ஐ.வி.எஃப்: வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பது ஏன்? இதை மாற்ற முயற்சிக்கும் விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Serenity Strull/ BBC
- எழுதியவர், கிறிஸ் பரனியுக்
- பதவி, பிபிசி
செயற்கைக் கருத்தரித்தல் முறை (IVF) மூலம் கருத்தரிக்கப்பட்ட முதல் குழந்தை லூயிஸ் ஜாய் பிரவுன் பிறந்து 45 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஆனால், இன்னமும் பல தம்பதிகளுக்கு ஐவிஎஃப் சிகிச்சை நிச்சயமற்ற செயல்முறையாகவே உள்ளது. இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புதிய ஆராய்ச்சி இந்த நிலையை மாற்றுமா?
ஒரு கருவியலாளர் (கருமுட்டையின் கருத்தரித்தல் முதல் பிறப்பு வரை கருவின் வளர்ச்சியைப் படிக்கும் ஆய்வாளர் - EMBRYOLOGIST), நான்கு கருமுட்டை செல்கள் கொண்ட உயிரியல் கூறுகளை வைக்க, சிறிய மூடிய கொள்கலன் ஒன்றை (CULTURE DISH) பயன்படுத்துகிறார். இந்த செயல்பாடு மிகவும் இலகுவாக கையாளப்பட வேண்டும்.
அதில், ஒவ்வொரு முட்டையும் ஒரு விந்தணுவால் கருவுற்றிருக்கும். இந்த கருமுட்டைகள் கருவாக உருவாகத் தொடங்கும். அதில், குறைந்தபட்சம் ஒரு கரு, ஆரோக்கியமான குழந்தையாக மாறும் என நம்பலாம்.
இந்த கட்டுரையை நீங்கள் படிக்கும் நாளில், தங்களது சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறும் என நம்பிக்கையுடன் ஆயிரக்கணக்கான தம்பதிகள் உலகெங்கிலும் உள்ள மருத்துவமனைகளில் இருந்து வெளியேறிக் கொண்டிருப்பர். அவர்கள் வாழ்வின் ஒட்டு மொத்த மகிழ்ச்சியும், அந்த சிகிச்சையின் வெற்றியில் தான் அவர்களுக்கு உள்ளது.

`இன் விட்ரோ’ கருத்தரித்தல் முறை எனப்படும் (In vitro fertilisation- IVF) செயற்கை கருத்தரித்தல் சிகிச்சையின் மூலம் குழந்தை பெற முயற்சிக்கும் நபர்கள், அச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் நாட்களில் பதட்டத்தோடும் வேதனையோடும் காத்திருப்பர்.
செயற்கை கருத்தரித்தல் ( IVF) சிகிச்சைக்காக ஏற்கனவே உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையான சவால்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அதனால் இந்த சிகிச்சை முறையை சிலர் மட்டுமே தேர்ந்தெடுப்பர்.

பட மூலாதாரம், Serenity Strull/ BBC
கருவியலாளர் (எம்பிரியலாஜிஸ்ட்- EMBRYOLOGIST) , விலைமதிப்பற்ற கருவைக் கொண்ட உயிரியல் கொள்கலனை “டைம்-லாப்ஸ் இமேஜிங்" (Time lapse imaging) முறைக்கு உட்படுத்துவர். டைம்-லாப்ஸ் இமேஜிங் என்பது இனப்பெருக்க உயிரியலில், செயற்கை கருத்தரித்தல் முறைக்கு (IVF) கருக்களைத் தேர்ந்தெடுக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமாகும்.
இக்கருவி, வளரும் கருவை ஆயிரக்கணக்கான படங்கள் எடுக்கும். கருவியலாளர்கள் கருவின் வளர்ச்சியை மதிப்பிடவும், கருப்பையில் பொருத்துவதற்கு சிறந்த வாய்ப்புள்ள கரு ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் இப்படங்கள் உதவுகின்றன. கருவியில் ஒரு பொத்தானை அழுத்தினால் அக்கருவி செயல்படத் தொடங்கும்.
உள்ளே இருக்கும் நுண்ணோக்கியும் (microscope) கேமராவும், அடுத்த சில நாட்களில் ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் வளரும் கருக்களை படம் பிடித்து, அவற்றைக் கண்காணிக்கும்.
இத்தகைய பகுப்பாய்வு முறை, வெற்றிகரமான குழந்தை பிறப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்று இச்சிகிச்சையில் ஈடுபடும் தம்பதிகளுக்கு மருத்துவப் பணியாளர்கள் விளக்குகிறார்கள்.
துரதிருஷ்டவசமாக, அது எல்லா நேரமும் வெற்றியடைவதில்லை .

