யுக்ரேன் போர்: அமெரிக்கா மீது அதிருப்தியா? ஐரோப்பிய நாடுகள் பாரிஸில் நாளை அவசர ஆலோசனை

பட மூலாதாரம், Getty Images
யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
மறுபுறம், ஐரோப்பிய தலைவர்கள் நாளை பாரிஸில் அவசர உச்சி மாநாட்டில் ஒன்றுகூடி இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
யுக்ரேன் மீதான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் உலகளாவிய ராஜ தந்திரத்தில் அதிகார சமநிலையை மாற்றக்கூடும் என்ற அச்சம் ஐரோப்பாவில் அதிகரித்து வருகிறது.
ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பின்றி அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அமெரிக்காவும் ரஷ்யாவும் தயாராகி வருகின்றன. இதனால், யுக்ரேன் குறித்த முக்கியமான முடிவுகளில் ஐரோப்பா ஓரங்கட்டப்படுவதாக கவலைகள் எழுந்துள்ளன. அதை நிவர்த்தி செய்வதே பாரிஸில் நாளை நடக்கவுள்ள உச்சிமாநாட்டின் நோக்கம்.

அவசரமாகக் கூடும் ஐரோப்பிய தலைவர்கள்
சௌதி அரேபியாவில் நடக்கவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க பிரதிநிதிகள் குழு ஒன்று ரஷ்ய அதிகாரிகளைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.
இந்த முக்கியமான பேச்சுவார்த்தைக்கு யுக்ரேன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளை அழைக்காதது குறித்து பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், பிரட்டன் பிரதமர் கீயர் ஸ்டார்மர் உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதையொட்டி, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் அவசரமாகக் கூடி விவாதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அவசர உச்சிமாநாட்டில், ஐரோப்பா கண்டத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தும் முடிவுகளை எடுப்பதில் இருந்து ஐரோப்பிய நாடுகள் தவிர்க்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் குறித்துப் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யுக்ரேனின் நிலைமை குறித்து விவாதிக்க பிப்ரவரி 17ஆம் தேதியன்று நடக்கவுள்ள இந்த உச்சிமாநாடு 'பெரிதுபடுத்தப்படக் கூடாது' என்றும் இத்தகைய சந்திப்புகள் வழக்கமான ஒன்றுதான் என்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, போலந்து, இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் கீயர் ஸ்டார்மர் அளித்த பேட்டியில், "நமது தேசியப் பாதுகாப்பைப் பொருத்தவரை, இந்த விவகாரம் மிகவும் அரிதான ஒன்று" என்றார். அத்துடன், ஐரோப்பிய நாடுகள் நேட்டோவில் வலுவான பங்கைக் கொண்டிருப்பது மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
'யுக்ரேனிய-அமெரிக்க-ஐரோப்பிய கூட்டுத் திட்டம் அவசியம்'

பட மூலாதாரம், Getty Images
அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின்கீழ், 'ஐரோப்பிய நாடுகளின் ஆட்சேபனைகளைப் பொருட்படுத்தாமல் அமெரிக்கா போருக்கு விரைவான தீர்வை நாடுகிறது' என்ற அதிகரித்து வரும் கவலைகளை கீயர் ஸ்டார்மரின் கருத்துகள் பிரதிபலிக்கின்றன.
ரஷ்யாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் யுக்ரேன் மற்றும் ஐரோப்பிய நாடுகளை அமெரிக்கா தவிர்க்கக்கூடாது என்று பிரிட்டனுக்கான ஜெர்மன் தூதர் மிகேல் பெர்கர் கூறுகிறார்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் பிபிசி ரேடியோ 4இல் பேசிய மிகேல் பெர்கர், அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அதிகமாக சமரசம் செய்திருக்கலாம் என்று தெரிவித்தார்.
குறிப்பாக, "யுக்ரேன் நேட்டோவில் சேர அனுமதிக்கப்படாது, யுக்ரேனில் அமெரிக்க ராணுவம் இருக்காது என்ற ரஷ்யாவின் இரண்டு முக்கிய கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளது" என்று கூறினார். இதன் மூலம், பேச்சுவார்த்தையின்போது முன்வைக்கத் தேவைப்படும் இரண்டு முக்கிய அம்சங்களை அமெரிக்கா கைவிட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், "நாம் ஒரு கூட்டுத் திட்டத்தை உருவாக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸிகியும் அதையே வலியுறுத்தினார்.
"சமாதான உடன்பாட்டை அடைவதற்கு ரஷ்யாவிடம் என்ன கேட்க வேண்டும் என்பது குறித்து யுக்ரேனிய-ஐரோப்பிய-அமெரிக்க கூட்டுத் திட்டம் இல்லாமல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியாது" என்று அவர் தெரிவித்தார்.
யுக்ரேனின் முதுகுக்குப் பின்னால் செய்யப்படும் எந்த ஒப்பந்தமும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்ற யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியின் எச்சரிக்கைகளை பெர்கரும் எதிரொலித்தார்.
அமெரிக்கா - ஐரோப்பா இடையே பிரிட்டன் பாலமாக இருக்குமா?

