பழங்குடியினர் படிப்பறிவு விகிதம் உத்தர பிரதேசத்தைவிட தமிழ்நாட்டில் குறைந்தது ஏன்?

பழங்குடியினர் படிப்பறிவு: உத்தரபிரதேசத்தை விட தமிழ்நாட்டில் குறைந்தது ஏன்? தரவுகள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

பழங்குடியின மக்களின் கல்வியறிவில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதிக இடைவெளி இருப்பதாக, மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கான அரசின் திட்டங்கள் முழுமையாகச் சென்று சேராததே இதற்குக் காரணம் என பழங்குடியினர் அமைப்புகள் கூறுகின்றன.

கல்வி, வேலைவாய்ப்பில் பழங்குடி மாணவர்களுக்குக் கூடுதல் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருவதாக, தமிழ்நாடு அரசு கூறுகிறது.

பழங்குடியினர் கல்வியறிவு பெறுவதில் என்ன சிக்கல்? இடைவெளி அதிகரிக்க என்ன காரணம்? பிற மாநிலங்களில் என்ன நிலவரம்?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் தொகுதி எம்.பி ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் பழங்குடி மக்களின் கல்வியறிவு தொடர்பாக சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.

பழங்குடி மக்களின் எழுத்தறிவு குறித்த தரவுகள், பள்ளி மற்றும் உயர் கல்வியில் பழங்குடி மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதம் (GER), பழங்குடிப் பெண்களிடையே குறைந்த எழுத்தறிவு (literacy) விகிதத்தை சரி செய்வதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களைத் தருமாறு ரவிக்குமார் கோரியிருந்தார்.

இந்தக் கேள்விகளுக்கு மத்திய பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் துர்காதாஸ் உய்க்கி, கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி விரிவான பதில் ஒன்றை அளித்திருந்தார்.

அந்த பதிலில் வழங்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் அனைவருக்குமான படிப்பறிவு நிலைக்கும் பழங்குடியினரின் படிப்பறிவு நிலைக்கும் இடையில் தமிழ்நாட்டில் அதிக இடைவெளி இருக்கிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தமிழ்நாட்டில் குறைவு

கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தத் தரவுகளை பழங்குடியினர் நலத்துறை வழங்கியுள்ளது. அதில், இந்திய அளவில் அனைவருக்குமான கல்வியறிவு (general literacy) மற்றும் பழங்குடியினர் கல்வியறிவு (tribal literacy) ஆகியவற்றுக்கு இடையே 14% இடைவெளி உள்ளதாகக் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் அனைவருக்குமான படிப்பறிவு விகிதம் 80.1% ஆக உள்ளது. அதுவே பழங்குடியினர் படிப்பறிவு விகிதம் 54.3% ஆக உள்ளது. இரண்டுக்கும் இடையில் 25. 8% இடைவெளி உள்ளதாக பழங்குடியினர் நலத்துறை கூறியுள்ளது.

பழங்குடிப் பெண்களின் படிப்பறிவிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடு பின்தங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அனைவருக்குமான பெண்களின் படிப்பறிவு 73.4% ஆகவும், பழங்குடிப் பெண்களின் படிப்பறிவு விகிதம் 46.8% ஆகவும் உள்ளது. இரண்டுக்கும் இடையே 26.6% இடைவெளி உள்ளது.

இதர மாநிலங்களில் உள்ள பழங்குடியின மாணவர்களின் படிப்பறிவு தொடர்பான தரவுகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

எங்கு அதிகம்? எங்கு குறைவு?

பழங்குடியினர் படிப்பறிவு

பட மூலாதாரம், Getty Images

அதன்படி, உத்தர பிரதேசத்தில் அனைவருக்குமான படிப்பறிவு என்பது 67.7%. அங்கு பழங்குடியினரின் படிப்பறிவு 55.7 சதவீதமாக உள்ளது. இரண்டுக்கும் இடையே12.0% இடைவெளி உள்ளது.

இதில், ஆண் மாணவர்களிடையே, அனைவருக்குமான படிப்பறிவு 77.3% ஆகவும், பழங்குடி ஆண்களின் படிப்பறிவு 67.1% ஆகவும் உள்ளது. இரண்டுக்கும் 10.2% அளவு இடைவெளி உள்ளது.

உத்தர பிரதேசத்தில் பெண்களில் அனைத்து பிரிவினருக்குமான படிப்பறிவு 57.2%, பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி) பிரிவைச் சேர்ந்த பெண்களின் படிப்பறிவு 43.7 ஆக உள்ளது. இரண்டுக்கும் 13.5% ஆக இடைவெளி உள்ளது.

