திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: மனைவி உயிரிழந்த வழக்கில் கணவர் விடுவிப்பால் எழும் கேள்விகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி நியூஸ், லண்டன்
எச்சரிக்கை: இந்தச் செய்தியில் மனதை பாதிக்கும் சில தகவல்கள் உள்ளன.
மனைவியைக் கட்டாயப்படுத்தி இயற்கைக்கு மாறான முறையில் உடலுறவு கொண்டது குற்றமல்ல என இந்திய நீதிமன்றம் ஒன்று அளித்த தீர்ப்பு பெரும் சீற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. அத்துடன், திருமணமான பெண்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது.
இந்த தீர்ப்பு, இந்தியா குற்றமாக அறிவிக்க திட்டவட்டமாக மறுத்து வரும் திருமண உறவில் பாலியல் வன்கொடுமை என்பதை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது.
மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இயற்கைக்கு மாறான வகையில் உடலுறவு கொண்டதாகவும் விசாரணை நீதிமன்றத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு தண்டிக்கப்பட்ட 40 வயது நபர் ஒருவரை சத்தீஸ்கர் மாநில உயர்நீதிமன்றம் இந்த வாரம் விடுவித்தது. அந்தப் பெண் சம்பவம் நடந்த சில மணிநேரத்தில் உயிரிழந்திருந்தார்.
அந்த நபர், "கொலை வரம்பில் வராத மரணம் விளைவித்த குற்றம்" புரிந்ததாக கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. ஒவ்வொரு குற்றத்திற்கும் அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு அனைத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
- சென்னை மாணவி பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை வெளியிட்டால் என்ன தண்டனை?
- பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் சிறுமிகள் புகார் கொடுக்க முன்வருவதில் உள்ள சிக்கல்கள் என்ன?
- அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: எஃப்.ஐ.ஆர் வெளியான விவகாரத்தின் பின்னணி என்ன?
- அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: நடந்தது என்ன? 9 கேள்விகளும் பதில்களும் - முழு விவரம்

ஆனால், இந்தியா திருமண உறவில் பாலியல் வன்கொடுமை என்பதை அங்கீகரிக்கவில்லை என்பதால் சம்மதம் இல்லாமல் உடலுறவு கொண்ட குற்றச்சாட்டிலோ, இயற்கைக்கு மாறான முறையில் உடலுறவு கொண்ட குற்றச்சாட்டிலோ அந்த கணவரை குற்றவாளியாகக் கருத முடியாது என்று கூறி உயர்நீதிமன்ற நீதிபதி நரேந்திர குமார் வியாஸ் திங்கள்கிழமை அந்த நபரை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்தார்.
இந்தத் தீர்ப்பு பல்வேறு மட்டங்களில் இருந்து கண்டனங்களை எதிர்கொண்டதுடன், சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் திருமண உறவில் பாலியல் வன்கொடுமையை இந்தியாவில் குற்றமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் எழுப்பியுள்ளனர்.
"இந்தச் சம்பவத்திற்குக் காரணமான நபர் சுதந்திரமாக நடமாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தத் தீர்ப்பு சட்டப்படி சரியானதாக இருக்கலாம், ஆனால் நியாயப்படியும், தார்மீகமாக ரீதியாகவும் சரியானது அல்ல," என்றார் வழக்கறிஞரும், பாலின உரிமை செயற்பாட்டாளருமான சுக்கிரிதி செளஹான்.
"இதுபோன்ற ஒரு குற்றத்தில் இருந்து ஒருவரை விடுவிப்பது, அது குற்றமல்ல எனக் கூறுவது, நமது சட்ட நடைமுறையின் மிகவும் இருண்ட பக்கங்களை குறிக்கிறது," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
"இது எங்களை மனதின் ஆழம் வரை அதிரச் செய்துள்ளது. இது மாற வேண்டும், அதுவும் விரைவில் மாற வேண்டும்." என்றார் அவர்.
'குற்றம் மிகவும் கொடூரமானது'

பட மூலாதாரம், Getty Images
இதுபோன்ற ஒரு தீர்ப்பு "நீங்கள் கணவர் என்பதால் உங்களுக்கு உரிமை இருக்கிறது, நீங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம், நீங்கள் கொலைகூட செய்துவிட்டுத் தப்பிவிடலாம்" என்ற செய்தியைத் தருகிறது என்கிறார் சத்தீஸ்கரில் வழக்கறிஞராக இருக்கும் பிரியங்கா சுக்லா.
நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை அளிப்பது இது முதல்முறையல்ல என்றும் இதுகுறித்து எப்போதுமே கொந்தளிப்பு இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
"இந்த முறை குற்றம் மிகவும் கொடூரமானது என்பதுடன் அந்தப் பெண் இறந்துவிட்டதால் சீற்றம் அதிகமாக இருக்கிறது." என்றார் அவர்.
