இஸ்ரேல் - லெபனான்: போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்துப் பேசிய ஹெஸ்பொலா தலைவர் கூறியது என்ன?

இஸ்ரேல் – லெபனான் போர்நிறுத்த ஒப்பந்தம் - நயீம் காசிம்

பட மூலாதாரம், Reuters

லெபனானில் உள்ள ஹெஸ்பொலா ஆயுதக்குழுவின் தலைவரான நயீம் காசிம், இஸ்ரேலுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து முதல் முறையாகப் பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் ஹெஸ்பொலாவுக்கு ஒரு "பெரிய வெற்றி" என்று கூறிய அவர், லெபனான் மக்கள் பொறுமையாக இருந்ததைப் பாராட்டினார்.

கடந்த செவ்வாய்க் கிழமையன்று, இஸ்ரேலும் ஹெஸ்பொலாவும் போர்நிறுத்தம் குறித்த ஓர் ஒப்பந்ததிற்கு வந்தன. இது புதன் கிழமையன்று அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் இரு தரப்பினரும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த ஒப்பந்தம் அமெரிக்காவும் பிரான்சும் மத்தியஸ்தம் செய்து கொண்டன. அதன் நிபந்தனைகள் 60 நாட்களுக்குள் ஹெஸ்பொல்லா அதன் படைகளையும் ஆயுதங்களையும் நீலக் கோடு (Blue Line) பகுதிக்கும் அங்கிருந்து வடக்கே 30 கிமீ தொலைவில் உள்ள லிடானி நதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்து திரும்பப் பெறும் என்றும், இஸ்ரேல் படிப்படியாக அங்கு எஞ்சியுள்ள தனது படைகளைத் திரும்பப் பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஹெஸ்பொலா தலைவர் கூறியது என்ன?

கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) அன்று உரையாற்றிய ஹெஸ்பொலா தலைவர் நயீம் காசிம், போர் நிறுத்தம் ஒப்பந்தம் லெபனான் மக்களுக்கு “ஒரு மிகப்பெரிய வெற்றி” என்றும், இது ஜூலை 2006 போரின் வெற்றியைவிட மிக முக்கியமானது என்றும் தெரிவித்தார்.

கடைசியாக ஹெஸ்பொலாவுடன் இஸ்ரேல் 2006ஆம் ஆண்டு போர் புரிந்தது.

“எதிரிகள் ஹெஸ்பொலாவை அழிப்பதைத் தடுத்து நிறுத்தியதால், நாம் வெற்றி பெற்றோம். நாம் நமது குழு பிரிவதைத் தடுத்தோம் மற்றும் எதிர்ப்பை அடக்கினோம், அதனால் இதுவொரு வெற்றி,” என்று ஹெஸ்பொலா தலைவர் கூறினார்.

“பாலத்தீனர்களுக்கு ஆதரவு வழங்குவதை நாங்கள் நிறுத்தமாட்டோம். நாங்கள் போரை விரும்பவில்லை, ஆனால் காஸாவை ஆதரிக்க விரும்புகிறோம். இஸ்ரேல் எங்களுடன் போர் புரிய நினைத்தால் அதற்கும் தயாராக இருக்கிறோம்,” என்றார்.

இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டபோது, இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதே இந்தப் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார்.

இந்தப் போரில் ஆயிரக்கணக்கான லெபனான் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

இதற்கிடையில் வெள்ளிக்கிழமை, இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனானில் உள்ள 60 கிராமங்களில் உள்ள மக்களைத் திரும்பி வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தது.

தெற்கு லெபனானில் இருந்து பல கிலோமீட்டர் உள்ளே இருக்கும் பகுதிகளைக் காட்டும் வரைபடத்தை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, "குடியிருப்பாளர்கள் இங்கு திரும்பக் கூடாது, திரும்புபவர்கள் தங்களை ஆபத்தில் ஆழ்த்திக் கொள்வார்கள்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு லெபனானில் நிலவும் குழப்பம்

இஸ்ரேல் – லெபனான் போர்நிறுத்த ஒப்பந்தம் - நயீம் காசிம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவிற்கும் இடையே நடக்கும் மோதலால் தெற்கு லெபனான் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது

போர் நிறுத்ததிற்கு இடையே, ஹெஸ்பொலா, இஸ்ரேல் என இரு தரப்பினரும் இந்த ஒப்பந்தத்தை மீறுவதாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த ஒப்பந்தம் அமலான இரண்டு நாட்களுக்குப் பிறகு, தெற்கு லெபனான் எல்லைக்கு அருகிலுள்ள கியாம் நகரில் இறுதிச் சடங்கு ஒன்றுக்காக அங்கு கூடியிருந்த மக்கள் மீது இஸ்ரேல் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

“தெற்கு லெபனானின் கியாம் பகுதியில் சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. தெற்கு லெபனானில் இஸ்ரேல் மக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படும்,” என்று இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

தெற்கு லெபனானில் உள்ள ஹெஸ்பொலா இலக்குகளின் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியது. போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது நாளாக இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இத்துடன் அப்பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்திய காணொளியையும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது.

