உங்கள் நிதிநிலை வீட்டுக்கடன் பெறும் திறன் கொண்டதா என்பதைத் தெரிந்துகொள்ளும் வழிமுறை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விஷ்ணு ஸ்வரூப்
- பதவி, பிபிசி தமிழ்
சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கும் கனவு. இதற்காகப் பலரும் வீட்டுக் கடன் வாங்குகின்றனர்.
ஆனால் சரியான திட்டமிடல், சிந்தனை ஆகியவை இல்லாமல் வீட்டுக்கடன் வாங்குவதால், பலரும் அதனைத் திருப்பிச் செலுத்த மிகவும் சிரமப்படுகின்றனர். கடனில் சிக்கிக்கொண்டதால் தங்களால் மற்ற எதிர்காலத் திட்டங்கள் முதலீடுகள் ஆகியவற்றைச் செய்ய முடிவதில்லை என்று வருந்துபவர்களும் உள்ளனர்.
இதனால், ஒருவர் வீட்டுக்கடன் வாங்கும் முன் பல விஷயங்களையும் சிந்தித்து, சரியான திட்டமிடலுடன் அதனை வாங்கவேண்டும்.
வீட்டுக்கடன் வாங்கும் முன் என்னென்ன விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்?
சொந்த நிதி நிலைமை, பில்டர் அல்லது வீட்டை வாங்குபவரிடமிம் என்னென்னெ சரிபார்க்க வேண்டும், வங்கியிடம் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும், என்பதுகுறித்து பொருளாதார நிபுணர்கள், நிதி ஆலோசகர்கள் ஆகியவர்களுடன் பிபிசி தமிழ் பேசி, கீழ்கண்ட தகவல்களைத் தொகுத்தளிக்கிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கடன் - வருமான விகிதம்: கணக்கிடுவது எப்படி?
ஒருவர் வீட்டுக்கடன் வாங்கும்போது தனிப்பட்ட முறையில் அவரது வருமானமும், கட்டவேண்டிய கடன் தவணையும் ஒத்துப்போகிறதா என்பதைப் பார்க்கவேண்டும். இதற்கு கடன்-வருமான விகிதம் என்ற ஒரு கண்க்கீடு உள்ளது.
அதாவது, மாதம் கட்டவேண்டிய மொத்த கடன் தவணையை (EMI), மொத்த மாத வருமானத்தால் வகுத்து அதை 100-ஆல் பெருக்கினால் கிடைக்கும் அளவீடுதான் இந்த கடன்-வருவாய் விகிதம்.
(மொத்த மாதக் கடன் தவணை / மொத்த மாத வருமானம்) X 100
இந்த விகிதத்தில் நான்கு நிலைகள் உள்ளன:
- இந்த விகிதம் 25%-க்குக் கீழே இருந்தால், அது பாதுகாப்பான, சௌகரியமான ஒரு சூழ்நிலை. இந்தச் சூழ்நிலையில் மாத வட்டித் தவணை கட்டுவதில் சிக்கல் இருக்காது. வருமானத்தின் ஒரு பகுதியை வெளிநாட்டுப் பயணங்கள், குழந்தைகளின் கல்வி ஆகியவற்றில் முதலீடு செய்யலாம், என்கிறார் பொருளாதார நிபுணரும், பட்டய நிதி மேலாளருமான கௌரி ராமச்சந்திரன். இந்த விகிதத்தை 25%-க்குள் வைத்திருப்பதே மிகச் சிறந்தது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
- கடன்-வருவாய் விகிதம் 25% முதல் 40% வரை இருந்தால் அது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை. இந்த நிலையில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நிகழ்வுகள் ஏதேனும் நடந்தால், அதை அவர்களால் சமாளிக்க முடியாமல் போகலாம். இந்த விகிதத்தை 40%-க்கு மேல் போகவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
- கடன்-வருவாய் விகிதம் 40% முதல் 50% வரை இருந்தால், அது அழுத்தமான சூழ்நிலை. ஒவ்வொரு கடன் தவணையைக் கட்டும்போதும் மூச்சுத் திணறுவது போலிருக்கும். மற்ற செலவுகளைச் செய்வது மிகக் கடினமாக இருக்கும்.
- கடன்-வருவாய் விகிதம் 50%-க்கும் மேலே இருத்தல் மிகவும் ஆபத்தான நிலை. ஒவ்வொரு மாத வட்டித் தவணையைக் கட்டுவதும் சொந்த நிதிநிலையில் ஒரு பூகம்பத்தையே ஏற்படுத்தும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
வீட்டுக்கடன் பெறத் திட்டமிடுவோர், தங்கள் மாத வருமானம் மற்றும் வீட்டுக்கடனுக்கான மாதத் தவணை அடிப்படையிலான இந்த அளவீடுகளைக் கருத்தில் கொண்டு, தனது கடன் பெறும் திறனைத் தெரிந்துகொள்ளலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
வீட்டுக்கடன் வாங்கும்போது வங்கியிடவங்கியிடம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?
