பூமியின் அடியாழத்தைப் போலவே, செவ்வாய் கோளிலும் பாறைக்கு அடியில் உயிர்கள் உள்ளனவா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மைக்கேல் மார்ஷல்
- பதவி, பிபிசிக்காக
செவ்வாய் கிரகத்திற்கு அடியில் உயிர்கள் இருக்கின்றதா என்பதைப் புரிந்துகொள்ள, பூமிக்கடியில் மிக ஆழத்தில் உள்ள பழமையான, நுண்ணுயிர்கள் குறித்து அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.
செவ்வாய் சிவப்பு கோள் மட்டுமல்ல; அது, ஈரமான ஒரு கோளும்கூட. செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறையின் மேற்பரப்பின் ஆழத்தில் பெரிய நீர்த்தேக்கம் அளவுக்குத் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 12 அன்று வெளியிட்டனர்.
நான்கு ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட 1,300க்கும் அதிகமான நடுக்கங்களைப் பதிவு செய்துள்ள நாசாவின் இன்சைட் லேண்டர் (Insight Lander) எனப்படும் விண்கலத்தில் இருந்து இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் சான் டியேகோ ஸ்க்ரிப்ஸ் கடலியல் நிறுவனத்தின் புவி இயற்பியலாளர் வாஷன் ரைட் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், அந்த லேண்டரை அடையும் சீஸ்மிக் அலைகளை ஆய்வு செய்ததில், அந்த அலைகள் ஈரமான பாறையின் அடுக்குகள் வாயிலாகக் கடந்து வந்திருக்க வேண்டும் என முடிவு செய்தனர். செவ்வாய் கோளின் மேற்பரப்பு வெற்றுப் பாலைவனமாக இருந்தாலும், வாஷன் ரைட்டின் தரவுகள், 11.5 முதல் 20 கி.மீ. வரை பாறைகளில் கணிசமான அளவு தண்ணீர் இருப்பதாகப் பரிந்துரைக்கின்றன.
“அவர்களின் தரவுகள் சரியாக இருந்தால், அது திருப்புமுனையாக அமையும்,” என லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியலாளர் கேரென் லாயிட் கூறுகிறார்.
செவ்வாய் கோளின் ஆழத்தில் தண்ணீர் இருப்பது, அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகசாத்தியக்கூறுகள் இருப்பதைக் காட்டுகிறது.
கடந்த சில தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பூமியின் அடி ஆழத்தில் ஒரு மகத்தான பல்லுயிர்ச்சூழல் மறைந்திருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. தற்போது இது செவ்வாய் கோளுக்கும் பொருந்துகிறது. செவ்வாயில் உயிர்கள் இருந்தால், அது அந்தக் கோளின் அடி ஆழத்தில் இருக்கலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஆழமான உயிர்க்கோளம்
பூமியில் மிக ஆழத்தில் உயிரினங்கள் இருப்பதாக, அதற்கான ஆதாரங்களை உயிரியலாளர்கள் கடந்த 30 ஆண்டுகளாகத் திரட்டி வருகின்றனர். இதற்காக ஆராய்ச்சியாளர்கள் கடல்கள் மற்றும் கண்டங்களுக்கு அடியில் துளையிட்டு, வண்டல்கள் மற்றும் கடினமான பாறைகளின் அடுக்குகள் மற்றும் படிகங்களில் உயிர்களுக்கான ஆதாரங்களைத் தேடினர்.
இருட்டில் வாழும் இந்த நுண்ணுயிர்களில் பெரும்பாலானவை ஒற்றை செல் உயிரினங்களாகும் - குறிப்பாக பாக்டீரியாக்கள் மற்றும் தொல்லுயிரிகள். இந்த இரு வகையான நுண்ணுயிரிகளும் உலகில் அறியப்பட்ட மிகப் பழமையான உயிரினங்கள். இவை, விலங்குகள் மற்றும் தாவரங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே, சுமார் 300 கோடி ஆண்டுகளாக பூமியில் உள்ளன.