போர் நிறுத்த ஒப்பந்த மீறல்கள்

இஸ்ரேல் – லெபனான் போர்நிறுத்த ஒப்பந்தம் - நயீம் காசிம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹெஸ்பொலா வான்வழித் தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது

அனைத்து போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களையும் உடனடியாக நிறுத்துமாறு இரு தரப்பினருக்கும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் அழைப்பு விடுத்துள்ளார்.

“இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான போர்நிறுத்தத்தை அமல்படுத்த அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்” என்று வியாழக்கிழமை லெபனானின் தற்காலிக பிரதமர் நஜிப் மிகாடியுடன் ஒரு தொலைபேசி அழைப்பில் அதிபர் மக்ரோங் வலியுறுத்தினார்.

அப்போது "போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்த, அனைத்து மீறல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்," என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், தெற்கு லெபனானில் உள்ள அல்-பிசாரியா நகர மேயர் நஜிஹ் ஈத், “இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியது பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு காட்டுப் பகுதி,” என்று ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தொடர்ந்து மீறி வருவதாக லெபனான் பாதுகாப்புப் படைகள் குற்றம் சாட்டியுள்ளன.

எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதாக லெபனானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மறுபுறம், “தெற்கு லெபனானில் ஒரு காரில் பல இடங்களுக்குச் சென்ற சந்தேகத்திற்குரிய நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். இது ஒப்பந்த விதிமுறைகளை மீறுவதாகும்" என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இஸ்ரேல் படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதைத் தடுக்க தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.

"இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை வலுவாகவும் உறுதியாகவும் செயல்படுத்தும். இந்த ஒப்பந்தத்திற்காக இஸ்ரேல் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது,” என்று இஸ்ரேல் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஹெர்ஸி ஹலேவி கூறினார்.

இஸ்ரேலும் ஹெஸ்பொலாவும் கூறும் மாறுபட்ட கருத்துகள்

இஸ்ரேல் – லெபனான் போர்நிறுத்த ஒப்பந்தம் - நயீம் காசிம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததில் இருந்து தெற்கு லெபனானில் மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்

கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 3,961 லெபனான் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் சமீபத்திய வாரங்களில் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர் என்று லெபனான் அரசு தெரிவித்துள்ளது.

ஹெஸ்பொலா உடனான மோதலில் இஸ்ரேலின் 82 படைகளும், 47 குடிமக்களும் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 14 மாதங்களில் ஹெஸ்பொலாவுடனான மோதலை வைத்து இஸ்ரேல் ராணுவம் இந்தத் தரவுகளை வழங்கியுள்ளது.

இஸ்ரேல் ராணுவம், 12,500 ஹெஸ்பொலா பகுதிகளை இலக்காக வைத்திருந்ததாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் 1,600 கட்டுப்பாட்டு மையங்கள், 1,000 ஆயுதக் கிடங்குகள் ஆகியவை அடக்கம்.

இந்த மோதலில் 2,500 ஹெஸ்பொலா குழுவினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவத்தை மேற்கோள் காட்டி அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை 3,500 ஆக உயரக்கூடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் ஹெஸ்பொலாவின் அதிஉயர் தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் 13 உயர்நிலை தலைவர்களும் அடங்குவர்.

மறுபுறம் ஹெஸ்பொலா, “எதிரிப் படைகளுக்கு நடந்த பாதிப்பே” அவர்கள் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குள் வருவதற்குக் கட்டாயப்படுத்தியதாகக் கூறியுள்ளது.

சமீப காலங்களில் "இழப்புகளின் காரணமாக எதிரிகள்" சமரசத்திற்குத் தள்ளப்பட்டதாக ஹெஸ்புல்லா ஓர் அறிக்கையை வெளியிட்டது.

அந்த அறிக்கைப்படி, லெபனானில் ஹெஸ்பொலாவுடன் நடந்த மோதல்களில் 130 இஸ்ரேல் படையினர் கொல்லப்பட்டனர், 1,250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மறுபுறம், லெபனானில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டால் "கடுமையான போரை" எதிர்கொள்ள நேரிடும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹெஸ்பொலாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“இந்த ஒப்பந்தத்தை மீறினால், கடும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்று இஸ்ரேலின் சேனல் 14 உடனான ஒரு நேர்காணலில் நெதன்யாகு கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)