'சனிக்கிழமைக்குள் பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால்..' - இஸ்ரேல் எச்சரிக்கை; ஹமாஸ் கூறுவது என்ன?

இஸ்ரேல், ஹமாஸ், பாலத்தீனம், காஸா, அமெரிக்கா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, காஸாவுக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் ராணுவத்தைக் குவிக்குமாறு இஸ்ரேலிய படைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்
    • எழுதியவர், டேவிட் கிரிட்டன் மற்றும் யோலண்டே க்னெல்
    • பதவி, பிபிசி

"பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ், வரும் சனிக்கிழமைக்குள் (பிப்ரவரி 15) பணயக்கைதிகளை எங்களிடம் ஒப்படைக்கவில்லை என்றால், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவோம்'' என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, காஸாவில் மீண்டும் போர் தொடங்கக்கூடும் என்ற கவலை அதிகரித்து வருகிறது.

மூன்று வாரங்களுக்கு முன் கொண்டுவரப்பட்ட, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை இஸ்ரேல் மீறியதாக ஹமாஸ் ஆயுதக்குழு குற்றம்சாட்டியது. 'மறு அறிவிப்பு வரும் வரை' இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்திவைக்கப்போவதாகவும் ஹமாஸ் அறிவித்திருந்தது.

இதையடுத்து பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) அன்று கூடியது.

மீதமுள்ள 76 பணயக்கைதிகளையும் விடுவிக்க நெதன்யாகு கோருகிறாரா அல்லது இந்த சனிக்கிழமை விடுவிக்கப்படவிருந்த மூவரை மட்டும்தான் கோருகிறாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதற்கு பதிலளித்த ஹமாஸ், 'போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும், இதில் சிக்கல்கள் அல்லது தாமதங்கள் ஏற்பட்டால், அதற்கு இஸ்ரேல்தான் பொறுப்பு' என்றும் கூறியது.

இஸ்ரேலுக்கு எதிரான புகார்களின் பட்டியலை மத்தியஸ்தர்கள் குழு பரிசீலிக்க வேண்டும் என்று ஹமாஸ் கோரியுள்ளது. இந்தப் புகார்களில் 'கூடாரங்கள் போன்ற முக்கிய மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தடுக்கிறது' போன்றவை அடங்கும். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மறுத்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த அரபு நாடுகள் ஹமாஸுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிகிறது.

இஸ்ரேல், ஹமாஸ், பாலத்தீனம், காஸா, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 'காஸாவில் மோதல் முடிவுக்கு வந்ததும், அது இஸ்ரேலால் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படும்' என்று டிரம்ப் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியது என்ன?

காஸாவின் மறுகட்டமைப்புக்கான 'ஒரு விரிவான தொலைநோக்குப் பார்வையை' முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக எகிப்து தெரிவித்துள்ளது.

ஆனால் அது அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்வைத்த திட்டத்தைப் போலல்லாமல், அதாவது மக்களை வேறு பகுதிக்கு அப்புறப்படுத்தாமல் காஸாவை சீரமைப்பது ஆகும்

ஹமாஸின் முடிவு, இந்த வார இறுதியில் நிகழவிருந்த பணையக்கைதிகளின் விடுதலையை தாமதப்படுத்தியுள்ளது.

"சனிக்கிழமைக்குள் அனைத்து பணயக்கைதிகளும் விடுதலை செய்யப்படாவிட்டால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய வேண்டும். அதனால் பேரழிவு ஏற்பட்டாலும் பரவாயில்லை" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று நடைபெற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவையின் நான்கு மணி நேர கூட்டத்திற்கு பிறகு, ''அமெரிக்க அதிபர் டிரம்பின் கோரிக்கையை வரவேற்பதாக'' ஒரு காணொளி வாயிலாக தெரிவித்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.

"ஹமாஸ் நமது பணயக்கைதிகளை விடுவிக்கப் போவதில்லை என்றும் அறிவித்ததை அடுத்து, நேற்று இரவு காஸா பகுதிக்குள் மற்றும் அதைச் சுற்றி படைகளை குவிக்குமாறு இஸ்ரேல் ராணுவத்துக்கு நான் அறிவுறுத்தினேன்." என்றும் அவர் கூறினார்.

"தற்போது மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மிக விரைவில் நிறைவடையும்." என்றார் நெதன்யாகு.

பின்னர் அவர் ஒரு இறுதி எச்சரிக்கையை வெளியிட்டார். பாதுகாப்பு அமைச்சரவையின் ஒருமித்த ஒப்புதலுடன் இது வெளியிடப்படுவதாகவும் கூறினார்.