பட மூலாதாரம், Getty Images
ஜூலை 2024 இல் முன்னணி மருத்துவ இதழான 'தி லான்செட்'டில் (The Lancet) வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, 1,500-க்கும் மேற்பட்ட செயற்கை கருத்தரித்தல் நடைமுறைகளின் முடிவுகளை ஒப்பிட்டது.
சிலர் டைம்-லாப்ஸ் இமேஜிங்கைப் (time-lapse imaging) பயன்படுத்தினர், சிலர் பயன்படுத்தவில்லை. ஆனால், "இதனால் குழந்தை பிறப்பு விகிதத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு எதுவும் இல்லை," என்கிறார் லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தின் மகளிர் சுகாதார ஆராய்ச்சி பிரிவின் மருத்துவ மூத்த விரிவுரையாளரும் ஆய்வின் இணை ஆசிரியருமான பிரியா பிடே.
கடந்த 1978 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி, லூயிஸ் பிரவுன் பிறந்ததில் இருந்து செயற்கைக் கருத்தரித்தல் (IVF) மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் உலகளவில் பிறந்துள்ளனர்.
பத்தாண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சியைத் தொடர்ந்து இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கருத்தரித்துப் பிறந்த முதல் நபர் பிரவுன் ஆவார். பிரவுனின் நடுப் பெயரை (லூயிஸ் ஜாய் பிரவுன்) மையப்படுத்தி “ஜாய்” என ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது. மேலும், இந்த தொழில்நுட்பம், அந்த படத்தில் ஒரு சாதனையாக இடம்பெறுகிறது.

பட மூலாதாரம், Serenity Strull/ BBC
மருத்துவ உலகில் புரட்சியை ஏற்படுத்திய இந்த கருவுறுதல் சிகிச்சை முறை, இப்போது அமெரிக்காவில் ஆண்டுதோறும் 2% பிறப்புகளுக்கு காரணமாக உள்ளது.
மேலும், செயற்கை கருத்தரித்தல் (IVF) சிகிச்சைக்கான நேரடி பிறப்பு விகிதம் பல ஆண்டுகளாக சீராக மேம்பட்டு வருகிறது. பிரிட்டன் தரவுகளின்படி, 1990களின் முற்பகுதியில் இருந்து 38 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இச்சிகிச்சையின் வெற்றி வாய்ப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில், செயற்கை கருத்தரிப்பு முறை (IVF) போன்ற நடைமுறைகளை உள்ளடக்கிய இனப்பெருக்கத்திற்கு உதவி செய்யும் தொழில்நுட்பங்களின் (ART-assisted reproductive technology) விளைவாக குழந்தைப் பிறப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டில், இனப்பெருக்க தொழில்நுட்பத்தால், பிறப்பு எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 1.6 மடங்கு அதிகரித்துள்ளது.
35 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களின் கரு பரிமாற்ற சிகிச்சைக்கான பிறப்பு விகிதம் பிரிட்டனில் வெறும் 30 சதவிகிதமாகவும் ஆகவும் அமெரிக்காவில் 39 சதவீதமாகவும் உள்ளது.
அமெரிக்காவில், அனைத்து வயது பெண்களிலும், கரு பரிமாற்ற சிகிச்சை முறை 45 சதவிகிதம் மட்டுமே நேரடி பிறப்புக்கு வழிவகுத்தது. அதிலும் குறிப்பாக, பிறப்பு விகிதம் 2011இல் 36 சதவிகிதமாக இருந்து அதன் பிறகு உயரத் தொடங்கியது.
செயற்கை கருத்தரித்தல் முறை என்பது இன்னமும் வேதனை தரும், நிச்சயமற்ற செயல்முறையாகவே உள்ளது என்பது இந்தத் தரவுகளின் மூலம் தெளிவாகிறது.
செயற்கை கருத்தரித்தல் முறையின் வெற்றி விகிதங்களில் சில முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், குழந்தை பெற விரும்பும் பெற்றோர்களுக்கு ஆதரவாக எடுக்கப்படும் முயற்சிகள், கலவையான முடிவுகளைக் கொண்டிருக்கின்க்கின்றன.
அதில் ஒன்றாக, டைம் லாப்ஸ் இமேஜிங் குறித்த சந்தேகம், பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
பிடே, அது குறித்த சான்றுகளுக்கான முன்னணி உயர்தர மதிப்பாய்வை உருவாக்குவதில் பங்களித்தார். இது "கோக்ரேன் மதிப்பாய்வு-(Cochrane Review)" என்று அழைக்கப்படுகிறது.
இந்த முறை, பிறப்பு விகிதங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என அந்த ஆய்வு முடிவுகள் பரிந்துரை செய்திருந்தது. பிடேவும் அவரது குழுவும் சமீபத்தில் சேகரித்த தரவு போல், அந்த காலக்கட்டத்தில் சேகரித்திருந்த தரவுகள் வலுவாக இல்லை என்று பிடே கூறுகிறார்.
