எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை புறக்கணித்தது ஏன்?- செங்கோட்டையன் கொடுத்த விளக்கம்

- எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
- பதவி, பிபிசி தமிழ்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் புறக்கணித்தது, தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது.
இந்த நிலையில் இன்றிரவு (பிப்ரவரி 12) கோபியில் நடந்த எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய செங்கோட்டையன், முதலில் 250 பேர்களின் பெயர்களை வாசித்தார். ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரை இறுதிவரை அவர் சொல்லவேயில்லை.
மாறாக, 'கழகப்பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர்' கட்டளைப்படி இந்த கூட்டம் நடக்கிறது என்று மட்டும் சொன்னார்.

பெரும்பாலான நேரம், எம்ஜிஆர், ஜெயலலிதாவைப் பற்றியே அவரது பேச்சு இருந்தது. அவர்கள் இருவருடனும் தனக்கிருந்த அரசியல் நெருக்கத்தையும், அவர்கள் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் பற்றி பேசினார்.
''இன்று காலையில் வீட்டில், என்ன சொல்லப் போகின்றீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டார்கள். அப்போது சொன்னதைத் தான் இப்போதும் சொல்கிறேன். ஒன்றும் சொல்லப்போவதில்லை. 43 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் அனைத்தையும் அமைதியாகக் கடந்தவன் நான்."
"திட்டினாலும் சிரித்துவிட்டுச் சென்று விடுவேன். எத்தனை ஆண்டுகள், எத்தனை தலைவர்களுடன் நான் பயணம் செய்திருக்கிறேன். என்னை யாரும் சிக்க வைக்க முடியாது.'' என்று பேசினார் செங்கோட்டையன்.
'கோட்டையைச் சுற்ற வேண்டியவர்கள், செங்கோட்டையனைச் சுற்றுகிறார்கள்'

கோட்டையைச் சுற்ற வேண்டியவர்கள், செங்கோட்டையனைச் சுற்றி வருகிறார்கள் என்று தன் மீதான ஊடகக் கவனத்தைப் பற்றிக் குறிப்பிட்டு அவர் பேசினார்.
தன்னிடம் செய்தி கிடைக்குமென்று செய்தியாளர்கள் படும் கஷ்டத்தைப் பார்த்து வருந்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
"செய்தியாளர்கள் ஏதாவது கிடைத்தால் என்னையும், எதிர்க்கட்சியினரையும் துாங்கவிடாமல் செய்வதற்காக காத்திருந்தனர். எதுவும் கிடைக்காது என்று அவர்களிடம் தெரிவித்து விட்டேன்" என்றார்.
இந்தக் கூட்டத்தில், தனக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது, பாராட்டு விழாவில் பங்கேற்காததற்கான காரணங்களை அவர் விளக்கினார்.
''என் வீட்டில் நான் சொல்லாமலே போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளனர். பாதுகாப்பு என்பது காவல்துறையின் பணி. அவர்களாகவே போட்டார்கள், எனக்குத் தெரியாது. நான் சொல்லவேயில்லை. அதனால் சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். நேர்மையாக நான் கட்சிக்குப் பாடுபடுவேன். எத்தனையோ வாய்ப்பு மறுக்கப்பட்டபோதும் நான் இந்த இயக்கத்துக்காக இருக்கிறேன்.'' என்றார் அவர்.
ஜெயலலிதா தன்னைப் பற்றி பல மேடைகளில் பாராட்டிப் பேசியதைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், ஒரு நிகழ்வில் ஜெயலலிதா பேசிய ஆடியோவை மைக்கில் ஒலிபரப்பச் சொன்னார்.
அதில் ஜெயலலிதா, ''சறுக்கலுக்கோ, வழுக்கலுக்கோ இடம் கொடுக்காத கொள்கை உறுதியும், தலைமையின் மீது விசுவாசமும் உள்ளவராக இருப்பதால்தான் இத்தனை சிறப்புகளை செங்கோட்டையன் பெற்றுள்ளார்'' என்று பேசும் பகுதியை ஒலிபரப்ப வைத்தார்.
இன்றைக்கு மட்டும் மிகவும் ஜாக்கிரதையாகப் பேசுவதாகத் தெரிவித்த அவர், ''என்னை எங்கேயும் கொண்டு போய் விட முடியாது'' என்றார்.

