ஒரு சிகரெட் துண்டு 30 ஆண்டுகளாக தீர்க்கப்படாத கொலை வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

பட மூலாதாரம், Crown Office
- எழுதியவர், பால் ஓ'ஹரே
- பதவி, பிபிசி ஸ்காட்லாந்து நியூஸ்
மேரி மெக்லாஃப்லின் குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிகரெட் துண்டு, 30 ஆண்டுகளுக்கு முன்னர், அவரது கழுத்தை நெரித்துக் கொன்ற கொலையாளியை அடையாளம் காண்பதற்கான முதல் தடயத்தை வழங்கியது.
அதன் பின்னர், 11 குழந்தைகளின் தாயான மேரியைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட ஆடையில் உள்ள கயிற்றின் முடிச்சில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மரபணு விவரமும் கண்டுபிடிக்கப்பட்டது.
முடிவுக்கு வராத இந்த கொலை வழக்கில் சந்தேகத்துக்குரிய முக்கிய நபர், சம்பவத்தின்போது எடின்பர்க் சிறையில் இருந்தார். மறுபுறம், 58 வயதான மேரி, கிளாஸ்கோ நகரின் மேற்கு முனையில் இறந்து கிடந்ததால், இந்த வழக்கைத் துப்பறியும் அதிகாரிகள் ஆரம்பத்தில் குழப்பமடைந்தனர்.
ஆனால், மேரி கொல்லப்பட்டபோது, தொடர் பாலியல் குற்றவாளியான கிரஹாம் மெக்கில் பரோலில் இருந்ததை, ஆளுநரின் பதிவு புத்தகம் உறுதிப்படுத்தியது.

