எளிதில் மூப்படையாத சீமேநே பழங்குடிகள் பற்றி தெரியுமா? அவர்களின் வாழ்க்கை முறை என்ன?

மார்டினா

பட மூலாதாரம், BBC

படக்குறிப்பு, சீமேநே எனும் ஒரு நாடோடி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் மார்டினா
    • எழுதியவர், அலெகான்ட்ரோ மிலன் வலென்சியா
    • பதவி, பிபிசி நியூஸ் முண்டோ

பொலிவியக் காட்டில் மார்டினா காஞ்சி நேட் நடந்து செல்லும்போது, ​​சிவப்பு வண்ணத்துப்பூச்சிகள் அவரைச் சுற்றி பறக்கின்றன. அவரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் எங்கள் குழு அவரை மெதுவாக நடக்க கோரிக்கை வைத்தது.

அவருடைய அடையாள அட்டை அவருக்கு 84 வயது என்று சொல்கிறது. ஆனால் 10 நிமிடங்களுக்குள், மூன்று யூக்கா (Yucca) மரங்களின் வேர்களில் இருந்து கிழங்குகளைப் பிரித்தெடுக்க அவற்றை தோண்டி எடுக்கிறார். தனது கத்தியால் இரண்டே வெட்டுகளில் ஒரு வாழை மரத்தை சாய்த்துவிட்டார்.

தன் முதுகில் ஒரு பெரிய வாழைத் தாரைச் சுமந்துகொண்டு, தனது தோட்டத்திலிருந்து வீட்டை நோக்கி நடக்க தொடங்குகிறார்.

இந்த தோட்டத்தில்தான் மரவள்ளிக்கிழங்கு, சோளம், வாழை மற்றும் அரிசி ஆகியவற்றை அவர் பயிரிடுகிறார்.

பொலிவியாவின் தலைநகரான லா பாஸுக்கு வடக்கே 600 கிமீ தொலைவில் உள்ள அமேசான் மழைக்காடுகளின் உள் பகுதிகளில் வாழும், Tsimanes (‘சீ-மே-நே’ என்று உச்சரிக்கப்படுகிறது) எனும் ஒரு நாடோடி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் மார்டினா. இந்த பழங்குடி சமூகத்தில் 16,000 பேர் வாழ்கின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மார்டினாவின் வலிமை என்பது அவரது வயதையொத்த ‘சீமேநே’ பழங்குடிகளுக்கு அசாதாரணமானது ஒன்றும் அல்ல. இதுவரை ஆய்வு செய்யப்பட்டதில் இவர்களுக்குதான் ஆரோக்கியமான தமனிகள் (Arteries) உள்ளன என்று விஞ்ஞானிகள் குழு கூறுகிறது.

இவர்களின் மூளை வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற பகுதிகளில் உள்ளவர்களை விட மெதுவாகவே மூப்படைகிறது என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.

சீமேநே மிகவும் அரிதான ஒரு பழங்குடிக் குழு. வேட்டையாடுதல், உணவு தேடுதல் மற்றும் விவசாயம் என முழுமையான ஒரு வாழ்க்கை முறையை வாழும், உலகின் சில குறிப்பிட்ட சமூகங்களில் சீமேநேவும் ஒன்று.

இந்த சமூகம், ஒரு கணிசமான அறிவியல் மாதிரியை வழங்கும் அளவுக்கு பெரியது. நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளர் ஹில்லார்ட் கப்லான் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் இருபது ஆண்டுகளாக இச்சமூகத்தை ஆய்வு செய்துள்ளனர்.

ஜுவான்
படக்குறிப்பு, தனக்கு வயது 78 என்று சொல்கிறார் ஜுவான்

‘சீமேநே’ பழங்குடிகளின் வாழ்க்கை முறை

விலங்குகளை வேட்டையாடுதல், பயிர் செய்தல் மற்றும் கூரைகளை வேய்தல் என ‘சீமேநே’ பழங்குடிகள் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர்கள்.

பகல் நேரத்தில் 10%க்கும் குறைவான நேரத்தையே அதிக உடலுழைப்பு தேவைப்படாத வேலைகளில் சீமேநே பழங்குடிகள் செலவிடுகிறார்கள். அதே சமயம் தொழில்துறையில் உள்ள மக்கள், 54% நேரத்தை அதிக உடலுழைப்பு தேவைப்படாத வேலைகளில் செலவிடுகின்றனர்.

