அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: எஃப்.ஐ.ஆர் வெளியான விவகாரத்தின் பின்னணி என்ன?

அண்ணா பல்கலைக்கழகம், பாலியல் வன்கொடுமை
படக்குறிப்பு, 'பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களின் அடையாளங்களை வெளியிடக் கூடாது' என சட்டம் இருக்கும்போது, மாணவி தொடர்பான விவரங்கள் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், 'தொழில்நுட்ப பிரச்னையால் முதல் தகவல் அறிக்கை கசிந்திருக்கலாம்' என தேசிய தகவல் மையம் (NIC) இமெயில் மூலம் தெரிவித்துள்ளது.

'இந்திய தண்டனைச் சட்டத்தில் இருந்து பிஎன்எஸ் சட்டத்துக்குப் பிரிவுகளை மாற்றும்போது இந்த தவறு நேர்ந்திருக்கலாம்' என என்ஐசி கூறியுள்ளது.

'மாநில அரசுக்கும் எஃப்.ஐ.ஆர் கசிந்த விவகாரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கூறுகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 23-ஆம் தேதி இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

மறுநாள் (டிசம்பர் 24) கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாணவி கொடுத்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார், ஞானசேகரன் என்ற நபரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கில் போலீஸ் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் எஃப்.ஐ.ஆர் விவரங்கள் சில ஊடகங்களில் வெளியானது.

அதில், மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருந்தன. மாணவியின் அடையாளத்தைத் தவிர்த்துவிட்டு எஃப்.ஐ.ஆரில் உள்ள விவரங்களை சில ஊடகங்கள் வெளியிட்டன.

'பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களின் அடையாளங்களை வெளியிடக் கூடாது' என சட்டம் இருக்கும்போது, மாணவி தொடர்பான விவரங்கள் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேசிய மகளிர் ஆணையத்துக்கு (NCW) இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ள தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, 'தமிழக காவல்துறையின் செயல்பாடு பாதிக்கப்பட்ட பெண்ணின் நன்மதிப்பைக் குலைப்பதற்கான முயற்சியாக உள்ளதாக' கூறியிருந்தார்.

'இது தனி உரிமைக்கு எதிரானது மட்டுமல்ல. சட்டவிரோத செயலும் கூட. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலினே பொறுப்பு' என தனது எக்ஸ் பக்கத்தில் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதில் அளித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "பாதிக்கப்பட்ட மாணவியை முடக்க வேண்டும் என்று எந்த அடிப்படையிலும் இந்த அரசு செயல்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண் தாமாக முன்வந்து புகார் கொடுத்தார். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது" எனக் கூறினார்.

அண்ணா பல்கலைக்கழகம், பாலியல் வன்கொடுமை
படக்குறிப்பு, அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீஸ் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் எஃப்.ஐ.ஆர் விவரங்கள் சில ஊடகங்களில் வெளியானது

நீதிமன்றத்தில் அரசு சொன்னது என்ன?

எஃப்.ஐ.ஆர் கசிந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் கூறிய சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், "தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம்" எனத் தெரிவித்தார்.

இதையே கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த பொதுநல வழக்கின் வாதத்தில், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தெரிவித்தார்.

அவர் வாதிடும்போது, "முதல் தகவல் அறிக்கையைப் பொறுத்தவரையில் பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடர்பான வழக்கு விவரங்களை கணினி தடுத்துவிடும். கோட்டூர்புரம் போலீசார் முதல் தகவல் அறிக்கை தயாரித்த பிறகு அது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு முடக்கப்பட்டது (block). ஆனால், அதன் விவரங்களை சிலர் எடுத்துள்ளனர்'' என்றார்.

"எஃப்.ஐ.ஆரை முடக்கிய பின்னரும் எப்படி பார்க்க முடியும்?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ''தேசிய தகவல் மையத்திடம் கேட்டபோது, இந்திய தண்டனைச் சட்டத்தில் (IPC) இருந்து பிஎன்எஸ் (BNS) சட்டத்துக்குப் பிரிவுகளை மாற்றியபோது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெளியாகியிருக்கலாம் எனக் கூறினர்'' என்று தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில், 'மாணவியின் பெயர் விவரங்கள் வெளியானதற்கு மாநில காவல்துறையே பொறுப்பு' என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வந்த நிலையில், தேசிய தகவல் மையத்தின் மீது விமர்சனம் கிளம்பியுள்ளது.

