உலகின் ஏழ்மையான பகுதி எட்டே ஆண்டுகளில் வானுயர்ந்த கட்டடங்களுடன் பளபளப்பான நகரானது எப்படி? பிபிசி கள ஆய்வு

ஷ்வே காக்கூ

பட மூலாதாரம், Natalie Thomas/BBC

படக்குறிப்பு, அதிக வளங்கள் தேவைப்படும் ஷ்வே காக்கூ யுத்த களத்தில் போராடிக்கொண்டிருக்கிறது
    • எழுதியவர், ஜோனாதன் ஹெட்
    • பதவி, தெளன்கிழக்காசிய நிருபர்

மோய் ஆற்றின் மியான்மர் கரைபக்கம், சோள வயல்களை அடுத்து வானுயர்ந்த பளபளப்பான கட்டடங்கள் இருக்கின்றன. நாம் காண்பது கற்பனையா என்று ஒரு விநாடி கண்களை கசக்கி மீண்டும் பார்க்க வைக்கும் அளவுக்கு அவை மிகவும் வியப்பாக இருக்கின்றன.

எட்டு வருடங்களுக்கு முன்னர் இவை எதுவும் இருக்கவில்லை. சில மரங்கள், பாதி கட்டப்பட்ட ஒரு சில கட்டடங்கள் மட்டுமே இருந்தன. நீண்டகாலமாக நடந்த உள்நாட்டுப் போர் காரணமாக இந்த பகுதி உலகின் மிகவும் ஏழ்மையான பகுதிகளில் ஒன்றாக மாறியது.

ஆனால் தற்போது, தாய்லாந்தின் எல்லையில் உள்ள இந்த இடத்தில், இந்த சிறிய நகரம் இருக்கின்றது. அது ஷ்வே காக்கூ அல்லது ரெயின்ட்ரீ என்று அழைக்கப்படுகிறது.

மோசடிகளால் கட்டமைக்கப்பட்ட நகரம் என்று இது அழைக்கப்படுகின்றது. மோசடி, பணமோசடி மற்றும் ஆள் கடத்தல் போன்ற செயல்பாடுகளின் தாயகமாகவும் இந்த நகரம் இருக்கிறது. இதற்குப் பின்னால் இருந்த ஷி ஜிஜியாங், பாங்காக் சிறையில் சீனாவுக்கு நாடு கடத்தப்படுவதற்காகக் காத்திருக்கிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆனால், இந்த நகரத்தை நிர்மாணித்த ஷீ ஜிஜியாங்கின் நிறுவனமான யடாய், அதன் விளம்பர வீடியோக்களில் இந்த நகரத்தைப் பற்றிய முற்றிலும் மாறுபட்ட ஒரு பார்வையை தருகிறது.

அந்த வீடியோக்களின்படி, இது ஒரு உல்லாச நகரமாகவும், சீன சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான ஒரு இடமாகவும், மிகப்பெரும் பணக்காரர்களுக்கு சொர்க்கமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில், சீனாவிலிருந்து பிரிந்து வந்து கட்டுப்பாடற்ற லட்சியங்கள் வளர்ந்த கதைகளுள் ஷ்வே காக்கூவின் கதை ஒன்றாகும்.

தான் வசித்து வந்த மோசடிகள் மற்றும் சூதாட்டங்கள் நிறைந்த உலகத்தில் இருந்து வெளியேறுவதற்கான வழியாக, இந்த நகரத்தைக் கட்டியெழுப்ப ஷீ ஜிஜியாங் கனவு கண்டார்.

ஆனால் இவ்வளவு பெரிய கனவினை கண்டதன் மூலம் அவர் சீனாவின் கவனத்தை ஈர்த்தார். இதனால் தாய்லாந்து-மியான்மர் எல்லையில் சீன மக்களை அதிகளவில் குறிவைத்து நடத்தப்படும் மோசடி நடவடிக்கைகளை முறியடிக்க சீனா முனைப்பு காட்டி வருகிறது.

இந்த மோசடிகள் பிரபலமடைந்திருப்பது தாய்லாந்தின் சுற்றுலாவையும் பாதிக்கிறது. இதனால் தனது எல்லைக்கு வெளியே இருக்கும் வளாகங்களுக்கு மின்சாரத்தைத் துண்டித்ததுடன், வங்கி விதிகளையும் தாய்லாந்து அரசு கடுமையாக்கியுள்ளது. தாய்லாந்தை கடத்தலுக்கு ஒரு தளமாக பயன்படுத்துவோரின் விசாக்களை ரத்து செய்வதாகவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது.

மியான்மர் போரினால் பாதிக்கப்பட்டு ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, தொடர்ந்து செயல்பட தேவையான முதலீடுகளையும், சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்க முடியாமல் ஷ்வே காக்கூ தனித்து விடப்பட்டுள்ளது.

இந்த நகரத்தைப் பார்வையிட பத்திரிகையாளர்களை அனுமதிப்பதன் மூலம் அதற்கு இருக்கும் மோசமான பெயரை மாற்ற யடாய் நிறுவனம் முயற்சி செய்கிறது. மேலும், சாதகமான செய்திகளை வெளியிடுவது ஷீ ஜிஜியாங்கை சிறையிலிருந்து விடுவிக்கக்கூடும் என அந்நிறுவனம் கருதுகின்றது.