எடுத்துக்காட்டாக, ஒரு சராசரி வேட்டை நிகழ்வு எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் மற்றும் 18 கிமீ (11 மைல்) தூரம் வரை செல்ல வேண்டியிருக்கும்.

அவர்கள் மானிக்கி நதியில் வாழ்கின்றனர். பதப்படுத்தப்பட்ட உணவுகள், மதுபானம் மற்றும் சிகரெட்டுகள் போன்ற பொருட்கள் அவர்களுக்கு எளிதாகக் கிடைப்பதில்லை.

அவர்கள் உண்ணும் கலோரிகளில் 14% மட்டுமே கொழுப்பிலிருந்து கிடைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர், இது அமெரிக்காவில் 34% ஆகும்.

அவர்களின் உணவுகளில் நார்ச்சத்து அதிகம் மற்றும் 72% கலோரிகள் கார்போஹைட்ரேட்டிலிருந்து வருகின்றது. ஆனால் இது அமெரிக்காவில் 52% ஆகும்.

அவர்கள் வேட்டையாடும் பறவைகள், குரங்குகள் மற்றும் மீன்கள் போன்ற விலங்குகளிலிருந்து புரதங்கள் கிடைக்கின்றன. அவர்களது ​​பாரம்பரிய சமையல் முறைப்படி உணவைப் பொரிப்பது இல்லை.

சமையல் முறை

பட மூலாதாரம், Michael Guvern

படக்குறிப்பு, சீமேநே பழங்குடிகளின் ​​பாரம்பரிய சமையல் முறைப்படி உணவைப் பொரிப்பது இல்லை

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கப்லான் மற்றும் அவரது சக பணியாளரான மைக்கேல் குர்வெனின் ஆரம்பக்கால பணி மானுடவியல் சார்ந்ததாக இருந்தது.

சீமேநே சமூகத்தின் முதியோர்களிடம் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு அல்லது இதயப் பிரச்னைகள் போன்ற முதுமையின் பொதுவான நோய்களின் அறிகுறிகள் தென்படவில்லை என்பதை அவர்கள் கவனித்தனர்.

பின்னர் 2013இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு பேராசிரியர் கப்லானின் ஆராய்ச்சி குழுவின் கவனத்தை ஈர்த்தது. அமெரிக்காவை சேர்ந்த இதய நோய் நிபுணர் ராண்டால் சி தாம்சன் தலைமையிலான குழு, பண்டைய எகிப்து, இன்கா மற்றும் உனங்கன் நாகரிகங்களிலிருந்து 137 மம்மிகளை ஆய்வு செய்ய சிடி (CT) ஸ்கேனிங்கைப் பயன்படுத்தியது.

மனிதர்களுக்கு வயதாகும்போது, ​​கொழுப்புச் சத்து, ரத்தக் கொழுப்பு மற்றும் இதர பொருட்களின் உருவாக்கம் தமனிகளை கெட்டியாக்குகிறது அல்லது கடினப்படுத்துகிறது. இதனால் அத்தரோஸ்கிலரோசிஸ் (atherosclerosis) என்ற பாதிப்பு ஏற்படுகிறது. 47 மம்மிகளில் இதற்கான அறிகுறிகளை அவர்கள் கண்டறிந்தனர்.

நவீன வாழ்க்கை முறைகளால்தான் இதுபோல ஏற்படுகிறது என்ற அனுமானங்கள் மீதான சந்தேகத்தை இது எழுப்பியது.

இரண்டு ஆராய்ச்சிக் குழுக்களும் இணைந்து, 40 வயதிற்கு மேற்பட்ட 705 சீமேநே பழங்குடிகள் மீது சிடி ஸ்கேன்களை மேற்கொண்டனர். அடைபட்ட இரத்த நாளங்கள் மற்றும் மாரடைப்பு அபாயத்தின் அடையாளமாக இருக்கும் கரோனரி ஆர்டரி கால்சியத்தைக் (சிஏசி) கண்டறிவதே இதன் நோக்கம்.

‘தி லான்செட்’ இதழில் 2017 ஆம் ஆண்டு முதன்முதலில் வெளியிடப்பட்ட அவர்களின் ஆய்வில், 75 வயதுக்கு மேற்பட்ட 65% சீமேநே பழங்குடிகளுக்கு சிஏசி இல்லை என்பதைக் காட்டுகிறது. அந்த வயதுடைய பெரும்பாலான அமெரிக்கர்கள் (80%) அதற்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளனர்.