1984ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி அதிகாலையில் மேரியின் வீட்டை விட்டு வெளியேறிய சில மணிநேரங்களிலேயே அவர் சிறைக்குத் திரும்பினார் என்பதும் அந்தப் பதிவேட்டின் மூலம் அறியப்பட்டது.
பிபிசியின் 'மர்டர் கேஸ்: தி ஹண்ட் ஃபார் மேரி மெக்லாஃப்லின்ஸ் கில்லர்" (Murder Case: The Hunt for Mary McLaughlin's Killer) எனும் புதிய ஆவணப்படம், இந்த பழைய வழக்கு விசாரணையின் கதையைச் சொல்கிறது.
மேலும், அந்தக் கொலையால் மேரியின் குடும்பத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான தாக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.
"சில கொலைகள் உங்கள் நினைவில் தங்கிவிடும்," என்று இக்கொலை குறித்து கூறுகிறார் மூத்தத் தடயவியல் விஞ்ஞானி ஜோன் கோக்ரேன்.
மேலும், "மேரியின் கொலை வழக்கு நான் கையாண்ட வழக்குகளிலேயே, மனதுக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்திய தீர்க்கப்படாத வழக்குகளில் ஒன்றாகும்" என்றும் தெரிவித்தார் ஜோன்.
கொலை செய்யப்பட்ட இரவு என்ன நடந்தது?
கொலை செய்யப்படுவதற்கு முந்தைய இரவு மேரி , ஹைண்ட்லேண்ட் மதுபான விடுதியில் குடித்துவிட்டு டோமினோஸ் விளையாடினார். இப்போது 'டக் கிளப்' என அழைக்கப்படும் இந்த விடுதி, மான்ஸ்ஃபீல்ட் பூங்காவுக்கு எதிரே அமைந்துள்ளது.
இரவு 10:15 மணியிலிருந்து 10:30 மணிக்கு இடையில், ஹைண்ட்லேண்ட் தெருவில் அமைந்துள்ள மதுபான விடுதியில் இருந்து மேரி தனியாக வெளியேறினார். அங்கிருந்து ஒரு மைலுக்கும் குறைவான தூரத்தில் இருந்த தன் வீட்டுக்கு நடந்து சென்றார்.
வழியில், டம்பர்டன் சாலையில் உள்ள அர்மாண்டோ எனும் கடைக்குச் சென்றார். அங்கு ஊழியர்களுடன் நகைச்சுவையாக பேசிக்கொண்டே ஃப்ரிட்டர்ஸ் எனப்படும் பொறித்த உணவு மற்றும் சிகரெட்டுகளை வாங்கினார்.
மேரியை 'வீ மே' என்ற பெயரில் அறிந்திருந்த ஒரு டாக்ஸி ஓட்டுநர், மேரி தனது காலணிகளை கையில் ஏந்தியவாறு சாலையில் வெறுங்காலுடன் நடந்து செல்வதை பார்த்தார். மேலும், தூரத்தில் ஒருவர் மேரியை பின்தொடர்வதையும் பார்த்ததாக பின்னர் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Firecrest
கிராதி கோர்ட் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது மாடியில் உள்ள மேரியின் வீட்டுக்குள் மெக்கில் எப்படி உள்ளே நுழைந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால், வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை.
வீட்டுக்குள் உள்ளே நுழைந்ததும், தன் வயதை விட இரண்டு மடங்கு பெரியவரான மேரியின் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடங்கினார் மெக்கில் .
மொபைல்போன்கள் பயன்பாட்டில் இல்லாத அக்காலகட்டத்தில், கிளாஸ்கோ, லானார்க்ஷயர் மற்றும் அயர்ஷயர் ஆகிய இடங்களில் வாழ்ந்த தனது குடும்ப உறுப்பினர்களை அடிக்கடி தொடர்புகொள்ளாமல் வாழ்ந்துள்ளார் மேரி.
ஆனால், வாரத்துக்கு ஒருமுறை, அவரது மகன்களுள் ஒருவரான மார்ட்டின் கல்லன் மேரியைப் பார்க்க வருவார்.
அப்போது 24 வயது இளைஞனாக இருந்த மார்ட்டின், 1984ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி அன்று மேரியின் வீட்டுக்குச் சென்றபோது, அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. பிறகு அவர் வீட்டின் கடிதப் பெட்டியைத் திறந்தபோது உள்ளிருந்து "மோசமான நாற்றம்" வீசியது.
வீட்டின் உள்ளே ஒரு மெத்தையில் படுத்த நிலையில் இறந்து கிடந்தார் மேரி.
அவரது போலி பற்கள் தரையில் கிடந்தன, மேலும் மதுபான விடுதிக்குச் சென்றபோது, அவர் அணிந்திருந்த புதிய பச்சை நிற ஆடையின் பின்புறம் அவருக்கு முன்புறமாக அணிவிக்கப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், Firecrest
முன்னாள் மூத்த விசாரணை அதிகாரி இயன் விஷார்ட் குற்றம் நடந்த இடத்தைக் "கொடூரமான இடம்" என்று விவரித்தார்.
மேலும், "சோகம் என்னவென்றால், அவர் கொலை செய்யப்பட்டபோது, கொலையாளியின் கண்களை நேராக பார்த்துக்கொண்டிருந்திருப்பார்" என்றும் தெரிவித்தார்.
அதன் பிறகு, மேரி கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டது பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டது. மேலும் அவரது உடல் கண்டுபிடிக்கப்படுவதற்கு குறைந்தது ஐந்து நாட்களுக்கு முன்பே இறந்திருப்பார் என்பதும் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
விசாரணையில் நீடித்த குழப்பம்
மேரியின் கொலைக்குப் பிறகு, துப்பறிவாளர்கள் அதற்கு அடுத்த மாதங்களில் பல்வேறு நபர்களிடமிருந்து பெறப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட வாக்குமூலங்களை சேகரித்தனர். ஆனால், கொலையாளியை கண்டுபிடிக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
அடுத்த ஆண்டு, விசாரணை முடிந்துவிட்டதாக மேரியின் குடும்பத்தினரிடம் கூறப்பட்டது. இருப்பினும், குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர், மேரியின் மகள் ஜீனா மெக்கேவினிடம், "நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள்" என்று கூறினார்.