எனவே, அவர்கள் பிபிசியை ஷ்வே காக்கூவுக்கு அழைத்தனர்.

தாய்லாந்து

பட மூலாதாரம், Jonathan Head/BBC

படக்குறிப்பு, மியான்மரின் பக்கம் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடங்களை தாய்லாந்து எல்லையிலிருந்து காணமுடிகிறது

ஷ்வே காக்கூவின் உள்ளே

அங்கே செல்வது சற்று கடினமானது.

2017-ல் கட்டுமானப் பணிகள் தொடங்கியது முதல், ஷ்வே காக்கூ ஒரு தடை செய்யப்பட்ட இடமாக இருந்து வருகிறது. சாதாரண பார்வையாளர்கள் இங்கு செல்லத் தடை இருக்கின்றது.

2021 ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு மியான்மரில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்ததால், இந்த இடத்துக்கு செல்வது மேலும் கடினமானது. நாட்டின் வணிக தலைநகரான யாங்கானில் இருந்து பல சோதனைச் சாவடிகள், மூடப்பட்ட சாலைகள் மற்றும் துப்பாக்கிச் சண்டைக்கு நடுவில் மாட்டிக்கொள்ளும் அபாயத்தைக் கடந்து அங்கு சென்று சேர்வதற்கு மூன்று நாட்கள் ஆகும்.

தாய்லாந்திலிருந்து செல்வதற்கு சில நிமிடங்கள்தான் ஆகின்றன. ஆனால், தாய்லாந்து காவல்துறையினர் மற்றும் ராணுவ ரோந்தில் இருந்து தப்பிக்க கவனமாக திட்டமிடவேண்டும்.

ஷீ ஜிஜியாங்க் உடன் பணிபுரிபவர்கள் எங்களை ஒரு சுற்றுப்பயணத்துக்கு அழைத்துச் சென்றனர், புதிதாக அமைக்கப்பட்ட தெருக்கள், சொகுசு வில்லாக்கள், மரங்கள் போன்றவற்றை அவர்கள் சுட்டிக்காட்டி, "ஷீ பசுமையான நகரை உருவாக்குவதில் நம்பிக்கைக்கொண்டுள்ளார்," என எங்களிடம் கூறினார்கள்.

இந்த நகரை எங்களுக்கு சுற்றிக்காட்டியவர் வாங் ஃபுகுய் என்பவர். தெற்கு சீனாவில் உள்ள குவாங்ஸி நகரில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியதாக அவர் எங்களிடம் தெரிவித்தார். அவர் தாய்லாந்தில் பொய்யான மோசடிப் புகார்களின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டதாக குறிப்பிடுகிறார். சிறையில் அவர் ஷீ ஜிஜியாங்கை சந்தித்து அவரது மிகவும் நம்பகமான உதவியாளர்களில் ஒருவராக மாறினார்.

முதலில், ஷ்வே காக்கூ ஒரு சீன நகரம் போலவே தான் இருந்தது. கட்டடங்களில் பெயர்ப்பலகைள் எல்லாம் சீன மொழியில் எழுதப்பட்டு இருந்தன. மேலும் சீனாவில் தயாரிக்கப்பட்ட கட்டுமான வாகனங்கள் கட்டுமான தளங்களுக்கு தொடர்ந்து வந்து செல்கின்றன.

சீனமொழி

பட மூலாதாரம், Jonathan Head/ BBC

படக்குறிப்பு, சீன மொழியில் எழுதப்பட்டுள்ள பதாகைகளுடன் யடாய் சீன நகரத்தைப் போலவே இருக்கிறது

அந்த கட்டடங்களில் குத்தகைக்கு இருப்பவர்கள் குறித்து யடாய் தெளிவற்ற பதில்களையே தருகிறது. "பல நாடுகளை சேர்ந்த பணக்காரர்கள், பெரிய வில்லாக்களை வாடகைக்கு எடுக்கிறார்கள்," என கூறினர். அப்படியானால் அவர்கள் செய்யும் தொழில்கள் என்ன என்ற கேள்விக்கு, "பல தொழில்கள், விடுதிகள் மற்றும் சூதாட்ட விடுதிகள்" என்றார்.

ஆனால் அங்கு நாம் பார்த்தவர்களில் பெரும்பாலானவர்கள் மியான்மரை சேர்ந்த கரேன் என்ற உள்ளூர் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் வேலை செய்வதற்காக தினமும் ஷ்வே காக்கூவுக்கு வருகின்றனர். ஹோட்டல்கள் மற்றும் கேசினோக்களின் வாடிக்கையாளர்களாக இருக்க வேண்டிய வெளிநாட்டவர்களை மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே பார்த்தோம்.