சீமேநே பழங்குடிகள்
படக்குறிப்பு, சீமேநே பழங்குடிகள் சராசரியாக ஒரு நாளைக்கு 16,000 முதல் 17,000 அடிகள் வரை நடக்கிறார்கள்

‘யாருக்கும் அல்சைமர் நோய் இல்லை’

கப்லான் கூற்றுப்படி, "75 வயதான சீமேநே பழங்குடிகளின் தமனிகள் 50 வயதான அமெரிக்கரின் தமனிகளைப் போன்று உள்ளது."

இரண்டாம் கட்டமாக, 2023இல் ‘ப்ரோசீடிங்ஸ் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ்’ இதழில் ஒரு ஆய்வு வெளியிடப்பட்டது.

பிரிட்டன், ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற தொழில்மயமான நாடுகளில் உள்ள மக்களுடன் ஒப்பிடும்போது, சீமேநே பழங்குடிகள் 70% குறைவான பெருமூளைச் சிதைவை எதிர்கொள்வதாக அந்த ஆய்வு கூறியது.

"சீமேநே பழங்குடி மக்கள்தொகையில், யாருக்கும் அல்சைமர் நோய் இல்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இது மிகப்பெரிய சாதனை" என்று ஆராய்ச்சியாளர்களின் மருத்துவ ஒருங்கிணைப்பாளரான பொலிவியன் மருத்துவர் டேனியல் ஈத் ரோட்ரிக்ஸ் கூறுகிறார்.

ஹில்டா
படக்குறிப்பு, ஹில்டா தனது இரண்டாவது கணவர் பாப்லோவுடன் வசித்து வருகிறார்

‘முதுமையை உணர்கிறோம்’

அவர்களின் பதிவுகளின்படி, ஹில்டாவுக்கு வயது 81. ஆனால் சமீபத்தில் தனது குடும்பம் ‘தனது 100வது பிறந்தநாளைக்’ கொண்டாடுவதற்காக ஒரு பன்றியை வெட்டி விருந்து வைத்ததாக ஹில்டா கூறுகிறார்.

தனக்கு வயது 78 என்று சொல்லும் ஜுவான் எங்களை வேட்டையாட அழைத்துச் செல்கிறார். அவரது தலைமுடி கருமையாகவும், கண்கள் உற்சாகத்துடனும், கைகள் உறுதியாகவும் உள்ளன.

தனக்கு வயதாவதை உணர்வதாகவும் அவர் ஒப்புக்கொள்கிறார், "இப்போது எனக்கு மிகவும் கடினமான விஷயம் என் உடல்தான். நான் இனி அதிக தூரம் நடப்பதில்லை” என்கிறார் அவர்.

மார்டினாவும் தனது முதுமையின் சிரமத்தை ஒப்புக்கொள்கிறார். காடுகளின் உள்பகுதிகளில் வளரும் தாவரமான ஜடாட்டாவிலிருந்து மேற்கூரைகளை வேய்வதில் சீமேநே பெண்கள் புகழ்பெற்றவர்கள்.

இந்தத் தாவரத்தைக் கண்டுபிடிக்க, மார்டினா மூன்று மணி நேரம் காட்டுக்குள்ளும், பிறகு மூன்று மணி நேரம் வீட்டிற்கும், ஜடாட்டா கிளைகளை முதுகில் சுமந்து நடக்க வேண்டும்.

"நான் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே இதைச் செய்கிறேன், இப்போது அது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது," என்று அவர் கூறுகிறார்.

ஜுவான்
படக்குறிப்பு, தனக்கு வயதாவதை உணர்வதாக ஜுவான் ஒப்புக்கொள்கிறார்

இருப்பினும், பல சீமேநே மக்கள் முதுமையை அடைவதில்லை. இந்த ஆய்வு தொடங்கியபோது, ​​அவர்களின் சராசரி ஆயுட்காலம் 45 ஆண்டுகளாக இருந்தது. இப்போது அது 50ஆக உயர்ந்துள்ளது.

"80 வயதை எட்டும் இந்த மக்களில் சிலர், நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகள் நிறைந்த குழந்தைப் பருவத்தில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள்" என்கிறார் டாக்டர் ஈத்.

