'நான் எழுவேன்' - பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை 2024 விருது பெற்ற மனு பாக்கரின் உத்வேக பயணம்


பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை 2024 விருதை பெரும் பெற்ற மனு பாக்கர்
படக்குறிப்பு, பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை 2024 விருதை பெற்ற மனு பாக்கர்
    • எழுதியவர், சௌரப் துக்கல்
    • பதவி, விளையாட்டுச் செய்தியாளர்

உலகளாவிய பொது வாக்கெடுப்பை தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு (ISWOTY) ஒலிம்பிக் வீராங்கனை மனு பாக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிபிசியின் டைரக்டர் ஜெனரல் டிம் டேவியும், இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோமும் இணைந்து மனு பாக்கருக்கு இந்த விருதை வழங்கினர்.

விருது பெற்றுக் கொண்ட பிறகு பேசிய மனு பாக்கர், "இந்த விருதை வழங்கியதற்காக பிபிசிக்கு நன்றி. எனது விளையாட்டு வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஒரு பயணம். நான் பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளேன். தற்போது உங்கள் முன்பு இங்கு நிற்பது எனக்கு பெருமையாக உள்ளது" என்றார்.

மனு பாக்கரின் வெற்றிப்பயணம் அவரது விடாமுயற்சியால் நிகழ்ந்துள்ளது.

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றபோது, இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு ஒரே ஒலிம்பிக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட பதக்கங்களை வென்ற முதல் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

இது அவரது விளையாட்டு வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக இருந்தது.

2021 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் மனு பாக்கரின் விளையாட்டு வாழ்க்கையில் மிகவும் சரிவான காலமாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு கட்டத்தில் இருந்து 2024 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மனு பாக்கர் சாதனை படைத்ததற்கு அவரது விடாமுயற்சி முக்கிய காரணமாக இருந்தது.

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் முக்கிய நிகழ்வுகளை பட்டியலிட்டால், மனு பாக்கரின் விடாமுயற்சிக்கு கண்டிப்பாக அதில் இடமிருக்கும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மனு பாக்கர், தங்கப் பதக்கத்தை வென்றார் மற்றும் அதே ஆண்டு நடைபெற்ற யூத் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றார்.

மேலும் 2021 ஆம் ஆண்டு அவர் பல்வேறு உலகக் கோப்பை போட்டிகளில் பங்குபெற்று அதில் ஒன்பது தங்கப் பதக்கங்களையும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் வென்றிருந்தார். இதனால் அவர் 2021 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கத்தை வெல்லும் நம்பிக்கையுடன் களமிறங்கினார்.

ஆனால் இந்த ஒலிம்பிக்கில் பங்குபெற்ற மூன்று போட்டிகளிலும் அவர் தகுதிச் சுற்றிலே தேர்ச்சி பெற தவறினார்.

தனி நபருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில், பிஸ்டல் செயலிழந்ததால், இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் மனு தகுதி சுற்றுக்கு தேர்ச்சி பெறவில்லை.

இதனால் அவர் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார். ஆனால் எப்போதும் இல்லாத அளவுக்கு மனு பாக்கர் இவற்றிலிருந்து வலுவாக மீண்டு வந்தார்.

ISWOTY

சாதனை பயணத்தின் தொடக்கம்

மனு பாக்கருக்கு இயல்பாகவே விளையாட்டின் மீது ஆர்வம் இருந்தது. பள்ளி பருவத்தில் அவர் குத்துச்சண்டை, ரோலர் ஸ்கேட்டிங், தடகளம் மற்றும் கபடி போன்ற பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்களை வென்றார். பின்னர் அவர் கராத்தே மற்றும் பிற தற்காப்புக் கலைகளிலும் ஈடுபட்டார். அதிலும் அவர் தேசிய அளவில் பதக்கங்களை பெற்றார்.

