மோதி பற்றி கேலிச்சித்திரம்: அண்ணாமலை புகாரால் விகடன் இணையதளம் முடக்கமா?

விகடன், கேலிச்சித்திரம், மோதி, அண்ணாமலை

பட மூலாதாரம், Annamalai/Vikatan

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழின் முன்னணி ஊடக குழுமங்களில் ஒன்றான விகடன் குழுமத்தின் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

விகடன் குழுமத்தின் இணைய தளமான விகடன்.காம்-ஐ சனிக்கிழமை இரவிலிருந்து வாசகர்கள் பலரால் அணுக முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நிறுவனத்தின் செயலியும் பெரும்பாலான செல்போன்களில் செயல்படவில்லை.

சில நாட்களுக்கு முன்பாக அந்தக் குழுமம் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை விமர்சித்து வெளியிட்ட ஒரு கார்ட்டூன் தொடர்பாக பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையால் சனிக்கிழமையன்று மத்திய அரசுக்குப் புகார் அனுப்பப்பட்ட நிலையில், அன்று மாலையே அந்தத் தளம் செயல்படவில்லை. எனினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரை தங்களுக்கு முறையான அறிவிப்பு ஏதும் வரவில்லையென விகடன் குழுமம் தெரிவித்துள்ளது.

ஆனால், அமெரிக்கா சென்ற பிரதமரைப் பற்றி இப்படி கார்ட்டூன் வெளியிட்டது தண்டிக்கப்பட வேண்டிய செயல்தானே என்கிறார் பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.

இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? விகடன் தரப்பு கூறுவது என்ன? இந்த நடவடிக்கை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதா?

விகடன், கேலிச்சித்திரம், மோதி, அண்ணாமலை
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விகடன் மீது அண்ணாமலை கொடுத்த புகார் என்ன?

விகடன் குழுமத்தில் இருந்து `விகடன் ப்ளஸ்' என்ற பெயரில் இணைய இதழ் ஒன்று வெளியாகி வருகிறது. பிப்ரவரி 10ஆம் தேதியிட்ட இந்த இதழின் அட்டையில் கேலிச் சித்திரம் ஒன்று வெளியாகியிருந்தது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாகச் சொல்லப்படும் இந்தியர்கள் கைவிலங்கிட்டு நாடு கடத்தப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்த பிரதமர் மோதி அதுகுறித்து ஏதும் பேசாமல் இருந்ததைக் குறிக்கும் விதமாக இந்த கார்ட்டூன் வெளியாகியிருந்தது.

இந்தக் கேலிச் சித்திரம் தொடர்பாக பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை மத்திய அரசிடம் புகார் ஒன்றை அளித்தார்.

இந்திய தகவல் - ஒளிபரப்புத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணையமைச்சர் எல். முருகனுக்கும் இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவர் ரஞ்சனா பிரகாஷ் தேசாய்க்கும் அனுப்பப்பட்டிருந்த அந்தப் புகார் கடிதத்தில் விகடன் இதழ் தி.மு.கவின் ஊதுகுழலாகச் செயல்பட்டு வருவதாகவும் பிரதமருக்கு எதிராக ஆதாரமற்ற, மோசமான விஷயங்களை பிரசுரிப்பதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.

"கடந்த சில ஆண்டுகளாகவே இதழியல் என்ற பெயரில் தி.மு.கவின் ஊதுகுழலாகச் செயல்பட்டு வரும் விகடன், மத்திய அரசு மற்றும் பிரதமரின் நல்ல பணிகளை அவமதிக்கும் விதமாக, உண்மைக்குப் புறம்பான கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. தற்போது அட்டையில் இடம்பெற்றிருக்கும் கேலிச் சித்திரம், தி.மு.க.வை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக பிரதமரின் ராஜ்ஜீய பயணத்தை மோசமாகக் காட்டுகிறது. இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

விகடன் தரப்பு கூறுவது என்ன?