ஷ்வே காக்கூவில் தற்போது எந்த மோசடியும் நடைபெறுவதில்லை என யடாய் நிறுவனம் கூறுகிறது. கட்டாய உழைப்பு அனுமதிக்கப்படுவதில்லை என்றும் "ஆன்லைன் வணிகங்கள்" வெளியேற வேண்டும் என்றும் சீன, பர்மீஸ் மற்றும் ஆங்கில மொழிகளில் பிரமாண்ட அறிவிப்புகள் அந்நகரம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், மோசடித் தொழில் இன்னமும் நடந்துகொண்டிருப்பதாக உள்ளூர் மக்கள் எங்களிடம் ரகசியமாக தெரிவித்தனர்.

பத்தாண்டுகளுக்கு முன் சீன முதலீடுகள் அதிகம் இருந்த கம்போடிய கடற்கரையோரம் தொடங்கி, சீனாவுடனான மியான்மர் எல்லையில் சட்டம் ஒழுங்கில்லாத பகுதிகளிலும் இந்த மோசடி செய்பவர்கள் சென்றனர். தற்போது அவர்கள் தாய்லாந்து- மியான்மர் எல்லையில் தங்கியுள்ளனர். அவர்களைச் சுற்றி மியான்மர் ராணுவமும், கிளர்ச்சிப் படைகளும், ராணுவ தளபதிகளும் கரேன் மாகாண கட்டுப்பாட்டை கைப்பற்ற போராடுகின்றனர்.

இந்த மோசடிகள் பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள வணிகமாக வளர்ந்துள்ளன. சீனா, தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் இந்திய துணைக்கண்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கட்டடங்களுள் இருந்து, உலகம் முழுவதும் உள்ள மக்களின் சேமிப்புகளை மோசடி செய்கிறார்கள்.

சிலர் அங்கு விருப்பத்துடன் வேலை செய்கிறார்கள், ஆனால் மற்றவர்கள் கடத்தி வரப்பட்டு வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கிருந்து தப்பியோடியவர்கள் சித்திரவதை மற்றும் அடிதடி பற்றிய கொடூரமான கதைகளை கூறியுள்ளனர்.

ஸ்வே காக்கூ

பட மூலாதாரம், Jonathan Head/ BBC

படக்குறிப்பு, ஷ்வே காக்கூவில் உள்ள அலுவலக கட்டடங்களுக்குள் செல்ல பிபிசி அனுமதிக்கப்படவில்லை

நாங்கள் அங்கு செல்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்புவரை இந்த மோசடி மையங்களில் ஒன்றில் வேலை செய்த இளம்பெண் ஒருவருடன் மட்டுமே பேச முடிந்தது. அவர் அந்த வேலையை விரும்பாததால் வெளியேற அனுமதிக்கப்பட்டார்.

அழகிய பெண்களை கொண்ட மாடலிங் குழுவில் ஒரு பகுதியாக அவர் பணியாற்ற வேண்டியிருந்தது. அவர்கள் மிகவும் சாதுவானவர்களை தொடர்புகொண்டு அவர்களுடன் நெருக்கமான ஆன்லைன் உறவை உருவாக்க முயற்சி செய்கிறார்கள் என்று அந்த பெண் தெரிவித்தார்.

"அவர்களது இலக்கு முதியவர்கள்தான். 'நீங்கள் பார்க்க என் நண்பரைப் போலவே இருக்கிறீர்கள்' என்று ஒரு உரையாடலைத் தொடங்கவேண்டும். அவர்களுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்ட பின்னர் நமது புகைப்படங்களை அவர்களுக்கு அனுப்ப வேண்டும், சில நேரங்களில் இரவு நேரங்களில் அணியும் ஆடைகள் அணிந்திருக்கும் புகைப்படங்களையும் அவர்களுக்கு அனுப்ப வேண்டும்", என்றார் அவர்.

அதன் பின்னர் , கிரிப்டோ முதலீடுகள் போன்றவற்றால் எவ்வாறு விரைவில் பணம் ஈட்டுவது என்பது குறித்து பேச்சை திருப்ப வேண்டும். இதன் மூலம் அந்த பெண்கள் நிறைய பணம் சம்பாதித்ததாக அவர்கள் கூறுகின்றனர்.

"நம்முடன் நெருக்கமாக இருப்பதாக அவர்கள் உணரும்போது, அவர்களை 'சாட்' செய்யும் பிரிவுக்கு மாற்றிவிடவேண்டும். இந்த பிரிவுக்கு வந்தவுடன் அந்த வாடிக்கையாளருக்கு தொடர்ந்து செய்திகளை அனுப்பி, கிரிப்டோ நிறுவனத்தில் பங்குகளை வாங்க வைக்க வற்புறுத்துவார்கள்".

நாங்கள் ஷ்வே காக்கூவில் இருந்த குறுகிய காலத்தில், நாங்கள் எதை பார்க்க வேண்டும் என யடாய் நிறுவனம் விரும்பியதோ அதை மட்டுமே பார்க்க எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்படியிருந்தும், மோசடிகள் செய்வது நிற்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. மேலும் அது அந்நகரின் முக்கியத் தொழிலாக இன்னும் இருக்கிறது என்று தெரியவந்தது.