2016 ஆம் ஆண்டு, மனு 10 ஆம் வகுப்பு படிக்கும் போதுதான், அவர் துப்பாக்கிச் சுடுதலில் தீவிரமாக ஈடுபட்டார். இந்த விளையாட்டில் மனு ஆர்வம் காட்ட, அவரது தந்தை ஒரு முக்கிய காரணமாக இருந்தார். 2007-08 ஆம் ஆண்டில் மனு பாக்கரின் தந்தை, ராம் கிஷன் பாக்கர் பிரிட்டனில் கடல்சார் பொறியியல் படித்து வந்தபோது, அவருக்கு இந்த விளையாட்டு அறிமுகமானது.

"கடல்சார் பொறியியல் அகாடமியில், சில பொறியாளர்கள் கோபப்படும் போதெல்லாம் துப்பாக்கி சுடுதல் களத்துக்கு சென்று துப்பாக்கி சுட்டு, தங்கள் கோபத்தை தணிக்க இந்த விளையாட்டை பயன்படுத்துவர்", என்று ராம் கிஷன் பாக்கர் கூறினார்.

"கோபத்தை தணிக்க அவர்கள் இவ்வாறு செய்வது என்னை மிகவும் கவர்ந்தது, நமது ஆற்றலை நல்ல வழியில் நடத்த இது ஒரு சிறந்த வழியாக இருக்கும் என்று கருதினேன்".

பிரிட்டனில் இருந்து திரும்பியதும், அரியாணா மாநிலத்தில் உள்ள ஜஜ்ஜார் நகரத்தில் தனது குடும்பத்தினர் நடத்தும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ராம் கிஷன் துப்பாக்கி சுடுதல் விளையாட்டை அறிமுகப்படுத்தினார்.

தொழில்முறை துப்பாக்கி சுடுதல் வீராங்கனையாக மாறிய இரண்டு ஆண்டுகளுக்குள், கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய சீனியர் அணியில் மனு பாக்கர் களமிறங்கினார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அப்போது அவருக்கு 16 வயதே ஆகியிருந்தது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் வரை இந்த வெற்றி அவரது விளையாட்டு வாழ்க்கையின் முக்கிய நிகழ்வாக இருந்தது.

காணொளிக் குறிப்பு, மனு பாக்கர்

சரிவை சந்தித்தாலும் பின்வாங்கவில்லை

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மனு பாக்கர் களமிறங்க தயாராக இருந்தபோது, மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டிக்கான உலக தரவரிசை பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தில் இருந்தார். ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் விளையாட தேர்ச்சி பெற வழிவகுக்கும் அனைத்து உலக அளவிலான போட்டிகளிலும் அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்.

ஆனால் ஒலிம்பிக்ஸ் போன்ற பெரிய போட்டிகளின் அழுத்தம் அவருக்கு ஏற்பட்டது என்று போட்டிகளுக்கு பிறகு ஒரு நேர்காணலில் அவர் ஒப்புக்கொண்டார்.

"நான் இவ்வளவு அழுத்தத்தை என் வாழ்க்கையில் உணர்ந்தது இதுவே முதல் முறை. இரவில் எனக்கு தூக்கம் வரவில்லை. பகலிலும் பதற்றமாகவும் குழப்பமாகவும் இருந்தது," என்று 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

ISWOTY

10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டிக்கான தகுதிச் சுற்றின் போது அவரது துப்பாக்கியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் நிலைமை மிகவும் மோசமானது. இது அவரை ஆழமாக காயப்படுத்தியது.

துப்பாக்கி சுடுதல் விளையாட்டை கைவிடுவது குறித்து மனு பாக்கர் யோசிக்கத் தொடங்கினார். விளையாட்டு '9 முதல் 5 மணி வரையிலான ஒரு வேலை போல' உணர்ந்ததாக அவர் மற்றொரு நேர்காணலில் தெரிவித்தார்.

ஆனால் 2023 ஆம் ஆண்டு, தனது பயிற்சியாளர் ஜஸ்பால் ராணாவுடன், மனு பாக்கர் மீண்டும் இணைந்து விளையாட்டு பயிற்சியை தொடங்கினார் . 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 25 மீட்டர் பிஸ்டல் இரட்டையர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று, கம்பேக் கொடுத்தார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு தனது கல்லூரியில் நடைபெற்ற ஒரு பாராட்டு நிகழ்வில், இந்த கம்பேக் குறித்து பேசிய மனு பாக்கர், "வாழ்க்கையில் வெற்றி பெறாமல் இருக்கும்போது, முயற்சி செய்வதை ஒருபோதும் கைவிடாமல் இருப்பதே முக்கியமான விஷயமாகும். கடினமாக உழைப்பதாலும், நிலையாக முயற்சி செய்வதாலும் நாம் அதிக வெற்றியை அடைய முடியும்", என்றார்.

