இறந்த உடலில் விந்தணுக்கள் எவ்வளவு நேரம் உயிர்வாழும்?- இறந்த ராணுவ வீரர்களின் விந்தணுக்கள் சேகரிக்கப்படுவது ஏன்?

ரீஃப்
படக்குறிப்பு, "ரீஃப் குழந்தைகளை மிகவும் நேசித்தான்" என்கிறார் அவரது தந்தை அவி ஹருஷ்
    • எழுதியவர், மைக்கேல் ஷுவல், ஆயிஷா கைரல்லாஹ்
    • பதவி, பிபிசி அரபு

இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றிய தங்களது மகன்களை இழந்த பெற்றோர், இறந்தவர்களின் உடல்களில் இருந்து விந்தணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டு, அவை உறையவைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

அக்டோபர் 7ஆம் தேதி நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதல்களைத் தொடர்ந்து இதற்கான நடைமுறையில் சில விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால் விந்தணுக்களைப் பெற்று அவற்றை உறைய வைக்க தாங்கள் எதிர்கொள்ளும் நீண்ட சட்ட நடைமுறைகளால் கோபமும் விரக்தியும் அடைந்துள்ளதாக இறந்த இஸ்ரேலிய வீரர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

காஸா பகுதியில், 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி நடந்த போரில் தனது 20 வயது மகன் ரீஃப் கொல்லப்பட்டதை அறிந்த தருணத்தை நினைவுகூரும் போது அவி ஹருஷின் குரல் நடுங்குகிறது.

அன்று, அவரது வீட்டு வாசலுக்கு வந்த இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் அவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தனர். “ரீஃபின் விந்தணுவை மீட்டெடுக்க இன்னும் அவகாசம் இருக்கிறது, உங்களுக்கு அதில் சம்மதமா?”.

அவி ஹருஷ் உடனடியாக “ஆம்” என்று பதில் அளித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

விந்தணுக்கள் பிரித்தெடுக்கும் செயல்முறை

அவி ஹருஷ்
படக்குறிப்பு, அந்தக் குழந்தையின் எதிர்காலம்தான் “எனது வாழ்க்கையின் நோக்கம்" என்று அவி ஹருஷ் கூறுகிறார்

“என் மகன் ரீஃப் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தான். அவனது இழப்பை ஈடுசெய்யமுடியாது என்ற போதிலும், நாங்கள் இதைச் செய்ய விரும்புகிறோம்." என்று கூறுகிறார் அவி ஹருஷ்.

"ரீஃப் குழந்தைகளை மிகவும் நேசித்தான், குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமென விரும்பினான். எனவே நான் இந்த முடிவைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை" என்று அவர் கூறுகிறார்.

ரீஃப்க்கு மனைவியோ காதலியோ இல்லை. ஆனால் அவி ஹருஷ் தனது மகனின் கதையைப் பகிர்ந்த பிறகு, அதைக் கேள்விப்பட்ட பல பெண்கள் ஹருஷைத் தொடர்பு கொண்டு, ரீஃபின் குழந்தையைச் சுமக்க முன்வந்தனர்.

இப்போது அந்தக் குழந்தையின் எதிர்காலம்தான் “எனது வாழ்க்கையின் நோக்கம்" என்று அவர் கூறுகிறார்.

அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, விந்தணுக்களை உறைய வைக்கும் நடைமுறைக்கு பல இஸ்ரேலியக் குடும்பங்கள் விண்ணப்பிக்கின்றன. அக்டோபர் 7 தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக்கைதிகளாக காஸாவிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, காஸாவில் ஒரு பெரிய ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியது, இதில் 39,000 க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டனர். போரில் சுமார் 400 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, அக்டோபர் 7 முதல், கிட்டத்தட்ட 170 இளைஞர்களின் (பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள்) உடல்களில் இருந்து விந்தணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுகளின் விகிதத்தை விட தோராயமாக 15 மடங்கு அதிகமாகும்.

