டிரம்ப் - மோதி: இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட முக்கிய விஷயங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று சந்தித்தார். இந்த சந்திப்பில் இரு நாட்டு வர்த்தகம் மற்றும் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
பிரதமர் மோதி அமெரிக்காவுக்கு இரு நாட்கள் அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். புதன்கிழமை அமெரிக்கா சென்ற பிரதமர் மோதி, முன்னதாக அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்ட்-ஐ சந்தித்தார். இந்நிலையில், வியாழக்கிழமை மோதி, அமெரிக்க அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். இந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறையைக் குறைக்க, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு அதிக எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை டிரம்ப் அறிவித்தார்.
மேலும், இந்தியா அமெரிக்கா இடையே ஒரு புதிய பரஸ்பர வரித் திட்டத்தை அதிபர் டிரம்ப் அறிவித்தார். "எங்கள் கூட்டாளிகள் எங்கள் எதிரிகளை விட மோசமானவர்கள்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக வசிக்கும் இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது குறித்தும் பிரதமர் மோதி பேசினார்.
மேலும், அதானி நிறுவனம் மீது அமெரிக்காவில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்தும் மோதி பதிலளித்தார்.
அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு நாடுகளின் மீது டிரம்ப் வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் வேளையில், இந்திய பிரதமர் மோதியுடன் டிரம்ப் தற்போது பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதில் விவாதிக்கப்பட்டது என்ன?

இந்த சந்திப்புக்குப் பிறகு இரு நாட்டு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அதில் பேசிய பிரதமர் மோதி, அதிபர் டிரம்பின் முழக்கமான 'MAGA' (make America great again - அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக்குவது) என்பதை மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவையும் அதே போல மீண்டும் சிறந்த நாடாக்க வேண்டும் (MIGA-Make India Great Again). இந்த இரண்டு சிந்தனைகளும் ஒன்று சேரும்போது அது இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு ஜனநாயக நாடுகளும் செழிப்பான வளர்ச்சிக்கான 'மெகா (MEGA) கூட்டாண்மையை' உருவாக்கும்", என்று குறிப்பிட்டார்.
"இந்தியா எங்களிடம் இருந்து எந்த அளவுக்கு வரி வசூலிக்கிறதோ, அதே அளவில்தான் நாங்களும் அந்நாட்டிடம் இருந்து வசூலிப்போம்", என்று டிரம்ப் தெரிவித்தார்.
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்படும் ஒருவரை ஒப்படைக்க அனுமதித்ததற்கு நரேந்திர மோதி அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் குடியேறிய இந்தியர்களை திரும்பப் பெற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் மோதி தெரிவித்தார்.
ரஷ்யா அதிபர் புதினுடனான தனது அழைப்பின் கூடுதல் விவரங்களையும் டிரம்ப் பகிர்ந்துகொண்டார். யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது பற்றியும் டிரம்ப் குறிப்பிட்டார்.
நாடு கடத்தப்படும் இந்தியர்கள் - மோதி கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில் சட்ட விரோதமாக வசிக்கும் இந்தியர்களை திரும்பப் பெறுவது குறித்தும் பிரதமர் மோதி செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
"அமெரிக்காவில் சட்ட விரோதமாக எந்தவொரு இந்தியரும் வசிப்பது நிரூபணமானால், அவர்களை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல தயாராக இருக்கிறோம்." என அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் குடியேறியவர்களுள் (இந்தியர்கள்) சிலர் மனிதக் கடத்தலில் ஈடுபடுபவர்களால் அழைத்து வரப்பட்டதாகவும், தாங்கள் அமெரிக்காவுக்குதான் அழைத்து வரப்பட்டதுகூட அவர்களுக்குத் தெரியாது என்றும் மோதி கூறினார்.
"இவர்கள் மிகவும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள். அவர்கள், பெரிய கனவுகள், பெரிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர்."
அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைவதற்கு "ஏமாற்றப்படும்" இளைஞர்களை பாதுகாக்க மனிதக் கடத்தலைத் தடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் கூறினார்.
டிரம்ப் மீண்டும் அதிபரானது முதல், ஆவணங்களின்றி அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியர்கள் பலர் ராணுவ விமானத்தில் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் நடவடிக்கையின்போது எந்தவொரு இந்தியரும் தவறாக நடத்தப்படாததை உறுதி செய்வதாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
எரிவாயு ஒப்பந்தம்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவிடமிருந்து கூடுதலாக எண்ணெய் மற்றும் எரிவாயுவை இந்தியா இறக்குமதி செய்வது தொடர்பான ஒப்பந்தத்தையும் இந்த சந்திப்பின்போது டிரம்ப் அறிவித்தார்.
"அவர்கள் (இந்தியா) நம்மிடமிருந்து அதிகமாக எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்க உள்ளனர். அவை, அவர்களுக்குத் தேவையாக உள்ளது. நம்மிடம் அவை அதிகமாக உள்ளன," என டிரம்ப் தெரிவித்தார்.
"இந்தியாவின் எரிவாயு பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு, எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் நாங்கள் கவனம் செலுத்துவோம்," என கூறிய பிரதமர் மோதி, அணுசக்தியில் அதிக முதலீடு மேற்கொள்வது குறித்தும் உறுதிபூண்டார்.
தங்களின் வர்த்தக கூட்டாளிகள் தங்கள் மீது எந்தளவுக்கு இறக்குமதி வரிகளை விதிக்கிறதோ அதே அளவு வரியை அந்த நாடுகளும் எதிர்கொள்ளும் என, டிரம்ப் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்த நிலையில் மோதி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
வரி குறித்து பேசியது என்ன?