விகடன், கேலிச்சித்திரம், மோதி, அண்ணாமலை

பட மூலாதாரம், Getty Images

இப்படிப் புகார் அனுப்பப்பட்டு இருப்பதாக, அண்ணாமலை சனிக்கிழமை பிற்பகலில் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில், அன்று இரவிலிருந்து விகடன் இணையதளமும் செயலியும் பெரும்பாலான இடங்களில் செயல்படவில்லை.

இது தொடர்பாக விகடன் இதழ் சனிக்கிழமை இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், "நூற்றாண்டு காலமாக விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம், இயங்குவோம். ஒரு வேளை இந்த அட்டைப்படம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதையும் சட்டப்படி எதிர்கொள்வோம்" என்று விகடன் தரப்பு கூறியிருந்தது. மத்திய அரசிடமிருந்து விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை என்றும் அந்த அறிக்கையில் விகடன் கூறியிருந்தது.

விகடன் தரப்பில் இது தொடர்பாகக் கேட்டபோது, சனிக்கிழமை மாலையில், குறிப்பிட்ட சில இணைய சேவைகளைப் பயன்படுத்துவோருக்கு விகடன் தளம் முடக்கப்பட்டிருப்பதாகக் காட்டப்பட்டது எனவும், ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு அதுபோன்ற செய்தி ஏதுமில்லாமலேயே தளம் தொடர்ந்து வாசகர்களுக்குக் கிடைக்காமல் செய்யப்பட்டது எனவும் தெரிவித்தனர். ஆனால், வெளிநாடுகளிலும் 'விபிஎன்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இணைய உலவிகளிலும் விகடன் இணையதளத்தை அணுக முடிந்தது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

விகடன், கேலிச்சித்திரம், மோதி, அண்ணாமலை

பட மூலாதாரம், Getty Images

விகடன் இதழ் மத்திய அரசால் முடக்கப்பட்டதாகக் கருதப்படும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் இதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக வெளியிட்ட சமூக ஊடக பதிவில், "இதழியலில் நூறாண்டு காலமாக இயங்கி வரும் விகடனின் இணையதளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பா.ஜ.க.,வின் பாசிச தன்மைக்கு இது எடுத்துக்காட்டு. முடக்கப்பட்ட இணையதளத்துக்கு உடனடி அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, சு. வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் ஆகியோரும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் தங்களது இணையதளத்தை அணுக ஆனந்தவிகடன்.காம் என்ற புதிய இணைய முகவரியை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பாஜக கூறுவது என்ன?

ஆனால், இப்படி கார்ட்டூன் வெளியிட்டது தண்டிக்கப்பட வேண்டிய செயல்தானே என்கிறார் பா.ஜ.கவின் மாநில துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி.

"இது தேச விரோத செயல். இதில் ஈடுபட்டவர்கள் கண்டிக்கப்பட வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும். இந்திய பிரதமர் அமெரிக்காவுக்கு சென்றிருக்கும் போது, அமெரிக்க அதிபரின் முன்னால் சங்கிலியோடு இருப்பது போல கார்ட்டூன் போட்டிருப்பது தண்டிக்கப்பட வேண்டிய செயல் என்பதில் சந்தேகமில்லை" என்கிறார் பா.ஜ.கவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.

கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதா?

விகடன், கேலிச்சித்திரம், மோதி, அண்ணாமலை

பட மூலாதாரம், Getty Images

இந்த நடவடிக்கை முழுக்கமுழுக்க கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது, ஊடகத் துறையினர் அனைவரும் இணைந்து இதை எதிர்கொள்ள வேண்டும் என்கிறார் 'தி இந்து' குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரும் மூத்த பத்திரிகையாளருமான என். ராம்.