யுக்ரேன் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பாவை ஓரங்கட்டுவது, சூடான விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.
"எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் நீடிக்கக் கூடியதாகவும் நியாயமான ஒன்றாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கு ஐரோப்பாவின் ஈடுபாடு அவசியம்" என்று பிரிட்டனின் தொழில் மற்றும் வர்த்தக செயலாளர் ஜோனாதன் ரெனால்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
அதுகுறித்து அவர் பேசியபோது, "ஐரோப்பாவின் ஆதரவு இல்லாத தீர்வு ஒன்றை ஏற்படுத்த முடியாது. நீடித்த அமைதியைப் பாதுகாப்பதில் அனைவரும் பங்கு வகிக்க வேண்டியது மிகவும் முக்கியம்," என்று ரெனால்ட்ஸ் கூறினார்.
அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்து ஐரோப்பாவை விலக்கி வைப்பது, அந்தக் கண்டத்தின் மூலோபாய பாதுகாப்பு நலன்களை முழுமையாக நிவர்த்தி செய்யாத ஒரு சமாதான ஒப்பந்தத்திற்கு வழிவகுக்கலாம் என்பதே ஐரோப்பிய தலைவர்களிடையே உள்ள முதன்மையான கவலைகளில் ஒன்று. ரஷ்யாவுடனான அவசர ஒப்பந்தம் ஆக்கிரமிப்புக்கு வெகுமதி அளிக்கக் கூடியதாகவும், ஐரோப்பாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் ஒன்றாகவும் இருக்கக்கூடும் என்ற அச்சம் உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவுக்கும் கடந்த சில நாட்களாக அதிபர் டிரம்பை விமர்சித்து வரும் சில ஐரோப்பிய தலைவர்களுக்கும் இடையில் பாலமாக இருக்க முயலும் இடத்தில் தாம் இருப்பதாக பிரிட்டன் கருதுவதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் நேற்றிரவு கூறியதாக பிபிசி அரசியல் செய்தியாளர் ஹேரி ஃபார்லே குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், பிரிட்டன் மற்றும் அதன் பாதுகாப்பு செலவினங்கள் மீது இவை அனைத்தும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற முக்கியமான கேள்வி எழுகிறது.
"பிரிட்டன் தொழிலாளர் கட்சி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதத்தைப் பாதுகாப்புக்காகச் செலவிடக்கூடிய ஒரு திட்டத்தை வகுக்க உறுதி அளித்துள்ளது. ஆனால், அது எப்போது நடக்கும் என்பதற்கான உடனடி காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை. கடந்த சில நாட்களில் ராணுவத் தலைவர்கள் பிரிட்டன் தனது பாதுகாப்பு செலவினங்களை 2.5 சதவீதத்திற்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்" என்கிறார் ஹேரி ஃபார்லே.
முன்னாள் ராணுவத் தலைவர் லார்ட் டான்னட் பிபிசியிடம் பேசியபோது, "பிரிட்டன் ராணுவம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது" என்றார்.
யுக்ரேனில் எதிர்கால அமைதி காக்கும் பணிகளை வழிநடத்த முடியாத நிலையில் பிரிட்டன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதோடு, "பிரிட்டனின் பாதுகாப்பு செலவினங்களைக் கணிசமாக உயர்த்தத் தவறினால், கீயர் ஸ்டார்மரை வரலாறு புறக்கணிக்கும்" என்றும் அவர் எச்சரித்தார்.
யுக்ரேன் விவகாரத்தில் நிலவும் இருவேறு கருத்துகள்