செயற்கை கருத்தரித்தல் (IVF) முறை மூலம் சிகிச்சை பெறும் தம்பதிகளுக்கு டைம் லாப்ஸ் இமேஜிங் குறிப்பிடத்தக்க அளவில் பலன் அளிக்கவில்லை என்ற உண்மையை, இக்குழுவின் சமீபத்திய ஆய்வு உறுதிப்படுத்துகிறது .

பட மூலாதாரம், Getty Images
ஆனாலும், உலகெங்கிலும் உள்ள செயற்கைக் கருத்தரிப்பு மையங்களால் இந்த சிகிச்சை முறை இன்னும் பரவலாக நடைமுறையில் உள்ளது. மேலும், பிரிட்டன் மருத்துவமனைகள் சில, சிகிச்சையின் ஒரு பகுதியாக டைம் லாப்ஸ் இமேஜிங்கைச் சேர்க்க, மக்களிடம் 900 டாலர் வரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 76,000) கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டுள்ளது . அமெரிக்காவில், இந்த சிகிச்சையின் ஒரு சுற்றுக்கு இதன் சராசரி விலை 500 டாலர்கள் (சுமார் ரூ. 42,000) ஆகும் .
"இந்த புதிய தொழில்நுட்பத்தால் மக்கள் மிகவும் உற்சாகமடைந்தனர். ஆனால், அடிப்படையில் நேர்மறையான சான்றுகள் இல்லாமல் செயற்கை கருத்தரித்தல் முறையைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்" என்கிறார் பிடே.
இதற்கிடையில், செயற்கை கருத்தரித்தல் முறையை ( IVF ) மேற்கொள்வது தம்பதிகளுக்குக் கடினமானதாக உள்ளது. இதற்கு பல்லாயிரக்கணக்கில் பணம் செலவாகும், சிகிச்சையில் பல சுற்றுகள் உள்ளன. அது மட்டுமின்றி, சில சுற்றுகள் தோல்வியில் முடியலாம். வாரக்கணக்கில் மருந்து உட்கொள்ளும் பெண்கள், வலிமிகுந்த அறுவை சிகிச்சை முறைகளைத் தாங்க வேண்டியுள்ளது. இந்த சிகிச்சை முறை தம்பதிகளின் உளவியலில் ஏற்படுத்தும் தாக்கத்தால் சில சமயம் அவர்கள் அந்த உறவை முறித்துக் கொள்ளவும் வாய்ப்புண்டு.
உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் இந்த சிகிச்சை முறை வெற்றியடைய வைக்க சில தொழில்நுட்பங்களைக் கையாளுகின்றனர். செயற்கை கருத்தரித்தல் (IVF ) சிகிச்சைகள் ஏன் தோல்வியடைகின்றன என்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், மற்ற கண்டுபிடிப்புகள் அதில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அது பல கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றக்கூடும்.
போதுமான முட்டைகளை பிரித்தெடுத்தல் மற்றும் உடையக்கூடிய செல்களை சேதப்படுத்தாமல் கையாள்வது, இந்த சிகிச்சை முறையில் ஒரு பெரிய சவாலாக உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரிட்டனில் உள்ள கால்நடை மருத்துவர் ஒரு புதிய ஆய்வை மேற்கொண்டார். அதன்படி, ஒரு மாட்டின் கருப்பையில் கவனமாக ஒரு கருவி (probe) உள் நுழைக்கப்பட்டது. அது முட்டைகளைக் கண்டுபிடிக்க உதவியாக இருந்தது.
நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர், பசுவின் கருப்பை உள்ளே முட்டைகள் உருவாகும் நீள் வட்ட வடிவ நுண்ணறைகளில் (follicles) ஒன்றை அடைய புதிய வகையான ஊசியைப் பயன்படுத்தினார்.
அதன் மூலம் மென்மையாக , சிறிதளவு திரவம் மற்றும் முட்டைகளை ஊசியில் எடுத்தனர். ஆனால், நுண்ணறைக்குள் (follicle) இன்னும் அதிக முட்டைகள் இருந்தன.
அதிர்ஷ்டவசமாக, ஏற்கனவே மீட்டெடுக்கப்பட்ட முட்டைகளை இழக்காமல், திரவத்தை மீண்டும் நுண்ணறைக்குள் அனுப்பும் வகையில் ஊசி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
திரவமானது, இரண்டு நுண்ணிய துளைகள் வழியாக ஊசியிலிருந்து வெளியேறுகிறது. இது நுண்ணறைக்குள் ஒரு சிறிய, வட்ட மின்னோட்டத்தை உருவாக்குகிறது. மீதமுள்ள முட்டைகள் அல்லது சினைக் கருமுட்டைகளைச் சுற்றி திரவத்தை நகர்த்துகிறது. பின்னர் அவற்றை கால்நடை மருத்துவர் ஊசிக்குள் உறிஞ்ச அனுமதிக்கிறது.
