ரத்த தானம் செய்ய உரிமை கோரும் திருநங்கைகள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் - இந்தியாவில் தடை இருப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், உமாங் போடார்
- பதவி, பிபிசி செய்தியாளர்
வைஜெயந்தி வசந்தா மோக்லியின் தாயார், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு மரணப் படுக்கையில் இருந்த போது, அவருக்கு ரத்தம் தேவைப்பட்டது. வைஜெயந்தி திருநங்கை என்பதால், மருத்துவமனைகள் அவரது ரத்தத்தை எடுக்க மறுத்துவிட்டனர்.
இந்தியாவில் பால் புதுமையினர் (LGBTQ), தன்பால் ஈர்ப்பு சமூகத்தினர் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் ரத்த தானம் செய்ய நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017இல் காலமான தனது தாயைப் பற்றி வைஜெயந்தி கூறுகையில், "அது மிகவும் அதிர்ச்சிகரமான (trauma) அனுபவம்” என்றார்.
தெற்கு ஹைதராபாத் நகரில் உள்ள தகவல் பெறும் உரிமைச் சட்ட ( RTI) ஆர்வலர் வைஜெயந்தி அவரது தாயாரின் ஒரே பராமரிப்பாளராக இருந்தார்.
"அம்மாவுக்கு ரத்த தானம் கிடைக்க நான் வாட்ஸ்ஆப், பேஸ்புக் குழுக்களில் தொடர்ந்து பதிவிட வேண்டியிருந்தது," என்று அவர் கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கடந்த 1980களில் இருந்து, உலகின் பல பகுதிகளில் உள்ள நாடுகள் எச்ஐவி/எய்ட்ஸ் அச்சுறுத்தலைத் தொடர்ந்து பால்புதுமையினர், குயர் (queer) சமூகங்களைச் சேர்ந்த மக்கள் ரத்த தானம் செய்வதைத் தடை செய்யத் தொடங்கின.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில், இஸ்ரேல் போன்ற பல நாடுகள் இந்தக் கொள்கையில் இருந்து விலகிவிட்டன.
இந்தியாவிலும் தற்போது, இந்த தடையை எதிர்த்தும், ரத்த தானம் தொடர்பான விதிகளை மாற்றவும் வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
"இந்தியாவில் நடைமுறையில் உள்ள கொள்கை 2017இல் உருவாக்கப்பட்டது, அது மிகவும் பாரபட்சமானது மற்றும் அனுமான அடிப்படையிலானது. இந்திய அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சமத்துவம், கண்ணியம் மற்றும் வாழ்க்கை ஆகிய அடிப்படை உரிமைகளை மீறுகிறது" என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவிற்கு பதிலளிக்குமாறு மத்திய அரசை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. இந்தக் கொள்கைகள் "அறிவியல் சான்றுகள்" அடிப்படையிலானது என்று கூறி, இந்திய அரசாங்கம் தனது நிலைப்பாட்டை முன்வைத்தது. நிலுவையில் உள்ள இதுபோன்ற இரண்டு வழக்குகளையும் அரசு மேற்கோள் காட்டியது.
அரசாங்கத் தரவுகளின்படி, 2011இல் சுமார் 5 லட்சம் திருநர்கள் மற்றும் சுமார் 25 லட்சம் தன்பால் ஈர்ப்பாளர்கள் (2012இல்) உள்ளனர். இருப்பினும் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்று பலர் நம்புகின்றனர்.
ரத்த தானம் செய்வதில் என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Images
வைஜெயந்தி, ரத்த தானம் செய்யும் ஆர்வலர்களை நல்வாய்ப்பாகக் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் பலருக்கு அது நடக்கவில்லை.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரை சேர்ந்த மாற்றுப் பாலின மருத்துவர் பியோன்சி லைஷ்ராம், உடல்நிலை சரியில்லாமல் இருந்த தனது தந்தையுடன் வந்த திருநங்கை ஒருவரின் அனுபவத்தை விவரிக்கிறார்.
"ஒவ்வொரு நாளும் அவருக்கு 2-3 யூனிட் ரத்தம் தேவைப்பட்டது," என்று அவர் கூறினார்.
ஆனால் மகள் திருநங்கை என்பதால் ரத்தம் கொடுக்க முடியவில்லை. அவர்களால் பிற வழிகளில் ரத்த தானம் செய்பவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது தந்தை இறந்துவிட்டார்."