பட மூலாதாரம், @KASengottaiyan
'என்னை சோதிக்காதீர்கள்'
அதன்பின், பாராட்டு விழாவைப் புறக்கணித்தது பற்றிப் பேசிய செங்கோட்டையன், ''பாராட்டு விழாவுக்கு அழைக்க 5 பேர் வந்தார்கள். அந்த விழா அழைப்பிதழில் தலைவர் படம், அம்மா படம் (எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள்) இல்லை என்றுதான் சொன்னேன். அதனால்தான் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. புறக்கணிக்கவில்லை; உணர்வை வெளிப்படுத்தியதாகக் கூறினேன்.'' என்றார்.
''எத்தனையோ வாய்ப்புகள் மறுக்கப்பட்டபோதும் இயக்கம் ஒன்றுபட வேண்டும்'' என்று செயல்படுவதாகக் செங்கோட்டையன் குறிப்பிட்டார் . இவற்றைச் சொன்னபின், மெல்லிய குரலில் ''என்னை சோதிக்காதீர்கள். அதுதான் நான் விடுக்கும் வேண்டுகோள்.'' என்றார்.
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தன்னுடைய பதவி பறிக்கப்பட்டதற்கான விளக்கத்தையும் மேடையில் அவர் சுருக்கமாகத் தெரிவித்தார்.
''ஜெயலலிதாவிடம் இவ்வளவு நம்பிக்கையைப் பெற்றவராக இருந்தேன். அப்புறம் ஏன் கழற்றிவிட்டார் என்று கேட்கலாம். அதைப்பற்றி இப்போது சொன்னால் தவறாகிவிடும், அவருக்கு அப்போது என்ன பிரஷர் இருந்தது என்று எனக்குதான் தெரியும்.'' என்றார்.
இறுதியாக திமுக ஆட்சி பற்றி சில வரிகளில் விமர்சனம் செய்த செங்கோட்டையன், ''மீண்டும் தமிழகத்தில் தொண்டர்களோடு தொண்டராக இருந்து பணியாற்றுவேன்'' என்று கூறி பேச்சை முடித்துக் கொண்டார்.
சர்ச்சையின் பின்னணி என்ன?

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு, அத்திக்கடவு–அவிநாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் இத்திட்டத்தால் பயன்பெறும் 3 மாவட்ட விவசாயிகள் சார்பில், கோவை மாவட்டம் அன்னூர் அருகில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அந்த விழாவில், அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரும், இத்திட்டத்தில் பயன்பெறும் பகுதிகளில் ஒன்றான கோபி சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
அதற்கு மறுநாள், சென்னை இராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்தபடி, டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை, எடப்பாடி பழனிசாமி காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார்.
அந்த நிகழ்விலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அத்திக்கடவு–அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில் நடந்த பாராட்டு விழா அழைப்பிதழில், 'எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இடம் பெறாததால் அதில் பங்கேற்கவில்லை' என்று கூறினார்.
''புறக்கணிப்பை விட, என் உணர்வை வெளிப்படுத்தியுள்ளேன்'' என்று அவர் கூறியது, விவாதங்களுக்கு வழிவகுத்தது. அதைத் தொடர்ந்து, அதிமுகவுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது என்றும், கட்சிக்குள் பிளவு ஏற்படும் என்றும் உள்ளூர் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டன.
'கட்சியில் அவர் பரிந்துரைத்த சிலருக்கு கட்சிப்பதவி தரப்படவில்லை என்ற அதிருப்தியில் தான் இந்தக் கருத்தை அவர் தெரிவித்தாக', பிபிசி தமிழிடம் பேசிய பெயர் கூற விரும்பாத அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார்.
ஆனால் செங்கோட்டையன் இதுபற்றி எந்த விளக்கமும் தரவில்லை.