"சனிக்கிழமை (பிப்ரவரி 15) நண்பகலுக்குள் ஹமாஸ் எங்களது பணயக்கைதிகளை திருப்பி அனுப்பவில்லை என்றால், போர்நிறுத்தம் முடிவுக்கு வரும். ஹமாஸின் முழுமையான வீழ்ச்சி நிகழும் வரை நீடிக்கக்கூடிய, ஒரு தீவிரமான சண்டையை இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தொடங்கும்." என்று அவர் எச்சரித்தார்.

இஸ்ரேல், ஹமாஸ், பாலத்தீனம், காஸா, அமெரிக்கா

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, 16 மாத கால போரில் காஸா நகருக்கு வடக்கே உள்ள ஜபாலியாவின் பெரும்பகுதி அழிக்கப்பட்டுள்ளது

மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்று நெதன்யாகு விரும்புகிறாரா இல்லையா என்பது குறித்து இஸ்ரேலிய அதிகாரிகளிடமிருந்து முரண்பட்ட செய்திகள் வந்தன.

திட்டமிட்டபடி சனிக்கிழமை அன்று மூன்று பணயக்கைதிகள் கொண்ட அடுத்த குழு விடுவிக்கப்பட்டால், போர் நிறுத்தத்தைத் தொடரத் தயாராக இருப்பதாக இஸ்ரேலிய செய்தித்தாள் ஹாரெட்ஸிடம் ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, மீதமுள்ள ஒன்பது பணயக் கைதிகளை (உயிருடன் உள்ளவர்கள்) விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனை வைக்கப்பட்டுள்ளதாக பின்னர் செய்திகள் வெளியாகின

ஆனால், இஸ்ரேலின் போக்குவரத்து அமைச்சரும் போர் அமைச்சரவை உறுப்பினருமான மிரி ரெகேவ் தனது எக்ஸ் தள பதிவில், "நாங்கள் மிகத் தெளிவான முடிவை எடுத்துள்ளோம். பணயக்கைதிகள் விடுதலை தொடர்பான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்தை நாங்கள் பின்பற்றுகிறோம். சனிக்கிழமைக்குள், அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

'இஸ்ரேல் சாமர்த்தியமாக செயல்பட முயற்சிக்கிறது'

இஸ்ரேல், ஹமாஸ், பாலத்தீனம், காஸா, அமெரிக்கா

பட மூலாதாரம், Reuters

இதற்கிடையில் இஸ்ரேல் ராணுவம், அதன் தெற்கு கட்டுப்பாட்டு தளத்தை தயார்நிலையில் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்த தளமே காஸா செயற்பாடுகளுக்கு பொறுப்பு என்பதால், இருப்புப் படையினர் உட்பட கூடுதல் துருப்புகள் மூலம் இது வலுப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.

சில இஸ்ரேலிய ஆய்வாளர்கள், இஸ்ரேல் சாமர்த்தியமாக செயல்பட முயற்சிக்கிறது என்று கருத்து தெரிவிக்கின்றனர். அதாவது, வெள்ளை மாளிகைக்கு தங்களது விசுவாசத்தைக் காட்டுவது மற்றும் ஒப்பந்தத்தையும் பின்பற்றுவது.

இந்த வார இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள பணயக்கைதிகள் விடுதலை தொடர்பான விவகாரத்தில் ஒரு சமரசம் எட்டப்பட இப்போதும் சாத்தியம் உள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.

இஸ்ரேலும் ஹமாஸும், மத்தியஸ்தர்கள் மூலமாக இதைச் செய்யலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா காஸாவை கைப்பற்றி, அங்கு வசிக்கும் 2 மில்லியன் பாலத்தீனர்களை நிரந்தரமாக இடமாற்றம் செய்து மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற டொனால்ட் டிரம்பின் சர்ச்சைக்குரிய முன்மொழிவை ஹமாஸ் செவ்வாய்க்கிழமை அன்று மீண்டும் நிராகரித்தது

1948இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த போருக்கு முன்னரும் போரின் போதும் நூறாயிரக்கணக்கான பாலத்தீனர்கள் தப்பி ஓடினர் அல்லது தங்கள் வீடுகளில் இருந்து விரட்டப்பட்டனர். அது போன்ற 'நக்பா' (பேரழிவு)மீண்டும் நிகழுமோ என்று பாலத்தீனியர்கள் அஞ்சுகின்றனர்.