வெவ்வேறு காலகட்டங்களில் இரு நபர்களுடன் வாழ்ந்த மேரிக்கு அவர்கள் மூலமாக, 11 குழந்தைகள் பிறந்தனர். மேலும், உள்ளூரில் நன்கு அறியப்பட்டவராகவும் மேரி இருந்தார்.
ஆனால் மேரி தனது முதல் ஆறு குழந்தைகளையும், இரண்டாவது துணைவருடன் பெற்ற ஐந்து குழந்தைகளையும் விட்டுச் சென்றதால் குடும்பத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது என மேரியின் மகள் ஜீனா அந்த ஆவணப்படத்தில் கூறியுள்ளார்.
மேலும், "குடும்பத்துக்குள்ளேயே ஒரு கொலையாளி மறைந்திருப்பதாக நான் நினைத்தேன்" என்றும் ஜீனா தெரிவித்தார்.
தன் தாயின் கொலை குறித்து ஒரு புத்தகம் எழுதிய ஜீனா, தனது சந்தேகங்களை காவல்துறையுடன் பகிர்ந்ததாக கூறினார்.
"1984ல் என் உடன்பிறந்தவர்களும் என்னைப்போலவே நினைத்தார்கள்"என்றும் குறிப்பிடுகிறார் ஜீனா.
தொடர்ந்து பேசிய அவர், "மேரியின் சொந்த குழந்தைகளில் ஒருவருக்கு இதில் தொடர்பு இருந்திருக்கலாம் அல்லது இதுகுறித்து அவருக்கு அதிகமாகத் தெரிந்திருக்கலாம். ஆனால் எங்களால் எதையும் நிரூபிக்க முடியவில்லை" என்கிறார்.

பட மூலாதாரம், Crown Office
2008 ஆம் ஆண்டுக்குள் நடந்த நான்கு தனித்தனி விசாரணைகளாலும் சந்தேகத்துக்குரிய நபர் குறித்த தகவல்களை வழங்க முடியவில்லை.
ஐந்தாவது மறுவிசாரணை 2014ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
வடக்கு லானார்க்ஷயரின் கார்ட்கோஷில் உள்ள ஸ்காட்டிஷ் க்ரைம் கேம்பஸில் (SCC) மரபணு மூலம் குற்றம் சாட்டப்படுபவரின் விவரத்தைக் கண்டறியும் புதிய வசதி மூலம் இறுதியாக இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டது.
முன்னதாக நிபுணர்களால் 11 தனிப்பட்ட மரபணு அடையாளங்களை ஆராய முடிந்தது.
ஆனால், புதிய தொழில்நுட்பத்தின் மூலம், 24 மரபணு அடையாளங்களை கண்டறிய முடிந்தது.
இந்த புதிய தொழில்நுட்பம் சிறிய அல்லது குறைவான தரத்துடைய மாதிரிகளில் இருந்து முடிவுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை பெரியளவில் அதிகரித்தது.
இதுகுறித்து, "இந்த தொழில்நுட்பம் கடந்த கால நிகழ்வுகளை பின்தொடர்ந்து, நம்பிக்கையைக் கைவிட்டவர்களுக்கு நீதி பெற உதவக்கூடியதாக இருக்கும்"என ஸ்காட்டிஷ் காவல்துறை ஆணையத்தின் தடயவியல் இயக்குனர் டாம் நெல்சன் 2015ம் ஆண்டில் கூறினார்.

பட மூலாதாரம், Firecrest
1984 இல் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் மேரியின் கூந்தல், நகங்கள் , மற்றும் சிகரெட் துண்டுகள் ஆகியவை அடங்கும்.
அதனையடுத்து, சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்டு 30 ஆண்டுகளாக காகிதப்பையில் பாதுகாக்கப்படும் ஆதாரங்களை மீண்டும் பரிசீலிக்குமாறு எஸ்சிசியில் (SCC) பணிபுரியும் கோக்ரேனிடம் கேட்கப்பட்டது.
"அந்த நேரத்தில் மரபணு விவரக்குறிப்பு பற்றி அவர்களுக்கு (குற்றவியல் அதிகாரிகளுக்குத்) தெரியாது" என்று கூறினார் கோக்ரேன்.
மேலும் "சேகரிக்கப்பட்ட இந்த மாதிரிகளில் உள்ள திறனை அவர்கள் அறிந்திருக்கவில்லை"என்றும், "அதன் மதிப்பை அவர்கள் அறிந்திருக்க முடியாது" என்றும் குறிப்பிட்டார் கோக்ரேன்.
மறுபுறம், முதல் விசாரணைக் குழு இந்த ஆதாரங்களைப் பாதுகாத்து "அற்புதமான தொலைநோக்குப் பார்வையுடன்" செயல்பட்டுள்ளது என்றார் மூத்த தடயவியல் விஞ்ஞானி.
வழக்கில் முக்கிய திருப்புமுனை