இரண்டு கணிதவியலாளர்கள் மற்றும் அவர்களது சக ஊழியர்கள் கனவு கண்ட இந்த சிக்கலான வடிவமைப்பு, ஏற்கனவே உள்ள பழைய ஊசிகளுக்கு மாற்றாகும்.
இது, முட்டைகளை வெளியிட உதவும் நுண்ணறைகளுக்குள், திரவத்தை செலுத்துகிறது. ஆனால், இது குறைவான செயல்திறன் கொண்டுள்ளது. அந்த ஊசிகள் நுண்ணறையின் உட்புறத்தில் அதே அளவு கொந்தளிப்பை உருவாக்குவதாகத் தெரியவில்லை.
"நீங்கள் தூண்டும் திரவ இயக்கத்தின் அளவைப் பொறுத்து சினைக் கரு முட்டையை பிரித்தெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்" என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் திரவ இயக்கவியலில் நிபுணரான ராடு சிம்பியனு கூறுகிறார்.
அவரும் அவருடைய நண்பர்களும் கடந்த ஆண்டு நவம்பரில் அவர்களின் ஊசி வடிவமைப்பைப் பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டனர். அதில், முட்டை சேகரிப்பின் போது நுண்ணறையில் உள்ள திரவத்தின் ஓட்டத்தை அது எவ்வாறு பாதிக்கும் என்பதை அவர்கள் செயல் மாதிரியாகக் காட்டினர்.
நாட்டிங்ஹாமில் உள்ள பசுவில் செய்யப்பட்ட இந்த ஆய்வோடு தொடர்புடைய ஊசியின் மாதிரியும், அந்த ஆராய்ச்சியின் முடிவுகளும் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் அவை நம்பிக்கைக்குரிய முடிவுகளைத் தரும் என்று சிம்பியானு கூறுகிறார்.
அடுத்த சில ஆண்டுகளுக்குள் மனித முட்டைகளைப் பயன்படுத்தி பரிசோதனைகள் செய்ய முடியும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவிக்கின்றார்.
"உயர்தர சினைக்கருமுட்டைகளை அதிக எண்ணிக்கையில் உருவாக்க முடியும்," என்கிறார் அவர்.
புதிய வடிவமைப்பு முறையில், முட்டையைப் பிரித்தெடுக்கும் செயல்முறையின் போது நுண்ணறைக்குள் ஊசியை மிகவும் துல்லியமாக வைக்க வேண்டியதில்லை என்கிறார் அவர்.
இதன் மூலம் பெறப்பட்ட முட்டைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் தரத்தை உயர்த்தினால், அது பிறப்பு விகிதத்தில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால், இது மனிதர்களுக்கான மருத்துவப் பரிசோதனைகளில் நிரூபிக்கப்பட வேண்டும்.
முட்டைகள் மற்றும் கருக்கள் மென்மையானவை. அவை குழாய்களால் உறிஞ்சப்பட்டு, கொள்கலனில் (culture dish) வளர்க்கப்படுவதற்கு உருவாகவில்லை.
அத்தகு மென்மையான கருவை சிகிச்சைக்கு உட்படுத்தும் எளிதான மருத்துவ முறைகளைக் கண்டறியும் யோசனையில் தற்போது ஸ்பெயின் உள்ளது.
இது முட்டைகள் மற்றும் கருக்களில் நுண்ணிய காந்த துகள்களை (magnetic nanoparticles) ஒட்டும் முறையில் செயல்படுகிறது. அதன் மூலம் அவற்றை கொள்கலனில் (culture dish) வளர்க்காமல் காந்த முறையில் கையாள முடியும்.
"நாங்கள் ஒரு குழாயை உருவாக்கினோம், அதன் மேலே ஒரு காந்தம் உள்ளது. காந்த நானோ துகள்கள் முதலில் முட்டைகள் மற்றும் கருக்களின் மேற்பரப்பில் பிணைக்கப்படும் புரதத்துடன் இணைக்கப்படுகின்றன" என ஸ்பெயினில் உள்ள முர்சியா பல்கலைக்கழகத்தில் இனப்பெருக்க உயிரணு உயிரியலைப் படிக்கும் மரியா ஜிமெனெஸ்-மோவில்லா விளக்குகிறார்.
மார்ச் 2024 இல், ஜிமெனெஸ்-மொவில்லா மற்றும் அவரது குழு ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டது. அதில், பன்றி மற்றும் முயல் முட்டைகளில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சோதனை முடிவுகளை வெளியிட்டனர்.
குறிப்பாக, காந்த நானோ துகள் கலவை, முதிர்ந்த முட்டைகளில் சிக்கியிருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். அதாவது, முட்டைகளின் ஒரு குழு, குழாய்க்குள் இழுக்கப்பட்டவுடன், சுற்றியுள்ள திரவத்துடன் இணைந்துகொள்ளும்.