புதிதாக கட்டப்பட்ட அலுவலக கட்டடங்களுக்குள் சென்று பார்க்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அவை தனியாருடையவை என்று அவர்கள் எங்களிடம் சொல்லிக்கொண்டே இருந்தார்கள், இந்தப் பகுதியில் எல்லை பாதுகாப்புப் பணியை மேற்கொள்ளும் கிளர்ச்சி குழுவிலிருந்து வந்த காவலர்களால் எப்போதும் நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டோம்.

கட்டுமான பணிகளையும், கட்டடங்களின் வெளிப்புறங்களையும் படம்பிடிக்க நாங்கள் அனுமதிக்கப்பட்டோம், ஆனால் அவற்றின் உள்ளே நுழைய அனுமதி இல்லை. பல ஜன்னல்களின் உட்புறத்தில் கம்பிகள் இருந்தன.

"ஷ்வே காக்கூவில் இருக்கும் அனைவருக்கும் அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியும்," என்று மோசடி மையம் ஒன்றில் பணியாற்றிய இளம்பெண் ஒருவர் கூறினார்.

ஷ்வே காக்கூவில் மோசடி மையங்களை அமைக்க இனி அனுமதி இல்லை என்ற யடாய் நிறுவனத்தின் கூற்றை அவர் நிராகரித்தார்.

"அது ஒரு பொய். இதுகுறித்து அவர்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அந்த உயர்ந்த கட்டடங்களில் இருந்துகொண்டு மொத்த நகரமும் இதைத்தான் செய்கிறது. அங்கு யாரும் வேடிக்கைக்காக கூட செல்வதில்லை. யடாய் நிறுவனத்துக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை."

பெய்ஜிங்

பட மூலாதாரம், Courtesy Yatai

படக்குறிப்பு, பெய்ஜிங்கில் உள்ள டியானன்மென் சதுக்கத்தில் ஷீ ஜிஜியாங்

யார் இந்த ஷீ ஜிஜியாங்?

"யடாய் நிறுவனம் தொலைத்தொடர்பு மோசடிகளை எப்போதும் ஏற்றுக்கொள்ளாது என என்னால் உறுதியளிக்க முடியும்," என்று பாங்காக்கின் ரிமாண்ட் சிறைச்சாலையிலிருந்து வந்த அழைப்பு ஒன்றில் ஷீ ஜிஜியாங் கூறினார். அவர் அந்த சிறையில் தான் இருக்கிறார்.

அவரிடம் இருந்து இந்த வார்த்தைகளை நாங்கள் நேரடியாக கேட்க வேண்டும் என விரும்பிய யடாய் நிறுவனம், ஒரு காணொளி அழைப்புக்கு ஏற்பாடு செய்தனர். வாங் மட்டும்தான் அவருடன் பேச முடியும் என்பதால் நாங்கள் சிறைக்காவலர்கள் பார்வையில் படாமல் விலகி இருக்க வேண்டியிருந்தது. இதனால் எங்களுடைய கேள்விகளை கேட்க நாங்கள் வாங்கை சார்ந்து இருக்க வேண்டியிருந்தது.

குற்றவியல் செயல்பாடுகளின் மூளையாக கருதப்படும் சீனாவின் சிறிய நகரைச் சேர்ந்த தொழில்முனைவோரான ஷீ ஜிஜியாங் பற்றி குறைவான தகவல்களே உள்ளன.

1982 ஆம் ஆண்டு சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஒரு ஏழை கிராமத்தில் இவர் பிறந்தார். அவர், 14 வயதில் பள்ளியிலிருந்து வெளியேறி கணினி குறியீட்டு முறையை கற்றுக்கொண்டார். தனது 20களின் முற்பகுதியில் பிலிப்பைன்ஸுக்கு குடிபெயர்ந்து, சீனாவில் சட்டவிரோதமான ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனால் அவர் பணம் சம்பாதிக்கத் தொடங்கினார். சட்டவிரோதமாக லாட்டரி நடத்தியதாக ஒரு சீன நீதிமன்றம் அவரை 2014 ஆம் ஆண்டு குற்றவாளியாக அறிவித்தது. ஆனால், அவர் தொடர்ந்து வெளிநாட்டில் தங்கியிருந்தார்.

அவர் கம்போடியாவில் சூதாட்டத் தொழிலில் முதலீடு செய்து அந்நாட்டின் குடியுரிமை பெற்றார். அவர் குறைந்தது நான்கு வெவ்வேறு பெயர்களை பயன்படுத்தியுள்ளார்.

மியான்மர்

பட மூலாதாரம், Courtsey Yatai

படக்குறிப்பு, மோய் ஆற்றின் கரையோரம் மியான்மரில் சில பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள சாவ் சிட் துவுடன் (வலதுபுறம்) ஷீ ஜிஜியாங்

2016 ஆம் ஆண்டில் கேரன் இனத்தை சேர்ந்த ஒரு ராணுவ அதிகாரியான சாவ் சிட் துவுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொண்டார். இந்த ஒப்பந்தத்தின்படி சீன கட்டுமான இயந்திரங்கள் மற்றும் பொருட்களை வாங்க ஷீ ஜிஜியாங் நிதி வழங்குவார். அதே நேரத்தில் சா சிட் து மற்றும் அவரது 8,000 ஆயுதமேந்திய வீரர்கள் அதைப் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள் என்பதுதான் ஒப்பந்தம்.