"அந்த நேரத்தில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று எண்ணி மிகவும் வருந்தினேன்," என்று மருத்துவர் பியோன்சி கூறினார்.
"ஒவ்வொரு 2 விநாடிக்கும்" ரத்த தானம் தேவைப்படும் இந்தியாவில் ரத்தம் கொடுப்பதில் இருக்கும் எந்தவொரு தடையும் பிரச்னைகளை அதிகரிக்கும்” என்றார்.
கடந்த 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்தியாவில் நிலவும் ரத்த தான தேவையின் அடிப்படையில் ஆண்டுக்கு ஒரு மில்லியன் யூனிட் அளவுக்குப் பற்றாக்குறை இருப்பதாகக் கூறுகிறது. அதேநேரம் 2019 லான்செட் ஆய்வு ஆண்டுக்கு சுமார் 40 மில்லியன் யூனிட் பற்றாக்குறை இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இதுபோன்ற சம்பவங்கள் தன்பால் ஈர்ப்பு எழுத்தாளரும் ஆர்வலருமான ஷெரீப் ராக்னர்கரை (வயது 55), இந்த ஆண்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வைத்தது.
"எனது குடும்பத்திற்கு அவசர தேவை ஏற்பட்டால் என்னால் ரத்த தானம் செய்ய முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சுகிறேன்" என்று அவர் கூறினார்.
அவரது நண்பர்கள் பலர் ரத்த தானம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர் உச்சநீதிமன்றத்தை அணுகினார்.
"என்னைச் சுற்றியுள்ள பலர் ரத்த தானம் செய்வதற்கு தடை உள்ளது. தனிப்பட்ட முறையில் அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் வரை இந்தத் தடையைப் பற்றி நான் பெரிதாக அறிந்திருக்கவில்லை" என்று அவர் விவரித்தார்.
இந்தியாவில் உள்ள பால் புதுமையினர் சமூகம் 2018ஆம் ஆண்டில் தன்பால் ஈர்ப்பு மீதான காலனிய காலத்து தடையை நீக்கிய உச்சநீதிமன்றத்தை வாழ்த்தியது. இருப்பினும் பலர் பாரபட்சமான செயல்கள் எனக் கருதப்படும் சில செயல்பாடுகளால் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
"எனது வாழ்நாள் முழுவதையும் இந்தத் தடைகளைச் சுற்றியுள்ள வழிகளைக் கண்டுபிடிப்பதில் செலவிட நான் விரும்பவில்லை" என்று ஷெரீப் கூறினார்.
கோவிட் சூழலில் உதவ முடியாமல் தவித்த திருநர் ஆர்வலர்

பட மூலாதாரம், Getty Images
உச்சநீதிமன்றம் இந்த மனு தொடர்பான அடுத்த விசாரணைத் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் இந்தப் பிரச்னை உச்சநீதிமன்றத்திற்கு வருவது இது முதல்முறை அல்ல.
கடந்த 2021ஆம் ஆண்டில், தங்ஜம் சாந்தா சிங் என்ற திருநர் ஆர்வலர் ரத்த தானம் செய்ய முடியாத பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்களைக் கேட்டு இதேபோன்ற மனுவை தாக்கல் செய்தார்.
கோவிட்-19 சூழலின் போது, உயிரைக் காப்பாற்ற ரத்த பிளாஸ்மா தானம் முக்கியமானதாகக் கருதப்பட்டது. அந்த நேரத்தில் கூட "ஒரு உயிரைக் காப்பாற்ற என்னால் எதுவும் செய்ய முடியவில்லை" என்று அவர் விளக்கினார்.
பெரும்பாலும் பால்புதுமையினர் அவர்கள் சந்திக்கும் மற்ற பால்புதுமை உறுப்பினர்களுடன் சேர்ந்து குடும்பமாக வாழ்கின்றனர். இது அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பம் என்று கருதி அன்பு செலுத்துகின்றனர்.
"பால்புதுமை (LGBTQ) உறுப்பினர்கள் ரத்த தானம் செய்வதில் தடை இருக்கும் பட்சத்தில், அதே சமூக உறுப்பினர்கள் அவசர கால சூழ்நிலைகளில் மருத்துவ உதவியை எப்படிப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்?" என்று நாஸ் இந்தியா அறக்கட்டளையின் பால் புதுமையினர் திட்டத்தின் தலைவர் சாஹில் சௌத்ரி கூறினார்.