கடந்த 20 ஆண்டுகளில் இந்த உயிர்க்கோளம் மிகவும் பன்முகத்தன்மை வாய்ந்தவையாக உருவெடுத்துள்ளன. “உண்மையில், பூமிக்கு அடியில் பலவிதமான நுண்ணுயிரிகள் அதிகளவில் உள்ளன,” என்கிறார், சுவிட்சர்லாந்தில் உள்ள ஈடிஎச் சூரிச் ஆய்வு பல்கலைக்கழகத்தின் புவியியல் உயிரியலாளர் காரா மாக்னாபோஸ்கோ.
பாக்டீரியாக்கள் ஃபைலா எனப்படும் பெருங்குழுக்களாக வகைப்படுத்தப்படுகின்றன. இதுவரை மதிப்பிடப்பட்டுள்ள 1,300 பைலா குழுக்களில் அசில குழுக்கள் மட்டுமே அதிகாரபூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளன. “பெரும்பாலான ஃபைலா உயிரினக் குழுக்களை பூமிக்கு அடியில் கண்டுபிடிக்க முடியும்,” என மாக்னாபோஸ்கோ தெரிவித்தார்.
வேற்றுகிரக உயிர்களைப் போன்ற நுண்ணுயிரிகள்

பட மூலாதாரம், Nasa
ஆனால் இந்த ஃபைலா நுண்ணுயிர்கள் சமமாகப் பரவியிருப்பதாகச் சொல்ல முடியாது. 2023ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மெட்டா-பகுப்பாய்வில், ( பல ஆய்வுகளுடைய முடிவுகளின் புள்ளியியல் கலவை) நிலத்திற்கு அடியில் உள்ள பெரும்பான்மை சூழல் மண்டலத்தில், சூடோமோனடோட்டா (Pseudomonadota) மற்றும் ஃபிர்மிகியூட்டுகள் (Firmicutes) எனும் இருவகை ஃபைலா குழுக்களே ஆதிக்கம் செலுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற பாக்டீரியா வகைகள் மிகவும் அரிதானவை. ஆனால், அவற்றில் இதுவரை பார்த்திராத ஃபைலா குழுக்களும் அடங்கியுள்ளன.
முழுவதும் இருட்டில் இருப்பதால், பூமியின் மேற்பரப்பில் உள்ள நுண்ணுயிரிகளைப் போன்று இவற்றால் சூரிய வெளிச்சத்தில் இருந்து நேரடியாக ஆற்றலைப் பெற முடியாது. “இந்த நுண்ணுயிரிகள் சூரியனைச் சார்ந்திருக்காது என்பதுதான் மிக முக்கியமான விஷயம்” என்கிறார் லாயிட்.
மேலும், அந்த நுண்ணுயிரிகள் வேறு எதிலிருந்தும் ஊட்டச்சத்துகளைப் பெறாது. “இந்தச் சூழல் மண்டலம் பெரும்பாலும் பூமியின் மேற்பரப்பில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது,” என்கிறார், மாக்னாபோஸ்கோ.
அதற்குப் பதிலாக, அச்சூழல் மண்டலம் வேதிச்சேர்க்கையைச் (chemosynthesis) சார்ந்துள்ளது. இதில், நுண்ணுயிரிகள் சுற்றியுள்ள பாறைகள் மற்றும் தண்ணீரில் உள்ள ரசாயனங்கள் மூலமாக ஆற்றலைப் பெறுகிறது. உதாரணத்திற்கு, அவை மீத்தேன் அல்லது ஹைட்ரஜன் சல்ஃபைடை ஆதாரமாகப் பயன்படுத்துகின்றன.
“பூமிக்கு அடியில் பலவிதமான வேதிவினைகள் நிகழ்கின்றன”, என்கிறார் லாயிட். “உயிர் வாழ்வதற்குத் துணைபுரியும் புதிய வேதிவினைகளைக் கண்டறிவதற்கு எங்களில் பலரும் நேரத்தைச் செலவிடுகிறோம்” என்றார் அவர்.