பட மூலாதாரம், Firecrest
மேரியின் வீட்டில் தங்கும் அறையில் உள்ள காபி டேபிளில் இருந்த ஆஷ்ட்ரேயில் எம்பஸி சிகரெட் துண்டு ஒன்றை கண்டுபிடித்தபோது விசாரணையில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது.
ஏனென்றால், மேரி வழக்கமாக வூட்பைன் என்ற வித்தியாசமான சிகரெட்டைப் புகைத்துவந்தார். ஆனால், அங்கு எம்பஸி சிகரெட் துண்டுகளை கண்டறிந்தபோது, தீர்க்கப்படாத இந்த வழக்கை ஆராயும் குழுவுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
மேலும், தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், சிறிய அளவிலான மரபணுவைக் கூட கண்டறிய அனுமதிக்கும் என்று கோக்ரேன் நம்பிக்கை தெரிவித்தார்.
"பின்னர் அந்த ஆச்சரியமிக்க தருணத்தை நாங்கள் அடைந்தோம். முன்பு எங்களுக்கு மரபணு விவரத்தை வழங்காத சிகரெட் துண்டு இப்போது எங்களுக்கு ஒரு ஆணின் விவரங்களை வழங்கியுள்ளது" என அவர் ஆவணப்படத்தில் குறிப்பிடுகிறார்.
"இந்த சான்று எங்களிடம் இதற்கு முன்பு இல்லாத ஒன்று, மேலும் இந்த வழக்கில் தடயவியல் அறிவியலின் முதல் குறிப்பிடத்தக்க சான்றாகும்", என்றும் தெரிவித்தார் கோக்ரேன்.

பட மூலாதாரம், Firecrest
'மெய்சிலிர்த்த தருணம்'
மூத்தத் தடயவியல் விஞ்ஞானி ஜோன் கோக்ரேன், வடக்கு லானார்க்ஷயரில் உள்ள கார்ட்கோஷில் உள்ள ஸ்காட்டிஷ் குற்ற வளாகத்தில் உள்ள ஆய்வகத்தில் மேரியின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட பொருட்களை ஆய்வு செய்தார்.
பின்னர் சேகரிக்கப்பட்ட அந்த சான்று, ஸ்காட்டிஷ் மரபணு தரவுத்தளத்துக்கு அனுப்பப்பட்டு, தண்டனை பெற்ற குற்றவாளிகளின் ஆயிரக்கணக்கான சுயவிவரங்களுடன் ஒப்பிடப்பட்டது.
பின்னர், இந்த பரிசோதனை முடிவுகள் கோக்ரேனுக்கு மின்னஞ்சலில் அனுப்பப்பட்டது.
அந்த மின்னஞ்சலின் கடைசிப் பகுதியைப் பார்க்க விரைந்த அவர், "நேரடி பொருத்தம்" என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்டார்.
"உண்மையாகவே மெய்சிலிர்த்த தருணம் அது" என்று அந்த உணர்வை விளக்குகிறார் கோக்ரேன்.
மேலும், "அந்த ஆதாரம், கிரஹாம் மெக்கில் என்ற நபரை அடையாளம் காட்டியது. மேலதிக தகவல்களில், அவர் மேல் பாலியல் குற்றங்களில் தீவிரமான தண்டனைகள் இருப்பதைக் கண்டறிய முடிந்தது" என்றும் விளக்குகிறார் அவர்.
"30 வருடங்களுக்குப் பிறகு, அந்த மரபணு விவரத்துடன் பொருந்தக்கூடிய ஒரு நபரை நாங்கள் கண்டறிந்துள்ளோம்" என்கிறார் கோக்ரேன்.

