31 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்டவர் குடும்பத்துடன் இணைந்ததாக வெளியான செய்தியில் புதிய திருப்பம்

காஸியாபாத்
படக்குறிப்பு, 31 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் இணைந்ததாக கூறப்பட்ட செய்தியில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது
    • எழுதியவர், சுசீலா சிங் மற்றும் ராஜேஷ் டொப்ரியால்
    • பதவி, பிபிசி செய்தியாளர்கள்

'31 ஆண்டுகளுக்கு முன்பு காஸியாபாத்தில் காணாமல் போன பீம் சிங் என்ற ராஜூ, மீண்டும் குடும்பத்துடன் இணைந்தார்' - இந்த செய்தி கடந்த சில தினங்களாக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வந்தது.

ஆனால், இந்த விஷயத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

காஸியாபாத்தின் டிரான்ஸ் ஹிண்டன் பகுதியின் துணை ஆணையர் நிமிஷ் பட்டீல், இதேபோன்ற ஒரு கதையை கூறி, இந்த ராஜூ என்ற நபர் டேஹ்ராடூனில் உள்ள குடும்பம் ஒன்றுடன் இணைந்து, அங்கு ஐந்து மாதங்கள் தங்கியிருந்ததாக பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

டேஹ்ராடூன் காவல்துறை கூற்றின் படி, கடந்த 2008ல் கபில் தேவ் சர்மா - ஆஷா சர்மாவின் 16 வயது மகன் மோனு சர்மா காணாமல் போனதாக புகார் அளித்திருந்தனர்.

தன் மகன் கபில் தேவ் சர்மாவுக்கு 5-7 வயதாக இருந்த போது, கார் மோதி விபத்து ஏற்பட்டதில் அவனுடைய மனநிலை பாதிக்கப்பட்டதாக கபில் தேவ் சர்மா கூறுகிறார். அதன்பின், 2008ல், அவருக்கு 16 வயதானபோது காணாமல் போயுள்ளார். இந்தாண்டு ஜூலை மாதம் அவரை சந்தித்த ராஜூ தான் 'தொலைந்து போன மோனு சர்மா' என கூறியுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதையடுத்து, நவம்பர் மாத கடைசி வாரத்தில், காஸியாபாத்தில் 'காணாமல் போன ஒருவர் 31 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது.

இதை உறுதிப்படுத்த நவம்பர் 29 அன்று, பிபிசி குழு காஸியாபாத்தின் ஷாஹித் நகரில் வசித்துவரும் லீலாவதியின் வீட்டுக்குச் சென்றது. ராஜூ தான் காணாமல் போன தங்களின் மகன் என அக்குடும்பம் தெரிவித்தது.

பிபிசி செய்தியாளரிடம் பேசிய ராஜூ, தான் கடத்தப்பட்டயாகவும், எப்படியோ ராஜஸ்தானிலிருந்து தப்பித்து டெல்லி வந்தடைந்ததாக தெரிவித்தார். தன் 'மகனின்' அடையாளங்களை வைத்து லீலாவதியும் அதை உறுதிப்படுத்தினார்.

ஆனால், இரு தினங்களுக்குப் பிறகு, இதே வோன்ற கதையை டேஹ்ராடூனில் உள்ள குடும்பத்திடமும் ராஜூ கூறியதையறிந்த போலீசார் அவர் குறித்து சந்தேகப்பட்டனர்.

டேஹ்ராடூனிலும் இதே போன்ற கதை

காஸியாபாத்

பட மூலாதாரம், Rajesh Dobriyal

படக்குறிப்பு, கடந்த ஜூலை மாதம் டேஹ்ராடூன் வந்த ராஜூ, ஆஷா சர்மாவின் வீட்டில் மகன் போன்று சில மாதங்கள் இருந்தார்

டேஹ்ராடூனில் வசித்துவரும் கபில் தேவ் சர்மா, இந்தாண்டு ஜூலை மாதம், தன் மகன் தொலைந்து போன அதே சமயம், தன் மகனை போன்றே காணாமல் போன ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தித்தாள்கள் வாயிலாக அறிந்தகாக தெரிவித்தார்.

உத்தராகண்ட் போலீஸ் கூற்றுப்படி, ஜூலை 1 அன்று, டேஹ்ராடூன் காவல்துறையிடம் வந்து, தான் 16 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்டதாக கூறியுள்ளார். தன் பெயர் ராஜூ என கூறியுள்ளார்.

கடத்தல்காரர் தன்னை ராஜஸ்தானில் விற்றுவிட்டதாகவும், அங்கு தான் ஆடுகளை மேய்க்க விடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அங்கு தனக்கு சரியாம உணவு கூட கிடைக்கவில்லை என்றும் எப்படியோ தப்பித்து டேஹ்ராடூன் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

டேஹ்ராடூன் மனுத கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பு வகிக்கும் பிரதீப் பண்ட், அந்த இளைஞருக்கு உதவும் நோக்கில் அவருடைய கதையை உள்ளூர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தோம். ஜூலை 2 அன்று, உள்ளூர் ஊடகங்களில் அவர் பற்றிய செய்திகள் வெளியாகின." என்றார்.

