கர்நாடகா கேரட்டை 'பாலிஷ்' செய்து ஊட்டி கேரட் என விற்பதாக புகார் - நீலகிரி விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு?

பட மூலாதாரம், Special Arrangement
- எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
- பதவி, பிபிசி தமிழ்
கர்நாடகாவிலிருந்து கொண்டு வரப்பட்டு, உதகையில் 'பாலிஷ்' செய்து, 'ஊட்டி கேரட்' என்ற பெயரில், மேட்டுப்பாளையம் மொத்த மார்க்கெட்டில் அவை விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதற்கு கேரட்களை விளைவிக்கும் நீலகிரி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, கர்நாடகாவிலிருந்து வந்த 4 டன் கேரட்களை முடக்கி, காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர்.
மற்ற மாநில கேரட்களை விட, ஊட்டி கேரட்டுக்கு அதிக விலை கிடைப்பதால், இப்படிச் செய்வதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் ஏற்பட்ட பிரச்னையால், இனிமேல் கர்நாடகாவிலிருந்து உதகைக்கு கேரட்களை கொண்டு வரமாட்டோம் என்று வியாபாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்னையைத் தொடர்ந்து, கேரட்டில் கலப்படத்தைத் தடுக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், தோட்டக்கலைத் துறையின் இணை இயக்குநர், ஊட்டியின் துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 6 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் இன்னும் சில தினங்களில் தங்களின் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர்.
விவசாயிகள் வெளி மாநில கேரட்களுக்கு மறுப்பு தெரிவிக்கக் காரணம் என்ன? இதனால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலைக்கு அடுத்தபடியாக, அதிகளவில் மலைக்காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், முள்ளங்கி, பட்டர் பீன்ஸ், நுால்கோல், காலிஃபிளவர், ப்ரக்கோலி என பல விதமான காய்கறிகள் பயிரிடப்பட்டாலும், இவற்றில் கேரட் பயிரிடும் பரப்பே அதிகமாகவுள்ளது.
நீலகிரி கேரட்டுக்கு ஏன் முக்கியத்துவம்?
நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிப்லா மேரி பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவலின்படி, இந்த மலை மாவட்டத்தில் 8 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் (20 ஆயிரம் ஏக்கர்) மலைக்காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இதில், கேரட் மட்டுமே, 7 ஆயிரம் ஹெக்டேர் (17 ஆயிரம் ஏக்கர்) பரப்பளவில் பயிரிடப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
மலைக்காய்கறிகளை நம்பியுள்ள ஒரு லட்சம் விவசாயிகளில் கேரட் விவசாயிகளின் எண்ணிக்கை மட்டுமே 60 ஆயிரம் இருக்கலாம் என்றும் அவர் தகவல் தெரிவிக்கிறார்.
"இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கேரட் விளைந்தாலும், நீலகிரியில் விளையும் கேரட்டின் நிறம், சுவை மற்றும் சத்து தனித்துவமானது; அதனால்தான் அதற்கு அதிக விலை கிடைக்கிறது" என்கிறார், நீலகிரி உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சுரேந்திரன். இதன் காரணமாகவே, ஊட்டி கேரட்டுக்கு பல மாநிலங்களிலும் வரவேற்பு இருப்பதாகச் சொல்கிறார் அவர்.

''நீலகிரி மண் மற்றும் தண்ணீரின் தன்மை காரணமாக, ஊட்டி கேரட்டுக்கு இயற்கையாகவே பல சிறப்புகள் இருக்கின்றன. இதன் தரப்பராமரிப்பு வேறு எந்த கேரட்டுக்கும் கிடையாது. மலைப்பகுதியில் ஒரு வாரம் வரை கெடாது. சமவெளியிலும் பல நாட்கள் வைத்திருக்கலாம். ஃபிரிட்ஜில் வைத்தால் 10 நாட்கள் வரை கெட வாய்ப்பில்லை. அதனால்தான் 'ஊட்டி கேரட்' என்பதற்கு புவிசார் குறியீடு பெறும் முயற்சியில் இருக்கிறோம்.'' என்று பிபிசி தமிழிடம் விளக்கினார் சுரேந்திரன்.
இத்தகைய சிறப்புகள் இருப்பதால்தான், வேறு பகுதிகளில் விளையும் கேரட்டை 'ஊட்டி கேரட்' என்ற பெயரில் விற்பனை செய்வதற்கு முயற்சி நடப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