அதில் முதிர்ந்த முட்டைகள் மட்டுமே இருக்கும். முதிர்ச்சியடையாத முட்டைகள், பின்னர் நீங்கிவிடும். உதாரணமாக, ஆப்பிள்களை கழுவும்போது பழுக்காத ஆப்பிளையும் பழுத்த ஆப்பிளையும் பிரிப்பது போல் இந்த முறை செயல்படும்.
வெற்றிகரமாக கருவுற, முதிர்ந்த முட்டைகளை மட்டுமே எடுக்க கருவியலாளருக்கு (embryologist) இந்த அணுகுமுறை உதவும். இவற்றை வேறு இடத்தில் சேமித்தும் வைக்கலாம்.
"காந்தத்தை நகர்த்தும்போது, செல்கள் வெளியேறுகின்றன" என்கிறார் ஜிமெனெஸ்-மொவில்லா.
இவ்வாறு கையாளப்படும் முட்டைகள் ஆரோக்கியமான முயல் கருக்களை உருவாக்கி, உயிருடன் பிறப்பதற்கு வழிவகுக்குமா என்பதை ஆய்வு செய்தனர்.
முயலில், கரு பரிமாற்றத் (rabbit embryo implantation) தொழில்நுட்பத்தை பயன்படுத்தியவற்றுக்கும், அதை பயன்படுத்தாதவற்றுக்கும் இடையே குழந்தை பிறப்பு விகித புள்ளிவிவரத்தில் பெரிய அளவு வேறுபாடு இல்லை. ஆனாலும் சோதனை முடிவுகள் நம்பிக்கையளிக்கும் வகையில் இருந்தன .
ஆரோக்கியமான முட்டைகளை, கருவியலாளர்கள் சேதப்படுத்தாமல் கையாளுவதற்கு அவர்களின் தொழில்நுட்பம் உதவி செய்யும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இது செயற்கைக் கருத்தரித்தல் முறைகளில் (IVF) தோல்விக்கு எவ்வாறு வழிவகுக்கின்றது என்பது இன்னும் தெரியவில்லை. அதேபோல், காந்தம் சார்ந்த தொழில்நுட்பம் மனிதர்களின் குழந்தைப் பிறப்பு விகிதத்தை பாதிக்குமா என்பதையும் பார்க்க வேண்டும்.
மேலும், கருக்கள் வளரும்போது, அதில் குழந்தை பிறப்புக்கு உதவப்போகும் கரு குறித்து கண்டறிய, புதிய வழிகளில் ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர் .
ஆஸ்திரேலியாவில் வளர்ந்து வரும் ஒரு தொழில் நுட்பம், அந்தக் கருக்களில் காணப்படும் கொழுப்புச் சேர்மங்களின் அளவை அளவிடுவதற்கு ஒளியைப் பயன்படுத்துகிறது.
இதுவரை சுண்டெலியின் கருக்களில் மட்டுமே இந்த முறை சோதிக்கப்பட்டிருந்தாலும், "இதன் மூலம் அந்த கரு வளர்சிதை மாற்றங்களில் (metobolism) எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது," என்று ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழக இனப்பெருக்க உயிரியல் துணை பேராசிரியர் கெய்லி டனிங் விளக்கினார்.
"கரு வளர்ச்சிக்கு, அந்த கருவின் வளர்சிதை மாற்றம் எவ்வளவு முக்கியமானது என்பது குறித்து பல ஆண்டுகால ஆராய்ச்சிகள் உள்ளன," என்று அவர் கூறுகிறார்.
எடுத்துக்காட்டாக, கருவில் கொழுப்பு சேர்மானங்கள் அதிகமாக இருந்தால், கருவில் வளர்சிதை மாற்றத்தில் குறைபாடுகள் தோன்றும்.
இந்த தொழிநுட்ப அணுகுமுறையின் தொடக்கக் காலத்தில் நாம் இருந்தாலும், டைம்-லாப்ஸ் இமேஜிங் செய்ததை விட இந்த தொழில்நுட்பம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று டன்னிங் நம்புகிறார்.
மேலும் "இச்சிகிச்சையின் தொடக்க நிலையிலேயே நாம் இருக்க விரும்பவில்லை," என்றும் அவர் கூறுகிறார். அதுபோலவே, இந்த தொழில்நுட்பத்தின் மூலம், நம்மால் கொழுப்பு அளவீடு செய்ய முடியும். அதன் மூலம், மனிதக் கருத்தரித்தலுக்கு இது உதவுமா என்பதையும் கண்டறிய முடியும். ஆனால் மீண்டும், இது ஆய்வு செய்யப்பட வேண்டும்.
