பொக்லைன் வாகன ஓட்டுநர் பலி: மதுரை நக்கீரர் தோரண வாயில் இடிப்பின் போது என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விஜயா
- பதவி, பிபிசி தமிழ்
மதுரை மாட்டுத் தாவணியில் நக்கீரர் தோரண வாயிலை இடிக்கும் பணியின் போது பொக்லைன் வாகன ஓட்டுநர் மீது கட்டுமானம் சரிந்து விழுந்தது. அதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பின்பற்றாததே அவர் உயிரிழக்கக் காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல்துறை கூறுகிறது.
தோரண வாயில் சரிந்து விழுந்தபோது என்ன நடந்தது?

நக்கீரர் தோரண வாயில் இடிப்பு ஏன்?
மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் எதிரே நக்கீரர் தோரண வாயில் அமைந்திருந்தது. மதுரையில் 1981ஆம் ஆண்டு ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற போது, அப்போதைய முதலமைச்சர் எம்.ஜிஆர் இதைத் திறந்து வைத்தார்.
சுமார் 43 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இந்தத் தோரண வாயிலால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கறிஞர் ஜைனப் பீவி என்பவர் தாக்கல் செய்த மனுவில், தோரண வாயில் தொடர்பாக சில விவரங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், HANDOUT
எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் அருகே நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், சாலையின் நடுவில் உள்ள நக்கீரர் தோரண வாயிலால் ஏராளமான விபத்துகள் நேர்வதாகக் கூறியிருந்தார்.
தோரண வாயிலை அகற்றி புதிய அலங்கார வளைவை அமைத்தால் விபத்துகள் தவிர்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் தவிர்க்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், சுந்தரமோகன் அமர்வு, தோரண வாயிலை 6 மாதங்களுக்குள் அப்புறப்படுத்துமாறு மதுரை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த புதன்கிழமையன்று (பிப்ரவரி 12) இரவு சுமார் 11 மணியளவில் தோரண வாயிலை இடிக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டது.
தோரண வாயிலை இடித்தபோது என்ன நடந்தது?

பட மூலாதாரம், HANDOUT
இந்தப் பணியில் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன. அப்போது நுழைவு வாயில் சரிந்து விபத்து ஏற்பட்டது. இதில் நாகலிங்கம் என்ற 21 வயது இளைஞர் உயிரிழந்தார்.
தோரண வாயிலை இடிக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றிருந்த நல்லதம்பி என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. தோரண வாயில் இடிந்து விழும் வீடியோ இணையத்தில் பரவியது.
"தனது மகனின் இறப்பு குறித்து தங்களுக்கு முறையான தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை" என்று பிபிசி தமிழிடம் கூறினார் நாகலிங்கத்தின் தந்தை கதிர்வேல்.
இவர், மதுரை மாநகரில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள திருமால் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது மூன்று மகன்களில் கடைசியாகப் பிறந்தவர் நாகலிங்கம்.
தொடர்ந்து பேசிய அவர், பிப்ரவரி 12ஆம் தேதியன்று நடந்த சம்பவத்தை விவரித்தார். "அன்று இரவு 10 மணியளவில் என் மகனுக்கு போன் செய்த போது, 'இரவுப் பணி உள்ளதாகச் சொல்கிறார்கள். காலையில்தான் வருவேன்' என்றார். அதன்பிறகு நள்ளிரவு 1 மணியளவில் என் மகனுக்கு காயம் ஏற்பட்டதாகத் தகவல் வந்தது" எனக் கூறினார்.
ஆனால், இந்தத் தகவலைக்கூட தங்கள் கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒரு நபர் மூலமாக அறிய நேர்ந்ததாக அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், HANDOUT
"தோரண வாயிலை இடிக்கும் பணியில் இரண்டு ஆபரேட்டர்களை ஈடுபடுத்தியுள்ளனர். ஆனால், எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தோரண வாயிலின் கீழ்பகுதியில் இடித்தபோது, அந்தக் கட்டுமானம் அப்படியே பொக்லைன் வாகனத்தின் மீது சரிந்து விழுந்துவிட்டது. இதைப் பார்த்ததுமே சம்பவ இடத்தில் இருந்து அதிகாரிகள் அனைவரும் ஓடிவிட்டனர்" என்கிறார் கதிர்வேல்.
"இதன் பிறகு எந்த அதிகாரியும் தங்களை வந்து சந்தித்துப் பேசவில்லை" எனக் கூறும் கதிர்வேல், "ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நடந்த சம்பவத்துக்கே இதுதான் நிலை. அரசுக்காகத்தான் என் மகன் வேலை பார்த்தான். அதற்கே நியாயம் கிடைக்கவில்லை" என்று கூறிக் கலங்கினார்.
அடுத்து பிபிசி தமிழிடம் பேசிய நாகலிங்கத்தின் உறவினர் தங்கமலை, "நாங்கள் சென்ற போது சம்பவ இடத்திலோ, ராஜாஜி அரசு மருத்துவமனையிலோ அதிகாரிகள் யாரும் இல்லை" என்றார்.

அதிகாரிகள் சொல்வது என்ன?
இதுதொடர்பாக, கோ.புதூர் காவல் நிலைய ஆய்வாளர் மாடசாமியை பிபிசி தமிழ் நேரில் சந்தித்துப் பேசியது.
அப்போது பேசிய அவர், "விபத்து தொடர்பாக ஒப்பந்ததாரர் நல்லதம்பி, மாநகராட்சி அதிகாரிகள் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது அலட்சியமாகச் செயல்பட்டதாக பிஎன்எஸ் சட்டப்பிரிவு 280, 290, 105(2) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளோம்" எனக் கூறினார்.
"இந்த வழக்கில் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை" என்று கூறிய காவல் ஆய்வாளர் மாடசாமி, "விசாரணை தொடக்க நிலையில் உள்ளது" என்று மட்டும் பதில் அளித்தார்.
மதுரை மாநகராட்சி மீதான குற்றச்சாட்டுக்கு ஆணையாளர் சித்ரா விஜயனிடம் விளக்கம் கேட்பதற்கு பிபிசி தமிழ் நேரில் சென்றது.
"அலுவல் கூட்டத்தில் இருப்பதால் இதுகுறித்துப் பேசுவதற்கு வாய்ப்பில்லை. விபத்து தொடர்பாக மாநகராட்சி தலைமை பொறியாளர் ரூபனிடம் பேசுங்கள்" என ஆணையாளரின் தனி உதவியாளர் தெரிவித்தார்.
ஆனால், தலைமை பொறியாளர் ரூபனை பலமுறை தொடர்பு கொண்டும் அவரிடம் இருந்து பதில் பெற முடியவில்லை. அதேநேரம், நுழைவு வாயில் விபத்து தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் ஊடகங்களுக்கு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், "கட்டடத்தை இடிப்பதற்கான நடைமுறைகளை மாநகராட்சி அதிகாரிகள் முறையாகப் பின்பற்றியுள்ளனர். இதில் ஏதேனும் தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