இந்த விந்தணுக்கள் பிரித்தெடுக்கும் செயல்முறை என்பது, உடலின் விதைப்பையில் இருந்து ஒரு சிறிய திசுவை எடுப்பதாகும். பின்னர் அதிலிருந்து உயிருள்ள விந்தணுக்கள் பிரிக்கப்பட்டு, ஆய்வகத்தில் உறைய வைக்கப்படும்.

இறந்த உடலில் விந்தணுக்கள் 72 மணிநேரம் வரை உயிர்வாழும் என்றாலும் கூட, 24 மணி நேரத்திற்குள் அவற்றை பிரித்தெடுப்பது சிறந்தது.

இந்த நடைமுறைக்காக பெற்றோர்கள் நீதிமன்ற உத்தரவைப் பெற வேண்டும் என்ற விதியை கடந்த அக்டோபரில் நீக்கியது இஸ்ரேலிய சுகாதார அமைச்சகம். சமீப காலங்களில், மகன்களை இழந்த பெற்றோருக்கு இந்த நடைமுறையை எளிதாக்குவதில் அதிக முனைப்பு காட்டுவதாக இஸ்ரேல் கூறுகிறது.

விந்தணுவை உறைய வைப்பது சுலபமாகிவிட்டது. ஆனால் அதைப் பயன்படுத்த விரும்பும் கணவனை இழந்த மனைவியோ அல்லது பெற்றோரோ, இறந்த போன நபருக்கு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விருப்பம் இருந்தது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். இந்த செயல்முறை முழுமையடைய பல ஆண்டுகள் ஆகலாம்.

ரேச்சல்
படக்குறிப்பு, ரேச்சல், இறந்துபோன தனது மகனின் குழந்தையைப் பெற்றெடுக்க தாய் தேவை என விளம்பரம் செய்தார்.

'அதிகமான எதிர்ப்பைச் சந்தித்தோம்'

ரேச்சல் மற்றும் யாகோவ் கோஹன், தங்களது இறந்த மகனின் விந்தணுவை உறையவைக்க முன்வந்த இஸ்ரேலின் முதல் பெற்றோர் ஆவார்கள். அவர்களின் மகன் கீவன், 2002இல் காஸா பகுதியில், ஒரு பாலத்தீனிய துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்தது.

இவர்களது பேத்தி ஓஷர், கீவனின் உயிரணுக்களில் இருந்து பிறந்தவர். அவருக்கு இப்போது 10 வயதாகிறது.

“ஆனால் நாங்கள் அதிகமான எதிர்ப்பைச் சந்தித்தோம்” என ரேச்சல் கூறுகிறார்.

நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு, நீதிமன்றம் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. அதன் பிறகு ரேச்சல் தனது மகனின் குழந்தையைப் பெற்றெடுக்க தாய் தேவை என விளம்பரம் செய்தார்.

ஐரிட்
படக்குறிப்பு, ஓஷருக்கு (இடதுபுறம் இருப்பவர்), இரு தரப்பிலிருந்தும் தாத்தா, பாட்டி, மாமாக்கள் மற்றும் உறவினர்கள் இருப்பதாக ஐரிட் கூறுகிறார்.

ஐரிட், தனது தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக குடும்பப் பெயரைப் பகிர்ந்து கொள்ள அவர் விரும்பவில்லை. ரேச்சலின் விளம்பரத்திற்கு பதிலளித்த பெண்களில் அவரும் ஒருவர். கீவனின் குழந்தையைத் பெற்றெடுத்தவர்.

ஐரிட் திருமணம் ஆகாதவர். ஒரு உளவியலாளர் மற்றும் ஒரு சமூக சேவகர் உடனான கலந்தாய்வுக்குப் பிறகு, கருவுறுதல் சிகிச்சையைத் தொடங்க நீதிமன்றம் அவருக்கு அனுமதி அளித்தது.

“நாங்கள் கடவுள் போல என்றெல்லாம் சிலர் சொல்கிறார்கள். அப்படி ஒன்றும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.” என்று அவர் கூறுகிறார்.