ஷெரீப் தொடர்ந்த வழக்கு, சாந்தா மற்றும் இதேபோன்ற பிற மனுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தடை தங்களை ஒதுக்கி வைத்துள்ளதாகவும், முக்கியமற்றவர்களாக உணர வைப்பதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
"இது நான் ஒரு மனிதனல்ல என்பது போல் உணர வைக்கிறது" என்கிறார் சாந்தா. "நான் ஓர் உயிருள்ள சடலம் போன்று உணர்கிறேன்" என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
"இந்தியா அனைத்து ரத்த தானம் செய்பவர்களுக்கும் "உண்மையான ஆபத்து" அடிப்படையிலான ஒரு தனிப்பட்ட பொதுவான அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். அது வெறும் உணரப்பட்ட ஆபத்தைக் கருத்தில் கொள்ளாமல், உண்மையான ஆபத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும்." அந்த 2 மனுக்களின் சாராம்சம் ஆகும்.
பரிசோதனை தொழில்நுட்பம் முன்னேறிவிட்டதால், கடந்த காலத்தைவிட இப்போது எச்ஐவியை விரைவாகக் கண்டறிய முடியும் என்பதால் இத்தகைய கட்டுப்பாடுகள் தேவையற்றது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
பால்புதுமை (LGBTQ) உறுப்பினர்கள் ரத்த தானம் செய்ய விதிக்கப்பட்ட தடைகளை, 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு 15 நாடுகள் நீக்கியுள்ளன என்று சாந்தாவின் மனு கூறுகிறது.
பிரிட்டன், அமெரிக்கா, கனடா போன்ற பல நாடுகளில் ரத்த தானம் செய்வதற்கு சில மாதங்கள் முன் உடலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சட்டம் விதிக்கப்பட்டிருந்தது. இது சமீபத்தில் அகற்றப்பட்டது.
ரத்த தானம் செய்யும் செயல்முறையில் இந்த நாடுகளில் பாலின ரீதியான தடை விதிப்பதற்குப் பதிலாக, ரத்த தானம் செய்ய வருபவர்கள் அதிக ஆபத்துள்ள பாலியல் நடத்தையில் ஈடுபட்டார்களா என்பதை அடிப்படையாக கொண்டு மட்டுமே மக்களை சோதனையிட்டு ரத்த தானம் செய்ய அனுமதிக்கின்றனர்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் உதவியால் ஒரு சமூக அடிப்படையில் அபாயங்களை முன்முடிவு செய்வதைவிட, தனிப்பட்ட அபாயத்தின் அடிப்படையில் பாதுகாப்பாக ரத்த தானம் செய்ய அனுமதிக்க முடியும்.
இந்திய அரசின் நிலைப்பாடு

பட மூலாதாரம், Getty Images
தனிப்பட்ட ரத்த தானம் கொள்கைக்கு இந்தியா தயாராக இல்லை என்று இந்திய அரசுத் தரப்பு வாதிடுகிறது.
கடந்த 2023இல் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்த பதிலில், "இந்த பால்புதுமை சமூகக் குழுக்கள் 6 முதல் 13 மடங்கு எச்.ஐ.வி தொற்று ஆபத்தில் இருக்கிறது. எனவே ரத்த தானம் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளது.
மற்ற நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் நியூக்ளிக் அமில சோதனை போன்ற மேம்பட்ட ரத்தப் பரிசோதனை தொழில்நுட்பங்கள் இந்தியாவில் உள்ள "சில" ரத்த வங்கிகளில் மட்டுமே கிடைக்கின்றன என்றும் அரசு குறிப்பிட்டது.
இந்தச் சோதனையானது தொற்று ஏற்பட்ட சில நாட்களுக்குள் முடிவுகளைக் காண்பிக்கும். தற்போதுள்ள சோதனைகளுடன் ஒப்பிடுகையில், தொற்று ஏற்பட்டு சில வாரங்களிலேயே இந்தச் சோதனைகளில் நோய்த் தொற்று இருப்பதைக் கண்டறிய முடியும்.