ISWOTY

பட மூலாதாரம், RAM KISHAN BHAKAR

படக்குறிப்பு, தந்தையுடன் மனு பாக்கர்

'வரலாற்றில் என்னைப் பற்றி நீங்கள்

உங்கள் கசந்த, திரிக்கப்பட்ட பொய்களை எழுதலாம்

என்னை மண்ணில் போட்டு மிதிக்கலாம்

ஆனால் புழுதியைப் போல நான் எழுவேன்'

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, சிவில் உரிமைகள் ஆர்வலர் மாயா ஏஞ்சலோவின் இந்த வரிகளின் மூலம் மனு பாக்கர் உத்வேகம் பெற்றார். இதே உத்வேகத்தை என்றும் நினைவில் வைத்துக்கொள்ள, அவரது கழுத்தின் பின்புறத்தில் 'ஆயினும் நான் எழுவேன்' (Still I Rise) என்ற வாசகத்தைப் பச்சைக் குத்தியுள்ளார்.

"வெற்றியும் தோல்வியும் ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையின் பகுதிகளாகும். ஆனால், வீழ்ச்சியைச் சமாளித்து, மீண்டு வருவதற்கு உங்களை எவ்வாறு தயார்படுத்திக் கொள்கிறீர்கள் என்பதுதான் மிக முக்கியமான விஷயம்," என மனு பாக்கர் கூறியிருந்தார்.

மனு பாக்கர்

"டோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்ததைக் கடந்து வர எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் நான் மீண்டு வருவேன், எழுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. 'ஸ்டில் ஐ ரைஸ்' என்ற வார்த்தைகளையும், அவற்றின் சாராம்சத்தையும் எனது விளையாட்டு வாழ்க்கையுடன் தொடர்புபடுத்த முடியும். 'ஸ்டில் ஐ ரைஸ்' எனக்கு மிகப்பெரிய உத்வேகம், அதனால் அதனைப் பச்சை குத்திக்கொள்ள முடிவு செய்தேன்," என்கிறார் மனு.

மனுவின் இந்த கம்பேக் நம்பமுடியாததாக இருந்தாலும், அவரை நன்கு அறிந்தவர்களுக்கு இந்த வெற்றி ஆச்சரியமான ஒன்றாக இல்லை.

அவரது தந்தை ராம் கிஷன் பாக்கர், வெற்றிக்கான தனது மகளின் தேடலை எடுத்துக்காட்டும் வகையில், 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து ஒரு நிகழ்வை நினைவு கூர்ந்தார்.

"தற்போது அல்லது இதற்கு முன்னால் தங்கப் பதக்கம் வென்றவர்கள் மட்டுமே சுவரில் கையெழுத்திட அனுமதிக்கப்படும் அரங்கம் ஒன்று இருந்தது. போட்டிக்கு ஒரு நாள் முன்பு, மனு அந்த அரங்கிற்குச் சென்று தனது பெயரை கையெழுத்திட ஒரு பேனாவை தேடிக்கொண்டிருந்தார், அப்போது அங்கிருந்த ஒரு தன்னார்வலர், 'நீங்கள் தங்கப் பதக்கம் வென்றவரா?' என்று கேட்டார். இதனையடுத்து மனு அவரிடம் தான் அடுத்த நாள் வருவதாக கூறிவிட்டு அந்த அரங்கத்தை விட்டு வெளியேறினார்", என்றார் ராம் கிஷன் பாக்கர்.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பிறகு அவர் அந்த அரங்கத்துக்கு மீண்டும் வந்தார்.

"'நான் யாருக்கும் குறைந்தவரல்ல' என்ற மனப்பான்மையே மனுவின் உந்து சக்தியாக இருந்து வருகிறது," என்று அவரது தந்தை கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)