பெண்ணுறுப்பு பற்றிய போலி சமூக ஊடக பதிவுகள் - ஆபத்திற்கு உள்ளாகும் பெண்களின் ஆரோக்கியம்

பெண்கள் பிறப்பிறுப்பின் கருமை நிறம் ஆபத்தா? : தவறான கருத்துக்களை பரப்பும் சமூக ஊடகங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெண்ணுறுப்பின் வாசனை மற்றும் தோற்றத்தை மாற்றுவதற்கு அழகு சாதன தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை அதிக எண்ணிக்கையிலான ஆன்லைன் பதிவுகள் பரிந்துரைக்கின்றன.
    • எழுதியவர், ஓஸ்ஜ் ஓஸ்டெமிர்
    • பதவி, பிபிசி துருக்கி

சமூக ஊடகங்களில் பெண்ணுறுப்பு பற்றி நடந்து வரும் விவாதங்கள், உலகம் முழுவதும் உள்ள பல பெண்களின் மனதில் தேவையற்ற அச்ச உணர்வை விதைத்துள்ளது.

பெண்ணுறுப்பின் உள்புறம் ‘யோனிக் குழல்’ (vagina) எனப்படும். கருப்பையை வெளிப்புற உடலுடன் இணைக்கின்ற தசைக்குழாய் இது. பெண்ணுறுப்பின் வெளிப்புறம் ‘யோனிப் புழை’ (vulva) எனப்படும். தற்போது பெண்ணுறுப்பு பற்றிப் பல தவறான கருத்துகள் சமூக ஊடகங்களில் பரவிக் கொண்டிருக்கின்றன.

“யோனிக் குழல் எப்படி இருக்க வேண்டும்?”, “அதன் வாசனை எப்படி இருக்க வேண்டும்?” போன்ற தலைப்புகளில் விவாதங்கள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன.

லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்ட, இந்த ஆன்லைன் பதிவுகள் மற்றும் வீடியோக்களில் சில பெண்ணுறுப்புகளின் வாசனை மற்றும் தோற்றத்தை மாற்ற அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கின்றனர்.

ஆனால், மகப்பேறு மருத்துவர்கள் இந்தப் பொருட்கள் ஆபத்தானவை என்று எச்சரிக்கின்றனர். அவை யோனிப்புழையின் pH அளவைச் சீர்குலைத்து தொற்றுநோயை ஏற்படுத்தும் என்கின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வாசனைத் திரவியமா?

பெண்ணுறுப்பின் யோனிக் குழல் (vagina) மற்றும் யோனிப் புழை (vulva) ஆகிய பகுதிகள் ஆரோக்கியமான பாக்டீரியாக்களை கொண்டிருக்கும்.

அவற்றின்மீது பயன்படுத்தப்படும் செயற்கை ரசாயனங்கள் அவற்றின் இயல்பான தன்மையைச் சீர்குலைக்கும் என்று மகப்பேறு மருத்துவர் முஜ்தேகுல் ஜாயிஃபோக்லு கராகா எச்சரிக்கிறார்.

“நான் 'வஜைனா பெர்ஃப்யூம்' (vagina perfume) பற்றி முதலில் கேள்விப்பட்டபோது ​​​​பயந்தேன். ஆணுறுப்பு மட்டும் ஏன் வாசனைத் திரவியங்கள் இல்லை?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

யோனிப்புழை (vulva) என்பது ஒரு பெண் அல்லது பாலின-பன்முகத்தன்மை கொண்ட நபரின் வெளிப்புற பிறப்புறுப்புகளுக்கான கூட்டுப் பெயர்.

யோனிக்குழல் (vagina) என்பது ஒரு தசைக் குழல், இது கருப்பை வாயை உடலின் வெளிப்புறத்துடன் இணைக்கிறது.

துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள கல்லூரி மாணவியான எய்லுல் குல்சே காரா, சமூக ஊடகங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் அழுத்தத்தால் விரக்தியடைந்துள்ளார்.

“சமூகத்தின் கருத்துகளுக்கு இணங்க நாங்கள் தொடர்ந்து ஏதாவது செய்துகொண்டே இருக்க வேண்டுமா?” என்று அவர் கேட்கிறார்.