அரசுத் தரப்பு வாதத்தின்படி, சம்பவம் 2017 டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. ஓட்டுநராக இருந்த கணவர் "அந்த பெண்ணுடன் அவரது விருப்பமின்றி இயற்கைக்கு மாறான விதத்தில் உடலுறவு கொண்டு அவருக்கு அதிக வலியை ஏற்படுத்தினார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணவர் வேலைக்குச் சென்ற பிறகு, அந்தப் பெண் தனது சகோதரி மற்றும் உறவினர் ஒருவரின் உதவியை நாடினார். அவர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் அங்கு சென்ற சில மணிநேரத்திலேயே உயிரிழந்தார்.
காவல்துறையிடம் அளித்த தகவலிலும், நீதிபதியிடம் அளித்த மரண வாக்குமூலத்திலும், தனது கணவர் கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்ததால் தனது உடல்நல்ம் குன்றியதாக அந்தப் பெண் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஒரு மரண வாக்குமூலத்திற்கு நீதிமன்றத்தில் அதிக முக்கியத்துவம் இருப்பதாகவும், அதற்கு மாறாக ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில் தண்டனை பெற்றுத் தருவதற்கு இதுவே போதுமானது எனவும் சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2019இல், விசாரணை நீதிமன்றம் மரண வாக்குமூலம் மற்றும் உடற்கூறாய்வு அறிக்கையை அடிப்படையாக வைத்து அந்த நபருக்கு தண்டனை வழங்கியது. உடற்கூறாய்வு அறிக்கையில் மரணத்திற்குக் காரணம் "பெரிட்டோனிடிஸ் மற்றும் ரெக்டல் பெர்ஃபோரேசன்" எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது, வயிறு மற்றும் மலக்குடலில் ஏற்பட்ட காயங்களே மரணத்திற்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் நீதிபதி வியாஸ், விஷயங்களை வேறு விதமாகப் பார்த்துள்ளார். மரண வாக்குமூலத்தின் புனிதத்தன்மை குறித்துக் கேள்வி எழுப்பிய அவர், சில சாட்சிகள் தங்களது வாக்குமூலங்களை மாற்றிக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டியதுடன், இவை எல்லாவற்றையும்விட திருமண உறவில் பாலியல் வன்கொடுமை இந்தியாவில் ஒரு குற்றமல்ல எனத் தெரிவித்தார்.
கீழமை நீதிமன்றம் தண்டனை அளித்தது "அபூர்வத்திலும் அபூர்வமான வழக்கு" என்ற சுக்லா, "ஒருவேளை பெண் உயிரிழந்தது ஒரு காரணமாக இருக்கலாம்" என்கிறார்.
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம், Getty Images
உயர்நீதிமன்றத்தின் உத்தரவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதி இந்த வழக்கை இவ்வளவு எளிதாகத் தள்ளுபடி செய்திருக்கக் கூடாது என பலரும் கருதுகின்றனர்.
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை ஒரு குற்றமாகக் கருதப்படாத பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், செளதி அரேபியா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
1860 முதல் இருக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 375ஆவது பிரிவை ரத்து செய்யக் கோரி பல மனுக்கள் சமீப ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பிரிட்டிஷ் கால சட்டத்தில் உடலுறவு பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படாத சூழல்களையும், விலக்குகளையும் குறிப்பிட்டுள்ளது. ஒரு மனிதன் தனது சொந்த மனைவியிடம், அவர் 15 வயதுக்கு உட்பட்டவராக இல்லாத பட்சத்தில் உடலுறவு வைத்துக் கொள்வது என்பது அந்த "விலக்குகளில்" ஒன்று.
பிரிட்டன், திருமண உறவில் பாலியல் வன்கொடுமையைக் குற்றமாக 1991இல் அறிவித்தது. ஆனால் அண்மையில் தனது குற்றவியல் நடைமுறை சட்டத்தை மாற்றி எழுதிய இந்தியா முந்தைய பிற்போக்கான 'விலக்குகளை' புதிய சட்டத்திலும் அப்படியே வைத்துள்ளது.
உடலுறவுக்கான சம்மதம் திருமணத்தில் மறைமுகமாக இருக்கிறது என்பதால் மனைவி பின்னர் அதிலிருந்து பின்வாங்க முடியாது என்ற நம்பிக்கைதான் இந்த எண்ணத்தின் அடிப்படை. ஆனால் இந்த வாதம் இந்தக் கால கட்டத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், யார் செய்தாலும் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமைதான் என்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் திருமணமும், குடும்பமும் புனிதமானவையாகக் கருதப்படும் நாட்டில், இந்த விவகாரத்தில் கருத்துகள் இருவேறுபட்டவையாக உள்ளன. திருமண உறவில் கட்டாய உடலுறவை குற்றமாக மாற்றும் எண்ணத்திற்கு வலுவான எதிர்ப்பு உள்ளது.