பட மூலாதாரம், Getty Images
இந்த விவகாரத்தில் இருவேறு கருத்துகள் நிலவுவதாகக் கூறுகிறார் பிபிசியின் பாதுகாப்பு செய்தியாளர் ஃபிராங்க் கார்ட்னர்.
அதில் ஒன்று, ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிரான யுக்ரேனின் எதிர்ப்பு தொடர்வதை "முடிந்த வரைக்கும்" மேற்கு நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்ற நேட்டோவின் நீண்டகால நிலைப்பாடு.
ஃபிராங்க் கார்ட்னரின் கூற்றுப்படி, பொருளாதாரத் தடைகள் மற்றும் நீடித்த போர் காரணமாக, ரஷ்யாவின் பொருளாதாரம் கடுமையான சிக்கலில் உள்ளதாகவும் யுக்ரேன் இன்னும் சில மாதங்கள் மட்டும் தாக்குப்பிடிக்க முடிந்தால், ரஷ்யாவின் தாக்குதல் முடிந்துவிடும் என்றும் அதன் விளைவாக யுக்ரேன் இப்போது இருப்பதைவிட பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வலுவான நிலையில் இருக்கும் என்றும் ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது.
ஆனால், "இந்த நிலையெல்லாம் மாறிவிட்டதாக மற்றுமொரு கருத்து நிலவுகிறது. அதன்படி, டிரம்ப் நிர்வாகத்திற்கு அதற்கான நேரமோ பொறுமையோ இல்லை. இந்தப் போர் உடனடியாக முடிவடைய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். புதினுடனான ஒப்பந்தத்தில் அவர் கவனம் செலுத்தி வேகமாக முன்னேறி வருகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார் ஃபிராங்க் கார்ட்னர்.
மேலும், "ஐரோப்பாவும் யுக்ரேனும் இந்தப் புதிய, கடினமான சூழ்நிலைக்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ள முயல்கின்றன. அதனால்தான் பல சந்திப்புகள் நடக்கின்றன. ஐரோப்பிய நாடுகளின் உச்சிமாநாடு அவசரமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நெருக்கடியான பெரிய விஷயம் நடக்கிறது. இந்தச் சூழ்நிலையில், அடுத்து என்ன செய்வது என்பதைத் தீர்மானிக்க தலைவர்கள் அவசரமாக ஒன்று கூடுகின்றனர்" என்றார் கார்ட்னர்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், யுக்ரேன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, "ஐரோப்பிய நிலப்பரப்பை ஆக்கிரமித்த விளாதிமிர் புதினுக்கு இதன் மூலம் வெகுமதி அளிக்கும் ஆபத்து இருந்தாலும்கூட, வெள்ளை மாளிகை ரஷ்யாவுடன் அந்த ஒப்பந்தத்தை இறுதிப்படுத்துவதில் உறுதியாக உள்ளது என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன" என்றும் பிராங்க் கார்ட்னர் குறிப்பிட்டுள்ளார்.
யுக்ரேனின் பாதுகாப்புக்கு நீண்ட காலத்திற்கு இதே அளவிலான ஆதரவை வழங்குவது குறித்து உத்தரவாதம் கொடுக்க முடியாது என்று அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்காவின் கொள்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், நேட்டோவின் எதிர்காலத்தையும், ஐரோப்பாவின் பாதுகாப்பு முற்றிலும் அதன் கைகளிலேயே விடப்படுமோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
இதற்கிடையே, நேட்டோவில் வலுவான ஐரோப்பிய பங்கு இருக்க வேண்டுமென அழைப்பு விடுத்த பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர், யுக்ரேனின் எதிர்காலம், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் ஒருதலைபட்சமான ஒப்பந்தத்தால் எழுதப்படக் கூடாது என்றும், அது ஐரோப்பாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதன் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த விவாதங்கள் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, சௌதி அரேபியாவில் ரஷ்ய பிரதிநிதிகளைச் சந்திக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. இந்த மாறி வரும் சூழலில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த உத்திகளை வகுக்க ஐரோப்பிய தலைவர்கள் அவசர உச்சிமாநாட்டை நாளை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் முடிவு, வரும் ஆண்டுகளில் ஐரோப்பா கண்டத்தின் பாதுகாப்பு கட்டமைப்பை மறுவடிவமைக்கக் கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