"இந்த கார்ட்டூன் விகடன் பிளஸ் இணையதளத்தில் மட்டுமே வெளியான கார்ட்டூன். சந்தாதாரர்கள் மட்டுமே பார்க்கக் கிடைப்பது. இந்த கார்ட்டூன் சொல்ல விரும்பிய செய்தி மிகத் தெளிவானது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாகக் கருதப்படும் இந்தியர்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டதைச் சுட்டிக்காட்டி இந்த கார்ட்டூன் வெளியானது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19 -1 Aவின் படி, இது முழுக்கமுழுக்க சட்டப்பூர்வமானது. அரசியலமைப்புச் சட்டம் கருத்து சுதந்திரத்திற்குச் சில வரையறைகளை விதிக்கிறது. அந்த வரையறைகளுக்குட்பட்டுதான் இந்த கார்ட்டூன் இருக்கிறது. இந்த ஒரு கார்ட்டூனுக்காக விகடன் இணையதளம் முழுமையையும் அணுகவிடாமல் செய்திருப்பது முழுக்கமுழுக்க சட்டவிரோதமானது," என்று தெரிவித்தார்.

"இணையதளம் முடக்கப்பட்டிருப்பதாக இது தொடர்பான அமைச்சகத்தின் உத்தரவோ, அறிவிப்போ விகடன் அலுவலகத்தில் யாருக்கும் வரவில்லை. கார்ட்டூன் வெளியாகி, ஐந்து நாட்களுக்குப் பிறகு பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கடிதம் எழுதுகிறார், உடனே இது நடக்கிறது. இந்த விவகாரத்தில் கருத்து சுதந்திரம் முழுமையாக மீறப்பட்டுள்ளது. இதை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இதன் தாக்கம் மிக மோசமானதாக இருக்கும். விகடன் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களுக்கே இது நடக்குமென்றால், எல்லோருக்கும் இது நடக்கக்கூடும். இது புதுவிதமான தாக்குதல்" என்றார் என். ராம்.

கார்ட்டூனுக்காக விகடன் சந்தித்த எதிர்ப்புகள்

விகடன், கேலிச்சித்திரம், மோதி, அண்ணாமலை

பட மூலாதாரம், Getty Images

விகடன் நிறுவனம் இதற்கு முன்பாகவும் இதுபோன்ற ஒரு சூழலை எதிர்கொண்டிருக்கிறது. அந்தச் சந்தர்ப்பத்தில் விகடனின் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனந்த விகடனின் 29.03.1987ஆம் தேதியிட்ட இதழின் அட்டைப் படத்தில் ஒரு கேலிச் சித்திரம் வெளியாகியிருந்தது. அந்தக் கேலிச் சித்திரத்திற்குக் கீழே, எம்.எல்.ஏ., அமைச்சர்களை விமர்சிக்கும் வகையில் நகைச்சுவைத் துணுக்கு ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரிமைப் பிரச்னை எழுப்பப்பட்டது. அப்போதைய சபாநாயகர் பி.எச். பாண்டியன், "அடுத்து வெளியாகும் இதழில் விகடன் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் நேரடியாக தண்டனை விதிக்கப்படும்" என அறிவித்தார்.

அதற்கடுத்த இதழில் விளக்கமளித்த ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ். பாலசுப்பிரமணியன், மன்னிப்பு கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியிருந்தார். அந்த இதழ் வெளியான 1987 ஏப்ரல் 4ஆம் தேதி சட்டப்பேரவையில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டு, ஆசிரியருக்கு மூன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம்., முஸ்லீம் லீக், ஃபார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகள் எதிர்த்து, வெளிநடப்பு செய்தன.

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் அவரது படப்பை பண்ணை இல்லத்தில் கைது செய்யப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

திங்கட்கிழமையன்று, விகடன் ஆசிரியருக்கு வழங்கிய தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென சபாநாயகர் மூலம் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கேட்டுக்கொண்டிருந்தார். இதை ஏற்று விகடன் ஆசிரியரை உடனடியாக விடுதலை செய்வதாக சபாநாயகர் அறிவித்தார். இதையடுத்து திங்கட்கிழமை பிற்பகல், சிறையிலிருந்து பாலசுப்பிரமணியன் விடுதலை செய்யப்பட்டார்.

ஆனால், இதற்குப் பிறகு தன் மீதான நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் எஸ். பாலசுப்பிரமணியன். இந்த வழக்கில் 1994இல் எஸ்.பாலசுப்பிரமணியனுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் சிறையில் அடைக்கப்பட்டதற்கு இழப்பீடாக 1,000 ரூபாயை வழங்கும்படி உத்தரவிடப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)