தேசிய தகவல் மையத்தின் விளக்கம்

முன்னதாக, மாணவி வழக்கின் எஃப்.ஐ.ஆர் வெளியில் கசிந்த விவகாரம் தொடர்பாக தேசிய தகவல் மையத்துக்கு தமிழ்நாடு அரசின் குற்ற ஆவண காப்பக உதவி காவல்துறை இயக்குநர் (ADGP) கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இதற்குப் பதில் அளித்து தேசிய தகவல் மையத்தின் மூத்த இயக்குநர் அருள்மொழி வர்மன், மாநில குற்ற ஆவணக் காப்பக ஏடிஜிபிக்கு இமெயில் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், 'மாநில குற்ற ஆவணக் காப்பகம் (SCRB) வழங்கியுள்ள பட்டியலின்படி சட்டப்பிரிவுகள் 64, 67, 68, 70 மற்றும் 79 ஆகிய பிரிவுகளின்கீழ் (Sensitive sections) பதிவாகும் முதல் தகவல் அறிக்கைகளை பொதுவெளியில் பார்வையிடாத வகையில் முடக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன' எனத் தெரிவித்துள்ளார்.

மாணவி விவகாரம் தொடர்பாக பதில் அளித்துள்ள தேசிய தகவல் மைய இயக்குநர், 'இந்திய தண்டனைச் சட்டத்தில் இருந்து பாரதிய நியாய சன்ஹிதாவுக்கு பிரிவுகளை மாற்றும்போது (Migration) தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டிருக்கலாம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிசிடிஎன்எஸ் தளத்தில் உள்ள 'வியூ எஃப்.ஐ.ஆர் (View FIR) ' பக்கத்தில் தீவிரத்தன்மை வாய்ந்த வழக்குகள் (sensitive cases) மற்றும் அதன் உட்பிரிவுகளை மாநில குற்ற ஆவணக் காப்பகம் சரிபார்க்குமாறும் அவர் கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம், பாலியல் வன்கொடுமை
படக்குறிப்பு, அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியான நேரத்தில், காவல்துறை அதிகாரிகள் சிலர் சிசிடிஎன்எஸ் போர்ட்டலுக்கு சென்று ஆய்வு செய்துள்ளனர்.

எஃப்.ஐ.ஆர் வெளியானபோது என்ன நடந்தது?

தமிழ்நாடு காவல்துறையில் பதிவாகும் முதல் தகவல் அறிக்கைகள் குறித்த விவரங்கள் சிசிடிஎன்எஸ் (Crime and Criminal Tracking Network & Systems) என்ற தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

சிசிடிஎன்எஸ் இணையதளப் பக்கத்தை வடிவமைத்து பராமரிக்கும் வேலையை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள தேசிய தகவல் மையம் (NIC) செய்து வருகிறது.

"சிசிடிஎன்எஸ் போர்ட்டலில் பதிவாகும் போக்சோ வழக்குகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தீவிரவாத செயல்கள் குறித்த வழக்குகள் ஆகியவை தொடர்பான முதல் தகவல் அறிக்கைகள், பொதுமக்கள் பார்க்க முடியாத அளவுக்கு முடக்கப்பட்டுவிடும் (block)" என்கிறார், தமிழ்நாடு அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன்.

இதுபோன்ற முக்கியமான வழக்குகளில் விசாரணை அதிகாரி, காவல்துறை உயர் அதிகாரி ஆகியோர் மட்டுமே முதல் தகவல் அறிக்கைகளைப் பார்க்க முடியும் எனவும் அவர் கூறுகிறார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியான நேரத்தில், காவல்துறை அதிகாரிகள் சிலர் சிசிடிஎன்எஸ் போர்ட்டலுக்கு சென்று ஆய்வு செய்துள்ளனர்.

"அப்போது அது பிளாக் (block) ஆகியிருந்தது. மீண்டும் அதேபோன்று தீவிர குற்றத்தன்மை வாய்ந்த (Sensitive case) வேறு சில வழக்கின் குற்ற எண்களைப் பதிவிட்டபோது, அதுதொடர்பான எஃப்.ஐ.ஆர்களை பார்க்க முடியவில்லை. அதுவும் பிளாக் (block) எனக் காட்டியது" என்கிறார் தாமோதரன்.

மாணவி வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவேற்றம் செய்யப்பட்ட சில நிமிடங்களில் அதை சிலர் பதிவிறக்கம் செய்துள்ளதை காவல்துறையின் விசாரணையில் கண்டறிந்துள்ளனர் என்கிறார் அவர்.