வேதிமச் சேர்க்கை புரியும் நுண்ணுயிரிகள் வேற்றுகிரக உயிர்களைப் போலத் தோன்றும். ஏனெனில், அவற்றை நாம் வாழும் சூரிய ஒளிமிக்க மேற்பரப்பில் காண்பது அரிது. மேலும், அவை கடலுக்கு அடியிலும் நிலத்தடியிலும் சிறைபட்டிருப்பவை. ஆனால், அவற்றில் சில இந்த பூமியில் வாழும் மிகப் பழமையான உயிரினங்களாக உள்ளன. உயிர்களின் தோற்றம் குறித்த சில கருதுகோள்களில், பூமியில் தோன்றிய முதல் உயிர், வேதிச்சேர்க்கை புரியும் உயிரினமாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
நட்சத்திரங்களைவிட அதிக எண்ணிக்கையில் செல்கள்

பட மூலாதாரம், Getty Images
பூமிக்கடியில் ஒற்றை செல் கொண்ட நுண்ணுயிரிகள் ஆதிக்கம் செலுத்தினாலும், சில விலங்குகளும் அரிதாக உள்ளன. தென்னாப்பிரிக்க சுரங்கங்களில் 0.9-3.6 கி.மீக்கு கீழே பாறைகளுக்கு இடையே உள்ள நீரில் நூற்புழுக்கள் இருந்தது, 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறைந்தது 3,000 ஆண்டுகள் பழமையான நீராக அது இருக்கலாம் எனத் தெரிய வந்தது. எனவே, நூற்புழுக்கள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவையாக இருக்கலாம் என அந்த ஆய்வு பரிந்துரைக்கிறது. இதன் தொடர்ச்சியாக, 2015ஆம் ஆண்டு, 1.4 கி.மீக்குக் கீழே பிளவுகளுக்கு இடையே காணப்பட்ட நீரில் தட்டைப்புழுக்கள், வளையப் புழுக்கள், வட்டுப் புழுக்கள், கணுக்காலிகள் ஆகியவை கண்டறியப்பட்டன. அந்தத் தண்ணீர் 12,300 ஆண்டுகள் பழமையானவை. பாறை மேற்பரப்பில் உள்ள நுண்ணுயிரிகளை அவை உண்ணும்.
நம்மைப் பொறுத்தவரை பூமிக்கடியில் வாழ்வது மிக மிகச் சவாலான ஒன்று. மேலும், அங்கு பூமியின் மேற்பரப்புடன் ஒப்பிடுகையில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அரிதாகவே உள்ளன. ஆனால், அவை வாழ்வதற்கான நிறைய பாறைகள் உள்ளன. 2018இல் மாக்னாபோஸ்கோவும் அவருடைய சகாவும், கண்டங்களுக்கு அடியில் வாழும் உயிரினத் தொகுதியின் அளவை, பூமிக்கடியில் துளையிட்டுக் கண்டறியப்பட்ட பலவித செல்கள் மற்றும் அவற்றின் எண்ணிக்கைகளை ஒன்றிணைத்து மதிப்பிட்டுள்ளனர். அதன்படி, பூமியின் கண்டங்களுக்கு அடியில் 2 முதல் 6 × 10^29 செல்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில், இந்த பிரபஞ்சத்தில் 10^24 நட்சத்திரங்கள் மட்டுமே உள்ளன.
“நம் காலுக்கு அடியில் எண்ணிக்கையில் அதிகளவிலான செல்கள் உள்ளன” என்கிறார், மாக்னாபோஸ்கோ. உண்மையில், 70% பாக்டீரியாக்கள் மற்றும் தொல்லுயிரிகள் பூமிக்கு அடியில் உள்ளன.