யடாய் நிறுவனம் வெளியிட்ட காணொளிகள் 15 பில்லியன் டாலர் முதலீடுகளை செய்வதாக உறுதியளித்ததுடன், ஹோட்டல்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் சைபர் பூங்காங்கள் கொண்ட அற்புத உலகத்தை சித்தரித்தன. சீனா அதிபர் ஷி ஜின்பிங்கின் பெல்ட்-அண்ட்-ரோடு திட்டத்தின் ஒரு முன்னெடுப்பாக ஷ்வே காக்கூ நகரின் விரிவாக்கம் கருதப்பட்டது.

2020 ஆம் ஆண்டில் ஷீ ஜிஜியாங்குடன் தொடர்பு இல்லை என சீனா வெளிப்படையாக அறிவித்தது. அனுமதி அளிக்கப்பட்ட 59 வில்லாக்களை தாண்டி கட்டுமான பணிகளை மேற்கொண்டதால், மியான்மரில் சூதாட்ட விடுதிகள் சட்டரீதியாக அனுமதிக்கப்படும் முன்னரே அவற்றை நடத்தியதற்காகவும் யடாய் நிறுவனம் மீது மியான்மர் அரசாங்கம் விசாரணையைத் தொடங்கியது.

2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இன்டர்போலிடம் சீனா வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ஷீ ஜிஜியாங் கைது செய்யப்பட்டு பாங்காக்கில் சிறை வைக்கப்பட்டார். அவருக்கும், அவரது தொழில் கூட்டாளி சாவ் சிட் து ஆகியோருக்கு ஆள் கடத்தலில் தொடர்பிருப்பதாக பிரிட்டன் அரசு தடை விதித்தது.

சீன அரசின் இரட்டை செயல்பாட்டால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாக ஷீ ஜிஜியாங் தெரிவித்தார். தனது யடாய் நிறுவனத்தை சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தரவின் பேரிலேயே தொடங்கியதாக ஷீ ஜிஜியாங் கூறினார். ஷ்வே காக்கூ அப்போது பெல்ட் அண்ட் ரோட்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்றும் அவர் வலியுறுத்தினார்.

தனது திட்டத்தின் கட்டுப்பாட்டை அவர்களுக்கு அளிக்க மறுத்துவிட்டதால் சீனாவின் கம்யூனிஸ தலைமை தன்னை எதிர்ப்பதாக அவர் குற்றம்சாட்டினார். அவர்களுக்கு தாய்லாந்து-மியான்மர் எல்லையில் ஒரு காலனி தேவைப்பட்டதாக அவர் கூறுகிறார். ஷீ ஜிஜியாங்குடன் எந்த தொழில் தொடர்பும் இல்லை என இதனை சீனா மறுத்துள்ளது.

யடாய் நிறுவனம் எந்த தவறும் செய்யவில்லை என கூறும் ஷீ ஜிஜியாங், மோசடி செய்பவர்கள் ஷ்வே காக்கூவுக்கு தங்கள் பணத்தைச் செலவிட வருவதற்கான "அதிக வாய்ப்பு" இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டார்.

"எல்லோரும் சுதந்திரமாக சென்று வர முழுமையாக அனுமதி இருப்பது யடாயில் மட்டுமே. வாடிக்கையாளர்களை நிராகரிப்பது, என்னைப் போன்ற தொழிலதிபருக்கு உண்மையில் மிகக் கடினம். இதுதான் எனது பலவீனம்."

மியான்மர்

பட மூலாதாரம், Jonathan Head/BBC

படக்குறிப்பு, மோசடி செயல்பாடுகளை கண்டித்து யடாய் பல பதாகைகளை நிறுவியுள்ளது

ஆனால் ஷ்வே காக்கூவில் அனைத்தையும் இயக்கும் யடாய் நிறுவனத்தால், மோசடிக்காரர்கள் நகருக்குள்ளே வந்து செல்வதை தடுக்க முடியவில்லை என கூறுவதை நம்பமுடியவில்லை.

மோசடி செய்பவர்களைத் தவிர வேறு எந்த வணிகமும் இங்கு செயல்பட முன்வரும் என்பதை யோசிப்பதே கடினம்.

தாய்லாந்து மின்சாரத்தையும், தொலைத்தொடர்பையும் துண்டித்துவிட்ட நிலையில், டீசல் ஜெனரேட்டர்களில் இருந்து மின்சாரம் வருகிறது. அவற்றை இயக்குவதற்கு அதிக செலவாகும். தொலைத்தொடர்புகள் ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் நடைபெறுகின்றன. இதற்கும் அதிக செலவாகும்.

ஷ்வே காக்கூ ஒரு பாதுகாப்பான நகரம் என்ற கதையை உருவாக்க திட்டத்தை மூடிமறைப்பதே யடாய் நிறுவனத்தின் உத்தி என்று அமைதிக்கான அமெரிக்க நிறுவனத்தை சேர்ந்த ஜேசன் டவர். இந்த நிறுவனம் ஷ்வே காக்கூவின் மோசடி குறித்து பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறது.

