காட்டு விலங்காக இருந்த நாய் மனிதனின் செல்லப் பிராணியானது எப்படி? 11,000 ஆண்டு வரலாறு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பால் ரிங்கன்
- பதவி, பிபிசி செய்திகள்
[இன்று, திங்கள், ஆகஸ்ட் 26, உலக நாய்கள் தினம்]
நாய்கள் மனிதர்களின் மிகச் சிறந்த நண்பர்கள் என்பது பரவலாகச் சொல்லப்படுகிறது.
ஆனால், இந்த நட்பு எப்போது துவங்கியது?
நாய்களின் டி.என்.ஏ பற்றிய ஓர் ஆய்வு, நாய் உலகில் நமது ‘சிறந்த நண்பன்’ மட்டுமல்ல, நமது ‘மிக மூத்த நண்பனாகவும்’ இருக்கலாம் என்று கூறுகிறது.
இந்த ஆய்வின் படி, நாய் வளர்ப்பின் வரலாறு 11,000 ஆண்டுகளுக்கு முந்தையது. கடைசிப் பனி யுகத்தின் இறுதியில் இதற்கானத் தரவுகள் உள்ளன என்பதை ஒரு ஆய்வு வெளிப்படுத்தியது.
மற்ற எந்த விலங்கினங்களும் பழக்கப்பட்டதற்கும் முன்பே, நாய்கள் பழக்கி வளர்க்கப்பட்டன என்பதை அந்த ஆய்வு உறுதிப்படுத்தியது.
அந்தக் காலகடத்தில், நாய்கள், பூமியின் வடகோளம் முழுவதும் பரவியிருந்தன. அப்போதே அவை ஐந்து வெவ்வேறு வகைகளாகப் பிரிந்திருந்தன.
காலனித்துவ காலத்தில் ஐரோப்பிய நாய்களின் பரவல் அதிகமாக இருந்த போதிலும், இந்தப் பண்டைய நாய் இனங்களின் தடயங்கள் இன்று அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் இருக்கின்றன.
நமது நெருங்கிய தோழர்களான நாய்களின் இயற்கை வரலாற்றில் உள்ள சில இடைவெளிகளை இந்த ஆராய்ச்சி நிரப்பியது.
இந்த ஆய்வின் இணை ஆசிரியரும், லண்டனின் கிரிக் இன்ஸ்டிடியூட்டில் உள்ள பண்டைய மரபியல் ஆய்வகத்தின் குழுத் தலைவருமான டாக்டர் பொன்டஸ் ஸ்கோக்லண்ட், "மக்கள் வேட்டையாடிக் கொண்டிருந்த காலகட்டத்தில், நாய்கள் பழக்கப்பட்டதைப் பற்றி நினைத்தால், ஆச்சரியமாக இருக்கிறது. காரணம் நாய்கள் மிகவும் வித்தியாசமானவை. அவை உண்மையில் வேட்டையாடும் காட்டு விலங்கு. அவற்றின் நெருங்கிய உறவினர்களான ஓநாய்கள் உலகின் பல பகுதிகளில் இன்னும் அஞ்சப்படும் விலங்காகவே உள்ளன,” என்கிறார்.
"மக்கள் ஏன் நாய்களைப் பழக்கினர்? அதை எப்படிச் செய்தனர்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நாய்களின் மரபணுக்கள் கூறுவது என்ன?
ஓரளவிற்கு நாய்களின் மரபணு வடிவங்கள் மனிதர்களது மரபணுக்களைப் பிரதிபலிக்கின்றன. ஏனென்றால் மக்கள் செல்லுமிடமெல்லாம் நாய்களை உடனழைத்துச் சென்றனர். ஆனால் முக்கியமான சில வேறுபாடுகளும் இருந்தன.
எடுத்துக்காட்டாக, ஆரம்பகால ஐரோப்பிய நாய்கள் முதலில் வேறுபட்டே இருந்தன. இவை இரண்டு வேறுபட்ட நாய் இனங்களிலிருந்து தோன்றியவை. ஒன்று கிழக்கு நாய்கள், மற்றொன்று சைபீரிய நாய்களுடன் தொடர்புடையது.
ஆனால் ஒரு கட்டத்தில் – இது வெண்கல யுகத்தின் தொடக்கத்திற்குப் பிறகு இருக்கலாம் – ஒரு ஒற்றை நாய் இனம் உலகில் பரவி ஐரோப்பாவில் இருந்த மற்ற அனைத்து நாய் இனங்களையும் மாற்றியது. ஐரோப்பாவைச் சேர்ந்த மக்களின் மரபணு வடிவங்களில் இதற்கு இணை இல்லை.
இதுகுறித்து பேசிய இந்த ஆய்வில் பங்காற்றிய ஆண்டர்ஸ் பெர்க்ஸ்ட்ரோம்: "4,000 அல்லது 5,000 ஆண்டுகளுக்கு முன்பு, நாய்களைப் பொறுத்தவரை ஐரோப்பா மிகவும் மாறுபட்ட இடமாக இருந்ததைக் காணலாம். ஐரோப்பிய நாய்கள் இன்று மிகவும் அசாதாரணமான வடிவங்களில் இருப்பதை நாம் காண்கிறோம். மரபணு ரீதியாக அவை ஏற்கனவே இருந்த பன்முகத்தன்மையின் மிகக் குறுகிய துணைக்குழுவிலிருந்து மட்டுமே பெறப்படுகின்றன," என்கிறார்.