பட மூலாதாரம், Special Arrangement
எதிர்ப்பு எழுவது ஏன்?
கடந்த சில தினங்களுக்கு முன்பு, கர்நாடகா மாநிலம் மாலுார் என்ற பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட 4 டன் கேரட்டை கேத்தி பாலடா என்ற இடத்தில் எந்திரத்தில் 'பாலிஷ்' போடும்போது, நுாற்றுக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டு, அவற்றை திருப்பி எடுத்துச் செல்ல வேண்டுமென்று கோரினர்.
இதுபற்றி கேத்தி பாலடா காவல்நிலையத்திலும் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரித்தபோது, சிவகுமார் என்ற வியாபாரி, கர்நாடகாவிலிருந்து கேரட்டுகளை கொண்டு வந்து, பாலிஷ் போட்டதை அறிந்து அவரை வரவழைத்துள்ளனர்.
மறுநாள் அவர் வரும் வரை 4 டன் எடையுள்ள கர்நாடகா கேரட் மூட்டைகள் முடக்கி வைக்கப்பட்டன. அவர் வந்தபின்பு இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதில் இனிமேல் கர்நாடகாவிலிருந்து உதகைக்கு கேரட்டை கொண்டு வரமாட்டோம் என்று வியாபாரி மற்றும் லாரி உரிமையாளர் தரப்பில் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டதால், வழக்குப்பதிவு செய்யப்படாமல் கேரட் மூட்டைகள் விடுவிக்கப்பட்டதாக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதற்கு முன்பும், சில நாட்களில் கர்நாடகா கேரட்டை உதகைக்கு கொண்டு வருவதை எதிர்த்து, விவசாயிகள் சிலர் முற்றுகைப் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

பட மூலாதாரம், Special Arrangement
ஊட்டி விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டம் என்ன?
ஒரு மாநிலத்தில் விளையும் காய்கறியை, வேறு மாநிலத்துக்குக் கொண்டு வரக்கூடாது என்பதை எப்படி எதிர்க்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், கர்நாடகா மாநிலம் மாலுாரில் ஒரு கிலோ 10 ரூபாய் அல்லது 15 ரூபாய்க்கு விற்கும் கேரட்டுகளை வாங்கி வந்து, உதகையில் பாலிஷ் போட்டு, 'ஊட்டி கேரட்' என்ற பெயரில், மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பதையே தாங்கள் எதிர்ப்பதாக விவசாயிகள் வாதிடுகின்றனர். இதனால் ஊட்டி கேரட்டின் விலை குறையுமென்பது இவர்களின் அச்சமாகவுள்ளது.
''இந்தியாவில் எங்கு விளையும் பொருளையும் எங்கும் விற்கலாம். ஊட்டி கேரட், கேரளா, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சில வடமாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
அதனால் கர்நாடகா கேரட்டை மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் விற்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. அதை உதகைக்குக் கொண்டு வந்து பாலிஷ் செய்து, தனியாகவோ, கலந்தோ 'ஊட்டி கேரட்' என்ற பெயரில் விற்பதை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம். ஏனெனில் இரண்டுக்கும் பெரும் விலை வித்தியாசம் உள்ளது.'' என்கிறார் நீலகிரி உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தியாளர்கள் சங்க இணைச் செயலாளர் கோபால்.

மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் ஊட்டி கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்கும்போது, மாலுார் கேரட் 20 ரூபாய் அல்லது 25 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுவதாக அங்குள்ள வியாபாரிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். அதற்கு ஊட்டி கேரட்டின் தனித்துவம் காரணமென்பதையும் அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய மேட்டுப்பாளையம் காய்கறி தொழில் மற்றும் வர்த்தகசபை செயலாளர் ஹக்கீம், ''மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு தினமும் 40லிருந்து 70 லாரிகளில் கேரட் வரும். சராசரியாகக் கணக்கிட்டால் தினமும் 2 ஆயிரம் மூட்டைகள் (ஒரு மூட்டை 75 கிலோ) வீதமாக, ஒன்றரை லட்சம் கிலோ கேரட் வருகிறது. அவற்றில் முதல் தரமுள்ள 40 சதவிகித கேரட், சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகப் பகுதிகளுக்குச் செல்கிறது. மீதமுள்ள 60 சதவிகித கேரட், கேரளாவுக்கு மட்டுமே செல்கிறது.'' என்று புள்ளி விபரங்களைத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Special Arrangement
3 மாதங்கள் மட்டுமே வெளிமாநில கேரட் வரத்து அதிகம்
ஏப்ரலில் இருந்து டிசம்பர் வரை, மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு ஊட்டி கேரட் மட்டுமே வரும் என்று கூறும் ஹக்கீம், பனிக்காலம் முடிந்து, நீலகிரியில் மண்ணைப் பதப்படுத்தும்போது, அறுவடை குறைந்து அங்கிருந்து வரத்து இல்லாததால்தான் பிற மாநில கேரட்டுகள் அதிகமாக வரும் என்கிறார்.
தற்போது ஊட்டி கேரட் ஒரு கிலோ 30 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை விலை போவதாக கூறும் அவர், இதில் பாதி விலைக்கே கர்நாடகா மாநிலத்தில் விளையும் மாலுார் கேரட் விலை போகும் என்கிறார்.
''சில நாட்களில் கொஞ்சம் தரமுள்ள கேரட் வரும்போது, கூடுதலாக 5 ரூபாய் விலை போகும். இரண்டு கேரட்டுகளுக்குமான வித்தியாசத்தை வியாபாரிகள் நன்கு அறிவோம். டெல்லியிலிருந்தும் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு கேரட் வந்தது; ஆனால் சில நாட்களிலேயே வரவேற்பின்றி 'ஃபெயிலியர்' ஆகிவிட்டதால் இப்போது வருவதில்லை. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊட்டி கேரட் விளைச்சல் குறையும்போது மட்டுமே, கர்நாடகா, டெல்லி கேரட்டுகளின் வரத்து அதிகரிப்பதுண்டு.'' என்கிறார் ஹக்கீம்.

கேரட்டைப் போலவே, வெளிமாநிலங்களிலிருந்து உருளைக்கிழங்கும் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு அதிகம் வந்தாலும், அவற்றை நீலகிரி விவசாயிகள் எதிர்ப்பதில்லை என்கிறார்கள் வியாபாரிகள்.
இந்த மார்க்கெட்டுக்கு80 சதவிகிதம் ஊட்டி கேரட் வரும் நிலையில், வெளிமாநில கேரட் 20 சதவிகிதம் மட்டுமே வருவதாகக் கூறுகின்றனர். ஊட்டி கேரட் வரத்து குறைந்து வெளிமாநில கேரட் வரத்து அதிகரிக்கும்போது மட்டுமே, விவசாயிகள் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்புகிறது என்பது காய்கறி வியாபாரிகளின் வாதமாக உள்ளது.
ஊட்டி கேரட் விவசாயியாகவும், வியாபாரியாகவும் இருக்கும் ஹரி இதை மறுக்கிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''பனிக்காலம் முடிந்ததும் கர்நாடகா மாநிலம் கேரட் அதிகமாக வருவது உண்மைதான். அதில் ஊட்டி கேரட்டின் சுவை இருக்காது. நீர்ச்சத்து குறைவாக 'டிரை' ஆக இருக்கும். அதனால் விலையும் பாதிக்குதான் போகும். ஆனால் ஊட்டி கேரட்டுக்கான டிமாண்டை அது குறைத்துவிடும்.'' என்கிறார்.
''மாலுார் கேரட்டை உதகையில் சுத்திகரித்துக் கொண்டு ஊட்டி கேரட் என்று விற்பதையே விவசாயிகள் எதிர்க்கின்றனர். இதை ஊட்டி கேரட் என்று வாங்கிச் சாப்பிடும் பலரும் சுவை மாறிவிட்டதாக நினைப்பர். அதனால் அதற்கான தனித்துவம், மதிப்பு, விலை மற்றும் வரவேற்பு அனைத்தும் குறைந்துவிடும் என்பதே விவசாயிகள் இதற்கு எதிராக தொடர்ந்து போராடுவதற்குக் காரணம்.'' என்கிறார் ஹரி.

