சாவர்க்கர் மன்னிப்பு கேட்டு ஆங்கிலேயருக்கு கடிதம் எழுதியது ஏன்? அருண் ஷோரி புது தகவல்

பட மூலாதாரம், savarkarsmarak.com
முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த பத்திரிகையாளருமான அருண் ஷோரி எழுதிய புத்தகம் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. 'தி நியு ஐகான் – சாவர்க்கர் ஆண்டு தி ஃபேக்ட்ஸ்' என்பது இந்தப் புத்தகத்தின் பெயர்.
அவரது புத்தகத்தில் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் குணாதிசயங்களையும், நடவடிக்கைகளையும் அருண் ஷோரி ஆய்வு செய்துள்ளார். சாவர்க்கர் எழுதியவை மற்றும் ஆங்கிலேய ஆவணங்கள் அடிப்படையில் அருண் ஷோரி இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகம் குறித்து பிபிசி செய்தியாளர் ஜுகல் புரோகித், ஷோரியுடன் ஒரு சிறப்பு கலந்துரையாடலை நடத்தினார். அதன் முக்கிய பகுதிகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
- சாவர்க்கர் வரலாறு: இந்தியாவில் சிலருக்கு அவர் ஹீரோ, சிலருக்கு வில்லனாக இருப்பது ஏன்?
- சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்கிறது பா.ஜ.க - இது உண்மையா? வரலாறு சொல்வதென்ன?
- சாவர்க்கர் சிறையில் இருந்து பறவையின் இறக்கையில் அமர்ந்து பறந்தார் - கர்நாடக பாட புத்தகத்தில் சர்ச்சை தகவல்
- பாரத் பச்சாவோ பேரணி: சாவர்க்கர் பற்றிய ராகுல் காந்தியின் கருத்துக்கு சிவசேனை எதிர்ப்பு

சாவர்க்கருக்கு பாராட்டு மற்றும் அவரை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகள்
சாவர்க்கர் குறித்து மக்கள் வேறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளனர். சாவர்க்கர் ஒரு தேசபக்தர் என்றும் தேசியவாதி என்றும் பாரதிய ஜனதா கட்சி கூறுகிறது. அதே நேரம் காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.
'தி நியு ஐகான் – சாவர்க்கர் ஆண்டு தி ஃபேக்ட்ஸ்' என்ற நூலின் ஆசிரியர் அருண் ஷோரி, சாவர்க்கர் ஒரு சிறந்த பகுத்தறிவுவாதி என பாராட்டுகிறார்.
"பல சடங்குகள் குறித்து சாவர்க்கர் கேள்வி எழுப்பியதை பாராட்டுகிறேன், ஆனால் சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு உதவினார்." என்கிறார் அவர்.
"சுதந்திரத்திற்காக நாடு முழுவதும் இயக்கம் நடந்துகொண்டிருந்தபோது, சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு உதவி செய்தார். அவர்களுக்கு அரசியல் ரீதியாக உதவுவதாக சாவர்க்கர் உறுதியளித்தார்."
"ஆங்கிலேயர்களின் பல நிபந்தனைகளை சாவர்க்கர் ஏற்றுக்கொண்டார். இவை அவரை (சிறையிலிருந்து) விடுவிப்பதற்கான நிபந்தனைகளாகக் கூட இருக்கவில்லை. சாவர்க்கர் வைஸ்ராய் லின்லித்கோவை சந்தித்தபோது, அந்த சந்திப்பு குறித்த முழு விவரங்களையும் லின்லித்கோவ் லண்டனுக்கு அனுப்பிவைத்தார். அந்த ஆவணங்களின்படி, அந்த முதல் சந்திப்பிலேயே, 'பின்னர் அவர் என்னிடம் கெஞ்சினார்(அதன் பின்னர் சாவர்க்கர் என்னை கேட்டுக்கொண்டார்)' என லின்லித்கோவ் இரண்டு முறை குறிப்பிடுகிறார்." என்று அருண்ஷோரி விளக்குகிறார்.

பட மூலாதாரம், savarkarsmarak.com
சாவர்க்கரின் மன்னிப்பு
சாவர்க்கர் எழுதிய மன்னிப்புகள் குறித்து பல ஊகங்கள் உள்ளன. நாசிக் ஆட்சியர் ஒருவர் கொலையில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு சாவர்க்கருக்கு தலா 25 வருடங்கள் சிறை தண்டனை என இரண்டு தண்டனைகள் விதிக்கப்பட்டன.
அவர் தண்டனையை அனுபவிக்க அந்தமான் அல்லது 'காலாபாணி சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறைக்குச் சென்ற பிறகு சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு பல மன்னிப்புக் கடிதங்களை எழுதினார். பலரும் இதற்காக சாவர்க்கரை விமர்சிக்கின்றனர்.
அதே நேரம், ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கேட்டதை தங்களது வியூகக்தின் ஒரு பகுதி எனவும் அதனால் சில சலுகைகள் கிடைத்ததாகவும் சாவர்க்கரும் அவரது ஆதரவாளர்களும் கூறுகின்றனர். சாவர்க்கர் அளித்த விளக்கம் பற்றியும் அருண் ஷோரி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் சாவர்கரின் மன்னிப்பு, சிவாஜியின் மன்னிப்பை போன்று ஒரு வியூகம் என அருண் ஷோரி கருதவில்லை.
" (அவுரங்கசீப் மற்றும் அவரது படையால்) சிவாஜி பிரச்னையில் சிக்கும்போது, தெற்கை கைப்பற்ற அவுரங்கசீப்பிற்கு உதவ தயாராக இருப்பதாக அவர் கடிதம் எழுதுவார். ஆனால் அவுரங்கசீப் அங்கிருந்து விலகியதும் அவர் அவருடைய சொந்த விஷயங்களை மீண்டும்தொடங்கிவிடுவார். ஆனால் சாவர்க்கர் சிவாஜி போன்று ஏதேனும் செய்தாரா? நிச்சயமாக இல்லை. அவர் ஆங்கிலேயர்களுக்கு தொடர்ந்து உதவி வந்தார்" என்கிறார் அருண் ஷோரி.