பட மூலாதாரம், Special arrangement
அதேபோல, எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் செங்கோட்டையனின் கருத்துக்கு பதில் தரப்படவில்லை. கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மட்டும், ''அது விவசாயிகளால் நடத்தப்பட்ட விழா என்பதால்தான் அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இடம் பெறவில்லை. வேறு எந்த பிரச்னையும் இல்லை.'' என்று விளக்கம் அளித்தார்.
ஆனால் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், செங்கோட்டையன் கூறியது குறித்து பல கருத்துகளைத் தெரிவித்தார்.
''இதன் மூலமாக செங்கோட்டையனின் ஆதங்கம் வெளிப்பட்டுள்ளது. தொடர் தோல்விகள் மூலம் அதிமுகவை அழிக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் ஒன்று சேர வேண்டுமென்ற தன் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் செங்கோட்டையன் கருத்து அமைந்துள்ளது'' என்றார் அவர்.
இதுகுறித்த விவாதங்கள் வலுத்து வந்த நிலையில், செங்கோட்டையனின் வீட்டுக்கு, பிப்ரவரி 11 ஆம் தேதியிலிருந்து திடீரென போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
2 சார்பு ஆய்வாளர்கள் மற்றும் 2 தலைமைக் காவலர்கள் என மொத்தம் 4 பேர், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

பட மூலாதாரம், Special arrangement
இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹரிடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு, ''அவர்கள் தரப்பிலிருந்து பாதுகாப்பு கோரி எந்த மனுவும் தரப்படவில்லை. அங்கே நிறைய கூட்டம் வருவதைப் பார்த்து, சூழ்நிலைக்கேற்ப பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுபோன்று அரசியல் தலைவர்கள் வீடுகளில் கூட்டம் அதிகமாகச் சேரும்போது, போலீஸ் பாதுகாப்பு போடப்படுவது வழக்கமான நிகழ்வு தான்.'' என்றார்.
'கேட்காமலே போலீஸ் பாதுகாப்பு போட்டு, பிறர் கவனத்தைத் திருப்புவதற்கு திமுக அரசு முயற்சி செய்வதாக' அதிமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.
மாவட்டச் செயலாளர் என்பதாலும், நீண்ட காலமாக அமைச்சராக இருந்தவர் என்பதாலும் அவர் வீட்டுக்கு எப்போதுமே கூட்டம் வரும் என்பது அவர்கள் கருத்தாகவுள்ளது.
இதுகுறித்து பேசிய ஈரோடு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் தென்னரசு, ''அவரைப் பார்க்க எப்போதுமே கூட்டம் வருவது இயல்பு. அவர் கூறிய கருத்துக்குப் பின், கொஞ்சம் கூடுதலாக கூட்டம் வரலாம். ஆனால், கேட்காமலே போலீஸ் பாதுகாப்பு போட்டு, பிரச்னையை உருவாக்க திமுக முயற்சி செய்கிறது.'' என்றார்.
பாராட்டு விழாவைப் புறக்கணித்ததற்கான காரணம் பற்றி பேட்டியளித்தபின், கடந்த 3 நாட்களாக எந்தக் கருத்தையும் வெளியிடாமல் செங்கோட்டையன் மெளனம் காத்து வந்தார். அத்துடன் வீட்டை விட்டு வெளியிலும் வராமல் இருந்தார்.
இன்று காலையில் கோவை பேரூர் பட்டீசுவரர் கோவிலுக்கு வந்த அவர், சிறிது நேரம் வழிபாடு செய்து விட்டு, உடனே திரும்பினார். இந்தநிலையில் இன்று மாலை நடந்த அதிமுக கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












