காதலர் தினம்: உலகம் முழுக்கவே காதலிக்க ஆள் இல்லாமல் தவிக்கிறார்களா? ஏன் இந்தச் சிக்கல்?

- எழுதியவர், ஸ்டெஃபனி ஹெகார்டி
- பதவி, பிபிசி உலக சேவை
இவ்வளவு வயதாகியும் காதலனோ, காதலியோ கிடைக்காமல் தனியாக இருக்கிறோமே என எப்போதாவது வருந்தியது உண்டா?
உலகம் முழுவதுமே இளைஞர்கள் தங்கள் காதலியை அடைவதற்காகப் போராடுகின்றனர். இரான், மெக்சிகோ, பெரு, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா என உலகின் பலதரப்பட்ட நாடுகளிலும் தம்பதிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது.
சீனாவில் 2014ஆம் ஆண்டில் 13 மில்லியன் திருமணங்கள் நடைபெற்ற நிலையில், 2024இல் சுமார் 6 மில்லியன் திருமணங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளன.
ஃபின்லாந்து நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பு, தற்போது இணைந்து வாழும் தம்பதிகள்கூட, எதிர்காலத்தில் ஒரு குடும்பத்தை உருவாக்குதைக் காட்டிலும் பிரிந்து செல்வதற்கான வாய்ப்பே அதிகமாக இருப்பதாகக் கூறுகிறது.

நீடித்திருக்கும் உறவு கிடைப்பது ஏன் போராட்டமாக இருக்கிறது?
பிரேசிலின் சான்டா காத்தரினாவில் வசிக்கும் 36 வயதான ஃபெலிப், தான் ஒரு போதும் காதலில் இருந்ததில்லை எனக் கூறுகிறார். இதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட போதும் தன்னால் ஒரு துணையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார் அவர்.
பள்ளி படிக்கும்போதே தனக்குப் பிடித்த பெண்களுக்கு ஃபெலிப் காதல் கடிதங்களை எழுதினாலும், ஒருபோதும் சாதகமான பதில் கிடைத்தது இல்லை.
அவர் பல்கலைக் கழகத்தில் இருக்கும்போது பெண்கள் தன்னுடன் அதிக நேரம் செலவிடுவார்கள் என்ற நம்பிக்கையில், அவர்களுக்குப் பாடங்களில் உதவி செய்துள்ளார்.
தனியாகவே 30 வயதை எட்டிய நிலையில் பெண்களுடன் எப்படி உறவை ஏற்படுத்திக் கொள்வது என்பதை அறிந்து கொள்வதற்காக தெரபி ஒன்றுக்கும் சென்றுள்ளார். ஆனால் இதுவரை எதுவும் பலன் தரவில்லை.
"காதல் வாழ்க்கைக்காக என்ன செய்வது எனத் தெரியாத மனிதன் நான்" என்கிறார் ஃபெலிப்.
நகல் எழுத்தாளராக (Copy Editor) வேலை பார்க்கும் ஃபெலிப் அவரது, 20 வயதுகளில் நிலையான வேலையின்றிக் கழித்துவிட்டார். இதுதான் பெண்களைக் கவர்வதற்கான வாய்ப்பைக் கெடுப்பதாக அவர் கருதுகிறார்.
"ஆனால் இது எனக்கு மட்டும் நடக்கும் ஒன்றல்ல" எனக் கூறும் ஃபெலிப், இன்னும் பல ஆண்கள் தோல்வியடைந்ததாக உணர்ந்து, டேட்டிங்கை கைவிட்டு விடுகின்றனர் என்கிறார்.
சரிவை சந்திக்கும் டேட்டிங் செயலிகள்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க தரவுகளின்படி, 18 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள், குறிப்பாக ஆண்கள், மற்ற எந்த வயதினர், பாலினத்தவரை விடவும், தனியாக நேரம் செலவிடுகின்றனர். இது 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததற்கு முற்றிலும் முரணானது. அப்போது இதே வயது பிரிவினர் 30 மற்றும் 40 வயதினரைப் போலவே 50 வயதினரைவிட அதிகமாக 'சோஷியலைஸ்' அதாவது சமூகத்துடன் உறவாடி இருந்தனர்.
தற்போது மற்றவர்களுடன் நேரம் செலவிடுவதற்குப் பதிலாக இளைஞர்கள் சமூக ஊடகங்களிலும், கேமிங், தொலைக்காட்சி என நேரத்தைப் போக்குகின்றனர். ஃபெலிப் வசிக்கும் பிரேசில் உலகிலேயே அதிகமாக சமூக ஊடகம் பயன்படுத்தும் நாடாக உள்ளது.
இளைஞர்கள் ஆன்லைனில் அதிக நேரம் செலவிடுவதால், அவர்கள் அங்கும் டேட்டிங் செய்யலாம் என்று எண்ணலாம். ஆனால் டேட்டிங் செயலிகளின் பயன்பாடும் குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை.
சந்தை நுண்ணறிவு நிறுவனமான சென்சார் டவரின் கூற்றுப்படி, உலகின் 6 பெரிய டேட்டிங் செயலிகளின் பதிவிறக்கங்கள் 2024ஆம் ஆண்டில் 18 சதவீதம் குறைந்துள்ளன. இது அந்த நிறுவனங்களின் வரலாற்றிலேயே முதல் சரிவு.
"இத்தகைய டேட்டிங் செயலிகளில் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். ஆனால் உண்மையான நோக்குடன் இருக்கும் நபர்களின் தரம் குறைவாக இருப்பதால், பயனர்கள் விரக்தியும், சோர்வும் அடைந்து திணறுகின்றனர்" என்கிறார், அரிசோனா பல்கலைக் கழகத்தின் உறவுகள் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தின் இயக்குநர் லீசல் ஷராபி.
பயனர்கள் தங்கள் இணையை எவ்வாறு கண்டறிகிறார்கள் என்பதில் இந்த செயலிகளில் புதுமை ஏதும் இல்லை என்பது லீசல் ஷராபி கண்டறிந்த பிரச்னைகளில் ஒன்று. பெரும்பாலான செயலிகளில் பெண்களைவிட அதிக எண்ணிக்கையில் ஆண் பயனர்கள் உள்ளனர்.
"ஆண்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்வதால், இது விரக்தியைக் கொடுக்கும்" என்கிறார் ஷராபி. அதே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் ஆண்கள் தொடர்புகொள்ள முனைவதால் பெண்கள் திணறுகின்றனர்.
டேட்டிங்கில் பொறுப்புணர்வற்ற தன்மையை செயலிகள் அறிமுகப்படுத்தி இருப்பதாகவும், இது முரட்டுத்தனமான அல்லது கவனக் குறைவான நடத்தைக்கு வழிவகுக்கும் எனவும் ஷராபி நம்புகிறார். "ஸ்மார்ட் போனில் ஸ்வைப் செய்துகொண்டே செல்வதால், நீங்கள் கையாளும் நபர்களை உயிரற்ற பொருள் போன்று உணரக்கூடும்" என்பது அவரின் கருத்து.
பெண்ணிய முற்போக்கு சிந்தனைகளின் தாக்கம்

