பிரான்சில் கைதான டெலிகிராம் தலைமை செயல் அதிகாரியை பாதுகாக்க முற்படும் ரஷ்யா - என்ன காரணம்?

டெலிகிராம் சிஇஓ பிரான்சில் கைது

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், வில் வெர்னோன்
    • பதவி, பிபிசி செய்திகள்

பிரபலமான குறுஞ்செய்தி செயலியான டெலிகிராமின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ், பிரான்சில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெலிகிராம் நிறுவனம், அவரிடம் மறைத்து வைக்க எதுவும் இல்லை என்று கூறியுள்ளது.

டெலிகிராம் செயலி மீதான விதிமுறை மீறல் குற்றச்சாட்டு தொடர்பாக வடக்கு பாரிஸ் விமான நிலையத்தில் துரோவ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெலிகிராம் செயலி குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்படுவதை கட்டுப்படுத்தவில்லை என்று துரோவ் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல், குழந்தைகளை மையப்படுத்திய பாலியல் சார்ந்த தகவல்கள், மோசடி ஆகிய விவகாரங்களில் சட்ட அமலாக்கத்துடன் ஒத்துழைக்க தவறியதாகவும் டெலிகிராம் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் தன்னுடைய அறிக்கையில், "அதன் கட்டுப்பாடு அம்சங்கள் தொழில்துறை தர நிர்ணயத்திற்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது என்றும் தொடர்ந்து அதனை மேம்படுத்தி வருவதாகவும்" தெரிவித்துள்ளது.

"ஒரு செயலியை தவறாக பயன்படுத்துவதற்கு அந்த செயலியோ அல்லது அதன் உரிமையாளரோ காரணம் என்று கூறுவது அபத்தமானது," என்றும் டெலிகிராம் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

துரோவ் அடிக்கடி ஐரோப்பாவுக்கு பயணம் செய்வதாகவும், பாதுகாப்பான மற்றும் பொறுப்பான இணைய சூழலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல் சேவைகள் சட்டம் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து சட்டங்களுக்கும் கட்டுப்பட்டு செயல்படுவதாகவும் டெலிகிராம் தெரிவித்துள்ளது.

செய்தி பரிமாற்றம், தொலைத் தொடர்பு தேவைகளுக்காக டெலிகிராம் செயலியை கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "இந்த சூழலுக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும். டெலிகிராம் உங்களுடன் துணை நிற்கிறது," என்றும் அது கூறியுள்ளது.

ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், நீதித்துறையை சேர்ந்தவர்கள், துரோவின் தடுப்புக் காவல் ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்கப்படும் என்றும் 96 மணி நேரம் வரை இது தொடரலாம் என்றும் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

டெலிகிராம் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ்

பட மூலாதாரம், AOP.Press/Corbis

படக்குறிப்பு, டெலிகிராம் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் பாரிஸில் கைது செய்யப்பட்டார்

38 வயதான பாவெல் துரோவ் ரஷ்யாவில் பிறந்தவர். 2014ம் ஆண்டு ரஷ்யாவில் இருந்து வெளியேறிய அவர் தற்போது துபாயில் வசித்து வருகிறார். டெலிகிராம் நிறுவனமும் துபாயை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அமீரகம் மற்றும் பிரான்ஸ் நாட்டின் குடியுரிமையை அவர் பெற்றுள்ளார்.

ரஷ்யா, யுக்ரேன், மற்றும் முன்னாள் சோவியத் நாடுகளில் டெலிகிராம் மிகவும் பிரபலமாக உள்ளது.

பயனர்களின் தரவுகளை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்ததன் விளைவாக டெலிகிராம் செயலி 2018ம் ஆண்டு ரஷ்யாவில் தடை செய்யப்பட்டது. 2021ம் ஆண்டு அந்த தடை நீக்கப்பட்டது.

பேஸ்புக், யூடியூப், வாட்ஸ்ஆப், இன்ஸ்டகிராம், டிக்டாக் மற்றும் வீ-சாட் போன்ற சமூக வலைதளங்களுக்கு அடுத்தபடியாக டெலிகிராம் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலியாக பட்டியலிடப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டு டெலிகிராம் செயலியை துரோவ் உருவாக்கினார். அதற்கு முன்பு அவர் விகோன்டக்டே (VKontakte) என்ற சமூக வலைதள பக்கத்தையும் உருவாக்கினார். அதில் எதிர்க்கட்சியினரின் பயன்பாட்டை முடக்க வேண்டும் என்ற ரஷ்ய அரசின் கோரிக்கையை நிராகரித்த பின்னர் 2014ம் ஆண்டு ரஷ்யாவில் இருந்து வெளியேறினார் துரோவ். விகோன்டக்டே சமூக வலைதளத்தை அவர் விற்றுவிட்டார்.

டெலிகிராம் செயலி ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் நாடுகளில் பிரபலமாக உள்ளது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெலிகிராம் செயலி ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் நாடுகளில் பிரபலமாக உள்ளது

இன்றளவும் ரஷ்யா, துரோவை தன் நாட்டு பிரஜையாகவே அடையாளப்படுத்துகிறது. "இது போன்ற சூழலை எதிர்கொள்ளும் ரஷ்ய குடிமகனுக்கு தேவையான அனைத்து உதவி நடவடிக்கைகளும் இந்த விவகாரத்தில் பிரான்சுக்கான ரஷ்ய தூதரகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. துரோவின் பிரதிநிதிகளிடம் இருந்து எந்த விதமான கோரிக்கையும் பெறப்படவில்லை. இருப்பினும், இந்த உதவிகள் வழங்கப்பட்டன," என்று ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

இந்த தடுப்புக் காவலுக்கான காரணங்களை தெரிந்து கொள்ளவும், துரோவின் உரிமைகளை பாதுகாக்கவும், வழக்கறிஞரை அணுகவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அதிகாரிகள் ரஷ்யாவுடன் ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஸகரோவா, 2018ம் ஆண்டு ரஷ்யாவில் டெலிகிராம் செயல்பாட்டை முடக்க ரஷ்யா முயற்சிப்பதாக விமர்சித்த மேற்கத்திய நாடுகளின் மனித உரிமை அமைப்புகள், தற்போது துரோவ் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து அமைதியாக இருப்பது ஏன் என்று தனது டெலிகிராம் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெலிகிராம் செயலியில் ஒரு குழுவில் 2 லட்சம் பேர் வரை இணைய முடியும். துறை சார் நிபுணர்கள், இதன் மூலம் எளிமையாக தவறான செய்திகளை பரப்ப இயலும் என்றும், சதி, நவீன நாஜி மற்றும் குழந்தைகளை மையப்படுத்திய பாலியல் ரீதியான தகவல்கள் அல்லது பயங்கரவாதம் தொடர்பான தகவல்களை பரப்ப முடியும் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

இம்மாத தொடக்கத்தில் பிரிட்டனில் ஏற்பட்ட கலவரங்களுக்கு முக்கிய காரணமான தீவிர வலதுசாரி குழுக்களின் டெலிகிராம் சேனல்களுக்கு இடம் அளித்ததாக டெலிகிராம் செயலி தீவிர ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

டெலிகிராம் சில குழுக்களை அதில் இருந்து நீக்கினாலும், மற்ற சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி பரிமாற்ற செயலிகளைக் காட்டிலும் டெலிகிராம் மிகவும் பலவீனமாக உள்ளது என்று சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)