இந்த ஆழமான உயிர்க்கோளம் எந்தளவுக்கு நீண்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அங்கு வாழ்வதற்கான வெப்பநிலை உச்ச வரம்பு என்ன என்பது தெரியவில்லை. எந்த உயிரினமும் உருகிய எரிமலையின் மேற்பரப்பில் வாழ முடியாது, ஆனால், சில நுண்ணுயிர்கள் ஆச்சர்யப்படத்தக்க வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும். உதாரணத்திற்கு, மெத்தனோபைரஸ் கண்ட்லேரி (Methanopyrus kandleri ) எனும் தொல்லுயிர், 122 டிகிரி செல்சியஸில் வாழ முடியும், இனப்பெருக்கமும் செய்யும்.
செவ்வாய்க் கிரக பாறைகளில் நுண்ணுயிர்கள்?

பட மூலாதாரம், Nasa/JPL-Caltech/University of Arizona
பூமிக்கு அடியில் மேலும் ஆழத்திற்கு செல்லச் செல்ல, அழுத்தமும் (Pressure) பிரச்னையாக உள்ளது. அங்கிருக்கும் பாறைகளின் வகைகளும் முக்கியம், ஏனெனில் அதனால் ஏற்படும் வேதிவினைகளையும் அங்கு வாழக்கூடிய நுண்ணுயிரிகளையும் அதன் தன்மை பாதிக்கும்.
“எவ்வளவு ஆழத்தில் உயிர்கள் இருக்கின்றன என்பது குறித்த துல்லியமான கணக்கை என்னால் வழங்க முடியாது. ஏனெனில், இன்னும் அந்த அளவுக்கான ஆழத்திற்கு நாம் துளையிடவில்லை,” என லாயிட் கூறுகிறார். ஆனால், அந்த ஆழத்தின் எல்லை நம்மை எச்சரிக்க வைக்கும்: 2017ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றில், மணல் நீரூற்றில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், கடற்பரப்பில் இருந்து 10 கி.மீ ஆழத்திலும் உயிர்கள் இருக்கலாம் எனப் பரிந்துரைக்கிறது.
“பூமிக்கு அடியில், குறிப்பாக பெருங்கடல்களுக்கு அடியில் பல லட்சக்கணக்கான ஆண்டுகள் ஒன்றுமே நடக்காத பெரும்பகுதிகள் நிச்சயம் உண்டு,” என்கிறார் லாயிட்.
பூமியின் மேற்பரப்பில் இருந்து எந்தவொரு ஊட்டச்சத்தும் கிடைக்காத நிலையில், தப்பிக்க வழியில்லாத நிலையில், இந்த நுண்ணுயிரிகளுக்கு இருப்பது மிகக் குறைவான உணவுதான். “அதாவது, அந்த நுண்ணுயிரிகளுக்குப் புதிய செல்களை உருவாக்குவதற்கான ஆற்றல் இல்லை,” என அவர் கூறுகிறார்.
அதற்குப் பதிலாக, அவைதம் வளர்சிதை மாற்றங்களின் வேகத்தைக் குறைத்து, தேக்க நிலையிலேயே இருக்கின. “எனவே, ஒற்றை செல் நுண்ணுயிரிகள் ஆயிரம் ஆண்டுகள் அல்லது அதற்கும் மேல் வாழும் என்பது உண்மையில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது.”
இதைப் போலவே, பாறைகள் மற்றும் தண்ணீருக்கு இடையிலான வேதிவினைகளை நம்பி, மிக மெதுவான வளர்சிதை மாற்றத்தைக் கொண்டிருக்கும் நுண்ணுயிரிகளே, செவ்வாய் கோளின் மேற்பரப்புக்கு அடியிலுள்ள நீர் நிறைந்த பாறைகளிலும் காணப்படலாம்.
செவ்வாய் கோளில் நுண்ணுயிரிகள்
பல தசாப்தங்களாக ஆளில்லா விண்கலங்களை அனுப்பினாலும், இதுவரை செவ்வாய் கோளில் உயிர்கள் இருப்பதற்கான உறுதியான அல்லது நேரடியான ஆதாரம் இல்லை. அதன் மேற்பரப்பு வெற்றிடமாகவும் குளிர்ச்சியாகவும் உள்ளது. செவ்வாய் கோளில் எந்தவோர் உயிரினமும் அதன் உலாவி கேமராவில் பதிவாகவில்லை.