வீட்டுக்கடன் வாங்கும் முன், வங்கியிடம் சில விஷயங்களை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
குறிப்பிட்ட வங்கி எந்த முறையில் கடன் வழங்குகிறார்கள் என்பதை மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். அதாவது குறிப்பிட்ட வங்கி நிலையான வட்டி விகிதம், அல்லது மாறும் வட்டி விகிதம் இரண்டில் எந்த முறையில் வீட்டுக்கடன் வழங்குகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.
நிலையான வட்டி விகிதம் எனில், கடன் வாங்கும் போது வட்டி விகிதம் இருந்ததோ, (உதாரணத்துக்கு 8.5%) கடன் தவணைக் காலம் முழுதும் அதே வட்டி விகிதம்தான் இருக்கும். மாறும் வட்டி விகிதத்தில் மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் அடிப்படை விகிததைப் பொறுத்து (base rate) கடன் வட்டி விகிதம் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் மாறும்.
நிலையான வட்டி விகிதத்தில் கடனை முன்கூட்டியே முழுவதும் செலுத்தி முடித்தால், அதற்கு அபராதம் உண்டு. ஆனால் மாறும் வட்டி விகிதத்தில் கடனை முன்கூட்டியே செலுத்தி முடித்தால், அதற்கு அபராதம் இல்லை.
வீட்டுக் கடன் வாங்கும் முன் இந்தத் தகவலைக் கவனமாகச் சரிபார்க்க வேண்டும்.
பில்டரிடம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
1) ஒரு பில்டர் (வீடு கட்டி விற்பவர்) பிரபலமான நிறுவனம் என்பதனாலேயே அவர்களை எடுத்தவுடன் அப்படியே நம்பிவிடக்கூடாது. விட்டுமனையின் பட்டா போன்ற ஆவணங்கள் சரியாக உள்ளனவா, வீட்டுமனையில் சட்ட சிக்கல்கள் ஏதும் உள்ளனவா என்பதை மிகக் கவனமாகச் சரிபார்க்க வேண்டும். பிரபலமான பில்டர்கள் சிலர்கூட பட்டா இல்லாத வீட்டுமனையில் வீடு கட்டிக் கொடுத்துவிடும் சம்பவங்கள் நிகழ்கின்றன என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
2) வீட்டின் விலையில் அத்தியாவசியத் தேவைகளான குடிநீர், மின்சாரம் ஆகியவற்றுக்கு மறைமுக விலை சேர்க்கப்பட்டுள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டும். அதேபோல வீட்டைப் பதிவு செய்வதற்கான தொகை, டெபாசிட்கள், ரீஃபண்ட்கள் ஆகியவை அனைத்தும் சேர்த்தே வீட்டுக்கான இறுதித் தொகை எட்டப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
3) வீட்டின் உள்கட்டுமானங்களான, விளக்குகள், ஃபேன்கள், ஃபிட்டிங்குகள் ஆகியவற்றுக்கான தொகை சேர்க்கப்பட்டிருக்கின்றதா என்பதையும் சரிபார்க்க வேண்டும். ஏனெனில் வீட்டுக் கடன் இவற்றை உள்ளடக்காது.
இந்த விஷயங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய வீட்டுக்கான இறுதித் தொகையை பில்டரிடம் இருந்து பெற்ற பின்னரே வீட்டுக்கடன் வாங்குவதைப் பற்றி முடிவெடுக்கவேண்டும், என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

பட மூலாதாரம், Getty Images
முதலீடாக வீடு வாங்குவது நல்லதா?
ஒரு வீட்டை முதலீடாகக் கருதி அதை வாங்க, வங்கிக்கடன் பெறலாமா?
அப்படிச் செய்வதற்குமுன் பலமுறை சிந்திக்கவேண்டும் என்கிறார் பொருளாதார நிபுணர் சிற்பி. ஏனெனில், ஒரு அப்பார்ட்மெண்ட் அல்லது கேட்டட் கம்யூனிட்டி போன்ற இடங்களில் வீடு வாங்கினால், அதன் மதிப்பு மிகக் குறைந்த அளவிலேயே உயரும் என்கிறார் அவர்.
ஆனால், அதே தொகையை வீட்டுமனையிலோ, நிலத்திலோ முதலிடு செய்தால், அதன் மதிப்பு வருடத்திற்கு 40% முதல் 50% உயரும், என்கிறார் சிற்பி. உதாரணமாக ரூ.20 லட்சத்துக்கு ஒரு வீட்டுமனையோ, நிலமோ வாங்கினால், அதன் மதிப்பு முன்று வருடங்களில் கிட்டத்தட்ட 150% உயர வாய்ப்புள்ளது என்கிறார் அவர்.
எனவே முதலீடாக வீடு வாங்க வீட்டுக்கடன் வாங்குவதைவிட, பணம் இருக்கும்போது அதனை நிலம் வாங்குவதில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம், என்கிறார் சிற்பி.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