பட மூலாதாரம், EPA-EFE/REX/Shutterstock
"இந்தியா எந்தளவுக்கு அமெரிக்கா மீது இறக்குமதி வரி விதிக்கிறதோ, அதே அளவு வரி இந்தியா மீதும் விதிக்கப்படும்." என பரஸ்பர வரிவிதிப்பு குறித்து அதிபர் டிரம்ப் கூறினார்.
"எங்கள் கூட்டாளிகள் எங்கள் எதிரிகளை விட மோசமானவர்கள்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கு இந்தாண்டு முதலே ராணுவ தளவாடங்களை விற்பதை அதிகரிப்பது தொடர்பாகவும் டிரம்ப் பேசினார். "பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க உள்ளோம். எஃப்-35 ரக போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவோம்." எனவும் டிரம்ப் கூறினார்.
தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க ஒப்புதல்

பட மூலாதாரம், ANI
உலகம் முழுவதிலும் இஸ்லாமிய தீவிர போக்கு அச்சுறுத்தலைத் தடுக்க இந்தியாவும் அமெரிக்காவும் "முன்னெப்போதும் இல்லாத வகையில்" இணைந்து செயல்படும் என டிரம்ப் தெரிவித்தார்.
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்படும் தஹாவூர் ராணா குறித்து டிரம்ப் கூறுகையில், "உலகின் மிக மோசமான மனிதர்களில் ஒருவரை நாடு கடத்துவதற்கு நமது நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என தெரிவித்தார்.
"சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள அவர் இந்தியா அனுப்பப்படுவார். உடனடியாக அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார்." என டிரம்ப் கூறினார்.
அதானி குறித்து மோதி கூறியது என்ன?
தன் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் பெற 250 மில்லியன் டாலர்கள் லஞ்சம் கொடுத்ததாகவும் அதனை மறைத்ததாகவும் அதானி மீது கடந்த நவம்பர் மாதம் குற்றம் சாட்டப்பட்டது.
எனினும், இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்தது.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசினார் மோதி. அப்போது, "அதானி குறித்து பேசுனீர்களா? அந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினீர்களா?" என மோதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, "இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எங்கள் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் என்னவென்றால் 'உலகமே ஒரு குடும்பம்' என்பதுதான். நாங்கள் முழு உலகத்தையும் ஒரே குடும்பமாக கருதுகிறோம். ஒவ்வொரு இந்தியனையும் 'என்னுடையவன்' என்று நான் கருதுகிறேன். இரண்டாவது விஷயம் , இப்படிப்பட்ட ஒரு தனிப்பட்ட விஷயத்துக்காக இரு நாடுகளின் தலைவர்களும் சந்திப்பதில்லை, அமர்ந்து பேசுவதில்லை" என பதிலளித்தார்.
பிரிக்ஸ் பற்றி டிரம்ப்
செய்தியாளர் சந்திப்பில், "பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா அங்கம் வகித்து வருகிறது. பிரிக்ஸை கலைக்க அமெரிக்கா விரும்புகிறதா?" என கேள்வி எழுப்பப்பட்டது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசியில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இதற்கு பதிலளித்த டிரம்ப், "பிரிக்ஸ் ஒரு மோசமான நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது. பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் டாலருக்கு எதிராக விளையாட விரும்பினால், அவர்கள் மீது 100 சதவிகிதம் வரி விதிக்கப்படும்."
"டாலருக்கு எதிரான நாணயத்தை அவர்கள் கொண்டு வருவோம் என அறிவித்தால், அறிவிக்கும் நாளில் அவர்கள் திரும்பி வந்து அமெரிக்காவிடம் கெஞ்சும் நிலை ஏற்படும்." என்றார்.
யுக்ரேன் ரஷ்யா போர் குறித்து மோதி கூறியதென்ன?
இந்த சந்திப்பில் பிரதமர் மோதி யுக்ரேன்- ரஷ்யா போர் குறித்தும் பேசினார் .
"நான் ரஷ்யா மற்றும் யுக்ரேனுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது உங்களுக்குத் தெரியும். நான் இருநாட்டு தலைவர்களையும் சந்தித்துள்ளேன். இந்தியா 'நடுநிலை' வகிக்கிறது என்ற தவறான எண்ணம் பலருக்கும் இருக்கிறது. இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்தியா 'அமைதி' அதாவது சமாதானத்தின் தரப்பில் உள்ளது", என்று பிரதமர் மோதி தெரிவித்தார்
"அதிபர் புதின் முன்னிலையில் ஊடகங்களிடம் 'இது போருக்கான நேரம் அல்ல' என்று நான் தெளிவுபடக்கூறினேன். பிரச்னைகளுக்கான தீர்வு போர்க்களங்களில் கிடைப்பதில்லை, பேச்சுவார்த்தை மூலமே தீர்வை எட்ட முடியும் என்று இன்றும் நான் உறுதியாக நம்புகிறேன்."
"இந்த இருதரப்பும் இருக்கும் ஏதோ ஒரு பொது மன்றத்தில் பேச்சுவார்த்தை நடத்தினால்தான் ஏதாவது ஒரு தீர்வு பிறக்கும் என்று இந்தியா கருதுகிறது. அதிபர் டிரம்ப் செய்யும் முயற்சியை நான் வரவேற்கிறேன், ஆதரிக்கிறேன். உலகத்தில் சமாதானத்துக்கான பாதையை திறக்கும் வகையில் அதிபர் டிரம்பின் முயற்சி விரைவில் வெற்றிபெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்", என்றும் அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