பட மூலாதாரம், Google
கிளாஸ்கோவின் பார்ட்டிக் பகுதியில் உள்ள க்ராத்தி கோர்ட்டில் உள்ள மூன்றாவது மாடியில் மேரி தனியாக வசித்து வந்தார்.
பாலியல் வன்புணர்வு மற்றும் அதற்கான முயற்சிக்கு தண்டனை பெற்ற மெக்கில், மேரி கொல்லப்பட்டபோது ஏற்கெனவே சிறையில் இருந்தார் என்பது நீண்ட நாட்களாகக் காத்துக்கொண்டிருந்த இந்த வழக்கில் ஒரு புதிரை உருவாக்கியது.
ஆனால், மெக்கில் அக்டோபர் 1984ம் ஆண்டு 5ம் தேதி அன்று விடுதலை செய்யப்பட்டார், அதாவது மேரி கடைசியாக உயிருடன் காணப்பட்ட 9 நாட்களுக்குப் பின்னர் தான் விடுதலை செய்யப்பட்டார் என்று பதிவுகளின்படி அறியப்பட்டது.
அதனையடுத்து, முன்னாள் துப்பறியும் அதிகாரி கென்னி மெக்கப்பினுக்கு இந்த குழப்பமான மர்மத்தைத் தீர்க்கும் பணி வழங்கப்பட்டது.

பட மூலாதாரம், Firecrest
மேலும் இந்த வழக்கைக் கட்டமைக்க இன்னும் அதிகமான தடயவியல் சான்றுகள் தேவை என்று கோக்ரேனிடம் கூறப்பட்டது.
மேரியின் கழுத்தை நெரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆடையின் கயிற்றில் இருந்த முடிச்சை, அது கொலையாளியின் டிஎன்ஏவை மறைக்கிறதா என்பதை அறிந்துகொள்வதற்காக கோக்ரேன் அந்த முடிச்சை அவிழ்த்தார்.
அந்தத் தேடலானது, "நீண்ட நாட்களாக பாதுகாக்கப்பட்ட மரபணுவை நோக்கி" அழைத்துச் சென்றது. அதாவது, மற்றொரு தடயம் மேரியின் கழுத்தை நெரிக்கப் பயன்படுத்திய ஆடையின் கயிற்றில் காணப்பட்டது.
மேரியின் ஆடையின் முடிச்சை இறுக்கியவர், அதில் பொதிந்திருக்கும் பொருட்களில் தனது மரபணுவின் சில தடயங்களை விட்டுச் சென்றிருக்கக் கூடும் என கோக்ரேன் நம்பினார்.
அதனால், அவரது ஆய்வகத்தில் உள்ள பிரகாசமான ஒளிரும் விளக்குகளின் கீழ், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிரிக்கப்படாத துணியை முதல் முறையாக ஆராய, அந்த ஆடையின் கயிற்றை சிறிது சிறிதாக கவனமாக அவிழ்த்தார் கோக்ரேன்.
பின்னர், "அந்த ஆடையின் முடிச்சுகளில் இருந்து, கிரஹாம் மெக்கிலுடன் பொருந்திய முக்கிய ஆதாரமான மரபணுவை நாங்கள் கண்டுபிடித்தோம்" என்று கோக்ரேன் தெரிவித்தார்.
"அவர் மேரியின் கழுத்தில் ஆடையின் கயிற்றைக் கட்டி, அவரது கழுத்தை நெரிக்க, அந்தக் கயிற்றால் முடிச்சுப் போட்டுள்ளார்" என்றும் கோக்ரேன் விளக்கினார்.