பிரிட்டனில் மனித கருத்தரித்தல் மற்றும் கருவியல் ஆணையத்துடன் இணைந்து பணிபுரியும் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் இனப்பெருக்க அறிவியல் பேராசிரியரான ஜாய்ஸ் ஹார்பர் கூறுகையில், "இவை எல்லாம் கேட்பதற்கு நன்றாக உள்ளன. ஆனால், பின்னர், ஆய்வுகள் நடக்கும்போது, அந்த முயற்சி பலனளிக்கவில்லை என நாங்கள் உணர்கிறோம்," என்று செயற்கைக் கருத்தரித்தல் (IVF) முறையின் வெற்றி விகிதங்களை மேம்படுத்துவதற்கான முந்தைய முயற்சிகளைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார்.
சில விஷயங்கள் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. செயற்கைக் கருத்தரித்தல் (IVF) ஆய்வகங்கள் கருக்களை வளர்ப்பதில் சிறந்து விளங்குகின்றன .

பட மூலாதாரம், Getty Images
“அதே நேரத்தில், பெண்களுக்கு வழங்கப்படும் மருந்துகளின் மூலம் அவர்களின் முட்டைகளை அறுவை சிகிச்சையின் மூலம் மீட்டெடுப்பதற்கு முன்பு முட்டை உற்பத்தியைத் தூண்டுவது மிகவும் பயனுள்ளதாக உள்ளது” என ஹார்பர் குறிப்பிடுகிறார்.
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி கருப்பை தூண்டுதலுக்கும் தனிப்பட்ட நோயாளிகளின் மருந்து அளவை நிர்ணையிக்கவும் சில ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.
இன்னும் பெரும்பாலான செயற்கைக் கருத்தரித்தல் (IVF) சுற்றுகள் வெற்றியை விட தோல்வியில் முடிகின்றன. “முக்கியமாக, செயற்கைக் கருத்தரித்தல் (IVF) முறைக்கு அதிகளவில் பணம் தேவைப்படும்." என ஹார்பர் கூறுகிறார்.
"இப்போது நம்மிடம் பளபளப்பான உயர்தர ஆய்வகங்கள் உள்ளன. ஆனால் அவை சிறப்பான வெற்றி விகிதங்களை உருவாக்குகின்றன என்று நான் நம்பவில்லை," என்று அவர் கூறுகிறார்.
இந்த செயல்முறைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்குமா என ஹார்பர் தனது சந்தேகத்தைத் தெரிவிக்கின்றார்.
மேலும், செயற்கைக் கருத்தரித்தல் சிகிச்சையின் (IVF) அவலமான முரண்பாடுகள் என்னவென்றும் அவருக்குத் தெரியும்.
ஹார்பர் பல முறை செயற்கைக் கருத்தரித்தல் சிகிச்சைச் சுற்றுகளை மேற்கொண்டுள்ளார்.
"இது மிகவும் கடினமானது” என்றும் அவர் கூறுகிறார்.
எத்தனை சுற்றுகள் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்று அவரால் சொல்ல முடியவில்லை. அந்த அனுபவம் மிகவும் கடுமையானதாக இருந்ததால் அந்த சுற்றுகளை எண்ணுவதைக்கூட அவர் நிறுத்தி விட்டதாகக் கூறுகின்றார்.
“நல்ல விதமாக, ஹார்ப்பருக்கு இப்போது மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் செயற்கைக் கருத்தரித்தல் மூலம் பிறக்க 7 ஆண்டுகள் ஆகியது ” என்றும் அவர் கூறுகிறார்.
கருக்கள் எப்போதும் ஆரோக்கியமானதாக இருக்காது. அவை மென்மையானவை, சிகிச்சையில் எளிதில் தோல்வியடையும். மேலும் கருக்கள் பெரும்பாலும் மரபணு பிரச்னைகளைக் கொண்டிருக்கின்றன. செயற்கைக் கருத்தரித்தல் (IVF) முறையை வெற்றிகரமாகச் செய்வது உண்மையில் சாத்தியமற்றதாக இருக்கலாம் என ஹார்பர் கூறுகிறார்.
ஆனால், முட்டை மற்றும் விந்தணுவைப் பெறுவதற்காக வளர்ந்து வரும் புதிய முறை, தம்பதிகளுக்கு உதவக்கூடும்.
“இன் விட்ரோ கேமடோஜெனீசிஸ் அல்லது IVG (In vitro gametogenesis, or IVG) “ என்பது, ஒரு நபரின் தோல் செல்கள் போன்ற எளிய திசு மாதிரியிலிருந்து விந்து அல்லது முட்டை செல்களை உருவாக்க அனுமதிக்கும் ஒரு தொழில்நுட்பமாகும்.
இது ஜப்பானில் முன்னோடியாக உள்ளது. இருப்பினும், தற்போது அமெரிக்காவில் தொடக்கநிலை உயிர் தொழில்நுட்பவியல் நிறுவனங்களும் (Startup biotechnology companies) இந்த தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி செய்கின்றன.