‘சிறந்த யோனிப் புழை என்று எதுவும் இல்லை’

பெண்ணுறுப்பு
படக்குறிப்பு, சில நாடுகளில், ஒரு மகப்பேறு மருத்துவரை அணுகி இதற்கான ஆலோசனை பெறுவதில் பெண்கள் தயக்கம் கொள்கின்றனர்.

‘சிறந்த’ அல்லது ‘சரியான’ யோனிப்புழை என்று எதுவும் இல்லை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

லண்டனில் உள்ள ராயல் மகப்பேறு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் பெரின் டெஸ்கான், “ஒவ்வொரு பெண்ணின் பெண்ணுறுப்பும் தனித்துவமானது,” என்கிறார்.

“எந்தப் பெண்ணின் பெண்ணுறுப்பும் மற்றொரு பெண்ணின் பெண்ணுறுப்பு போன்று அதே உருவம், அளவு, நிறம், அல்லது தோற்றத்தைக் கொண்டிருக்காது,” என்கிறார்.

“என்னிடம் மருத்துவ ஆலோசனை பெற வரும் பெண்கள் தங்கள் பெண்ணுறுப்பில் பிரச்னை இருக்கிறதோ என்ற பயத்துடன் வருகின்றனர். அவர்களின் உடலில் எந்தப் பிரச்னையும் இல்லை. அவர்களது பெண்ணுறுப்பு முற்றிலும் இயல்பாக இருக்கிறது என்று நான் அவர்களுக்குப் புரியவைத்த போது ​​அவர்களில் 90% பேர் நிம்மதி அடைந்தனர்,” என்கிறார் அவர்.

ஆனால் சில நாடுகளில், ஒரு மகப்பேறு மருத்துவரை பார்த்து இதற்கான ஆலோசனை பெறுவதில் பெண்கள் தயக்கம் கொள்கின்றனர்.

உதாரணமாக, இரானில், பெண்களின் பாலியல் ஆரோக்கியம் சங்கடமான விவகாரமாகக் கருதப்படுகிறது.

ஒரு சில மருத்துவர்கள், தங்களை உருவ கேலி செய்து அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதாகச் சில சமூக ஊடகப் பயனர்கள் புகார் கூறுகின்றனர்.

அறுவை சிகிச்சையா?

“எனது தோழிகளில் ஒருவர் லேபியாபிளாஸ்டி (labiaplasty) செய்து கொண்டார். அது மிகவும் சங்கடமான அறுவை சிகிச்சை ஆயிற்றே, அதை ஏன் செய்தீர்கள் என்று கேட்டேன்” என்று எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு கூறுகிறது.

மேலும் அந்த பதிவில், “என் தோழி என்னிடம் ‘என் மகப்பேறு மருத்துவர் என்னிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்: ‘உங்கள் லேபியா (யோனிப் புழையின் வெளிப்பாகம்) ஏன் மிகவும் மோசமாக இருக்கிறது? அது ஏன் இவ்வளவு பெரியதாகவும் இருக்கிறது? யோனிப் புழை ஏன் மிகவும் அகலமாக உள்ளது? உங்களுக்கு சுகப்பிரசவம் நடந்ததா?’. அதனால்தான் நான் அறுவை சிகிச்சை செய்தேன்.” என எழுதப்பட்டுள்ளது.

‘லேபியாபிளாஸ்டி’ என்பது பெண்ணுறுப்பில் செய்யப்படும் அழகு அறுவை சிகிச்சையின் (cosmetic surgery) மிகவும் பொதுவான வகை. உலகெங்கிலும் உள்ள இளம் பெண்கள் மத்தியில் வேகமாக வளர்ந்து வரும் செயல்முறைகளில் ஒன்றாகும்.

