்டிஷ் அரசாங்கம் சிம்லாவை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தது.

இந்த நகரம் சில வரலாற்று நிகழ்வுகளைக் கண்டுள்ளது. 1945ஆம் ஆண்டு சிம்லா மாநாடு மற்றும் 1972 ஜூலை 2ஆம் தேதி சிம்லா ஒப்பந்தம் போன்ற வரலாற்று நிகழ்வுகள் இங்கு நடந்தன.

சுதந்திரத்திற்குப் பிறகு டெல்லியின் பாரம்பரியம்

டெல்லி வரலாறு

பட மூலாதாரம், Getty Images

கடந்த 1947இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும், புது டெல்லி நாட்டின் தலைநகராகவே இருந்தது.

அதன் வளமான வரலாறு மற்றும் பன்முக கலாசார பாரம்பரியம் காரணமாக, டெல்லி இந்தியாவின் இறையாண்மை மற்றும் எதிர்காலத்திற்கான அபிலாஷைகளின் அடையாளமாக மாறியது.

இது அரசியல் மற்றும் பொருளாதார பிரச்னைகளின் முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு, டெல்லி வேகமாக வளர்ந்தது. இது உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றாக மாறியது.

காலப்போக்கில், டெல்லியின் வரலாற்று நினைவுச் சின்னங்கள் மற்றும் கட்டடக்கலை அதிசயங்கள் உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கத் தொடங்கின.

டெல்லி தலைநகராக வளர முக்கியக் காரணிகள்

டெல்லி தலைநகர்

பட மூலாதாரம், Getty Images

மூலோபாய இருப்பிடம்: பண்டைய மற்றும் இடைக்கால வரலாற்றில், இந்தியாவின் பெரும்பாலான படையெடுப்புகள் வடமேற்கில் இருந்து, அதாவது, ஆஃப்கானிஸ்தான் வழியாக நடந்தன.

டெல்லி வடமேற்கில் இருந்து வெகு தொலைவில் இருந்ததால், படையெடுப்புகள் பற்றிய தகவல்களைப் பெற்று அதற்குத் தயாராக முடிந்தது.

ஐரோப்பிய கடற்படைகளின் அச்சுறுத்தல் தொடங்குவதற்கு முன்பு, அந்த நேரத்தில் இந்தியா கடலுக்கு அப்பால் எந்த அச்சுறுத்தலையும் சந்திக்கவில்லை. அரபிக் கடல், பலுசிஸ்தான் மற்றும் இமயமலை ஆகியவை இந்திய மன்னர்கள் மற்றும் ராஜ்ஜியங்களின் இயற்கையான பாதுகாப்புகளாக இருந்தன.

டெல்லி வர்த்தகப் பாதைகளின் குறுக்கு வழியாகவும் இருந்தது. இந்தக் காரணங்களுக்காக, வரலாற்றின் ஆட்சியாளர்கள் அனைவரும் டெல்லியை தலைநகராக மாற்றியுள்ளனர்.

வளமான கலாசார பாரம்பரியம்: பல வம்சங்கள் மற்றும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஆட்சியாளர்களால் ஈர்க்கப்பட்ட இந்த நகரத்தின் கலாசார பாரம்பரியம் டெல்லிக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்டு வந்துள்ளது.

டெல்லி வரலாறு

பட மூலாதாரம், Rameen Khan

அரசியல் முக்கியத்துவம்: வரலாற்றில் பல ராஜ்ஜியங்கள் மற்றும் பேரரசுகளுக்கு அதிகார மையமாக இருந்த டெல்லி, இயற்கையாகவே சுதந்திர இந்தியாவின் தலைநகரமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு: போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு தொடர்புச் சாதனங்கள் போன்ற நவீன உள்கட்டமைப்பின் வளர்ச்சி ஒரு முக்கிய நகர்ப்புற மையமாக டெல்லியின் நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சுருக்கமாக, தலைநகராக டெல்லியின் பயணம் அதன் வரலாற்றுப் பாரம்பரியம், மூலோபாய இருப்பிடம் மற்றும் செழுமையான கலாசாரத்திற்குச் சான்றாகும்.

இயற்கைப் பேரழிவுகளின் அச்சுறுத்தலில் இருந்து விலகி இருப்பது: கொல்கத்தா மற்றும் மும்பை கடலோர நகரங்கள் என்பதால், சூறாவளி போன்ற இயற்கைப் பேரழிவுகளின் தாக்கம் அங்கு உள்ளது. கடல் வழித்தடத்தில் இருந்து அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளது. டெல்லிக்கு இத்தகைய அச்சுறுத்தல் மிகக் குறைவு என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

வானிலை சாதகமாக உள்ளதா?

இருப்பினும், ஒரு மேம்பட்ட போர் உபகரண அமைப்பு கிடைத்த பிறகு விஷயங்கள் மாறின. அந்த நேரத்தில் நிலவியல் ரீதியாக டெல்லிக்கு இருந்த இயற்கைப் பாதுகாப்புகள் இனி இல்லை.

நிலவியல் ரீதியாக, டெல்லி இப்போது பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற அண்டை நாடுகளுடன் நெருக்கமாக உள்ளது.

இந்திய அரசின் டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தின் வலைதளத்தின்படி, வளர்ந்து வரும் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது டெல்லியில் வளங்கள் குறைவாகவே உள்ளன.

"டெல்லியில் வேகமாக வளர்ந்து வரும் நகரமயமாக்கலும், டெல்லியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிகரித்து வரும் பொருளாதார நடவடிக்கைகளும் சுற்றுச்சூழல் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன" என்று அவர் கூறினார்.

காற்று, நீர் மற்றும் ஒலி மாசுபாடு டெல்லியில் சுற்றுச்சூழலை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)