"தனது தந்தை யார் என்பதை அறிந்த குழந்தைக்கும் விந்தணு தானம் மூலம் கருத்தரிக்கும் குழந்தைக்கும் வித்தியாசம் உள்ளது," என்கிறார் ஐரிட்.

தன் தந்தை கீவன் ராணுவத்தில் கொல்லப்பட்டது குறித்து 10 வயதான ஓஷருக்குத் தெரியும். அவருடைய அறை டால்பின் பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கீவன் டால்பின்களை நேசித்தார் என்பது எனக்குத் தெரியும் என்று ஓஷர் கூறுகிறார்.

"என் தந்தையின் உயிரணுக்களை பிரித்தெடுத்து, என்னை இந்த உலகிற்கு கொண்டு வர சரியான தாயைத் தேடினர் என்பதும் எனக்குத் தெரியும்," என்று அவர் கூறுகிறார்.

ஓஷருக்கு, இரு தரப்பிலிருந்தும் தாத்தா, பாட்டி, மாமாக்கள் மற்றும் உறவினர்கள் இருப்பதாக ஐரிட் கூறுகிறார்.

அதே சமயத்தில், “அவளை நாங்கள் ‘உயிருள்ள நினைவுச்சின்னமாகக் கருதி வளர்க்கவில்லை’. ஒரு சாதாரண பிள்ளையைப் போலதான் வளர்த்து வருகிறோம்” என்று அவர் கூறுகிறார்.

ஓஷர்
படக்குறிப்பு, தன் தந்தை கீவன் ராணுவத்தில் கொல்லப்பட்டது 10 வயதான ஓஷருக்குத் தெரியும்

‘குறிப்பிடத்தக்க கலாசார மாற்றம்’

“விந்தணுவைப் பாதுகாப்பது, மகன்களை இழந்த குடும்பங்களுக்கு ‘வாழ்க்கைக்கான அர்த்தத்தை அளிக்கிறது” என்று ஷமீர் மருத்துவ மையத்தின் விந்தணு வங்கியின் இயக்குனர், மருத்துவர் இட்டாய் காட் கூறுகிறார். அவரே இதற்கான அறுவை சிகிச்சைகளையும் செய்கிறார்.

"எதிர்காலத்தில், இனப்பெருக்கம் மற்றும் கருவுறுதல் தொடர்பான மக்களின் ஆர்வத்தை ஊக்குவிக்க இதுவே கடைசி வாய்ப்பு," என்று அவர் கூறுகிறார்.

இந்த செயல்முறையை மக்கள் அதிக அளவில் ஏற்றுக்கொள்வதை சுட்டிக்காட்டிய அவர், சமீபத்தில் ‘குறிப்பிடத்தக்க கலாசார மாற்றம்’ ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

“பெரும்பாலும் இந்த நடைமுறைக்கு ‘இறந்தவர்களின் ஒப்புதல்’ பற்றிய தெளிவான பதிவுகள் கிடைப்பதில்லை. இதனால் ஏற்கனவே மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் குடும்பங்கள், விரக்தி அடைகின்றனர்” என்கிறார் மருத்துவர் இட்டாய் காட்.

மருத்துவர் இட்டாய் காட்
படக்குறிப்பு, “பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இறந்தவருக்கும், விந்தணுவைப் பயன்படுத்தி குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கும் எந்த தொடர்பும் இருந்திருக்காது" என்கிறார் மருத்துவர் இட்டாய் காட்

“விந்தணுக்களை உறைய வைத்துவிடலாம், ஆனால் அதை கருத்தரிப்பதற்கு பயன்படுத்த முடியாது என்ற நிலை உள்ளது” என்கிறார் மருத்துவர் இட்டாய் காட்.

"நாங்கள் இனப்பெருக்கம் பற்றி விவாதிக்கிறோம், ஒரு பையன் அல்லது பெண்ணை உலகிற்கு கொண்டு வருகிறோம். அந்தக் குழந்தை தந்தை இல்லாமல் வளரப் போகிறது என்பதும் எங்களுக்குத் தெரியும்," என்று அவர் கூறுகிறார்.

“பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இறந்தவருக்கும், விந்தணுவைப் பயன்படுத்தி குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கும் எந்த தொடர்பும் இருந்திருக்காது” என்று கூறும் இட்டாய் காட், குழந்தையின் கல்வி மற்றும் எதிர்காலம் தொடர்பான அனைத்து முடிவுகளும் தாயால் எடுக்கப்படும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

இறந்தவர்களின் விந்தணுக்களை உறையவைப்பதை தான் முன்பு எதிர்த்ததாகவும், ஆனால் போரில் இறந்த குடும்பங்களை சந்தித்து பேசிய பிறகு, தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டதாகவும் அவர் கூறுகிறார்.

"இது அவர்களின் வாழ்வை எப்படி அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது, சில சமயங்களில் அது அவர்களுக்கு எப்படி ஆறுதல் அளிக்கிறது என்பதை நான் உணர்ந்தேன்," என்று அவர் கூறுகிறார்.

கீவன்
படக்குறிப்பு, கீவன், 2002இல் காஸா பகுதியில், ஒரு பாலத்தீனிய துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்

'யூத சட்டத்தின் இரண்டு முக்கியக் கோட்பாடுகள்'

டெல் அவிவில் உள்ள யூத நெறிமுறைகளுக்கான சோஹார் மையத்தை வழிநடத்தும் தாராளவாத, யூத மத ஆசிரியரான ரப்பி யுவல் ஷெர்லோ, “இறந்தவர் இதற்கு முன்பே ஒப்புதல் கொடுத்துள்ளாரா என்பது ஒரு முக்கியமான விஷயம்தான்” என்கிறார்.

ஒரு மனிதனின் வம்சாவளியைத் தொடர்வது மற்றும் அவரது உடலை முழுவதுமாக புதைப்பது என யூத சட்டத்தின் இரண்டு முக்கியக் கோட்பாடுகளும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக அவர் விளக்குகிறார்.

இஸ்ரேலியக் குடும்பங்கள்
படக்குறிப்பு, அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, விந்தணுக்களை உறைய வைக்கும் நடைமுறைக்கு பல இஸ்ரேலியக் குடும்பங்கள் விண்ணப்பிக்கின்றன.

இந்த நடைமுறையில் இறப்பதற்கு முன்பாக ஒருவர் கொடுக்கவேண்டிய ஒப்புதல் குறித்தும், ராணுவச் சேவையில் கொல்லப்பட்ட வீரர்களின் குழந்தைகளுக்கு பொதுவாக வழங்கப்படும் பலன்களை இந்தக் குழந்தைகளும் பெறுமா என்பது குறித்தும் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக இதைக் கவனித்து வரும் வல்லுநர்கள் பிபிசியிடம் தெரிவிக்கின்றனர்.

உறையவைக்கப்பட்ட விந்தணுக்களைக் கருத்தரிக்க பயன்படுத்த வேண்டுமா கூடாதா என்பதில் கணவனை இழந்த பெண்கள் மற்றும் பெற்றோருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன, குறிப்பாக குழந்தை பெற்றுக்கொள்ள அந்த கணவனை இழந்த பெண்கள் விரும்பவில்லை எனும்போது.

அவி ஹருஷைப் பொறுத்தவரை, மகனை இழந்த துக்கத்திலும் அவர் உறுதியாக இருக்கிறார்.

அவர் தனது இறந்த மகனின் டைரிகள், ஆல்பங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் நிரப்பப்பட்ட ஒரு அட்டைப்பெட்டியை பார்க்கிறார்.

ரீஃபுக்கு ஒரு குழந்தையைக் கொடுக்கும் வரை தான் ஓய்வெடுக்கப் போவதில்லை என்று கூறும் அவர், "அது நடக்கும். அவனுடைய குழந்தைக்கு இந்த பெட்டியைப் பரிசளிப்பேன்." என்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)