அடுத்து, பிகார் மாநிலத்தில்அனைவருக்குமான படிப்பறிவு 61.8% ஆக உள்ளது. எஸ்.டி பிரிவினருக்கான படிப்பறிவு 51.1 % ஆக உள்ளது. இரண்டுக்கும் 10.7% அளவு இடைவெளி உள்ளது.

இதோடு, சிக்கிம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், இமாச்சல பிரதேசம், லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில் பழங்குடியினரின் படிப்பறிவு விகிதம் சிறப்பாக உள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

சிக்கிமில் அனைவருக்குமான படிப்பறிவு 81.4% ஆகவும், எஸ்.டி பிரிவினரின் படிப்பறிவு விகிதம் 79.7% ஆகவும் உள்ளது. இரண்டுக்குமான இடைவெளி 1.7%. அருணாச்சல பிரதேசத்தில் அனைவருக்குமான கல்வியறிவு 65.4% ஆகவும் எஸ்.டி 64.6% ஆகவும் உள்ளது. இங்கு 0.8% மட்டுமே இடைவெளி உள்ளது.

லட்சத்தீவில் அனைவருக்குமான படிப்பறிவு 91.8% ஆக உள்ளது. அங்கு எஸ்.டி. பிரிவினரின் கல்வியறிவு 91.7% ஆக உள்ளது. இடைவெளி என்பது 0.1% மட்டுமே உள்ளது.

மிசோரம் மாநிலத்தில் அனைவருக்குமான படிப்பறிவு 91.3% ஆகவும், எஸ்.டி பிரிவில் படிப்பறிவு 91.5% ஆகவும் உள்ளது. இங்கு மைனஸ் 0.2% என்ற அளவு மட்டும் இடைவெளி உள்ளதாக மத்திய பழங்குடியினர் நலத்துறை தெரிவித்துள்ளது.

அதுவே, கேரளாவில் அனைவருக்குமான படிப்பறிவு 94% ஆகவும், எஸ்.டி பிரிவினரின் படிப்பறிவு 75.8% ஆகவும் உள்ளது. இங்கு 18.2% இடைவெளி உள்ளது.

காரணம் என்ன?

பழங்குடியினர் படிப்பறிவு

பட மூலாதாரம், Facebook

"தரவுகள் அடிப்படையில், தமிழ்நாட்டில் மட்டும் பழங்குடியினர் படிப்பறிவு விகிதம் குறைந்துள்ளது ஏன்?" என விழுப்புரம் எம்.பி ரவிக்குமாரிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் சென்று சேர்கின்றன. அங்கு அரசியல்ரீதியாக அவர்கள் செல்வாக்கு பெற்றிருப்பதே அதற்குக் காரணம். ஆனால், பழங்குடியின மக்கள் குறைவாக வசிக்கும் பகுதிகளுக்குப் பெரிதாக உதவிகள் சென்று சேர்வதில்லை" எனக் கூறினார்.

பட்டியல் சாதி மாணவர்களைப் போல பழங்குடி மாணவர்களும் பாகுபாடுகளை எதிர்கொள்வதாகக் கூறும் ரவிக்குமார், "இடைநிற்றல் அதிகரிப்பதற்கு இதுவொரு காரணமாக உள்ளது. மாறாக, அவர்கள் வசிக்கும் பகுதியில் பள்ளி இருந்தால் படிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன, இல்லையென்றால் அது சவாலாக உள்ளது" என்கிறார்.

பழங்குடியின மக்களில் பலரும் பிழைப்புக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று வேலை பார்ப்பதால், கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகளை அவர்களால் முழுமையாகப் பெற முடியாத சூழல் நிலவுவதாகவும் ரவிக்குமார் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு நிலவரம் என்ன?

கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தத் தரவுகள் அமைந்தாலும், கடந்த 2023-24ஆம் ஆண்டில் பழங்குடியின மக்களில் மொத்த கல்வியறிவு விகிதம் (GER) தொடர்பான தகவல்களையும் மத்திய அரசு அளித்துள்ளது.

ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரையிலான விவரங்கள் இதில் தரப்பட்டுள்ளன. "2023-24ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டில் சேர்க்கை விகிதம் சற்று கூடுதலாக உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குக் கிடைத்த பயனாகப் பார்க்கலாம்" எனக் கூறுகிறார் ரவிக்குமார்.

அதன்படி, பள்ளிக்கல்வியில் பழங்குடி மக்களின் தேசிய சராசரி என்பது 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 97.1 சதவீதமாக உள்ளது. 9 முதல் 10ஆம் வகுப்பு வரை, அது 76.9 சதவீதமாக உள்ளது. அதுவே மேல்நிலைக் கல்வியில் 48.7 சதவீதமே உள்ளது.