எலியின் உடலில் உள்ள மற்ற உயிரணுக்களிலிருந்து எலி முட்டை செல்களை உருவாக்குவதில் இந்த ஆராய்ச்சி கவனம் செலுத்தியது.
இதே போன்ற ஒரு சோதனையை மனித உயிரணுக்களுடன் செய்வதற்கு இன்னும் பல காலம் ஆகலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இயற்கையாகவே விந்தணுக்கள் அல்லது முட்டைகளை உற்பத்தி செய்ய முடியாதவர்களுக்கு IVG முறை குழந்தைகளைப் பெறுவதற்கான நல்ல வாய்ப்பாக அமையும்.
"ஏனெனில்,புற்றுநோய் சிகிச்சைக்கும் இந்த முறை உதவியுள்ளதால்,IVG முறைக்கும் உதவலாம். முன்பு இந்த முறை பலனளிக்கவில்லை ஆனால், இப்போது பலனளிக்கலாம்," என்கிறார் பிரவுன் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் எலி அடாஷி. இவர், IVG பற்றிய தேசிய மருத்துவ பயிற்சி பட்டறைக்கு தலைமை தாங்கியுள்ளார்.

பட மூலாதாரம், Serenity Strull/ BBC
கோட்பாட்டு அளவில், தன்பாலின பெற்றோர்கள் , தானம் செய்பவர்களின் முட்டை அல்லது விந்தணுக்கள் உதவியின்றி குழந்தைகளைப் பெறலாம்.
அது மட்டுமின்றி, ஒரு பெண்ணிடமிருந்து திசுக்களை எடுத்து, அதிலிருந்து விந்து மற்றும் முட்டைகளை உருவாக்கி, அந்தப் பெண் குழந்தை பெற்றுக்கொள்ள இந்த முறை அனுமதிக்கும். இது "சோலோ IVG" ( SOLO IVG) என்று அழைக்கப்படுகிறது.
இந்த முறை சர்சைக்குரியதாகக் கருதப்படுகின்றது .
பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே உள்ள மரபணு ஒற்றுமை, வெவ்வேறு மரபணு மாறுபாடுகளின் காரணமான, க்ளோனாக மாறலாம்.
("குளோன் (CLONE) - உயிரணுக்கள் ஒன்றிலிருந்து அறிவியல் முறையில் உருவாக்கப்பட்ட அதன் சரி நிகர் நுட்பமான உயிர் வடிவம், “க்ளோன்” எனப்படும்) .
அல்லது அதற்கு மாற்றாக , அதாவது அந்த பெண்ணுக்கு "தாமதமாகப் பிறந்த இரட்டையராக" ("delayed twin")இருப்பது போலவும் இதைக் கருதலாமா என்றும் ஒரு ஆராய்ச்சியாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோட்பாட்டளவில், முட்டைகள் அல்லது விந்தணுக்களைப் பெறுவதற்கான வேறொரு வழியாக இது இருக்கலாம் என்று ஓரிகான் ஹெல்த் & சயின்ஸ் பல்கலைக்கழகத்தின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவப் பேராசிரியர் பவுலா அமடோ கூறுகிறார்.
"இது நடைமுறைக்கு வந்தால், கிட்டத்தட்ட IVF போலவே இதுவும் புரட்சிகரமானதாக இருக்கும்," என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
IVG உதவியுடன் தயாரிக்கப்படும் கருக்கள் தானாகவே ஒரு உயிரை வெற்றிகரமாக உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்காது. ஆனால், IVG மூலம் உயர்தர கருவைத் தேர்ந்தெடுப்பது மிகவும் எளிதாக இருக்கலாம் மற்றும் தேவைப்பட்டால் சுழற்சிக்குப் பிறகான மறு சுழற்சி முறைகளைக் கொண்டிருக்கலாம்.
அப்படியானால், "உங்களிடம் நிறைய முட்டைகள் இருக்கும். அதன் மூலம் இன்னும் பல கருக்களைப் பரிசோதிக்கலாம் " என்று அமடோ கூறுகிறார்.
“அத்தகைய தொழில்நுட்பம் கிடைக்கும் முன் அதனைச் சரி பார்க்க பல கேள்விகள் உள்ளன” என அமடோ கூறுகிறார்.
ஏற்கனவே விவாதத்தில் உள்ள கற்பனைக் காட்சிகளின்படி, யாராவது ஒரு பிரபலத்தின் அனுமதியின்றி எப்படியாவது அவரது தோல் செல்களைப் பெற முடியும். ஒரு பிரபலமான பாப் நட்சத்திரம் அல்லது வெற்றிகரமான கால்பந்து வீரருடன் மரபணு ரீதியாக தொடர்புடைய ஒரு குழந்தையை உருவாக்க இம்முறையைப் பயன்படுத்த முடியும் .
"இதை உயிரியல் திருட்டு என்று கருதலாம்," என்று அடாஷி கூறுகிறார்.