பெண்கள் பிறப்பிறுப்பின் கருமை நிறம் ஆபத்தா? : சமூக ஊடகங்களில் தவறான கருத்துக்களை பரப்பும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெண்ணுறுப்பின் தோற்றம் குறித்த கவலையால் அறுவை சிகிச்சையை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

அவசியமின்றிச் செய்யப்படும் அறுவை சிகிச்சை

இந்த அறுவை சிகிச்சை லேபியா மைனோரா (labia minora) பகுதியை மறுவடிவமைப்பு செய்கிறது. லேபியா மைனோரா என்பது யோனிப்புழையின் இருபுறமும் உள்ள தோலின் மடிப்புகள், பொதுவாக ‘யோனி உதடுகள்’ எனக் குறிப்பிடப்படுகின்றன.

18 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு இந்தச் செயல்முறையைச் செய்யக்கூடாது, ஏனெனில் பருவமடைவதைத் தாண்டி, குறிப்பிட்ட வயதுவந்த பருவம் வரை லேபியா தொடர்ந்து வளர்ச்சி நிலையைக் கொண்டிருக்கும்.

இது, பெண்கள் மற்றும் பாலின-பன்முகத்தன்மை கொண்ட நபர்களுக்கு சுகாதாரம், உடலுறவின் போது ஏற்படும் சிரமங்கள் அல்லது உடற்பயிற்சியின் போது ஏற்படும் அசௌகரியம் ஆகியவற்றுக்கான சிகிச்சையாக இருக்கும். ஆனால் பெண்ணுறுப்பின் தோற்றம் பற்றிய கவலையால் இந்த அறுவை சிகிச்சை செய்யக்கூடாது.

இருப்பினும், தோற்றம் குறித்த கவலையால் அறுவை சிகிச்சையை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதிகரித்து வரும் லேபியாபிளாஸ்டி

ஆஸ்திரேலியாவில், 5 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் ‘லேபியாபிளாஸ்டி’ அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளனர், அல்லது செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று சமீபத்திய அறிக்கை ஒன்று கூறுகிறது.

ஜூன் மாதம் விமன்ஸ் ஹெல்த் விக்டோரியா எனும் அமைப்பால் வெளியிடப்பட்ட ‘லேபியா டைவர்சிட்டி’ என்ற அறிக்கையில் 1,030 பெண்களிடம் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.

“ஆபாசப் படங்கள் மற்றும் சமூக ஊடகங்கள், பெண்ணுறுப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய தவறான கருத்துக்களை பரப்புகின்றனர். இதனால் லேபியா அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் அல்லது அதனை செய்துக்கொள்ள நினைக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது,” என்று அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.

அழகியல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கான சர்வதேச சங்கத்தின் (ISAPS) கூற்றுப்படி, 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2023-இல் உலகளவில் லேபியாபிளாஸ்டி செய்பவர்களின் எண்ணிக்கை 14.8% அதிகரித்துள்ளது.

‘ISAPS’ நடத்திய வருடாந்திர உலகளாவியக் கணக்கெடுப்பு, லேபியாபிளாஸ்டி சிகிச்சையில் முன்னணி நாடாக பிரேசில் இருப்பதாகக் காட்டியது. அங்கு ஆண்டுக்கு 28,000-க்கும் அதிகமானோர் இந்த அறுவை சிகிச்சையைச் செய்துகொள்கின்றனர்.

பிரேசிலின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை சங்கத்தின் உறுப்பினரும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான ரெனாட்டா மாகல்ஹேஸ் கூறுகையில், “பிரேசிலியப் பெண்கள் தங்கள் தோற்றத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள். கலாசார ரீதியாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை நாடுகிறார்கள்,” என்கிறார்.

 வால் சந்தனா

பட மூலாதாரம், Instagram.com/valsantanafitt

படக்குறிப்பு, வால் சந்தனா

‘உடலுறவின் போது சங்கடம்’

பிரேசிலைச் சேர்ந்த 27 வயதான வால் சான்டானா, ஒரு பாடிபில்டிங் வீராங்கனை. அவர் கடந்த ஆண்டு லேபியாபிளாஸ்டி செய்து கொள்ள முடிவு செய்தார்.

“ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நான் பாடிபில்டிங் செய்யத் தொடங்கியபோது, அனபோலிக் ஸ்டெராய்டுகளைப் பயன்படுத்தினேன். அந்தச் சமயம், இந்த அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது,” என்று அவர் பிபிசி நியூஸ் பிரேசிலிடம் கூறினார்.

“போல்டெனோன் மற்றும் ஆக்ஸாண்ட்ரோலோன் போன்ற மருந்துகளைப் பயன்படுத்துவதன் பக்க விளைவாக என் பெண்ணுறுப்பு விரிவடைந்தது,” என்கிறார் அவர்.

அவரைப் பொறுத்தவரை இந்தப் பிரச்னையால், உடலுறவின் போது அவர் எப்படி சங்கடமாக உணர்ந்தார் என்பதுதான் முதன்மையான கவலை. இன்ஸ்டாகிராமில் தனது அறுவை சிகிச்சை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட சான்டானா, இந்தச் சிகிச்சை செயல்முறை தனது நம்பிக்கையையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தியதாகக் கூறுகிறார்.

பெண்கள் பிறப்பிறுப்பின் கருமை நிறம் ஆபத்தா? : சமூக ஊடகங்களில் தவறான கருத்துக்களை பரப்பும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மகப்பேறு மருத்துவர் முஜ்தேகுல் வீகோக்லு கராக்கா, பெண்கள் தங்கள் பெண்ணுறுப்பு பற்றி மேலும் அறிந்து கொள்வதன் அவசியத்தை சுட்டிக்காட்டுகிறார்

பின்விளைவுகளின் அபாயம்

பிரிட்டனில் உள்ள தேசிய சுகாதாரச் சேவை (NHS), “லேபியாபிளாஸ்டி செய்துகொள்வது ஒரு பெரிய முடிவாகும். ஒருவர் அந்த முடிவை கவனமாகச் சிந்தித்து எடுக்கவேண்டும்,” என்று அறிவுறுத்துகிறது.

"இது விலை உயர்ந்த அறுவைசிகிச்சை. பல அபாயங்களைக் கொண்டுள்ளது. நீங்கள் எதிர்பார்த்த முடிவைப் பெறுவீர்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மேலும் அது உங்கள் உடலைப் பற்றிய நல்ல உணர்வை ஏற்படுத்தாது,” என்று தேசிய சுகாதாரச் சேவை கூறுகிறது.

லேபியாபிளாஸ்டியில் எப்போதாவது ரத்தப்போக்கு, நோய்த்தொற்று, திசுக்களில் வடு, பெண்ணுறுப்புகளின் உணர்திறன் குறைதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும்.

“சில பெண்கள் தங்கள் லேபியாவின் தோற்றத்தை விரும்பாததால் லேபியாபிளாஸ்டி செய்ய விரும்புகிறார்கள். ஆனால் உங்கள் யோனிப்புழையைச் சுற்றிக் குறிப்பிடத்தக்க தோல் மடிப்புகள் இருப்பது முற்றிலும் இயல்பானதும்,” என்று NHS கூறுகிறது.

மகப்பேறு மருத்துவர் முஜ்தேகுல் வீகோக்லு கராக்கா, பெண்கள் தங்கள் பெண்ணுறுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்வதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டுகிறார். மேலும் எந்த ஒரு அறுவை சிகிச்சை முறைகயையும் கருத்தில் கொள்வதற்கு முன்பு அவர்கள் தங்கள் சொந்த உடலுடன் நல்ல உணர்வை கொண்டிருக்க வேண்டும், என்கிறார்.

பல்கலைக்கழக மாணவியான எய்லுல் குல்சே காரா இதனை ஒப்புக்கொள்கிறார்.

"பெண்களின் பாலியல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க நாம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும். அறுவை சிகிச்சை அல்லது க்ரீம்களை ஊக்குவிக்கும் உள்ளடக்கத்திற்கு எதிராக, குற்றவுணர்ச்சி, கவலைகள் போன்ற உணர்வுகளில் இருந்து விடுதலை அளிக்கும் உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.

கூடுதல் செய்தி: பிபிசி நியூஸ் பிரேசில் நிருபர் ஜியுலியா கிராஞ்சி

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)