பட மூலாதாரம், Getty Images
நைஜீரியாவின் அபுஜாவை சேர்ந்த ஹசானா, தான் ஒருபோதும் டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்தியதில்லை எனக் கூறுகிறார். "இதில் (டேட்டிங் செயலி) என்னை நானே ஏலம் விட்டுக் கொள்வதைப் போல் உணர்ந்தேன்" என்கிறார் அவர்.
ஆனால் தன்னுடைய மதிப்பீடுகளைப் புரிந்துகொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், செயலி போன்ற இணைய வழிகள் இல்லாது, நேரடியாக டேட்டிங் செல்வதையும் கடினமான ஒன்றாக ஹசானா உணர்கிறார்.
"நான் ஒரு பெண்ணியவாதி. சில விஷயங்களில் இனியும் என்னால் கண்ணை மூடிக் கொண்டு இருக்க முடியாது" என்கிறார் ஹசானா.
ஹசானாவுக்கு 26 வயதாகிறது. பயிற்சி பெற்ற வழக்கறிஞரான அவர், வெற்றிகரமான சலவைத் தொழிலை நடத்தி வருகிறார். இது தவிர குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக அரசு சாரா தொண்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
நைஜீரியாவில், இணைய வசதியின் அணுகல் எளிதாகியிருப்பது, குடும்ப வன்முறைகள் தொடர்பான புகார்களைப் பதிவு செய்வதில் முன்னெப்போதும் இல்லாத சுதந்திரம் பெண்களுக்குக் கிடைத்துள்ளதாக அவர் நம்புகிறார். அதாவது மோசமான உறவின் அபாயங்களை அவரது தலைமுறை நன்றாக அறிந்து வைத்துள்ளது.
ஆண், பெண்களிடையே அதிகரிக்கும் இடைவெளி
அமெரிக்கா, சீனா, தென்கொரியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் எடுக்கப்பட்ட்ட கணக்கெடுப்பு தகவல்களின்படி, பெண்ணுரிமை சார்ந்து முற்போக்காக இருக்கும் பெண்களுக்கும், இந்த முற்போக்குத் தன்மை குறைவாக இருக்கும் ஆண்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டே வருகிறது.
சமூகவியலாளரான முனைவர் ஆலிஸ் எவான்ஸ், இதை மிகப்பெரும் பாலின வேறுபாடு என அழைப்பதோடு, இது தொடர்பான ஒரு புத்தகத்தையும் எழுதி வருகிறார். இணையத்தில் நாம் கலாசாரத்தை நுகரும் விதமும் இதற்கான காரணமாக இருக்கலாம் என நம்புகிறார்.