மன்னிப்பு கடிதம் எழுதும்படி காந்தி கேட்டுக்கொண்டாரா?
சாவர்க்கர் தவறான பரப்புரையின் பலிகடா என 2021ஆம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பொதுவெளியில் தெரிவித்திருந்தார். காந்தி சொன்னதால்தான் சாவர்க்கர் மன்னிப்புக் கடிதங்களை எழுதியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
" ஒருவேளை சாவர்க்கருக்கு 1910ஆம் ஆண்டில் தண்டனை விதிக்கப்பட்டது என்பதை அவர்(ராஜ்நாத் சிங்) அறியாமல் இருந்திருக்கலாம். அதன் பின்னர் அவர் தண்டனையை அனுபவிக்க அந்தமானுக்கு அனுப்பப்பட்டார். அதற்கு இரண்டு மாதங்களுக்குள் அவர் ஒரு மன்னிப்பு கடிதத்தை எழுதியிருந்தார். அதன் பின்னர் சாவர்கர் பல மன்னிப்புக் கடிதங்களை கொடுத்தார். காந்தி தென் ஆப்ரிக்காவில் 1910 முதல் 1911 வரை இருந்தார். காந்தி 1915ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். அதற்குள் சாவர்க்கர் சிறையில் நான்கு ஆண்டுகளை கழித்திருந்தார். அவர் ஐந்து மன்னிப்பு கடிதங்களையும் கொடுத்திருந்தார்" என்கிறார் அருண் ஷோரி.
மேலும், "அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டபோது, அதில் சாவர்க்கர் சேர்க்கப்படவில்லை. சிறையில் இல்லாத சாவர்க்கரின் இளைய சகோதரர் நாராயண் காந்தியிடம் இது குறித்து ஆலோசனை கேட்டிருக்கிறார். சாவர்க்கர் தனது மனுவில் அவர் ஒரு அரசியல் கைதி என்பதால், பொதுமன்னிப்பின் கீழ் வருவதாக எழுதவேண்டும் என காந்தி கூறியிருந்தார். சாவர்க்கர் அதைப் போல் செய்ததுடன் தானும், சிறையில் இருக்கும் தன்னுடைய சகோதரர்களும் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரானவர்கள் இல்லை எனவும் உறுதியளித்திருந்தார்" என்கிறார் அருண் ஷோரி.

பட மூலாதாரம், savarkarsmarak.com
சாவர்க்கர் காந்தியின் நண்பரா?
1948-ல் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டு ஆறு நாட்களுக்குப் பிறகு, காந்தியை கொலை செய்யும் சதி திட்டத்தில் தொடர்பு இருப்பதாக கூறி சாவர்க்கர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் 1949 பிப்ரவரியில் விடுவிக்கப்பட்டார்.
சாவர்க்கரின் கூற்றுப்படி அவர் ஒரு காலத்தில் காந்தியின் நண்பராக இருந்தார். சாவர்க்கருக்கு காந்தியுடன் இருந்த உறவு எவ்விதமானது, அவர் நண்பரா இல்லையா?
"இல்லவே இல்லை, உண்மையில் அவர் காந்தியை வெறுத்தார், காந்தி ஒரு முட்டாள், ஒரு பைத்தியக்காரர், அவருக்கு வலிப்பு வருகிறது. அந்த வலிப்புகளின் போது அவர் ஏதோதோ சொல்கிறார். அவர் ஒரு நடமாடும் தொற்றுநோய் என சாவர்க்கர் சொல்லியிருக்கிறார்"என்கிறார் அருண் ஷோரி

பட மூலாதாரம், savarkarsmarak.com
1923-ல் சாவர்கர் ஒரு புத்தகத்தை எழுதினார், 'ஹிந்துத்துவா- ஹூ இஸ் ஹிந்து?'. இந்த புத்தகத்தில் அவர் இந்துத்துவாவை ஒரு அரசியல் கொள்கையாக முதல் முறை பயன்படுத்தினார்.
இதை பற்றி குறிப்பிடும் ஷோரி ,"இந்துத்துவா பற்றிய சாவர்க்கரின் புத்தகத்தில், இந்துத்துவாவும் இந்து மதமும் முற்றிலும் வேறானாவை என அவரே எழுதியுள்ளார்," என்கிறார்.

பட மூலாதாரம், savarkarsmarak.com
'தி நியு ஐகான் சாவர்கர் அண்டு தி ஃபேக்ட்ஸ்', நூலில் ஷோரி இந்து மதத்தை இந்துத்துவாவிடமிருந்து மீட்கவேண்டும் என எழுதியுள்ளார்.
"சாவர்க்கரின் இந்துத்துவா வந்தால், இந்தியா இந்தியாவாக இருக்காது. இந்தியா பாகிஸ்தானாகிவிடும் அது 'காவியின் இஸ்லாமி ஸ்டேட்' ஆகிவிடும். சாவர்க்கரின் இந்துத்துவா கொடூரத்தையும் வெறுப்பையும் போதிக்கிறது. இது போன்ற குணங்களை சமுதாயம் உள்வாங்கிக்கொண்டால், அப்புறம் இந்துமதம் எங்கு எஞ்சியிருக்கும்?"என்கிறார் அருண் ஷோரி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