தமிழ்நாட்டில் தொடக்க கல்வியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான சேர்க்கை விகிதம் 113.1% ஆக உள்ளது. 9 முதல் 10ஆம் வகுப்பு வரை 100.1% ஆக உள்ளது. ஆனால், மேல்நிலைக் கல்வியில் 77.0% மட்டுமே உள்ளது.

அதுவே உத்தர பிரதேசத்தில் மேல்நிலைக் கல்வி விகிதம் என்பது 133.1% ஆக உள்ளது. ஆனால், குஜராத்தில் இந்த எண்ணிக்கை 41.3% ஆக உள்ளது.

'முழுமையாக சென்று சேர்வதில்லை' - மலைவாழ் மக்கள் சங்கம்

பழங்குடியினர் படிப்பறிவு

பட மூலாதாரம், Getty Images

"பழங்குடி மாணவர்களுக்கு அரசு அறிவிக்கும் பல்வேறு திட்டங்கள், முழுமையாகச் சென்று சேருவதில்லை" எனக் கூறுகிறார், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் இரா.சரவணன். இவர் தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் ஆன்றோர் மன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அரசின் ஏகலைவா பள்ளிகள் செயல்படுகின்றன. உண்டு உறைவிடப் பள்ளிகளாக இவை செயல்படுகின்றன. சில பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத சூழலில் மாணவர்களே வகுப்பெடுக்கும் நிலை உள்ளது," என்கிறார்.

போக்குவரத்து வசதியில்லாத மலைப்பகுதிகளில் பணியாற்றுவதற்குப் பெரும்பாலான ஆசிரியர்கள் விருப்பப்படாததே இதற்குக் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார். "செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் பழங்குடி மாணவர்களுக்காகப் புதிய உண்டு உறைவிடக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அங்கு ஆயிரம் பேர் வரை படிப்பதற்கான வசதி உள்ளது. ஆனால் இப்படியொரு கட்டடம் இருப்பதே மாவட்டத்தில் உள்ள பழங்குடி மக்களுக்குத் தெரியாது" என்கிறார் சரவணன்.

பழங்குடி மக்களின் குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் 1998ஆம் ஆண்டு ஏகலைவா பள்ளிகளை மத்திய அரசு கொண்டு வந்தது.

சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்படுகின்றன. தமிழ்நாட்டில் சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்பட ஆறு மாவட்டங்களில் ஏகலைவா பள்ளிகள் உருவாக்கப்பட்டன.

ஆண்டுக்கு தலா 30 லட்ச ரூபாய் வரை இந்தப் பள்ளிகளுக்கு மத்திய அரசு செலவிடுகிறது. இதற்கு மேல் ஏற்படும் செலவுகளை மாநில அரசு கவனித்துக் கொள்கிறது.

"இந்தப் பள்ளிகளில் உணவு சரியில்லை என்றும் அடிப்படை வசதிகளில் குறைபாடு உள்ளதாகவும் பரவலாகப் புகார்கள் உள்ளன" எனக் கூறுகிறார் இரா.சரவணன்.

கல்வராயன் மலையில் என்ன நிலவரம்?

பழங்குடியினர் படிப்பறிவு

பட மூலாதாரம், HANDOUT

இதுதொடர்பாக மேலதிக விவரங்களை அறிந்துகொள்ள மாநிலத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான சேலம் கல்வராயன் மலையில் உள்ள கல்லூர் கிராமத்தில் வசிக்கும் பொன்னுசாமி என்பவரிடம் பேசினோம்.

இவரது மகன் ஏற்காட்டில் உள்ள ஏகலைவா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்தப் பள்ளியில் சுமார் 260 மாணவர்கள் படித்து வருகின்றனர். "இங்கு பழைய விடுதி ஒன்று உள்ளது. எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. கழிவறைகளும் அடிக்கடி நிரம்பிவிடும்" எனக் கூறுகிறார் பொன்னுசாமி.

பிபிசி தமிழிடம் தொடர்ந்து பேசிய அவர், "ஏற்காடு குளிர்ப் பிரதேசம் என்பதால் பனி கொட்டுவது அதிகரிக்கும். அவ்வப்போது பள்ளிக்குள் விஷப் பூச்சிகளும் வந்துவிடும். 10 பேர் படுக்கும் இடத்தில் 20 பேர் உறங்குகின்றனர். இதைப் பற்றி பழங்குடி நலத்துறை அதிகாரிகளின் கவனத்துக்குப் பலமுறை கொண்டு சென்றோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை" என்றார்.

ஏகலைவா பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 6ஆம் வகுப்பு முதல் முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் தினசரி பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு 2,250 ரூபாய் வழங்கப்படுகிறது.