அக்கம்பக்கத்தினரிடம் இந்த செய்தியை அறிந்தார் ஆஷா சர்மா.

இதையடுத்து காவல்நிலையத்திற்கு சென்ற ஆஷா சர்மா, தொலைந்து போன தன் மகனை கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் சென்றார். ஆஷா சர்மா அங்கு சென்றவுடனேயே அவர் தான் தன் தாய் என்று கூறியுள்ளார், ராஜூ எனும் பெயர் கொண்ட அந்த நபர். அவரை தொலைந்து போன தன் மகன் என எண்ணி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

திண்பண்டங்கள் பேக்கிங் சிறிய தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் கபில் தேவ் சர்மா, ராஜூ தான் தன் மகன் என்பதில் முழுதும் சமாதானம் அடையவில்லை என்றும் ஆனாலும் அதை எதிர்க்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

'மகளை வீட்டிலிருந்து வெளியேற்ற முயற்சி செய்தார்'

டேஹ்ராடூன், காஸியாபாத்

பட மூலாதாரம், Rajesh Dobriyal

படக்குறிப்பு, கபில் தேவ் சர்மா (நடுவில் இருப்பவர்) கூறுகையில், ராஜூ தன் மகளை வீட்டிலிருந்து வெளியேற்ற முயற்சித்ததாக தெரிவித்தார்.

கபில் தேவ் சர்மா கூறுகையில், "என் மகனை போன்றே அவர் வீட்டில் இருந்தார். இரு தினங்கள் அவர் நன்றாக இருந்தார், ஆனால் அதன் பின் சண்டை போட ஆரம்பித்தார்" என்கிறார்.

தன் மகளின் குழந்தைகளுடனும் அவர் சண்டை போட ஆரம்பித்ததாகவும் அவ்விரு குழந்தைகளை நோக்கி பலமுறை கை ஓங்கியதாகவும் கபில் சர்மா தெரிவிக்கிறார். கபிலின் மகள் ஷில்பியும் அவருடைய குழந்தைகளும் கபிலுடனேயே வசித்துவருகின்றனர்.

ஆஷா சர்மா கூறுகையில், " ஒவ்வொரு சிறிய பிரச்னைக்கும் தன் துணிகளை எடுத்துக்கொண்டு, தான் திரும்பி வர மாட்டேன் எனக்கூறி, வெளியே செல்வார். அவரை என் மனைவி சமாதானம் செய்வார். ஆனாலும் வெளியே செல்வார். எனினும், மாலையிலேயே மீண்டும் வீடு வந்துவிடுவார்."

ஆனால், கபிலின் மகளின் குழந்தைகளுடன் சண்டை மோசமானதால், அவருடைய மகள் ஷில்பி படேல் நகர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

குழந்தைகளை தன்னுடனேயே வைத்துக்கொள்ளுமாறும் ராஜூ அவரின் பெற்றோர்களுடன் இருக்கட்டும் எனவும் போலீசார் ஷில்பியை அறிவுறுத்தியதாக கபில் கூறுகிறார்.

நவம்பர் 21 அன்று, ராஜூ தான் டெல்லி செல்வதாகவும் வேலை கிடைத்தவுடன் குடும்பத்திற்கு சொல்வதாகவும் கூறிச் சென்றதாக ஷில்பி கூறுகிறார்.

ஆனால், அவர் பின்னர் குடும்பத்தை தொடர்புகொள்ளவே இல்லை, அவர் குறித்த தகவலும் தெரிய வரவில்லை.

காஸியாபாத் காவல்துறை கூறியது என்ன?

காஸியாபாத் குடும்பத்தில் தொலைந்துபோன சிறுவனின் பழைய புகைப்படம்
படக்குறிப்பு, காஸியாபாத் குடும்பத்தில் தொலைந்துபோன சிறுவனின் பழைய புகைப்படம்

அதன்பின், டெல்லி-என்சிஆர் பகுதிகளில் வெளிவரும் பத்திரிகைகளில் ராஜூ குறித்த செய்தி இடம்பெற்றுள்ளது.

காஸியாபாத்தின் கோடா காவல் நிலையம் சென்ற ராஜூ, இதே மாதிரியான கதையை கூறியுள்ளார்.

பள்ளியிலிருந்து திரும்பி வந்துகொண்டிருக்கும் போது தான் கடத்தப்பட்டதாக ராஜூ கூறியுக்ளார். தான் ராஜஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு ஆடுகளை மேய்த்ததாகவும் கூறியுள்ளார்.