"மோசடி தொழில்களின் அங்கமான சித்திரவதை போன்றவற்றை பிற பகுதிகளுக்கு அவர்கள் பரப்பலாம்", என்று அவர் கூறுகிறார்.

ஆனால் இந்தத் திட்டம் வேலை செய்யும் என்று அவர் நினைக்கவில்லை. "ஷ்வே காக்கூவில் எந்த வகையான சட்டப்பூர்வமான வணிகங்கள் நடைபெறும்? அது கவர்ச்சிகரமாக இல்லை. அந்த பொருளாதாரம் ஒரு மோசடி பொருளாதாரமாகவே தொடரும்".

மியான்மர்

பட மூலாதாரம், Jonathan Head/BBC

படக்குறிப்பு, கரோக்கி பாரில் யடாய் மற்றும் ஷீ ஜிஜியாங் பற்றிய காணொளிகள் ஒளிபரப்பப்படுகின்றன

போர்களத்தில் ஒரு தொழில்

ஒரு வழியாக ஷ்வே காக்கூவில் ஆஸ்திரேலியர் ஒருவரால் நடத்தப்படும் ஒரு சூதாட்ட விடுதிக்குள் சென்று பார்க்க எங்களுக்கு அனுமதி கிடைத்தது. இந்த சூதாட்ட விடுதியை மூடப்போவதாக அவர் எங்களிடம் கூறினார்.

உள்ளே இருந்த வாடிக்கையளர்கள் உள்ளூர் கரேன் பிரிவினர் மக்கள் மட்டுமே. டிஜிட்டல் முறையில் நடைபெறும் ஒரு வகை சூதாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் நேர்காணல் செய்ய எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்த சூதாட்ட விடுதி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. உள்நாட்டுப் போருக்கு முன்பு ஒன்று அல்லது இரண்டு சூதாட்ட விடுதிகள் இருந்தபோது இந்த சூதாட்ட விடுதி மிகவும் பிரபலமாக இருந்தது. ஆனால், இப்போது சுமார் ஒன்பது சூதாட்ட விடுதிகள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் போதிய வாடிக்கையாளர்கள் இல்லை என்று அதன் மேலாளர் கூறினார்.

உண்மையான பணம் ஆன்லைன் சூதாட்டத்தில்தான் இருப்பதாகவும், அதுவே ஷ்வே காக்கூவில் முக்கிய தொழிலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆன்லைன் சூதாட்டத்தின் மூலம் எவ்வளவு பணம் கிடைக்கிறது, பணப்பதுக்கல் மற்றும் மோசடி போன்ற குற்றவியல் நடவடிக்கைகள் மூலம் எவ்வளவு கிடைக்கிறது என்பதை தெரிந்துகொள்வது முடியாத காரியம். அவை பெரும்பாலும் ஒரே வளாகத்தில் ஒரே குழுவினரால் நடத்தப்படுகின்றன. எவ்வளவு பணம் ஈட்டப்படுகிறது என யடாயிடம் கேட்டபோது அவர்கள் எங்களிடம் தோராயமான ஒரு தொகையைக் கூட கூறவில்லை. அது தனிப்பட்ட தகவல் என அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிறுவனம் ஹாங் காங், மியான்மர் மற்றும் தாய்லாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவற்றின் மூலம் எந்த வருமானமும் வராத நிலையில் அவை போலியான நிறுவனங்கள்தான்.

யடாய் நிறுவனம் அவர்கள் அமைத்த கோ கார்ட் பந்தயங்கள் நடக்கும் அரங்கம், நீர் விளையாட்டு அரங்கம், மாதிரி தோட்டம் ஆகியவற்றை காட்ட முன்வந்தபோது நாங்கள் நிராகரித்து விட்டோம். காலை உணவு உட்கொள்ள யடாயின் சொகுசு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அங்கிருந்த சூதாட்ட விடுதிக்கு உள்ளே செல்ல முடியாவிட்டாலும் ஒரு பார்வை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அது காலியாக இருந்ததாக தோன்றியது.

இதைத் தவிர நாங்கள் பார்க்க அனுமதிக்கப்பட்ட ஒரே இடம் ஒரு கரோக்கி கிளப் மட்டும்தான். அங்கே கண்கவரும் தனி அறைகளும், முழுவதும் டிஜிட்டல் திரைகளால் மூடப்பட்ட குவிமண்டபங்களும் இருந்தன. அந்த டிஜிட்டல் திரைகளில் பெரிய மீன்களும் சுறாக்களும் நீந்திக்கொண்டிருந்தன.

அவற்றில் ஷீ ஜிஜியாங்கின் நற்குணங்களையும், தொலைநோக்கையும் பாராட்டும் காணொளிகளும் காட்டப்பட்டன. இந்த கிளப்பும் அங்கு பணிபுரியும் சில இளம் சீனப் பெண்களைத் தவிர காலியாகவே காட்சியளித்தது.