மேலும், IVG கிளினிக்குகள் பெரிதும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
போலவே, IVG என்பது மனிதர்களிடமே சாத்தியம் என நிரூபிக்கப்பட்டால், அது எவ்வளவு நம்பகமானதாக இருக்கும் என்பதில் இன்னும் நிறைய அடிப்படைக் கேள்விகள் உள்ளன.
"தோல் செல்லிலிருந்து முட்டைகளை உருவாக்குவது - அந்த முட்டைகள் இயற்கையான முட்டைகளுடன் மரபணு ரீதியாக எவ்வளவு ஒத்திருக்கிறது என்பது தான் தற்போதைய கேள்வி," என்கிறார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இனப்பெருக்க மருத்துவத்தின் இணைப் பேராசிரியர் டிம் சைல்ட்.
“கருவுறுதல் பிரச்னைகளை சமாளிக்க ஆசைப்படும் தம்பதிகளிடையே புதிய தொழில்நுட்பங்கள் ஆர்வத்தை உருவாக்கக்கூடும். ஆனால், அடிப்படை ஆதாரம் கொண்ட ஆய்வுகள் மட்டுமே அவற்றில் எது செயல்படும் என்பதை நிரூபிக்கும்” எனவும் சைல்ட் கூறுகின்றார்.
இந்த துறையில் இன்ஸ்டாகிராமில் செல்வாக்குள்ள நபராக சைல்ட் உள்ளார்.
இந்த துறையில் நிபுணராக இல்லாதவர்கள் IVF குறித்து தவறான கருத்துக்களை மக்களிடம் பரப்பி வருகின்றனர்.
"நான் உண்மையில் இன்ஸ்டாகிராம் தலைமுறை அல்ல, எனக்கு 56 வயது - 20 வயதுகளில் எனக்கு பிள்ளைகள் உள்ளனர்" என்று அவர் கூறுகிறார்.
இவ்வாறு தவறாக பரப்பட்டுள்ள கட்டுக்கதைகளை உடைப்பதன் மூலம் , சமூக வலைதளங்களினால் தனக்கு எந்த பணமும் வருவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.
தவறான தகவல் பரப்பப்படுவதை எதிர்த்துப் போராட அறிவியல் ஆய்வுகளின் முடிவுகளை, சைல்ட் பகிர்ந்துகொள்கிறார்.
மேலும், அவரைப் பின்தொடர்பவர்களுடன் நேரடி கேள்வி-பதில் அமர்வுகளில் ஈடுபடுகிறார். அவரால் தனிப்பட்ட மருத்துவ ஆலோசனைகளை, பங்கேற்பாளர்களுக்கு வழங்க முடியாவிட்டாலும், IVF குறித்து ஆர்வமூட்டும் பொதுவான தலைப்புகள் குறித்த கேள்விகளை அவரால் வழங்க முடியும் என்றும் கூறுகிறார் .
உதாரணமாக, ஒருவரின் உணவுமுறை அல்லதுஅக்குபஞ்சர் (acupuncture) மருத்துவம் போன்ற நடைமுறைகள் IVF வெற்றிக்கு எவ்வாறு உதவிடும் என்று பேசுகிறார். (சைல்ட் விளக்கியது போல், பிந்தைய மருத்துவ முறைகள் பிறப்பு விகிதங்களை மேம்படுத்தாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.)
45 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதை விட இன்று IVF சிறப்பாக உள்ளது. தீவிரமாக இல்லாமல்,விஞ்ஞானம் படிப்படியாக மேம்படுகிறது.
இந்த செயற்கைக் கருத்தரித்தல் முறையில் "சிறிய வெற்றிகள் உள்ளன, ஆனால் இச்சிகிச்சை முறை, இன்னும் முழுமையாக வெற்றியடையவில்லை" என்று அவர் கூறுகிறார்.
உலகெங்கிலும் உள்ள தம்பதிகளுக்கு குழந்தையின்மை ஒரு பெரிய சவாலாகவும், சில நேரங்களில் வேதனை தரும் பிரச்னையாகவும் இருந்தாலும், IVF பலருக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
சமீபத்தில், IVF முறையைப் பயன்படுத்திய ஒருவர், சைல்டுக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளார்.
"மூன்று வருட முயற்சிக்குப் பிறகு, அந்த தம்பதிக்கு சோதனை முடிவுகள் சாதகமாக வந்துள்ளன. இன்று காலை பரிசோதனை செய்ததில், அவர்களுடைய குழந்தையின் இதயத் துடிப்பு கேட்டது" என்பதுதான் அந்த செய்தி.
இந்தச் செய்தி, IVF சிகிச்சையில் சாதகமாக முடிவுகள் வந்தால் தம்பதிகளின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதைச் சுருக்கமாக கூறிவிடுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