பட மூலாதாரம், Special Arrangement
வெளிமாநில கேரட்டுகளில் ரசாயனம் கலப்பது உண்மையா?
கர்நாடகா கேரட்டை உதகையில் பாலிஷ் போடுவதுடன் ரசாயனம் கலப்பதாகவும் சில விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதுபற்றி தோட்டக்கலைத்துறை ஆய்வு செய்ய வேண்டுமென்றும் அவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அறுவடைக்கு முன்பு மருந்து அடிப்பதைத் தவிர, அதற்குப் பின் ரசாயனம் கலக்க வாய்ப்பில்லை என்கிறார் துறையின் இணை இயக்குநர் ஷிப்லா மேரி.
இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''கேரட்டுகளை சுத்தமாகக் கழுவி, பாலிஷ் போடும் இயந்திரங்கள் இங்கு மட்டும்தான் இருக்கின்றன. இதற்கான இயந்திரம் வாங்குவதற்கு தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.17 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. அதனால் கேரட்டில் உள்ள கோடுகளில் படியும் மண், அழுக்கு எதுவுமின்றி பளிச்சென்று ஆகிவிடும்.'' என்கிறார்.
ஊட்டி கேரட்டுக்கு தரப் பராமரிப்பு அதிகமாக இருப்பதால், எளிதில் கெடாது என்பதை ஒப்புக்கொள்ளும் ஷிப்லா மேரி, இரண்டு கேரட்டுகளுக்கும் சுவையிலும், வடிவத்திலும் சில மாற்றங்களும் இருக்கும் என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Special Arrangement
உதகையில் மட்டும் 50 கேரட் பாலிஷ் இயந்திரங்கள்
ஒரு இயந்திர யூனிட் போடுவதற்கு 40 லட்ச ரூபாய் வரை செலவானாலும், தமிழக அரசின் தோட்டக் கலைத்துறை மானியம் கிடைப்பதால் தற்போது நீலகிரியில் 50 கேரட் பாலிஷ் இயந்திரங்கள் இருப்பதாக நீலகிரி உருளைக்கிழங்கு-காய்கறி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தகவல் பகிர்கின்றனர். சங்கத்தின் இந்த முயற்சியால்தான் ஊட்டி கேரட்டுக்கு அதிக விலை கிடைத்தது என்பது இவர்களின் நம்பிக்கையாகவுள்ளது.
''மற்ற மாநில கேரட்டுகளை விட, ஊட்டி கேரட்டுக்கு சுவையும், சத்துத்தன்மையும் அதிகம் என்பதை, வியாபாரிகளாகிய நாங்களே உணர்ந்துள்ளோம். அதேநேரத்தில், கர்நாடகா கேரட்டை விட, ஊட்டி கேரட்டுக்கு அதிகளவு மருந்து பயன்படுத்தப்படுவதை மறுக்க முடியாது. இதற்கும் சேர்த்தே நீலகிரி விவசாயிகள் அதிக விலை கோருகின்றனர். கர்நாடகாவில் உற்பத்திச் செலவு குறைவு என்பதால், பாதி விலைக்குக் கொடுக்கின்றனர்.'' என்கிறார் எம்விசிசி செயலாளர் ஹக்கீம்.
இதைக் கடுமையாக மறுக்கும் நீலகிரி உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தியாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் கோபால், ஊட்டி கேரட்டுக்கான வீரியமுள்ள, தரமுள்ள விதைகளை வெளிநாடுகளிலிருந்து ஒரு கிலோ ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.58 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்குவதால்தான் அதற்கு அதிக விலை கோரப்படுவதாகத் தெரிவிக்கிறார்.
''விதைப்பிலிருந்து அறுவடை வரையிலான 90-120 நாட்களில், அதிகபட்சமாக 4 அல்லது 5 முறை மட்டுமே மருந்து தெளிக்கப்படுகிறது. நல்ல விதை என்பதால்தான் விளைச்சலும், சுவையும் நன்றாகவுள்ளது. தேயிலை விலை வீழ்ச்சிக்குப் பின், நீலகிரி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பது ஊட்டி கேரட் விவசாயம்தான். அதனால்தான் அதற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி செய்கிறோம்.'' என்கிறார் கோபால்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