பழங்குடியினர் படிப்பறிவு

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, பொன்னுசாமி, சேலம்

அதுவே, அரசு விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு பராமரிப்பு உள்பட இதர செலவுகளுக்கு 4,500 ரூபாயை மத்திய அரசு வழங்குவதாக தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறை இணையதளம் கூறுகிறது.

ஆனால், "இந்த உதவித் தொகை முறையாகக் கிடைப்பதில்லை. மாவட்ட அளவில் பல்வேறு நிலைகளில் தவறுகள் நடக்கின்றன," எனக் குற்றம் சாட்டுகிறார் பொன்னுசாமி.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஏகலைவா பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு சுமார் 450 மாணவிகள் படிக்கின்றனர். "அங்கு போதிய வசதிகள் எதுவும் இல்லை, உணவு சரியில்லை எனப் பலமுறை புகார் கூறிய பிறகு தற்போது அதை ஓரளவு சரி செய்துள்ளனர்" என்று பொன்னுசாமி தெரிவித்தார்.

"கல்வி கற்பதற்கு வரும் மாணவர்களுக்குத் தேவையான வசதிகள் கிடைத்தால் மேல்நிலைக் கல்வியைத் தொடர்வதில் அவர்களுக்கு எந்தவித சிரமமும் இருக்காது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

கள்ளக்குறிச்சியில் பல மலைவாழ் கிராமங்களில் சாலை வசதியின்மை, பேருந்து வசதி இல்லாதது எனப் பல்வேறு பிரச்னைகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பழங்குடியினர் நலத்துறை கூறுவது என்ன?

பழங்குடியினர் படிப்பறிவு

பட மூலாதாரம், HANDOUT

இதுதொடர்பாக தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரையிடம் பிபிசி தமிழ் பேசியது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி பழங்குடியினர் படிப்பறிவு விகிதத்தில் இடைவெளி அதிகம் இருந்ததாகக் கூறும் அண்ணாதுரை, "தற்போது அது குறைந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்றார்.

கல்வராயன் மலை பழங்குடி மாணவர்கள் சந்திக்கும் பிரச்னை தொடர்பாக அவரிடம் கேட்டபோது, "அங்கு 78 கழிப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு 25 கோடி ரூபாய்க்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.

தமிழ்நாட்டில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடி மாணவர்கள் படிப்பதாகக் கூறிய அண்ணாதுரை, "ஏகலைவா பள்ளிகளில் பிரச்னைகள் ஏதேனும் வந்தால் அதைச் சரிசெய்வதற்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்" தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மேல்நிலைக் கல்வியில் 84% ஆக இருந்த தேர்ச்சி விகிதம், கடந்த ஆண்டு 95 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் மீதமுள்ள ஐந்து சதவீத மாணவர்களையும் கண்காணித்து தொழிற்படிப்புகளில் அவர்களைச் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பழங்குடியினர் படிப்பறிவு: உத்தரபிரதேசத்தை விட தமிழ்நாட்டில் குறைந்தது ஏன்? தரவுகள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images

"பள்ளிக்கல்வித்துறை, அறநிலையத்துறை, கள்ளர் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகியவை பள்ளிகளை நடத்தி வருகின்றன. இவற்றில் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் சிறப்பான தேர்ச்சி விகிதம் உள்ளது" எனவும் அண்ணாதுரை குறிப்பிட்டார்.

ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட வளர்ச்சியைக் கவனித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறியதோடு, "கடந்த இரண்டு ஆண்டுகளில் திருச்சி என்ஐடி-யில் ஒன்பது பழங்குடியின மாணவர்களுக்கு சேர்க்கை கிடைத்துள்ளது" என்றார் அவர்.

அரசின் உதவித்தொகை சென்று சேர்வதில் உள்ள குளறுபடி தொடர்பாகக் கேட்டபோது, "அந்தச் செயல்முறையை இப்போது ஆன்லைன் மூலமாகக் கொண்டு வந்துவிட்டோம். மாவட்ட அளவில் அதற்கான வேலைகள் எதுவும் இல்லை. அதனால் பிரச்னை எதுவும் எழவில்லை" எனக் கூறினார்.

தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிப்பதாகக் கூறிய அவர், "கள்ளக்குறிச்சி, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, திருச்சி, தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அதிகம் வசிக்கின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஆறு மாதங்களுக்கு உண்டு, உறைவிடப் பயிற்சியை வழங்க உள்ளோம்" என்றார் அண்ணாதுரை.

அந்த வகையில் பழங்குடி மக்களின் கல்வியறிவு மேம்பாட்டுக்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)