ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்த 27 கிலோ நகை, 1,526 ஏக்கர் சொத்துகளை தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது?

- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசிக்காக
தமிழ்நாட்டின், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள், பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் மூன்று டிரங்க் பெட்டிகளில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏகே-47 ஆயுதமேந்திய போலீசாரின் பாதுகாப்புடன், இன்று மாலை பெங்களூருவில் உள்ள நீதிமன்றத்தில் இருந்து சென்னைக்கு அவை கொண்டு வரப்பட்டன.
கடந்த 1996ஆம் ஆண்டில் ஜெயலலிதாவிடம் இருந்து இவை கையகப்படுத்தப்பட்டன. அவை, 36வது கூடுதல் சிவில் மற்றும் செஷன்ஸ் நிதிபதி ஹெச்.எஸ்.மோகன் உத்தரவின் கீழ், இப்போது தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
வைரக் கற்கள், மரகதங்கள், மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட நகைகள் உள்பட 27 கிலோகிராம் தங்க நகைகள், மூன்று வெள்ளிப் பொருட்கள் ஆகியவை கையகப்படுத்தப்பட்டவற்றில் அடக்கம்.
ரூ.59,870 மற்றும் ரூ.1,60,514 மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் (அப்போதைய ரூபாய் நோட்டுகள்), 10 கோடியே 18 லட்சத்து 75 ஆயிரத்து 591 ரூபாய் (ரூ.10,18,78,591.67) மதிப்பிலான நிரந்தர வைப்பு நிதி(2023இன்படி) ரசீதுகள் ஆகியவையும் தமிழ்நாடு காவல் துறை குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இவற்றை உள்துறை இணை செயலாளர் ஜே.ஆன் மேரி ஸ்வர்ணா தலைமையிலான தமிழக அதிகாரிகள், சிறப்புப் புலனாய்வுப் பிரிவு எஸ்.பி.விமலா, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் மற்றும் பிற அதிகாரிகளிடம் நீதிமன்றம் ஒப்படைத்தது.
ஒப்படைக்கப்பட்ட சொத்து ஆவணங்களில் சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருப்பத்தூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் அமைந்துள்ள 6 நிறுவனங்களுக்குச் சொந்தமான 1,526 ஏக்கர் நிலத்தின் சொத்துகளின் ஆவணங்களும் அடக்கம்.
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் இந்த உத்தரவு கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதியன்று பிறப்பிக்கப்பட்டது.
"பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை என்ன செய்வது என்பதை முடிவு செய்வது தமிழக அரசின் பொறுப்பு என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அதாவது, சொத்துகளை மதிப்பிட்டு ஏலத்தில் விற்று பணத்தை மீட்டெடுக்கலாம் அல்லது கருவூலத்திற்கு அனுப்பலாம்," என்று சிறப்பு அரசு வழக்கறிஞர் கிரண் எஸ்.ஜவாலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"இந்த வழக்கில் மக்களின் உணர்ச்சிகள் பெருமளவு சம்பந்தப்பட்டு இருப்பதாலும், இந்தப் பொருட்கள் சட்டவிரோத சொத்துகள் என அறிவிக்கப்பட்டு, அதற்கேற்ப தமிழக அரசு பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டு இருப்பதாலும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்வது என்று தமிழக அரசே முடிவு செய்வது சரியாக இருக்கும்," என்று நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அதோடு, அவற்றை என்ன செய்யலாம் என்பதற்குச் சில வழிகளையும் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. அதாவது, "இந்த நிலங்கள், பொது நோக்கங்களுக்காகவோ, வளர்ச்சிக்கான நிலங்களாகவோ அல்லது நிலமற்ற மக்களுக்கு வழங்கவோ பயன்படுத்தப்படலாம். இல்லையேல், அந்த நிலங்களை விற்று அரசு நிதி திரட்டவும் பயன்படுத்தலாம்," என்று உத்தரவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், நகைகள் மற்றும் நிலங்களை ஏலம் விடலாம் எனவும் அந்த வருமானத்தைப் பொது நோக்கத்திற்காகப் பயன்படுத்தலாம் எனவும் நீதிபதி மோகன் குறிப்பிட்டுள்ளார்.
"இந்த வழக்கின் உண்மைகளையும், நீதியையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு இந்த வருவாயை மாநிலம் முழுவதும் உள்ள குழந்தைகளின் ஆரம்பக் கல்விக்குத் தேவையான உள்கட்டமைப்புகளைக் கிராமப்புறங்களில் உருவாக்கப் பயன்படுத்தும்'' என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
"அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றி, மக்களின் நலனுக்காகத் தங்கள் கடமைகளை எச்சரிக்கையாகவும், கவனமாகவும் அதிகாரத்தில் இருப்பவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்ற செய்தியை இது தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு அனுப்பும்," என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
வி.கே.சசிகலா மற்றும் இளவரசியிடம் இருந்து வசூலிக்கப்பட்ட 20 கோடியே 20,000 ரூபாய் அபராதத் தொகையில், கர்நாடக அரசுக்கு ஐந்து கோடி ரூபாயும், விசாரணை நடத்துவதற்கும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கும் ஏற்பட்ட செலவுகளுக்காகக் கூடுதலாக எட்டு கோடி ரூபாயும் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தனது தண்டனையை உறுதி செய்த கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா மே 11, 2015 அன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் முடிவெடுப்பதற்கு முன்பாகவே, அவர் டிசம்பர் 6, 2016இல் காலமானார்.
அவரது சொத்துகளை ஏலம் விடவோ, விற்கவோ சிறப்பு பொது வழக்கறிஞரை நியமிக்கக் கோரி வழக்கறிஞர் டி நரசிம்மமூர்த்தி சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, சிறப்பு பொது வழக்கறிஞர் 2024இல் நியமிக்கப்பட்டு, இறுதி உத்தரவுகள் இன்று நிறைவேற்றப்பட்டன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