எனினும், செவ்வாய் கோளில் உள்ள செங்குத்தான பள்ளத்தாக்குகளின் மேற்பரப்பில், பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அதன் நீரோட்டம் இருந்திருக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
“உயிர் வாழ்வதற்கு நீர் அத்தியாவசியமானது என்பது நமக்குத் தெரியும்,” என்கிறார் லாயிட். எனவே, செவ்வாய் கோளின் மேற்பரப்பு முன்பு வாழ்வதற்கு ஏற்ற ஒன்றாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அதன் ஆழமான பகுதி மட்டுமே வாழ்வதற்கு ஏற்ற ஒன்றாக உள்ளது. “வாழ்க்கை எப்போதும் ஆழத்தில்தான் சென்று முடியும் என்றே நான் எப்போதும் நினைக்க விரும்புகிறேன்,” என்றார் அவர்.
பூமியின் கடலுக்கு அடியில் வாழும் மெதுவான நுண்ணுயிரிகளைப் போன்று, செவ்வாயில் உள்ள நுண்ணுயிர்கள் குறைவான ஊட்டச்சத்துகள் இருந்தாலும் அவை உயிர் பிழைத்திருக்கலாம். “பூமிக்கடியில் என்ன விளைவுகள் இருக்கின்றனவோ அதேபோன்ற விளைவுகள் செவ்வாயின் அடியிலும் நிகழலாம்,” என்கிறார், மாக்னாபோஸ்கோ.
செவ்வாயில் உள்ள வாயுவில் மீத்தேன் புகைப்படலமே அங்கு உயிர்கள் இருப்பதைக் குறிப்பால் தெரிவிக்கும் ஆதாரம். இது ஒவ்வொரு பருவத்திற்கும் மாறுபடும். பூமியில் மீத்தேன் பலவித நுண்ணுயிரிகளால் உற்பத்தியாகின்றன. எனவே, அந்த வாயு பூமிக்கடியில் உள்ள உயிர்களின் எச்சத்தில் இருந்து உருவாகும் ஒன்றாக இருக்கலாம். எனினும், இதுகுறித்து லாய்ட் எச்சரிக்கிறார். “மீத்தேன் வாயுவுக்கு உயிர்கள் அல்லாத பல காரணங்களும் இருக்கலாம்,” என்கிறார் அவர்.
செவ்வாய் கிரகத்திற்கு அடியில் உயிர் வாழ்வதற்குப் பல தடைகளும் உள்ளன. “வாழ்வதற்கு தண்ணீர் மட்டும் போதுமானது அல்ல,” என்கிறார் லாயிட். “அதற்கு ஆற்றல் தேவை, வாழ்விடம் தேவை.” செவ்வாயின் பாறைகளில் உள்ள துளைகள் நுண்ணுயிர்கள் வாழ்வதற்குப் போதுமானவையா என்பது நமக்கு இன்னும் தெரியவில்லை. அதேபோன்று, செவ்வாய் கோளின் ஆழத்தில் உள்ள பாறைகளின் வேதிமக் கலவையும் முக்கியமானது. அவை, வேதிம ஆற்றலின் ஆதாரமாக விளங்குபவை.
“செவ்வாயில் உயிர்கள் தோன்றியதா, இல்லையா என்பதில்தான் மிகப் பெரிய நிச்சயமற்ற தன்மை உள்ளதாக,” மாக்னாபோஸ்கோ கூறுகிறார்.
உயிரற்ற பொருட்களில் இருந்து முதல் உயிரினங்கள் எவ்வாறு உருவாயின என்பதை நாம் அறியாததால், செவ்வாயில் உள்ள சூழ்நிலைகள் உயிர்கள் தோன்றுவதற்கு ஏற்றதாக இருந்ததா என்பது நமக்குத் தெரியாது.
"செவ்வாய் கோளில் உயிர்கள் உருவாகியிருந்தால், அவை இன்றும் அங்கு வாழ்வதற்கு நல்ல வாய்ப்பு உள்ளதாகவும்” அவர் கூறுகிறார்.