பட மூலாதாரம், Getty Images
"பெண்கள் தங்களின் பெண்ணிய விருப்பங்களுக்கு நிறைவளிக்கும் விதமான நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். ஆனால் இதே வேகத்தில் ஆண்கள் முன்னேற்றமடையாமல் போகலாம்" என ஆலிஸ் கூறுகிறார்.
ஹசானாவுக்கு ஆலிஸ் எவனின் கருத்து உண்மையாகத் தோன்றுகிறது. தனக்கு விருப்பமுடைய ஆண் ஒருவரைப் பார்த்ததுமே அவர், பெண்ணிய வெறுப்பு பார்வைகளைக் கொண்ட சமூக ஊடக பக்கங்களைப் பின் தொடர்வதையும், பெண்ணிய வெறுப்பு பின்னூட்டங்களுக்கு லைக் செய்வதையும் ஹசானா அடிக்கடி பார்த்திருக்கிறார். "இது ஒரு விதமான அச்சத்தைத் தருகிறது" என்கிறார் ஹசானா.
பொருளாதாரம் ஒரு காரணமாக உள்ளதா?
இரானில் 40 வயதான நாஸிக்கும் இதே பிரச்னையை எதிர்கொள்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக சிங்கிளாக இருக்கும் அவர் தனக்கான காதலைத் தேடி வருகிறார்.
"நான் கொஞ்சம் பெண்ணியவாதி" எனக் கூறும் அவர், "நான் வேலை செய்ய விரும்புகிறேன். எனது துணையைப் போலவே பணம் சம்பாதிக்க எண்ணுகிறேன். ஆனால் அவர்கள் 'இவள் என்னுடன் போட்டியிட விரும்புகிறாள்' என்று நினைக்கின்றனர்."
ஆனால் பல பெண்கள் இன்னமும் பாரம்பரியமான பழமைவாத குணங்களில் வேரூன்றிய ஆண் துணைக்கான எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர்.
நிதிசார்ந்த விவகாரங்களில் தங்களைப் போன்று பாதுகாப்பாக இல்லாத ஒருவரை துணையாகத் தேர்ந்தெடுக்க நாஸி மற்றும் ஹசானா தயக்கத்துடன் உள்ளனர்.
இரண்டு பெண்களுமே முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ளனர், நல்ல வேலையில் உள்ளனர். அவர்கள் தங்களுக்குச் சமமானவர்களாக கருதக் கூடிய ஆண்களின் எண்ணிக்கை சுருங்கிக் கொண்டே வருகிறது.
பெரும்பாலான நாடுகளில் பெண் பட்டதாரிகள் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் உள்ளனர். பள்ளிகளில் ஆண்களைவிட பெண்கள் சிறப்பாகச் செயல்படுகின்றனர்.
மனிதத் தொடர்புகளை தவிர்க்கிறோமா?

பட மூலாதாரம், Getty Images
தனியாக இருப்பதை களங்கமாகக் கருதுவது குறைவாக இருப்பதால், டேட்டிங்கை முற்றிலுமாகத் தவிர்ப்பது எளிதாக இருக்கிறது என்கிறார் முனைவர் ஆலிஸ் எவான்ஸ்.
"உயர்தர தனிநபர் பொழுதுபோக்குகளின் எழுச்சியால், டேட்டிங் உங்களுக்கு சலிப்பாகத் தோன்றினால், வீட்டிலேயே தங்கி பிரிட்ஜர்டன் தொடர் பாருங்கள் அல்லது வீடியோ கேம்களை விளையாடுங்கள்" என அவர் கூறுகிறார்.
அதே நேரத்தில் மோசமான துணையைத் தேர்ந்தெடுக்கும் விதமான அழுத்தம் இல்லாமல் இருப்பது முற்றிலும் நல்ல விஷயம்தான் என்று எவான்ஸ் ஒப்புக் கொள்ளும்போதும், இளம் வயதினர் ஒருவருக்கு ஒருவர் தொடர்பின்றி இருப்பது குறித்து கவலை கொள்கிறார்.
"ஆணும் பெண்ணும் ஒன்றாக நேரம் செலவிட்டு, நெருக்கமான எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளாதிருப்பது. உலகைப் பற்றிய தங்களின் வெவ்வேறு கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொள்ளாதிருப்பது போன்றவற்றால், மற்றவர் கண்ணோட்டத்தில் இருந்து பிரச்னைகளை அணுகும் பச்சாதாபத்தை வளர்த்துக் கொள்வது கடினமானதாகிவிடும்" என்று எவான் கூறுகிறார்.
டேட்டிங் செயலிகளைப் பற்றிப் படிக்கும் முனைவர் ஷராபி, நேரடியாக சந்தித்து பழகுவதற்கான சாத்தியங்களை தொழில்நுட்பம் நீக்கியுள்ளதை ஒப்புக் கொள்கிறார்.
"சில இளைஞர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டதன்படி, ஒரு பாரில் அழகான ஒருவரைப் பார்த்திருக்கலாம். ஆனால் அவர்கள் நேரடியாகச் சென்று அவர்களிடம் பேச மாட்டார்கள். இதற்குப் பதிலாக டேட்டிங் செயலிகளுக்குச் சென்று அவர்கள் இருக்கிறார்களா என்பதைப் பார்க்கிறார்கள்" என்கிறார் ஷராபி.
"நாம் முன்னெப்போதும் பழகியிருக்காத வகையில், பொதுவாகவே மனிதத் தொடர்புகளைத் தவிர்க்கிறோம்" என்பது ஷராபியின் வாதம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