“அரசாங்கத்தின் கொள்கையானது எந்த தார்மீக முடிவுகளையும் சார்ந்து இல்லை. ஆபத்தைத் தணிப்பதுதான் நோக்கம்” என்கிறார் வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியரும் ரத்த தானம் நிபுணருமான டாக்டர் ஜாய் மம்மன்.
"இந்தியாவில் உள்ள அமைப்புகள் போதுமான அளவு கண்டிப்பானவை அல்ல." என்பது அவரது கருத்து.
அவரைப் பொறுத்தவரை, இது சோதனை, தனிப்பட்ட விசாரிப்புகளுக்கான சூழ்நிலையை உருவாக்குதல் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும். இது மக்கள் தங்கள் கடந்தகால பாலியல் அனுபவங்களைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது.
பாரபட்சமான கொள்கை

பட மூலாதாரம், Getty Images
அரசின் கொள்கை ஒரு சார்புடன் இருப்பதாகப் பலர் நினைக்கிறார்கள்.
"இந்த வழிகாட்டுதல்கள் பால்புதுமை சமூகத்தின் மீதான முன்முடிவுகளை ( transphobia, homophobia) மட்டுமே பிரதிபலிக்கிறது” என்கிறார் டாக்டர் பியோன்சி.
பால்புதுமை சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எச்.ஐ.வி வைரஸ் தொற்று இருப்பது, அந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் எச்.ஐ.வி. தொற்றுடையவர்களாக மாற்றிவிடாது என்று அவர் கூறுகிறார்.
"மற்ற பாலின சமூகத்தினரும் எச்.ஐ.வி-பாசிட்டிவ் நபர்களைக் கொண்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு ரத்த தானம் செய்யத் தடை விதிக்கப்படவில்லை." என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
எச்.ஐ.வி-க்காக இந்திய அரசாங்கத்தால் மேற்கோள் காட்டப்பட்ட அதே அறிக்கை, கைதிகள் மற்றும் நீண்டதூரம் பயணிக்கும் லாரி ஓட்டுநர்கள் போன்ற பல குழுக்கள் எச்.ஐ.வி ஆபத்தில் இருப்பதாகவும் சாந்தாவின் மனு கூறுகிறது. ஆனால் அவர்கள் ரத்த தானம் செய்யத் தடை இல்லை.
சில நாடுகள் இந்தச் சார்பு நிலையை ஒப்புக் கொண்டுள்ளன. 2024ஆம் ஆண்டில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ரத்தத்தைச் சேகரிக்கும் கனடா அரசின் ரத்த தான சேவைகள், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ரத்த தானம் செய்வதிலிருந்து பால்புதுமை நபர்களுக்குத் தடை விதித்ததற்கு மன்னிப்பு கோரியது.
இந்தக் கொள்கை "ஒருவரது பாலினத்தின் காரணமாக அவரது ரத்தம் தீங்கு விளைவிக்கும் அல்லது பாதுகாப்பற்றது என்னும் பொதுக் கருத்தை வலுப்படுத்தியதோடு, பல ஆண்டுகளாக "பாகுபாடு, முன்முடிவு" ஆகியவற்றுக்கு வழிவகுத்தது.
தற்போது, பலர் இந்தப் பிரச்னையில் தலையிடக் கோரி இந்தியாவின் உச்சநீதிமன்றத்தை நாடுகிறார்கள். ஆனால் கொள்கை மாறும் வரை நெருங்கிய உறவுகள் மற்றும் உறவுகளுக்கு ரத்த தேவை இருக்கும் அவசர நிலை ஏற்படும்போது, அதைச் சமாளிக்க இந்தச் சமூகத்தினர் முன்னரே தயாராகி விடுகின்றனர்.
"என் தாய்க்கு ஏற்பட்ட சூழல் இனி என்னைச் சார்ந்திருப்பவர்களுக்கு நடக்கக் கூடாது. இந்தச் சூழல்களை எதிர்கொள்ள நான் தயாராக இருப்பேன்," என்கிறார் வைஜெயந்தி, அவர் தனது 94 வயதான தந்தையின் ஒரே பராமரிப்பாளராக இருக்கிறார்.
"நான் எனது சமூக வட்டத்தில் இருக்கும் சில ரத்த வங்கிகள் மற்றும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ரத்த மாற்றம், உறுப்பு தானம் போன்ற அனைத்தையும் கையாள உள்ளேன்” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