அவர்கள் அடையாளம் காணப்படுவதை தவிர்ப்பதற்காக முகமூடிகளை அணிந்திருந்ததுடன், ஆர்வமின்றி சிறிது நேரம் நடனமாடிவிட்டு அமர்ந்துகொண்டனர்.

அங்கு நேர்காணல்கள் அனுமதிக்கப்படவில்லை. பணிபுரிபவர்களில் உள்ளூர் கரேன் சமூகத்தை சேர்ந்த ஒருவரிடம் பேச அனுமதிக்கப்பட்டோம். ஆனால், அவர் அச்சத்தில் இருந்ததால் அவரிடமிருந்து பெயரைத் தவிர வேறு குறிப்பிடும்படியான தகவல் எதையும் தெரிந்துகொள்ள முடியவில்லை.

மியான்மர்

பட மூலாதாரம், Jonathan Head/BBC

படக்குறிப்பு, ஷீ ஜிஜியாங் இல்லாத நேரத்தில் ஹீ யிங்ஜியாங் ஷ்வே காக்கூவை நிர்வகித்து வருகிறார்

ஷீ ஜிஜியாங் இல்லாத நேரத்தில் ஷ்வே காக்கூவை நிர்வகிக்கும் பொறுப்பை அவருக்கு விசுவாசமான 31 வயதான ஹீ யிங்ஜியாங் என்பவரிடம் ஒப்படைத்துள்ளார். அவர் வாங் ஃபுகுயுடன் மோய் நதிக்கரையில் தாய்லாந்தை பார்க்கும் வகையில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட வில்லாவில் வசிக்கிறார். இந்த வில்லாவை வலுவான சீன பாதுகாவலர்கள் காவல் காக்கின்றனர். அங்கு அவர்கள் மாஜோங் விளையாடி, சிறந்த உணவையும் பானத்தையும் அருந்தி மகிழ்வதுடன், தொழில் மீதும் ஒரு கண் வைத்துக்கொள்கின்றனர்.

அங்கு நடைபெறும் மோசடிகளுக்கு அவரது முதலாளி அளித்த விளக்கத்திலிருந்து சற்றே மாறுபட்ட விளக்கத்தை வைத்திருக்கிறார் ஹீ. "நாங்கள் கட்டுமானம் மேற்கொள்பவர்கள் மட்டுமே." என்று சொல்லும் அவர், "இது போன்ற விஷயங்கள் இங்கு நடப்பதில்லை என என்னால் உறுதியளிக்கமுடியும்.

அப்படியே அது நடந்தாலும், உள்ளூர் மக்களுக்கு என ஒரு சட்ட நடைமுறை உள்ளது. எனவே, அதை எதிர்கொள்ள வேண்டியது அவர்களது கடமை. எங்களது வேலை நல்ல கட்டமைப்பு, கட்டடங்களை வழங்குவது மற்றும் தொழில்களுக்கு உதவுவதே ஆகும்."

ஆனால், மியான்மரின் இந்தப் பகுதியில் சட்ட நடைமுறையோ, அரசோ இல்லை. தாய்லாந்து எல்லையில் பல்வேறு பகுதிகளை கட்டுப்படுத்தும் ஆயுதம் தாங்கிய குழுக்களே இந்தப் பகுதியில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

இந்த குழுக்களின் தலைவர்கள்தான் யார் தொழில்களை தொடங்கி நடத்தலாம் என்பதை முடிவு செய்கின்றனர். அந்த தொழில்களை நடத்துவோரிடமிருந்து மியான்மர் ராணுவத்துக்கு எதிரான தங்களது சண்டைக்கோ அல்லது அவர்களுக்கிடையிலான சண்டைக்கோ தேவையான பணத்தை இந்த தொழில்களிடமிருந்து பெற்றுக்கொள்கிறார்கள். அவர்களில் பலர் மோசடி வளாகங்களை நடத்துவதாகவும் தெரிகிறது.

யடாய் நிலங்களை மலிவான விலைக்கு வாங்க காரணமாக அமைந்தது யுத்தம்தான் என ஹீ ஒப்புக்கொள்கிறார். இப்பகுதியை சேர்ந்தவர்களை குறைந்த இழப்பீடு அளித்து அவர்கள் நிலங்களிலிருந்து விரட்டியது சாவ் சிட் துதான் என கரேன் மனித உரிமை குழுக்கள் குற்றம்சாட்டியுள்ளன. இருப்பினும், உள்ளூர் மக்களுக்கு அதிகம் தேவைப்படும் வேலைவாய்ப்புகளை வழங்குவதும் யடாய் நிறுவனம்தான் என்பதும் தெளிவாக தெரிகிறது.

கரேன் மாகாணத்தின் சட்டம் ஒழுங்கற்ற நிலைதான் சட்டவிரோத தொழில்களை நடத்த பொருத்தமான இடமாக அதை மாற்றுகிறது. ஆனால், இது ஷ்வே காக்கூவின் பிம்பத்துக்கு சாதகமான அம்சம் இல்லை. அண்மையில் வெளிவந்த தலைப்புச் செய்திளும் அவர்களுக்கு சாதகமாக இல்லை.