ஒரு சர்வதேசக் குழு, பல்வேறு தொல்பொருள் கலாசாரங்களுடன் தொடர்புடைய 27 பழங்கால நாய்களின் முழு மரபணுக்களையும் பகுப்பாய்வு செய்தது. அவர்கள் இவற்றை ஒன்றுடன் ஒன்றும், நவீன நாய்களுடனும் ஒப்பிட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
நாய் இனங்கள் எப்படித் தோன்றின?
தென்னாப்பிரிக்காவில் உள்ள ‘ரோடீசியன் ரிட்ஜ்பேக்’, மெக்சிகோவில் உள்ள ‘சிவாவா’, சோலோயிட்ஸ்குயின்ட்லி (Xoloitzcuintli) போன்ற நாய் இனங்கள், அந்தந்தப் பகுதிகளில் இருந்து பழங்கால பூர்வீக நாய்களின் மரபணுத் தடயங்களைத் தக்க வைத்துக் கொள்வதாக ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
கிழக்கு ஆசிய நாய்களின் வம்சாவளி சிக்கலானது. சீன நாய் இனங்கள், ஆஸ்திரேலிய டிங்கோ மற்றும் நியூ கினி சிங்கிங் நாய் போன்ற இனங்களிடமிருந்து தோன்றியதாகத் தெரிகிறது. மீதமுள்ளவை ஐரோப்பாவிலிருந்து வந்தவை அல்லது ரஷ்யப் புல்வெளியிலிருந்து வந்தவை.
நியூ கினி பாடும் நாய் அதன் இனிமையான சத்தத்திற்காக அவ்வாறு அழைக்கப்படுகிறது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக ஆய்வாளரான கிரெகர் லார்சன், "நாய்கள் நமது பழமையான மற்றும் நெருங்கிய நண்பர்கள். பண்டைய நாய்களின் டி.என்.ஏ. பற்றிய ஆய்வு, நமது நட்பின் வரலாறு எவ்வளவு பின்னோக்கிச் செல்கிறது என்பதைக் காட்டுகிறது. எப்போது, எங்கு இந்த ஆழமான உறவு துவங்கியது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது." என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
காட்டு விலங்காக இருந்த நாய் மனிதனின் செல்லப் பிராணியானது எப்படி?
உணவு தேடி மனித முகாம்களுக்குள் நுழைந்த ஓநாய்களிலிருந்து நாய்கள் உருவானதாகக் கருதப்படுகிறது. ஓநாய்கள் உணவுக்காக அங்குமிங்கும் மோப்பம் பிடித்து அலைந்து கொண்டிருந்தன. அவை பழக்கப்படுத்தப்பட்டு மனிதர்களின் வேட்டையாடும் தோழர்களாக அல்லது காவலர்களாகச் சேவை செய்திருக்கலாம்.
அனைத்து நாய்களும் அழிந்துபோன ஒற்றை ஓநாய் இனத்திலிருந்தோ அல்லது அவற்றுக்கு மிக நெருங்கிய தொடர்புடைய சில இனங்களிலிருந்தோ தோன்றியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகெங்கிலும் பல இடங்களில் நாய்களைப் பழக்கப்படுத்தும் நிகழ்வுகள் நடந்திருக்கலாம். ஆனால், அந்த நாய்கள் இன்றைய நாய்களுக்கு அதிகமாக டி.என்.ஏ-க்களைப் பங்களிக்கவில்லை.
ஆரம்ப நாய் வளர்ப்பு எப்போது அல்லது எங்கு நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று டாக்டர் ஸ்கோக்லண்ட் கூறினார். "நாய்கள் பழக்கப்படுத்தப்பட்டதன் வரலாறு நிகழ்வுகள் நிறைந்ததாக இருந்தது. அதனால் அந்த வரலாற்றை நாய்களின் டி.என்.ஏ-வில் இருந்து நாம் பெற முடியாது. என்ன நடந்தது என்பது நமக்கு உறுதியாகத் தெரியாது. அதுதான் மிக சுவாரஸ்யமான விஷயம்," என்கிறார் அவர்.
6,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் விவசாயம் செய்ய ஆங்காங்கே தங்கிய போது பூனைகள் போன்ற பல விலங்குகள் நம் செல்லப்பிராணிகளாக மாறியிருக்கலாம். மனிதர்கள் அடர்ந்த குடியிருப்புகளில் உருவாகும் கழிவுகளால் ஈர்க்கப்பட்ட எலிகள் போன்ற விலங்குகளைக் கட்டுப்படுத்த பூனைகள் பயனுள்ளதாக இருந்திருக்கும். இதனால், அவை வளர்க்கப்பட்டதன் துவக்கத்தை, மத்திய கிழக்கு போன்ற விவசாயம் தோன்றிய இடத்தொடு நாம் இணைக்கலாம்.
"ஆனால், நாய்களைப் பொருத்தவரை, அந்தத் துவக்கம் எங்கு வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். சைபீரியக் குளிர் பிரதேசம், சூடான கிழக்குப் பிரதேசம், தென்-கிழக்கு ஆசியா என இப்படி பல இடங்களில் அது நடந்திருக்கலாம். இவை அனைத்தும் சாத்தியங்கள் தான்," என பொன்டஸ் ஸ்கோக்லண்ட் கூறுகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