செவ்வாய் கோளில் உயிர் இருந்தால் அதைக் கண்டுபிடிப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
செவ்வாய் கோளில் உயிர்க்கோளம் இருந்தால், அதை எப்படிக் கண்டுபிடிப்பது?
செவ்வாயில் துளையிடுவதுதான் முதல் யோசனையாக இருக்கும். ஆனால், அதற்கு 10 கி.மீ. அல்லது அதற்கு மேல் துளையிட வேண்டும். சுவாசிப்பதற்குக் காற்றோ அல்லது தண்ணீரோ இல்லாத ஒரு கோளில் இதைச் செய்ய முடியுமா?
“அது மிக, மிகக் கடினமான செயல்,” என்கிறார், மாக்னாபோஸ்கோ.
இருப்பினும், ஆதாரங்களை உருவாக்குவது சாத்தியமாக இருக்க வேண்டும். செவ்வாயில் உள்ள பாறை மற்றும் தூசி மாதிரிகளைச் சேகரித்து அவற்றை பூமிக்குத் திரும்பச் செய்வதற்கான நாசாவின் திட்டப்படி, செவ்வாயில் இருந்து பாறை மாதிரிகள் பூமிக்குக் கொண்டு வரப்படும். அந்த மாதிரிகள் அந்தக் கோளில் ஒருவேளை இருந்தால் அந்த உயிர்கள் குறித்த தடயங்களைக் கொண்டிருக்கலாம்.
“மீத்தேன் வாயுவைப் பின் தொடர்தல் மிகவும் உதவிகரமாக இருக்கும்,” என்கிறார் லாயிட். தற்போது, அந்த வாயு எங்கிருந்து வருகிறது என்பது நமக்குத் தெரியாது. “அதைக் கண்டுபிடித்தால் மீத்தேன் வாயுப் படலத்திற்கும் தண்ணீருக்கும் தொடர்பிருக்கிறதா என்பதை அறியலாம்,” எனக் கூறும் அவர், அது உயிர்கள் குறித்த ஆதாரங்களை வழங்கலாம் என்றார்.
செவ்வாயில் உண்மையிலேயே நீரோட்டம் இருந்தால், அதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். பூமிக்கு அடியில் தண்ணீரை வரவழைக்கும் வெந்நீரூற்று போன்றவை உள்ளன. “செவ்வாயில் மணல் நீரூற்றுகள் உள்ளன,” என்கிறார் லாயிட். “செவ்வாய் கிரகத்திற்கு அடியில் நீங்கள் சென்று அங்கிருந்து மாதிரிகளைக் கொண்டு வரக்கூடிய இடங்கள் உள்ளன,” என்கிறார் அவர்.
இதில் ஒரு நிச்சயமான பதிலைப் பெற இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். அந்த பதில் ஏமாற்றம் அளிக்கக் கூடியதாகவும் இருக்கலாம். பூமியைவிட செவ்வாய் தொழில்நுட்ப ரீதியாகவும் நீரியல் ரீதியாகவும் குறைவான செயல்திறனையே கொண்டுள்ளது.
இது அந்தக் கோளில் உயிர்கள் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம் என்பதைப் பரிந்துரைக்கிறது. “நீண்ட காலமாக உயிருடன் இல்லாத உயிரிகளை நாம் தேடிக்கொண்டிருக்கலாம்" என்கிறார் லாயிட்.
அப்படியானால், உயிரினங்களைவிட புதைபடிவ ஆதாரங்களை மட்டுமே நாம் காண முடியும். “எப்படியிருந்தாலும், அது செவ்வாய் கிரக உயிர்,” என்றார் அவர்.
மைக்கேல் மார்ஷல் ஒரு சுயாதீன அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் செய்தியாளர். The Genesis Quest: The geniuses and eccentrics on a journey to uncover the origin of life on Earth புத்தகத்தின் ஆசிரியர்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












