சௌதி, பாலத்தீனம் பற்றிய இஸ்ரேல் பிரதமர் பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு - என்ன பேசினார்?
சௌதி அரேபியா தனது சொந்த நிலத்தில் பாலத்தீன நாட்டை உருவாக்கலாம் என, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்ததற்கு இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பாலத்தீனர்களுக்கு அவர்களின் நிலத்தின் மீது உரிமை உள்ளது என்றும் அவர்களை வெளியேற்ற முடியாது என்றும் சௌதி அரேபியா இஸ்ரேலுக்கு பதில் அளித்துள்ளது.
இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?
இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு, கடந்த வாரம் இஸ்ரேலிய ஊடகமான சேனல் 14-க்கு பேட்டியளித்திருந்தார். அப்போது ஊடகவியலாளர், பாலத்தீன நாடு என்பதற்கு பதிலாக சௌதி நாடு என குறிப்பிட்டு கேள்வி ஒன்றை எழுப்பியதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த பெஞ்சமின் நெதன்யாகு, 'சௌதிகள் பாலத்தீன நாட்டை சௌதி அரேபியாவில் உருவாக்கட்டும். அவர்களிடன் ஏராளமான நிலம் உள்ளது' என்றார்.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் பொதுச் செயலாளர் வெளியிட்டிருந்த அறிக்கையில், 'இந்த ஆபத்தான, பொறுப்பற்ற அறிக்கைகள் சர்வதேச மற்றும் ஐ.நாவின் சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களையும் நாடுகளின் இறையாண்மையையும் அவமதிக்கும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் படைகளின் அணுகுமுறையை உறுதிப்படுத்துகின்றன' என்று தெரிவித்திருந்தார்.
தங்கள் நிலம் குறித்து பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்த கருத்துக்கு சௌதி அரேபியாவும் காட்டமாக பதிலளித்தது.
சௌதியின் வெளியுறவு விவகாரங்களுக்கான அமைச்சகம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், 'காஸாவில் பாலத்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் செய்யப்பட்ட தொடர்ச்சியான குற்றங்களில் இருந்து திசை திருப்புவதற்காக கூறப்படும் இத்தகைய கருத்துக்களை மறுக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாலத்தீன மக்களுக்கு அவர்களின் நிலத்தில் உரிமை உண்டு என்பதையும் இஸ்ரேல் விரும்பும் போதெல்லாம் வெளியேற்றப்பட அவர்கள் ஊடுருவல்காரர்களோ அல்லது குடியேறியவர்களோ அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறோம் என்றும் சௌதி கூறியுள்ளது.
பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்த பேச்சுக்கு உடனடியாக அரபு நாடுகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது.
ஜோர்டான், எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், இராக் ஆகிய நாடுகளும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தன.
கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'சௌதியில் பாலத்தீன நாட்டை உருவாக்குமாறு கூறி இஸ்ரேலிய பிரதமர் ஆத்திரமூட்டும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இந்த கருத்துக்கள், சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல். ஐ.நா. சபையின் சாசனத்தைத் தெளிவாக மீறும் செயல்' விமர்சித்திருந்தது.
இஸ்ரேலுன் கசப்புணர்வில் இருக்கும் இரானும் இந்த விவகாரத்தில் சௌதிக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளது. இரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் சயீத் அப்பாஸ் அரக்சி சௌதி வெளியுறவு அமைச்சர் ஃபைசல் பின் ஃபர்ஹானுடன் திங்களன்று தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.
இந்த உரையாடல் தொடர்பாக இரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பாலத்தீன மக்களை காஸாவில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, அவர்களை மற்ற நாடுகளில் சிக்கித் தவிக்க வைக்கும் அமெரிக்க-இஸ்ரேலிய சதித்திட்டத்தை, பாலத்தீனத்தை துடைத்து அழிக்கும் திட்டத்தை பூர்த்தி செய்வதற்கான நோக்கம் கொண்டதாக அரக்சி விவரித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நெதன்யாகுவின் கருத்து, பிராந்திய அமைதி, பாதுகாப்பு போன்றவைக்கு அச்சுறுத்தலானவை என்றும் இரான் தெரிவித்துள்ளது.
முன்னதாக, காஸாவில் வாழும் பாலத்தீன மக்கள் ஜோர்டான் எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு இடம் பெயர வேண்டும் என்று டிரம்ப் கூறியிருந்தார். இதனை அரபு நாடுகள் ஏற்க மறுத்துவிட்டன. இதேபோல், இதற்கான செலவை சௌதி அரேபியா ஏற்க வேண்டும் என டிரம்ப் விரும்பியிருந்தார். அதை சௌதி எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



