சிவகங்கை: புல்லட் ஓட்டியதற்காக தலித் இளைஞர் கைகள் வெட்டப்பட்டதா? காவல்துறை கூறுவது என்ன?

அய்யாசாமி
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மேலப்பிடவூர் கிராமத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞரை மாற்று சாதியை சேர்ந்த இளைஞர்கள் வாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த இளைஞர் இரண்டு கைகளிலும் பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலித் சமூகத்தை சேர்ந்தவர் ஊருக்குள் புல்லட் வண்டியை ஒட்டியதற்காக மாற்று சாதியை சேர்ந்த இளைஞர்கள் கைகளை வெட்டியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை சிவகங்கை மாவட்ட காவல்துறை மறுத்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

'சாதி பெயரை சொல்லி அவதூறாக பேசினர்'

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் மேலப்பிடவூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாசாமி (19). தலித் சமூகத்தை சேர்ந்த இவர் சிவகங்கையில் இயங்கி வரும் அரசு கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இளைஞர் அய்யாசாமியின் குடும்பம் அந்த கிராமத்தில் புதிய வீடு கட்டி வாழ்ந்து வந்து வருகின்றனர். ''இதே கிராமத்தில் வசித்து வரும் மாற்று சாதியை சேர்ந்த இளைஞர்கள் வினோத், ஆதீஸ்வரன், வல்லரசுக்கு இது பிடிக்கவில்லை'' என அய்யாசாமியின் சித்தப்பா பூமிநாதன் கூறுகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய பூமிநாதன், ''அதே போல ஒரு வருடத்திற்கு முன்பு, நாங்கள் புதிதாக புல்லட் பைக் வாங்கியதும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. வாங்கிய மறுநாளே அந்த பைக்கை அடித்து உடைத்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அதன் பிறகு ஊரில் வைத்து ஊர் பெரியவர்கள் சமரசம் பேசி முடித்தனர். இந்தநிலையில், கடந்த புதன்கிழமை மாலை இளைஞர் அய்யாசாமி கல்லூரி முடித்துவிட்டு புல்லட் பைக்கில் வீடு திரும்பும்போது, அந்த இளைஞர்கள் சாதி பெயரை சொல்லி அவதூறாக பேசி அய்யாசாமியின் இரண்டு கைகளிலும் வாளால் வெட்டியுள்ளனர்''என்கிறார்.

தாக்குதலுக்கு உள்ளான அய்யாசாமி வீடு
படக்குறிப்பு, தாக்குதலுக்கு உள்ளான அய்யாசாமி வீடு

மூவர் கைது

இரு கைகளிலும் காயம் அடைந்த அய்யாசாமி பைக்கை அங்கேயே விட்டு விட்டு வீட்டுக்கு ஓடி வந்தார் என்கிறார் பூமிநாதன்.

'''தலித் சமூகத்தில் பிறந்துவிட்டு எங்க முன்னாடியே நீ எப்படி புல்லட் ஓட்டலாம்" என சொல்லிக் கொண்டே இளைஞர் வினோத் வாளால் வெட்டியதாக அய்யாசாமி என்னிடம் கூறினார்", என்கிறார் பூமிநாதன்.

இது குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் அய்யாசாமியின் தாயார் செல்லம்மாள் புகார் அளித்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து வினோத், ஆதீஸ்வரன் மற்றும் வல்லரசு ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அய்யாசாமியின் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு மருத்துவமனைக்கு சென்ற நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டை அடித்து நொறுக்கியதாக அய்யாசாமியின் அம்மா குற்றஞ்சாட்டுகிறார். இந்த தாக்குதலில் வீட்டின் ஜன்னல், கதவு, சுவிட்ச் போர்டு, மேற்கூரை ஓடு ஆகியவற்றும் சேதம் அடைந்துள்ளது.

சிவகங்கை

''தொடர்ந்து இந்த கிராமத்தில் வாழ அச்சமாக உள்ளதால் அரசு உடனடியாக இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என அய்யாசாமியின் சித்தப்பா பூமிநாதன் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து சிவகங்கை காவல்துறை சார்பில் செய்தி குறிப்பு வாயிலாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

''அய்யாசாமி தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரி முடித்து மாலையில் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தபோது மேலப்பிடாவூர் சமுதாயக் கூடத்தில் வினோத்குமார், ஆதீஸ்வரன், வல்லரசு, ஆகிய மூவரும் குடிபோதையில் அமர்ந்திருந்துள்ளனர். கையில் வெட்டுப்பட்ட அய்யாச்சாமியும் வினோத்குமாரும் நண்பர்கள், ஆதீஸ்வரன் அவரது பக்கத்து வீட்டுக்காரர் என்பதால் வாகனத்தை நிறுத்தி அய்யாசாமி வினோத்தை அவரது பட்டப்பெயரான 'அலர்ட்' என கூப்பிட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது'', என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட வினோத், வல்லரசு
படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட வினோத், வல்லரசு

மேலும், ''இதில் வினோத்குமார் தான் வைத்திருந்த வாளால் அய்யாச்சாமியை வலது மற்றும் இடது கைகளில் வெட்டியதில் அவருக்கு இடது மணிக்கட்டில் வெட்டுக்காயமும், வலது கை முழங்கை உட்புறம் வெட்டுக்காயம் ஏற்பட்டு மானாமதுரை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் வினோத்குமார், ஆதீஸ்வரன், வல்லரசு ஆகிய மூவரும் அன்றிரவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டுள்ளனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)