ஐ.நா தகவலின்படி, அந்த பாலத்தீன அகதிகளில் பலர் காஸா போய் சேர்ந்தனர். அங்கு அவர்களும் அவர்களுடைய சந்ததியினரும், மொத்த மக்கள்தொகையில் நான்கில் மூன்று பங்காக உள்ளனர்.

மேலும் 9,00,000 பதிவு செய்யப்பட்ட அகதிகள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வாழ்கின்றனர். 3.4 மில்லியன் பேர் ஜோர்டான், சிரியா மற்றும் லெபனானில் வாழ்கின்றனர்.

'டிரம்பின் கருத்து இன சுத்திகரிப்புக்கான அழைப்பு'- ஹமாஸ்

இஸ்ரேல், ஹமாஸ், பாலத்தீனம், காஸா, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

டிரம்பின் கருத்துக்கள் 'இனவெறி மற்றும் பாலத்தீனிய அடிப்படையை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட இன சுத்திகரிப்புக்கான அழைப்பு' என்று ஹமாஸ் விவரித்தது.

ஐ.நா, அரேபிய நாடுகள் மற்றும் பிற உலகத் தலைவர்களும், மனித உரிமைக் குழுக்களும், பாலத்தீன ஆணையமும் அவரது கருத்துக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

'எந்தவொரு கட்டாய இடப்பெயர்வும் சர்வதேச சட்டத்தின் கீழ் தடை செய்யப்படும் என்றும், அது இன சுத்திகரிப்புக்கு சமமானதாகும்' என்று ஐ.நா. எச்சரித்தது.

''காஸா குறித்த அமெரிக்க அதிபரின் புரட்சிகர பார்வையை பாராட்டுவதாக'' நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை அன்று, ஹமாஸின் மூத்த அதிகாரி பசிம் நயீம் பிபிசியிடம் பேசியபோது, "அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தர்கள் தலையிட்டு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான வழி இன்னும் திறந்திருக்கிறது" என்று கூறினார்.

"இந்த ஒப்பந்தம் தோல்வியடைவதை நாங்கள் விரும்பவில்லை. இதில் எந்தவொரு தடைகளையும், சவால்களையும் தவிர்க்க நாங்கள் அதிகபட்சமாக முயற்சி செய்கிறோம். எனவே மத்தியஸ்தர்கள் மூலம் நிலைமை சரிசெய்யப்பட்டால், அடுத்த சனிக்கிழமை கைதிகளை ஒப்படைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்." என்றும் அவர் கூறினார்.

வடக்கு காஸாவில் உள்ள பகுதிகளுக்கு பாலத்தீனியர்கள் திரும்புவதை பலமணிநேரங்கள் தாமதப்படுத்தியது முதல் உணவு, மருத்துவம் மற்றும் தங்குமிடம் போன்ற அவசர உதவிகளின் விநியோகங்களை தடுத்தது உட்பட, இஸ்ரேல் போர்நிறுத்த உடன்படிக்கையை தொடர்ந்து மீறுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

இதுவரை விடுவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

இஸ்ரேல், ஹமாஸ், பாலத்தீனம், காஸா, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி 33 இஸ்ரேலிய பணயகைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அதில் 16 பேர் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் கடந்த மாதம் அமலுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலத்தீன கைதிகள் விடுதலைக்கு ஈடாக, ஒவ்வொரு கட்டமாக ஹமாஸ் தன் வசமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும்.

விடுவிக்கப்படும் ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக்கைதிக்கும் 30 பாலத்தீன கைதிகளை இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது நிபந்தனை.

முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி 33 இஸ்ரேலிய பணயகைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அதில் 16 பேர் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 17 இன்னும் விடுவிக்கப்பட உள்ளனர்.

அந்த 17 பேரில் 8 பேர் இறந்துவிட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. மற்றொரு ஒப்பந்ததின்படி தாய்லாந்தை சேர்ந்த 5 பேரை ஹமாஸ் விடுவித்தது.

இதற்கு இணையாக 1900 பாலத்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கும். அதில் நூற்றுக்கணக்கானவர்கள் விடுதலையாகியுள்ளனர்.

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டு, 251 பேர் பணயக்கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஹமாஸை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் இஸ்ரேல் இறங்கியது.

இந்த தாக்குதலில் காஸாவில் 46,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதாரத்துறை தெரிவித்தது. அங்குள்ள 23 லட்சம் மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் இடம்பெயந்தனர். மேலும் அங்கு பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)