"எஃப்.ஐ.ஆரை பதிவிறக்கம் செய்ததாக 11 பேரை காவல்துறை கண்டறிந்துள்ளது. அதில் 7 முதல் 8 பேர் மீது சந்தேகம் உள்ளது. இந்த விவகாரத்தில் ஐ.டி சட்டப்பிரிவு 67 (a) மற்றும் 77 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" எனக் கூறுகிறார் தாமோதரன்.

அண்ணா பல்கலைக்கழகம், பாலியல் வன்கொடுமை
படக்குறிப்பு, தேசிய தகவல் மைய இயக்குநர், 'இந்திய தண்டனைச் சட்டத்தில் இருந்து பாரதிய நியாய சன்ஹிதாவுக்கு பிரிவுகளை மாற்றும்போது தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டிருக்கலாம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிசிடிஎன்எஸ் போர்ட்டல் எவ்வாறு இயங்குகிறது?

"காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கைகளை கையால் எழுதும் நடைமுறை தற்போது இல்லை. ஒவ்வொரு எஃப்.ஐ.ஆரும் ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்யப்படுகின்றன" என்கிறார் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன்.

தொடர்ந்து பேசிய அவர், "ஆன்லைனில் எஃப்.ஐ.ஆரை பதிவேற்றிய பிறகு அதை நகல் எடுத்து (printout) நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால்தான் கைதான நபரை சிறையில் அடைக்க முடியும்.

ஒவ்வொரு குற்ற வழக்குக்கும் பிரத்யேக எண் கொடுக்கப்படும். இந்த எண்ணை சிசிடிஎன்எஸ் தளத்தில் பதிவிட்டால் எஃப்.ஐ.ஆரை பெறலாம். குற்ற எண் தெரியாவிட்டால் புகார்தாரர் பெயர், காவல்நிலையம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு எஃப்.ஐ.ஆர் பெறலாம். இதற்காக ஓடிபி முறை பின்பற்றப்படுகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் (sensitive) முடக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளைத் தவிர மற்றவற்றை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்" என்கிறார் அவர்.

இந்திய தண்டனை சட்டத்தில் இருந்து புதிதாக அமல்படுத்தப்பட்ட பிஎன்எஸ் பிரிவுக்கு எஃப்.ஐ.ஆர்களை மாற்றுவதில் சிக்கல் உள்ளதா?

"ஐபிசிக்குப் பதிலாக பிஎன்எஸ் என மாற்றி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுகிறது. போக்சோ வழக்குகள், பாலியல் குற்றம் தொடர்பான பிரிவு 376 ஆகிய பிரிவுகளைக் குறிப்பிட்டால் இயல்பாக எஃப்.ஐ.ஆர் பிளாக் ஆகிவிடும். மாணவி வழக்கில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக எஃப்.ஐ.ஆர் பிளாக் ஆகாமல் இருந்திருக்கலாம். அதை சிலர் வெளியில் எடுத்துள்ளனர்" எனக் கூறுகிறார் தாமோதரன்.

இதை தேசிய தகவல் மையமும் ஒப்புக் கொண்டுள்ளது என்கிறார் அவர்.

அண்ணா பல்கலைக்கழகம், பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம், Damodharan

படக்குறிப்பு, தமிழ்நாடு அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன்

புகார் கொடுத்த மாணவியின் அடையாளம் குறிப்பிடப்பட்டது ஏன்?

''தனக்கு நேர்ந்த துயரம் குறித்து அந்த மாணவி எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தார். எஃப்.ஐ.ஆரில் கட்டாயம் பதிவிடப்பட வேண்டிய பகுதிகள் (mantatory fields) உள்ளன. அதில் புகார்தாரரின் பெயரைக் குறிப்பிடாமல் பதிவேற்ற முடியாது" எனக் கூறும் தாமோதரன், "சில போக்சோ வழக்குகளில் பெற்றோர் அல்லது குழந்தைகள் நலப் பாதுகாப்புக் குழுவினர் புகார் கொடுப்பார்கள். அதில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விவரம் தெரியாது.'' என்கிறார்

''ஒருவேளை பதிவிட்டாலும் அந்த எழுத்தை மறைப்பதற்கு சிசிடிஎன்எஸ் தளத்தில் இடம் இல்லை. அதை நகல் எடுத்த பின்னர் கையால்தான் அழிக்க வேண்டும்" எனக் கூறுகிறார்.

தேசிய தகவல் மையம் சொல்வதைத்தான் தமிழ்நாடு அரசு கடைபிடித்து வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)