அனைத்து சீமேநே மக்களும் தங்கள் வாழ்நாளில் ஒட்டுண்ணிகள் அல்லது புழுக்களால் ஒருவித தொற்றுநோய்க்கு ஆளானதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அவர்கள் சீமேநே பழங்குடிகள் உடலில் அதிக அளவு நோய்க்கிருமிகள் மற்றும் வீக்கத்தைக் கண்டறிந்தனர். சீமேநே பழங்குடிகள் தொடர்ந்து தொற்றுநோய்களுடன் போராடுகிறார்கள் என்பதை இது காட்டுகிறது.

உணவு பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியோடு சேர்த்து, வயதான சீமேநே மக்களின் ஆரோக்கியத்திற்கு பின்னால், இந்த ஆரம்பகால நோய்த்தொற்றுகள் மற்றொரு காரணியாக இருக்க முடியுமா என்று ஆச்சரியப்படுவதற்கு இது வழிவகுத்தது.

சீமேநே’ பழங்குடிகள்
படக்குறிப்பு, இரண்டு ஆராய்ச்சிக் குழுக்களும் இணைந்து, 40 வயதிற்கு மேற்பட்ட 705 ‘சீமேநே’ பழங்குடிகளுக்கு சிடி ஸ்கேன்களை மேற்கொண்டனர்

‘மாறிவரும் வாழ்க்கை முறை’

இருப்பினும், இந்த சமூகத்தின் வாழ்க்கை முறை மாறி வருகிறது.

சில மாதங்களாக போதுமான அளவு பெரிய விலங்கை வேட்டையாட முடியவில்லை என்று ஜுவான் கூறுகிறார். 2023 ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட தொடர் காட்டுத் தீ, கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ஹெக்டேர் காடுகளை அழித்தது.

"நெருப்பு விலங்குகளை இங்கிருந்து வெளியேறச் செய்தது," என்று அவர் கூறுகிறார்.

அவர் இப்போது கால்நடைகளை வளர்க்கத் தொடங்கியுள்ளார்.

மோட்டார் படகுகளின் பயன்பாடும் மாற்றத்தைக் கொண்டுவருவதாக டாக்டர் ஈத் கூறுகிறார். இதன் மூலம் சீமேநே பழங்குடிகள் வணிகச் சந்தைகளை எளிதாக அடைய முடிகிறது. சர்க்கரை, மாவு மற்றும் எண்ணெய் போன்ற உணவுகளை அவர்களால் எளிதில் அணுக முடிகிறது.

‘மாறிவரும் வாழ்க்கை முறை’
படக்குறிப்பு, மோட்டார் படகுகளின் பயன்பாடும் மாற்றத்தைக் கொண்டுவருவதாக டாக்டர் ஈத் கூறுகிறார்

மோட்டார் படகுகள் காரணமாக அவர்கள் முன்பை விட குறைவான துடுப்பு படகுகளை பயன்படுத்துகிறார்கள் என்று டாக்டர் ஈத் சுட்டிக்காட்டுகிறார்.

"மிகவும் உடலுழைப்பு தேவைப்படும் செயல்பாடுகளில் துடுப்பு படகு ஓட்டுவதும் ஒன்று" என்கிறார் அவர்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, நீரிழிவு நோய் பாதிப்பு அரிதாகவே இருந்தது. இப்போது இம்மக்களிடையே அவை தோன்றத் தொடங்கியுள்ளன. மேலும் இளைஞர்களிடையே கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

"அவர்களின் பழக்கவழக்கங்களில் ஏதேனும் ஒரு சிறிய மாற்றம் இந்த சுகாதாரக் குறியீடுகளை பாதிக்கிறது" என்று டாக்டர் ஈத் கூறுகிறார்.

இந்த ஆராய்ச்சியாளர்களின் 20 ஆண்டுகால ஈடுபாடு சீமேநே பழங்குடிச் சமூகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்புரை அறுவை சிகிச்சை முதல் எலும்பு முறிவுகள் மற்றும் பாம்பு கடிகளுக்கான சிகிச்சை வரை சீமேநே மக்களுக்கான சிறந்த மருத்துவ வசதிகளை அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆனால் ஹில்டாவைப் பொறுத்தவரை, முதுமை என்பது பெரிதாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றல்ல.

"நான் இறப்பதைப் பற்றி பயப்படவில்லை, ஏனென்றால் அவர்கள் என்னை பூமியில்தான் அடக்கம் செய்யப் போகிறார்கள், நான் இங்கேயேதான் இருக்கப் போகிறேன்…மிகவும் அமைதியாக" என்று அவர் புன்னகையுடன் எங்களிடம் கூறுகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)