ஷ்வே காக்கூ

பட மூலாதாரம், Jonathan Head/BBC

படக்குறிப்பு, ஷ்வே காக்கூவை உள்ளூர் கிளர்ச்சி படைகளின் பாதுகாப்புடன் யடாய் நிறுவனம் கட்டியுள்ளது

திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி தாய்லாந்துக்கு அழைக்கப்பட்ட 22 வயது திரைப்பட நடிகர் வாங் ஜிங், எல்லையில் ஒரு மோசடி மையத்திலிருந்து கடந்த மாதம் மீட்கப்பட்டார். அவர் திடீரென மாயமானது, சீன சமூக வலைதளத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியதால், சீன மற்றும் தாய்லாந்து அதிகாரிகள் அவரை மீட்க ஒரு கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தங்களது பாதுகாப்பு குறித்த அச்சத்தால் சீன சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்து பயணத்தை ரத்து செய்துள்ளனர். இதே போன்ற மற்ற மீட்புகளும் நிகழ்ந்துள்ளன.

மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் உதவி கேட்டு பிபிசிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். இன்னமும் ஆயிரக்கணக்கானவர்கள் மாட்டிக்கொண்டிருப்பதாக மீட்பு அமைப்புகள் நம்புகின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் எல்லையை ஒட்டிய பகுதியில் ஷ்வே காக்கூவுக்கு தெற்கே உள்ள சிறிய வளாகங்களில் உள்ளனர்.

தாங்கள் வனப்பகுதியில் கட்டப்பட்ட கொட்டகைகளில் செயல்படும் கரடுமுரடான அமைப்புகளை போன்றவர்கள் அல்ல என யடாய் தெரிவித்தது. அதுபோன்ற இடங்களில்தான் எல்லா மோசமான நடவடிக்கைகளும் நடைபெறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

எல்லை நகரான மியாவடியின் தெற்கே செயல்படும் கேகே பார்க் என்ற மிகமோசமான பெயரெடுத்த வளாகம் குறித்தும், சீன குற்றவியல் தாதா வான் குவோக் கோய் என்ற புரோக்கன் டூத் என்பவரால் நடத்தப்படும் டாங்மெய் எனப்படும் சில கட்டடங்கள் குறித்தும் அவர்கள் பேசினர்.

மியான்மர்

பட மூலாதாரம், Jonathan Head/BBC

ஒருகாலத்தில் அரசியல்வாதிகள், காவல்துறை தலைவர்கள் மற்றும் தாய்லாந்தின் அரச குடும்பத்தை சேர்ந்தவர்களிடமும் செல்வாக்கு பெற்றிருந்த ஷீ ஜிஜியாங்குக்கு, இந்த வேறுபாடு உதவவில்லை. இன்றோ சிறையில் சிறப்பு சலுகைகளை பெற அவருக்கிருந்த செல்வாக்கைக் கூட அவர் இழந்துவிட்டதுபோல் தெரிகிறது. பாதுகாவலர்களால் தாக்கப்பட்டதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.

அவரது கைதை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட இன்டர்போலின் நோட்டீஸுக்கு எதிராக அவரது வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்து வருகின்றனர். ஆனால், அவரது விதியை முடிவு செய்வதில் சீனாவின் குரலே வலுவானதாக இருக்க வாய்ப்புள்ளது.

தனது நிலை திடீரென மாறியது குறித்து ஷீ ஜிஜியாங் உண்மையிலேயே சீற்றம் கொண்டிருப்பதாக அவருடனான நமது நேர்காணலின் மூலம் அறிய முடிந்தது.

"முன்னர் மனித உரிமை குறித்து எனக்கு எந்த புரிதலும் இல்லை, ஆனால் இப்போது மனித உரிமைகள் மீறப்படுவது எவ்வளவு கொடூரமானது என்பதை உண்மையில் புரிந்துகொண்டுள்ளேன்", என அவர் கூறினார்.

"ஷி ஜிங்பின் சென்ற அதே அரசு விருந்துகளுக்கு செல்ல முடிந்த என்னைப் போன்ற ஒரு மதிப்புமிக்க ஒரு தொழிலதிபரின் மனித உரிமையும், கண்ணியமும் எந்த வகையிலும் காக்கப்படமுடியாத போது, சீனாவில் உள்ள சாதாரண குடிமக்களின் மனித உரிமைகள் எப்படி ஒடுக்கப்படுகின்றன என்பதை நினைத்துப் பார்ப்பதே கடினமாக உள்ளது"

மோசடிகளின் நகரம் என்ற ஷ்வே காக்கூவின் தொடக்கத்தைக் கடந்து வளரக்கூடிய ஏதோ ஒன்றை கட்டமைக்க முடியும் என அவர் உண்மையிலேயே நம்பியதாக தெரிகிறது.

இப்போது அதற்கு என்ன ஏற்படும் என்பதை கணிப்பது கடினம், ஆனால் தாய்லாந்து மற்றும் சீன அரசுகள் மோசடிகளை முடிவுக்கு கொண்டுவர தொடர்ந்து நடவடிக்கை எடுத்தால், இவர்கள் வசமுள்ள பணம் குறைய தொடங்கிவிடும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)