டிரக் ஓட்டுநராக உள்ள சர்தாரின் உதவியால் எப்படியோ தப்பித்து, காவல் நிலையம் வந்ததாக கூறியுள்ளார்.

காஸியாபாத் காவல் கண்காணிப்பாளர் ரஜ்னீஷ் உபத்யாய் பிபிசியிடம் இதுகுறித்து கூறுகையில், அந்த இளைஞர் குறித்து சமூக ஊடகம் மற்றும் உள்ளூர் ஊடகங்களில் வெளியிட்டதாகவும் அதைத்தொடர்ந்து, பல குடும்பங்கள் காணாமல் போன தங்கள் குடும்ப உறுப்பினர்களை தேடி காவல் நிலையம் வந்ததாகவும் தெரிவித்தார்.

"ராஜூ லீலாவதியை பார்த்ததும் அவரை ஆரத்தழுவி, கண்ணீர் விட்டார். அதன்பின், லீலாவதி ராஜூவின் உடலில் சிறுவயதிலிருந்த அடையாளங்கள் இருக்கிறதா என்று பார்த்தார். பின், சிறுவயது புகைப்படத்தைக் காட்டி அவரிடம் கேட்டார். அப்போது, ராஜூ தன் சகோதரிகளின் பெயர்களை சரியாக கூறியுள்ளார்" என்றார் அவர்.

மேலும், "பள்ளியிலிருந்து தன் சகோதரியுடன் குடை பிடிப்பது தொடர்பாக சண்டை போட்டதாகவும் அப்போது தான் கடத்தப்பட்டதாகவும் கூறினார் ராஜூ. இதே கதையைத்தான் அந்த குடும்பமும் கூறியது. இதை பொருத்திப் பார்த்த பின்னரே அவரை அக்குடும்பத்திடம் ஒப்படைத்தோம்." என்றார்.

ராஜூ தன் தாய் என கூறிய லீலாவதி பிபிசியிடம் கூறுகையில், தன் கணவர் துலாராம் மற்றும் மகள்கள் அவருடைய அடையாளங்களை உறுதிசெய்த பின்னரே உறுதிப்படுத்தியதாக கூறினார்.

இதுவரை போலீசார் கண்டுபிடித்தது என்ன?

அங்க அடையாளங்களை வைத்து ராஜூ தான் தன் மகன் என உறுதி செய்ததாக கூறுகிறார் லீலாவதி
படக்குறிப்பு, அங்க அடையாளங்களை வைத்து ராஜூ தான் தன் மகன் என உறுதி செய்ததாக கூறுகிறார் லீலாவதி

ராஜூ வேறொரு குடும்பத்திடமும் இதே கதையை கூறியது குறித்து அறிந்த காஸியாபாத் போலீஸ் அவரை நவ. 30 அன்று காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.

இந்த செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், காஸியாபாத்தில் உள்ள குடும்பத்தை பிபிசி தொடர்பு கொண்டது. தங்கள் வீட்டுக்கு காவல்துறையினர் இருமுறை வந்ததாக, இளைய மகள் ஹேமா தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "ஏன் நான்கு சகோதரிகள் இருப்பதாக கூறினாய் என ராஜூவிடம் கேட்டோம். அப்போது, தன்னுடன் பிறந்தவர்கள் 4 பேர் என்றும் அதில் மூன்று பேர் சகோதரிகள், ஒருவர் சகோதரர் என்றும் கூறியதாகவும் ஆனால் செய்தித்தாள் நான்கு சகோதரிகள் என எழுதிவிட்டதாக தெரிவித்தார். எங்களால் எதையும் நம்ப முடியவில்லை" என்றார்.

டிரான்ஸ் ஹிண்டன் பகுதியின் துணை ஆணையர் நிமிஷ் பட்டீல், ராஜூ அல்லது பீம் சிங் என்ற பெயருடைய அந்த நபர்தான் டேஹ்ராடூனில் வசித்துவந்தவர் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

"இப்போது ராஜூ, லீலாவதி குடும்பம் தான் தன்னுடைய உண்மையான குடும்பம் என்றும், டேஹ்ராடூனில் இருந்த குடும்பம் உண்மையான குடும்பம் அல்ல என்பதை உணர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதன் பிறகே எதையும் சொல்ல முடியும் என்றும் அவர் கூறினார்.

ராஜூ தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல என டேஹ்ராடூனில் உள்ள சர்மா குடும்பம் தெரிவித்துள்ளது. ராஜூ காவலில் எடுக்கப்பட்டிருப்பது குறித்து கபில் சர்மா நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். ஆனால், காஸியாபாத்தில் உள்ள குடும்பம் இன்னும் குழப்பத்துடன் இருப்பதாக பட்டீல் தெரிவித்தார்.

லீலாவதியின் மகள் ராஜோ பிபிசியிடம் கூறுகையில், ராஜூவுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்வோம் என்றும், தன்னுடைய தந்தைக்கும் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)