பட மூலாதாரம், Firecrest
குற்றவாளியை கண்டுபிடித்தது எப்படி?
மேலும், மேரியின் பச்சை நிற ஆடையில் மெக்கிலின் விந்தணுவின் தடயங்களும் தனித்தனியாகக் காணப்பட்டன.
தடயவியல் சான்றுகள் முக்கியப் பங்கு வகித்தாலும், வழக்கில் தண்டனையை உறுதி செய்ய அது மட்டும் போதுமானதாக இல்லை என்று இப்போது ஓய்வு பெற்றுள்ள மெக்கபின் மேரியின் ஆவணப்படத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"எங்களிடம் என்ன மரபணு உள்ளது என்பது முக்கியமில்லை" என்றார் அவர்.
"கொலை நடந்தபோது அவர் சிறையில் இருந்துள்ளார். அப்படியென்றால், அவரால் எப்படி கொலை செய்திருக்க முடியும்?" எனக் கேட்கிறார் மெக்கபின்.
கொலை நடந்த நேரத்தில் ஹெச்எம்பி எடின்பரோ சிறை மீண்டும் கட்டப்பட்டிருந்ததாலும், கணினிகளுக்கு முந்தைய காலத்தில் கொலை நடந்திருந்ததாலும், அது தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனதாலும் பதிவுகளை கண்டுபிடிக்கக் கடினமாக இருந்ததாகக் கூறப்படுகின்றது.
எனவே, மெக்கபினுடைய தேடலானது இறுதியில் அவரை எடின்பரோவின் மையத்தில் உள்ள ஸ்காட்லாந்தின் தேசிய பதிவு மையத்துக்கு அழைத்துச் சென்றது, அங்கு அவர் ஆளுநரின் பதிவுகளைக் கண்டறிந்தார்.
அங்கு கண்டறியப்பட்ட ஒரே ஒரு பதிவு எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.
சிறை எண்ணுக்கு அடுத்ததாக "ஜி மெக்கில்" என்ற பெயரும் "டிஎஃப்எஃப்" என்ற சுருக்கக் குறியீடும் இருந்தது.
"அது விடுதலைக்கான பயிற்சி, அதாவது வீட்டுக்குச் செல்வதற்காக வார இறுதியில் வழங்கப்படும் விடுப்பு" என்று விளக்கினார் முன்னாள் துப்பறியும் அதிகாரி மெக்கபின்.
அதனையடுத்து, பரோலுக்கு முந்தைய மூன்று நாட்கள் விடுப்புடன் சேர்த்து, இரண்டு நாள் வார இறுதி விடுப்பில் மெக்கில் சென்றிருப்பதைக் கண்டறிந்தது விசாரணைக் குழு.
அதன்பிறகு, 1984ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி அன்று மெக்கில் சிறைக்குத் திரும்பியதும் கண்டறியப்பட்டது.
"அதுதான் நாங்கள் தேடிக்கொண்டிருந்த முக்கியத் தகவல்" என்று முன்னாள் மூத்த விசாரணை அதிகாரி மார்க் ஹென்டர்சன் கூறினார்.
கிரஹாம் மெக்கில் மேரியைக் கொன்று சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதியாக குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

பட மூலாதாரம், Police Scotland
இறுதியாக 4 டிசம்பர் 2019 அன்று மெக்கில் கைது செய்யப்பட்டார்.
அந்த நேரத்தில், அவர் இன்னும் ஒரு பாலியல் குற்றவாளியாகவே கருதப்பட்டார். ஆனால், கிளாஸ்கோவின் லின்வுட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தார். இந்த நிறுவனம் ரென்ஃப்ரூஷைரில் உள்ளது.
மெக்கில் கைது செய்யப்பட்ட செய்தி நிம்மதியளித்ததாகக் குறிப்பிட்ட ஜீனா, "என் வாழ்நாளில் இதைக் காண்பேன் என்று நான் நினைக்கவே இல்லை" என்றார்.
2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற நான்கு நாள் விசாரணைக்குப் பிறகு, மெக்கில் இறுதியாக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 14 ஆண்டுகள் தண்டனையுடன் சிறையில் அடைக்கப்பட்டார்.
மெக்கில் மேரியைக் கொலை செய்தபோது 22 வயதாக இருந்தார், ஆனால் குற்றவாளிக்கூண்டில் நிற்கும்போது அவர் 59 வயதாகி இருந்தது என கிளாஸ்கோவில் உள்ள உயர் நீதிமன்றத்தில் நீதிபதி, லார்ட் பர்ன்ஸ் தெரிவித்தார்.
மேலும், "இந்தச் செயலைச் செய்தவர் அவர்களது சமூகத்தில் வசிக்கக்கூடியவர் என்று தெரிந்தும், அவரைக் கண்டறிய அவரது குடும்பத்தினர் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது" என்பதையும் குறிப்பிட்ட அவர்,
"மேரிக்கு என்ன நடந்தது என்பதை ஒரு நாள் கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கையை அவர்கள் ஒருபோதும் கைவிடவில்லை" என்றும் தெரிவித்தார் நீதிபதி லார்ட் பர்ன்ஸ்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