இந்திய அரசு, மதத் தலைவர்கள் மற்றும் ஆண்கள் உரிமை செயற்பாட்டாளர்கள் இந்த நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
'சட்டம் மாறும் வரை எதுவும் மாறாது'

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், திருமண பாலியல் வன்கொடுமையைக் குற்றமாக அறிவிப்பது அதிகப்படியான, கடுமையான நடவடிக்கையாக இருக்கும் என உச்சநீதிமன்றத்தில் அரசு தெரிவித்தது. "இது திருமணம் எனும் அமைப்பில் மோசமான குழப்பங்களை ஏற்படுத்தலாம்" என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
பாலியல் வன்முறையில் இருந்து திருமணமான பெண்களைப் பாதுகாக்கப் போதிய சட்டங்கள் இருப்பதாக அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். ஆனால் பெண்களுக்கு உடல் ரீதியான உரிமைகளை மறுக்க இந்தியா பழைய சட்டங்களின் பின்னால் ஒளிந்துகொள்ள முடியாது என்கிறார்கள் சமூக செயல்பாட்டாளர்கள்.
"அரசமைப்புச் சட்டம் உங்கள் படுக்கையறைக்குள் நுழைய முடியாது என்று பலர் சொல்கிறார்கள்," என்கிறார் செளஹான்.
"ஆனால் அது அனைத்து குடிமக்களைப் போல பெண்களுக்கும் பாதுகாப்புக்கான அடிப்படை உரிமையை வழங்கவில்லையா? இந்த அளவு வன்முறையை ஒரு பெண் எதிர்கொள்ளும் போது நாம் அமைதியாக இருக்க எந்த மாதிரியான நாட்டில் நாம் வசிக்கிறோம்?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
திருமண உறவில் வன்முறை நிகழும் போக்கு இந்தியாவில் அதிகமாக இருக்கிறது. அண்மையில் நடத்தப்பட்ட அரசு ஆய்வு ஒன்றில் திருமணமான பெண்களில் 32% பேர் அவர்களின் கணவர்களால் உடல் ரீதியான, பாலியல் ரீதியான அல்லது மன ரீதியான வன்முறையை எதிர்கொள்கின்றனர். 82% பேர் தங்களது கணவர்களிடம் பாலியல் வன்முறையை அனுபவித்திருக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் இதுவுமே, பிரச்னையின் முழுமையான பரிமாணத்தைக் காட்டுவதில்லை என்கிறார் சுக்லா. ஏனென்றால் அவமானம் காரணமாகப் பெரும்பாலான பெண்கள் வன்முறை குறித்து, அதிலும் குறிப்பாக பாலியல் வன்முறை குறித்துப் புகார் செய்வதில்லை.
"எனது அனுபவத்தில், ஒரு பெண் புகார் கூறும் போது அவர் நம்பப்படுவதில்லை. அது போலியாகத்தான் இருக்கும் என அனைவரும் சொல்வார்கள். ஒரு பெண் உயிரிழந்தால் அல்லது தாக்குதல் மிகவும் கொடூரமானதாக இருந்தால் மட்டுமே இதுபோன்ற வழக்குகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன," என்கிறார் அந்த வழக்கறிஞர்.
சட்டம் மாறும் வரை எதுவும் மாறாது என நம்புகிறார் செளஹான்.
"திருமண உறவில் பாலியல் வன்கொடுமையைக் குற்றமாக்க வேண்டும். இதுபோன்ற ஒரு கொடூரமான சம்பவத்திற்குப் பிறகு ஒரு மனைவிக்கு நீதி கிடைக்காத போது தேசிய அளவில் ஒரு பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும். இது கோபத்தால் உருவானதாக இருக்கக் கூடாது, மாறாக தீவிரமானதாகவும், நன்கு திட்டமிடப்பட்டதாகவும் இருக்க வேண்டும்."
அரசும், ஆண் உரிமை செயற்பாட்டாளர்களும், இதை ஆணா, பெண்ணா என்ற வாதமாக மாற்ற முயல்வதாகக் கூறுகிறார் அவர்.
"ஆனால் திருமண உறவில் பாலியல் வன்கொடுமையைக் குற்றமாக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆண்களுக்கு எதிரானது அல்ல. அது பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கானது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமானது இல்லையா?"
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












